Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி?- கவிஞர் முத்தரசன்

கருவாடு மீனாகித் துள்ளிடவும் கூடும்
காகிதப்பூ மல்லிகையாய் மணந்திடவும் கூடும்
கருங்கல்லில் நெற்பயிர்கள் விளைந்திடவும் கூடும்
குறிஞ்சிமலர் அன்றாடம் மலர்ந்திடவும் கூடும்
திருநங்கை குழந்தைகளைப் பெற்றிடவும் கூடும்
தேன்முருங்கை மூங்கிலிலே காய்த்திடவும் கூடும்
ஒருதமிழன் உயிரோடு இருக்கும்வரை இந்தி
ஓடிவந்து எப்பக்கம் புகுந்துவிடக் கூடும்?

கொழுக்கட்டை வெடிகுண்டாய் மாறிடவும் கூடும்
குயில்கூட மயிலாக மாறிடவும் கூடும்
மெழுகாக இமயமலை உருகிடவும் கூடும்
மேல்நோக்கி காவிரியும் பாய்ந்திடவும் கூடும்
முழுநிலவாய் முப்பதுநாள் தோன்றிடவும் கூடும்
முழுவானில் விண்மீனை எண்ணிடவும் கூடும்
முழுமானத் தமிழன்தான் இருக்கும்வரை இந்தி
முன்னேறி எப்பக்கம் புகுந்துவிடக் கூடும்?

முடவனுந்தான் கொம்பேறித் தேன்எடுக்குக் கூடும்
முயலுக்கே கொம்புகூட முளைத்திடவும் கூடும்
வடக்கொருநாள் தெற்காக மாறிடவும் கூடும்
வானத்தில் மக்களெல்லாம் நடந்திடவும் கூடும்
கடல்கூட வற்றினாலும் வற்றிடவும் கூடும்
கற்சிலையோ வாய்விட்டுப் பேசிடவும் கூடும்
மடலேறும் தமிழன்தான் இருக்கும்வரை இந்தி
மறுபடியும் எப்பக்கம் புகுந்தவிடக் கூடும்?

கற்றாழை கசக்காமல் இனித்திடவும் கூடும்
கறந்தபால் மீண்டும்மடி புகுந்திடவும் கூடும்
ஒற்றுமையாய்ப் பாம்புடனே கீரிவாழக் கூடும்
உச்சிஇடி விழுந்தாலும் உயிர்பிழைக்கக் கூடும்
முற்றல்பலா முழுக்கசப்பாய் மாறிடவும் கூடும்
முக்கடலும் மேடாகி மலையாகக் கூடும்
கொற்றவனாய் தமிழன்தான் இருக்கும்வரை இந்தி
குறுக்கேதான் எப்பக்கம் புகுந்துவிடக் கூடும்?

புலிமடியில் மான்குட்டி பால்குடிக்கக் கூடும்
பகற்பொழுதும் இரவாக மாறிடவும் கூடும்
புளியமரக் கிளைதனிலே புடல்காய்க்கக் கூடும்
பூவரசில் பூசணிக்காய் காய்த்திடவும் கூடும்
கிளிகூட ஏடெடுத்துக் கவியெழுதக் கூடும்
கேழ்வரகு தனிலிருந்து நெய்வடியக் கூடும்
புலிபோன்ற தமிழன்தான் இருக்கும்வரை இந்தி
புறப்பட்டு எப்பக்கம் புகுந்துவிடக் கூடும்? 