Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பெண் சம்பாதித்தால் அடிமையாக மாட்டாள்!- தந்தை பெரியார்

சுதந்திரமாகப் பகுத்தறிவுடன், கவலையற்று வாழ்ந்த மனிதனுக்குத் திருமணம் என்பது எவ்வளவு கவலையாக அமைகின்றது என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

இந்த முறை மூடநம்பிக்கை ஒழியவேண்டும் – பெண் அடிமை ஒழிய வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.

இன்றைக்கு மனிதன் திருமணம் ஆன உடனே குடும்ப வாழ்க்கையினை ஏற்றுக்கொண்டால் அவன் சுதந்திரம் அற்றவனாக – கவலைக்கு இடமானவனாக இருக்கிறான். தன் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டியவனாக ஆகிவிடுகிறான். உலகத்துக்குச் சிறிதும் பயன்படுவதே இல்லையே.

எனவே, இந்த முறையினை ஒழுக்கம், நாணயம் வளர்கின்ற தாகவும் கவனிக்கக் கூடியதாகவும், சுதந்திரத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் மாற்ற வேண்டும். ஆணுக்கு ஒரு வாழ்க்கை முறை, பெண்ணுக்கு வேறு மாதிரி என்ற தன்மையை மாற்றவேண்டும். ஆணுக்கு உண்டான சுதந்திரம், உரிமைகள் எல்லாம் பெண்களுக்கு ஏற்படும்படி செய்யவேண்டும்.

எப்படித் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 100க்கு 16, 18 என்று பதவி உத்தியோகங்களில் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கொடுக்கப்
படுகின்றதோ அதுபோல பெண்களுக்கும் எண்ணிக் கைக்குத் தக்கவாறு 100க்கு 50 பங்கு உத்தியோகம், பதவி முதலியனவும் கொடுக்கப்படுமானால் பெரும் அளவுக்குப் பெண் அடிமை ஒழியும். ஆண் எஜமானன் – பெண் அடிமை என்கின்ற நிலை மறையும்.

பெற்றோர்களும் பெண்களுக்கு 20 வயது வரையில் படிப்புக் கொடுக்க வேண்டும். 20 வயதுக்கு முந்தி திருமணமும் செய்யக்கூடாது.
பெண் நன்கு படித்து ஓர் உத்தியோகத்தில் அமர்ந்து சம்பாதிக்கும்படியான நிலை ஏற்பட்டால், ஆணுக்குப் பெண் அடிமைப்பட்டு இருக்கவேண்டிய நிலை ஏற்படாது.
(23.01.1972 அன்று வேலூர் திருமண நிகழ்ச்சியில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)
– ‘விடுதலை’, 05.02.1972

•••

நமது நாட்டில் மொத்த ஜனத்தொகையில் சரி பகுதியாக இருக்கிற பெண்கள், மனித சமுதாயத்திற்குப் பயன்படாமல் ஆண்களுக்கு அடிமையாகிப் பிள்ளை பெறுவதையும், அதைக் காப்பதையுமே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். உலகில் பல இடங்களில் தற்போது பெண்ணடிமை நீங்கி வருகின்றது.
எனக்கு இப்பெண்ணடிமையை நீக்க, திருமண முறையையே நீக்கவேண்டும், சட்ட விரோதமாக்க வேண்டும் என்று கருதத் தோன்றுகின்றது. நம் நாட்டில் அடிமை முறை இருந்தது, பெண்களை விற்கும் முறை, உடன்கட்டை ஏறும் முறை, குழந்தைகளைப் பலியிடும் முறை போன்ற அநேகக் கொடுமைகள் இருந்தன. வெள்ளைக்காரன் ஆட்சியின் போது இக்கொடுமைகள் யாவும் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டன.

அதன் பின்னும் வெள்ளையன் ஆட்சியின் போது பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. பால்ய விவாகம் என்கின்ற மணமுறை, கணவன்
பிடிக்காமல் பிரிந்து சென்றால் ஜீவனாம்சம் என்கிற பெயரால் மிகச் சிறிய தொகை கொடுக்கப்பட்டு வந்தது. நமது இயக்கம் தோன்றிய பின்தான் இவை
யெல்லாம் நம் போராட்டத்தின் காரணமாகச் சிறிது சிறிதாக மாற்றியமைக்கும்படி செய்தோம்.

நமது நாட்டு இலக்கியங்கள், தோன்றிய பெரியவர்கள், அறிவாளிகள் என்பவர் யாவரும் பெண்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொன்னார்களே ஒழிய, பெண்கள் சுதந்திரத்தோடு வாழ வேண்டுமென்று எவருமே சொல்லவில்லை.

இதற்கு முன் இருந்தவர்கள் எல்லாம் பழைமை யைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போனார்களே ஒழிய, கோயிலைக் கட்டி மக்களை மடையர்
களாக்கிப் போனார்களே ஒழிய, மனிதனுக்கு அறிவு இருக்கிறது, அதைக் கொண்டு சிந்தித்து அதன்படி நட என்று எவனும் சொல்லவில்லை. உலக வளர்ச்சியில் நம் நாட்டு மக்களுக்கு ஒரு சிறு பங்கு கூட இல்லையே!

பெண்கள் குறைந்தது 20 வயதுவரை படிக்கவேண்டும். கோயில்களுக்குச் செல்லக் கூடாது. உத்தியோகங்களுக்குச் செல்ல
வேண்டும். அல்லது ஏதாவது தொழில் செய்ய வேண்டும். மேல்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக வாழகின்றார்கள். உத்தியோகத்திற்குச் செல்பவர்களைத் தவிர மற்ற பெண்கள் வீட்டில் சும்மா இருப்பதில்லை. ஏதாவது கைத்தொழில் செய்து அதன்மூலம் தங்கள் வாழ்விற்குரிய வருவாயைத் தேடிக் கொள்கிறார்கள்.

கல்லையும், செம்பையும் உருவமாக்கி – கடவுளாக்கி அவற்றை வணங்கும்படியாகச் செய்து, திருவிழா, உற்சவம் என்று நடத்தி
மக்களை மடையர்களாக்கினரே ஒழிய, அறிவுப்படி நட என்று எவனுமே சொல்லவில்லை. காரணம் தெரியாத – சமாதானம் சொல்ல முடியாத காரியங்களை மனிதன் கைவிடவேண்டும்.

நாம் வளர்ச்சியடைய வேண்டும். நம் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். நம் மக்கள் அறிவு வளர்ச்சி பெற முடியாமல் போனதற்குக் காரணமே கடவுள், மதம், சாஸ்திரம் ஆகியவற்றாலேயேயாகும். இவற்றையெல்லாம் மாற்றி னால் நம் மக்களின் அறிவு வளர்ச்சியடையும். மற்ற மக்களுக்கு நம்
அறிவு பயன்படும்; நம் அறிவிற்கு அவ் வளவு சக்தியுண்டு.

(11.04.1971 அன்று அறந்தாங்கியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு)
– `விடுதலை’, 10.06.1971

•••

சார்ந்து வாழாதீர்கள்! உலகத்திலேயே பெண்களுக்கு உரிமை கொடுத்து வைத்திருப்பதும் பெண்விடுதலையை வற்புறுத்துவதும் நாம்தான்.
நம் இயக்கம் ஒன்றுதானாகும். எல்லா மதங்களுமே மதத்தவர்களுமே ஒவ்வொரு தன்மையில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்
கின்றார்கள். நம் இயக்கம் தோன்றி பெண்களின் விடுதலைக்காகத் தொண்டாற்றியதன் பயனாக இன்று பெண்களுக்குப் படிப்புரிமை, சொத்துரிமை,
மறுமண உரிமை, உத்தியோக உரிமை மற்றும் பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. நம் இயக்கம் தோன்றுவதற்கு முன் பெண்களின் நிலைமை எப்படி இருந்தது என்பதை ஒவ்வொரு வரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு உண்மை தெரியும்.

மணமக்கள் வரவிற்குள் செலவிட வேண்டும். ஆடம்பரமாக வாழக்கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் மற்றவரின் உதவியை எதிர்பார்க்கக் கூடாது. கூடுமானவரை குழந்தை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முடியவில்லை, ஒன்று தப்பினால் இரண்டு அதற்கு மேலில்லாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஜாதகம், ஜோசியம், பொருத்தம், சாமி கேட்பது போன்ற முட்டாள்தனங்களைக் கைவிட வேண்டும். பெண்களை நன்கு படிக்க வைக்க வேண்டும்.

அவர்கள் தங்களின் வாழ் விற்கு ஏற்ற வருவாயுள்ள ஒரு தொழிலைப் பழக வேண்டும். பெண்கள் தங்களுக்கேற்ற துணைவர்களைத் தாங்களே தேர்ந்தெடுத்
துக் கொள்ள உரிமை வழங்க வேண்டும்., தற்போது பெண்களுக்குப் படிப்பும், வேலையும் இல்லாததால்தான் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டு
மென்கின்ற நிலை இருக்கிறது. பெண்கள் ஆண்களைப் போன்று துணிவாக நடந்து கொள்ள வேண்டும். பெண்கள் தனியாக வாழ முடியும், எதையும் சாதிக்க முடியும் என்கின்ற நிலையில் வாழ வேண்டும். சுதந்திரமாக கவலையற்றுவாழ, தொல்லையற்று வாழ, அறிவைக் கொண்டு சிந்தித்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.(09.09.1970 அன்று திருவலஞ்சுழியில் நடைபெற்ற திருமணத்தில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை)

– ‘விடுதலை’ 18.11.1970