Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மீண்டும் வருவேன்..- ஆறு. கலைச்செல்வன்

நல்லதம்பி தனது நீண்டகால நண்பர் செல்லதுரையைப் பார்க்க வந்தார். அவர் கையில் திருமண அழைப்பிதழ் ஒன்று இருந்தது.
“வா, நல்லதம்பி ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நாம் சந்திச்சு ரொம்ப வருஷமாச்சு. வீட்டை எப்படி கண்டுபிடிச்ச,” என்று சொல்லியபடி அன்புடன் அவரை வரவேற்றார்.

நாற்காலியில் உட்கார்ந்த நல்லதம்பி தன் கையில் இருந்த திருமண அழைப்பிதழை செல்லதுரையிடம் கொடுத்தார்.

“என் பேத்திக்குத் திருமணம். நீ கண்டிப்பா வரணும். நானும் உன்னைப் பார்த்து ரொம்ப வருஷம் ஆயிடுச்சி. உன் செல் நம்பரும் என்கிட்ட இல்லை. நானும் வெளியூரில் ரொம்ப தூரத்தில் இருக்கேன். இருந்தாலும் எப்படியோ உன் வீட்டைக் கண்டுபிடிச்சி வந்துட்டேன்.”

“உன்னைப் பார்க்கிறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்க. எப்படியாவது திருமணத்திற்கு வந்துடுறேன்,” என்று சொல்லிக் கொண்டே திருமண அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தார் செல்லதுரை.

“நல்லதம்பி, உன் பேத்தியின் பெயர்…”, என்று கேட்டவரை இடைமறித்த நல்ல தம்பி “அனுஷ்கா” என்று சொன்னார்.

“அனுஷ்கா, என்று அந்தப் பெயரை உச்சரித்த செல்லதுரை முகத்தில் சற்றே கவலை படர்ந்தது.

“என்னப்பா இது! பெயரை உச்சரிக்கவே கஷ்டமா இருக்கு. நல்ல தமிழ்ப் பெயர் கிடைக்கலையா?”, என்று கேட்டார்.

“அது என் மகனும் மருமகளும் சேர்ந்து வைத்த பெயர். நான் என்ன செய்வது? அது மட்டுமல்லாமல் பெயரில் என்ன இருக்கு. தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் வளர்ந்திடுமா?”

இப்படி நல்லதம்பி சொன்னதும் சற்றே தூக்கி வாரிப் போட்டது செல்லதுரைக்கு. காரணம் ஒரு காலத்தில் அவர் தமிழ்மொழியை உயர்த்திப் பிடித்தவர், தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு அறிவுரை பகன்றவர். தமிழ் இசை மன்றம் என்ற அமைப்பில் பொறுப்பில் இருந்தவர். இவர் எப்படி மாறினார் என வியந்தார். அவரது வியப்பிற்கு விடையும் கிடைத்தது.

அவர் வந்த கார் மிகவும் ஆடம்பரமான கார். அவர் கழுத்து, கைகளில் தங்க ஆபரணங்கள் மின்னின. தனக்குள்ள வசதி பற்றி அவரே பெருமையுடன் சொன்னார். பணம் சில மனிதர்களை தீய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. கொள்கை வாதியாக இருந்த சிலர் தடம் புரண்டு அன்று பேசிய நிலைக்கு எதிராக இன்று முழக்கமிடுகிறார்கள். அதில் நல்லதம்பியும் சிக்கிக் கொண்டாரே! என நினைத்து வருந்தினார் செல்லதுரை.

அந்தத் திருமண அழைப்பிதழில் குட்டீஸ் எனப் போட்டு மேலும் பல பெயர்கள் இருந்தன. அவை இவருடைய மேலும் பல பெயர்த்திகள் பெயர்கள் போலும். அனைத்தும் வடமொழியில் இருந்தன. ரோகித், ஹரீஷ், யுவஸ்ரீ, ஸ்ரீநிதி… எனப் பெயர்கள் நீண்டன.

செல்லதுரையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

“என்னப்பா இது, ஒரு பெயர் கூட தமிழில் இல்லையே” என்று தனது ஆதங்கத்தை மீண்டும் வெளிப்படுத்தினார்.
அது மட்டுமல்லாமல் அவரது முகத்தை ஏறிட்டு நோக்கியவாறு அவரது நெற்றியில் மதச்சின்னமும் காணப்பட்டது.
மதவாதியாகவும் மாறிவிட்டாரே என எண்ணி வருந்தினார் செல்லதுரை.

“நான் இப்போ பக்திப் பிரசங்கம் கூட செய்கிறேன்.” என்றார் நல்லதம்பி.

“அப்படியா?”, என்பதுபோல் அவரைப் பார்த்தார் செல்லதுரை.

“இளமைக்காலத்தில் நாம் இருவரும் மதவாதத்தை எதிர்த்துப் பேசினோம். தமிழைப் பரப்பினோம். குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டவேண்டுமென்று இயக்கமே நடத்தினோம். இப்ப அடியோடு மாறிட்டாயே. எப்படி உன்னால மாற முடிந்தது?” என்று கேட்டார்.

“மாறியதால்தான் இப்போது வசதியாக இருக்கேன். மாறாத நீ இன்னமும் முன்னேற்றமடையாமல் இருப்பது தெரிகிறது. நான் ஓர் இயக்கத் திலும் சேர்ந்துவிட்டேன். அதில் எல்லோருமே பக்தர்கள்தான். நீ இப்படியே கொள்கை பேசி என்ன பயனைக் கண்டாய்? நான் என்னை மாற்றிக் கொண்டு சில ஆண்டுகள்தான் ஆயிற்று. அதற்குள் எனக்கு வாய்ப்பும் வசதியும் அதிகமாயிடுச்சு. என் மகனும் மிகவும் புத்திசாலி. ஆரம்பம் முதலே அவன் தீவிர பக்தன். சாமி யாராக ஆகவில்லை, அவ்வளவுதான்”, என்றார் நல்லதம்பி.

“உன் மகன் என்ன வேலை செய்கிறான்?” என்று கேட்டார் செல்லதுரை.

“அய்.டி.கம்பெனியில் வேலை. நல்ல சம்பளம். குரூப் லீடராகவும் இருக்கான்.

இந்தப் பதிலைக் கேட்டதும் சற்றே யோசனையில் ஆழ்ந்தார் செல்லதுரை.
அய்.டி. போன்ற தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் வேலை செய்யும் இளைஞர்கள் பலருக்கு சமூகநீதி, இடஒதுக்கீடு, ஜாதி ஒழிப்பு, மதவெறி இவற்றைப் பற்றிய புரிதல் இல்லாமல் போய்விட்டதோ என எண்ணினார். அவர்களுக்கு பழைய வரலாறுகளை
யெல்லாம் அறியும்படி செய்யவேண்டும். தொழிலாளர் நலன், ஒற்றுமை, உழைக்கும் மக்களின் உரிமைகள், பகுத்தறிவுச் சிந்தனை ஆகியவற்றை அவர்கள் எண்ணத்தில் விதைக்கவேண்டும். இல்லாவிட்டால் பிற்கால சமுதாயம் மிகவும் பாழ்பட்டுவிடும்.

வரலாற்றுச் சுவடுகளைத் திரும்பிப் பார்த்தறிந்து அவற்றைப் பேணாமல் பணம் சம்பாதிப்பது ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு
திக்குத் தெரியாமல் திசை மாறித் தடுமாறிக் கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு நாம் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து, வழிகாட்டி நல்வழிப்படுத்த வேண்டிய வேளையில்இபப்டி சிலர் பணத்திற்கு அடிமையாகி, வீணர்களுக்கு விலை போய், கொண்ட கொள்கையை குழிதோண்டிப் புதைத்துவிட்டு உலாவரும் நல்லதம்பியைப் போன்றவர்களை நினைத்து வருந்தினார் செல்லதுரை.

“கல்யாணத்துக்கு அவசியம் வந்திடணும்” என்று சொல்லி அவரது சிந்தனையைக் கலைத்தார் நல்லதம்பி. திருமண அழைப்பிதழை மீண்டும் படித்துப் பார்த்த செல்லதுரை, “நாமெல்லாம் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டோம். பிள்ளைகளுக்கும் சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்தோம். ஆனால் இப்போது இந்தத் திருமணம் அப்படி இல்லையே!” என்றார். “காலங்கள் மாறுகின்றன”, என்று பதிலளித்தார்நல்லதம்பி.

“அந்த மாற்றம் முன்நாளைவிட முன்னேற்றம் அடைந்தல்லவா இருக்க வேண்டும்! மீண்டும் பழைய காலத்திற்குச் செல்லக்கூடாதே”, என்று சொன்ன செல்லதுரை மேற்கொண்டு விவாதிக்க விரும்பாமல் அவருக்கு சிற்றுண்டி அளிக்க ஏற்பாடு செய்தார்.
அப்போது நல்ல தம்பியின் காலைக் கவனித்தார் செல்லதுரை. காலில் வீக்கம் காணப்பட்டது. முகமும் தெளிவற்று இருந்தது. ஆனால் அது பற்றி நேரிடையாகக் கேட்காமல் மறைமுகமாகக் கேட்டார்.
“காப்பியில் சர்க்கரை போடலாமா?”

”ஆகா, தாராளமாகப் போடலாம். எனக்கு சர்க்கரை நோய் இருக்காம். ஆனால் நான் சாப்பாட்டில் குறைவைப்பதே கிடையாது,” என்று அலட்சியமாகப் பதில் சொன்னார் நல்லதம்பி.

“அப்படி செய்யக்கூடாது. சர்க்கரை நோய் என்பதைவிட சர்க்கரை குறைபாடு என்றுதான் அதை சொல்லவேண்டும். அது ஒரு நோய் இல்லை. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிட்டு வருகிறாயா?”

“அதெல்லாம் இல்லை செல்லதுரை. தினமும் சாமி கும்பிடுகிறேன். விரதமும் எடுக்கிறேன். அப்புறம் அமிர்த நீரும் குடிக்கிறேன்.”

“விருந்தும் விரதமும் சர்க்கரை குறைபாட்டுக்கு நல்லதல்ல. அப்புறம் அமிர்த நீர் என்றாயே, அது என்ன? அப்படி ஒரு நீர் இருக்கா?”, என்று கேட்ட செல்லதுரையை இடைமறித்து பதில் சொன்னார் நல்லதம்பி.

“ஆமாம் செல்லதுரை. இலக்கியத்தில் கூட சொல்லப்பட்டுள்ளதாம். கோமியம்தான் அந்த அமிர்தநீர்.”
இதைக் கேட்டு மிகவும் எரிச்சலடைந்தார் செல்லதுரை.

“அது என்ன அமிர்த நீர்? மாட்டு மூத்திரம் என்று சொல்லேன்.”

“அது சகல நோய்களையும் தீர்க்கும். ஆங்கில மருத்துவம் படித்த டாக்டரே சொல்லி இருக்கார். நீ படிக்கலையா செல்லதுரை?”

“பசு மாட்டு மூத்திரம், காளை மாட்டு மூத்திரம், எருமை மாட்டு மூத்திரம் எல்லாமே சகல நோய் நிவாரணிகளா?

“பசுவின் கோமியமே நல்லது. தொழில்நுட்ப வல்லுநரே சொல்லி இருக்கார் செல்லதுரை.”
படித்த சிலரும் மதவாதிகளாக மாறி மனிதர்களை மடையர்களாக ஆக்குவது மட்டுமல்லாமல் அவர்களது உயிருக்கே உலை வைக்கும் காரியங்களைச் செய்கிறார்களே என எண்ணி வருந்தினார் செல்லதுரை.

“சரி, அது இருக்கட்டும் நல்லதம்பி. நண்பன் என்ற முறையில் நான் சொல்லும் யோசனையையும் கேள். சர்க்கரைக் குறைபாட்டிற்கு மருந்து மாத்திரைகள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடு. பாத பராமரிப்பு மிகவும் அவசியம். செருப்புப் போடாமல் எங்கும் போகவேண்டாம். வீட்டில் கூட செருப்பு அணிந்தே நடக்கவேண்டும். உன்கால் வீக்கத்தைப் பார்த்தால் எனக்குக் கவலையாக உள்ளது. தயவு செய்து உடம்பைக் கவனித்துக்கொள். நடைப்பயிற்சியை தவறாமல் கடைப்பிடி. உணவிலும் கட்டுப்பாடு வேண்டும் நேரடி சர்க்கரையை உண்ணவேண்டாம். எனக்கும் சர்க்கரைக் குறைபாடு உண்டு. ஆனால் அதை நான் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன்.”

ஆரம்ப காலம் தொட்டே மதவாதம் பேசி மதவெறியைத் தூண்டுபவர்கள் ஆபத்தானவர்கள். ஆனால், ஆரம்ப காலத்தில் மதவாதத்தை எதிர்த்து, பகுத்தறிவுடன் நடந்து, பின்னாளில் பணத்திற்கு அடிமைப்பட்டவர்கள் மிக மிக ஆபத்தனவர்கள். இதை நன்றாகவே அறிந்திருந்தார் செல்லதுரை. இருப்பினும் மனிதாபிமான அடிப்படையில் நண்பருக்கு ஆலோசனை சொன்னார்.

“அவசியம் திருமணத்திற்கு வந்திடணும்,” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் நல்லதம்பி.
திருமண நாள் வந்தது. முதல் நாளே புறப்பட்டார் செல்லதுரை. காரணம் திருமணம் நடக்க இருந்த ஊரில் பகுத்தறிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் இருந்தது. அதில் கலந்துகொள்வதற்காகவே புறப்பட்டார். அப்படியே மறுநாள் திருமணத்திற்கும் சென்று பார்த்துவர விரும்பினார் செல்லதுரை.
அது போலவே திருமண நாளன்று திருமணம் முடிந்து மிகவும் தாமதமாகவே சென்றார் செல்லதுரை. அவரை மிகவும் வரவேற்றார் நல்லதம்பி. இருப்பினும் அவர் முகத்தில் சோர்வு தெரிந்தது. வீக்கம் நிறைந்த காலுடன் சற்று தாங்கலாகவே நடந்தார்.

“உன்னைப் பார்ப்பதற்காகவே நான் வந்தேன். உடம்பைக் கவனித்துக் கொள். மருத்துவரிடம் சென்றாயா? மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறாயா?”
ஆனால், அவர் சொல்வதைக் காதில் வாங்காத நல்லதம்பி, “செல்லதுரை, மணமேடைக்கு வா. மணமக்களை வாழ்த்து” என அழைத்தார்.
செல்லதுரை மணமேடை அருகில் சென்றார். அவர் காலில் செருப்பு அணிந்திருந்தார். அதைக் கழற்றாமல் ஏறினார்.

“செருப்பைக் கழற்றிவிட்டு ஏறு செல்லதுரை”, என்றார் நல்லதம்பி.

“ஏன்?”, என்று கேட்டார் செல்லதுரை.

“சாமி படமெல்லாம் இருக்கு பார். சடங்குகள் நடந்த இடம். இந்த இடம் புனிதமானது. அதனால்தான் சொன்னேன் செல்லதுரை.”

“நல்லதம்பி, நானும் சர்க்கரை குறைபாடு உள்ளவன். எனக்கு உடல்நலன் முக்கியம். நான் தேவையில்லாமல் உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டால் எனக்கு மட்டுமல்ல, என இணையருக்கும் பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் தொல்லையாகப் போய்விடும். மேடையில் பல பொருட்கள் சிதறிக் கிடக்கின்றன. அதனால் நான் செருப்பைக் கழற்றிவிட்டு வரமுடியாது. நீயும் செருப்பு அணியாமல் நடப்பது நல்லதல்ல. மணமக்களுக்கு இரண்டு புத்தகங்கள் வாங்கி வந்துள்ளேன். நீயே கொடுத்துவிடு. நான் இங்கிருந்தே வாழ்த்துகிறேன்.”, என்று சொல்லிவிட்டு புத்தகங்களை அவர் கையில் கொடுத்தார் செல்லதுரை.
காலில் செருப்பு அணியாத நல்லதம்பி மணமேடையில் ஏறி மணமக்களிடம் புத்தகங்களைக் கொடுத்தார்.
அப்போது அவர் காலில் ஏதோ குத்தியது. காலை மேலும் தாங்கித் தாங்கி நடந்தபடியே கீழே வந்தார்.

அதைக் கவனித்த செல்லதுரை. அவரை நாற்காலியில் உட்காரவைத்து காலைப் பரிசோதித்தார். காலில் ஒரு சிறிய குண்டூசி குத்தியிருந்தது. அதை எடுத்தார். மணமேடை அலங்காரத்தின்போது பயன்படுத்திய குண்டூசி தவறிக் கீழே விழுந்து அவர் காலில் குத்தியிருந்தது. இரத்தமும் கசிந்தது. அதைத் துடைத்துவிட்ட செல்லதுரை மருத்துவரிடம் சென்று காட்டும்படி அறிவுரை சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
சில நாட்கள் கடந்தபின் ஒரு நாள் நல்ல தம்பியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் செல்லதுரை.
நல்லதம்பி மிகவும் சோகத்துடன் பேசினார்.

“செல்லதுரை, அன்று காலில் குத்திய குண்டூசி பெரிய காயத்தை ஏற்படுத்திவிட்டது. காலில் ஏற்பட்ட புண் ஆறவே இல்லை. கோமியத்தைக் குடித்துவிட்டு மருத்துவரிடம் செல்லாமலேயே இருந்துவிட்டேன். கால் சுத்தமாக உணர்வில்லாமல் போய்விட்டது. சில மதம் பிடித்த டாக்டர்கள், தொழில்நுட்பக்
காரர்கள், சாமியார்கள் பேச்சைக் கேட்டு அறிவு கெட்டுப் போய்விட்டேன். அடிக்காலை வெட்டிவிட வேண்டும் என டாக்டர் சொல்கிறார். பாதை மாறியதன் பலனை இப்போ அனுபவிக்கிறேன். உன்னைப் போன்ற பாதை மாறாத பகுத்தறிவாளர்கள் தான் நாட்டிற்குத் தேவை. என்னைப் போன்ற கயமைத்தனம் கொண்டவர்களை நீங்கள்தான் திருத்தவேண்டும். சிகிச்சைக்குப் பிறகு நான் உயிர் பிழைத்தால் மீண்டும் உன்னோடு கைகோக்கிறேன்.”
அதற்கு மேல் அவரால் பேசமுடியவில்லை.

மூடநம்பிக்கைகளைத் துணிந்து பரப்பிவரும் கயவர்களை நம்பிக் கெட்ட நல்லதம்பியைப் போன்றவர்களை நினைத்து வருந்தினார்.
நண்பருக்கு ஆறுதல் கூறி அவர் விரைவில் குணமடைய இயற்கை துணை நிற்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் செல்லதுரை.