Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

பெரியார் மண்ணை மதக்கலவர பூமியாக்க முயல்வோரை முறியடிப்போம்!- மஞ்சை வசந்தன்

“இது பெரியார் மண்!” இதுவெறும் வார்த்தைகள் அல்ல. நூறாண்டு கால வரலாறு தந்த கணிப்பு! பெரியார் மீது கொண்ட பற்றால், அவரை உயர்த்தி நிறுத்த வேண்டும் என்ற உந்துதலால் உணர்ச்சி வசப்பட்டு கூறப்படுவது அல்ல. பெரியார் உழைப்பால் இம்மண் பெற்ற மாற்றத்தை, மக்கள் ஏற்றத்தை வைத்துக் கூறப்படுவது.

பெரியார் என்றால் மனிதநேயம் என்று பொருள். மனிதம் என்றால் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, விடுதலை, ஆதிக்கமின்மை இவற்றைக் குறிக்கும்.

பெரியார் சுயமரியாதை இயக்கம் தொடங்கியபோது, ஜாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை, ஒதுக்கி வைத்தல், ஒடுக்கி வைத்தல், உரிமைகள் மறுத்தல், இழிவு செய்தல், மரியாதை மறுத்தல், கல்வி மறுப்பு, கலந்து வாழ மறுப்பு, பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்று பல்வேறு சமூக அநீதிகள் உச்சத்தில் இருந்தன.

திருவள்ளுவர், பசவர், வள்ளலார், அயோத்தி தாசர், இரட்டை மலை சீனிவாசன், பூலே, ஷாகுமகராஜ் என்று சமத்துவப் போராளிகள் தங்களால் இயன்ற அளவு மேற்கண்ட சமூக அவலங்களை அகற்ற உழைத்தாலும், சமூக மாற்றம் ஏற்படவில்லை. தனி நபர் உழைப்பு உடனடிப் பலனைத் தரவில்லை.

இப்புரட்சியாளர்களை உள்வாங்கிய தந்தை பெரியார் அவர்கள், சமூக அநீதிகளை ஒழிக்க, ஆதிக்கம், அடக்குமுறைகளைத் தகர்க்க, சமவாய்ப்பு, சமஉரிமை கிடைக்க இயக்கம் கண்டாக வேண்டும் என்ற சரியான முடிவுக்கு வந்தார்.

மேற்கண்ட அவலங்கள், கொடுமைகள், அநீதிகளுக்கெல்லாம் காரணமானவை கடவுள், மதம், சாஸ்திரங்கள் போன்றவையே என்பதை நுட்பமாகக் கண்டறிந்து, அவற்றை ஒழிப்பதே சரியான தீர்வு என்ற முடிவுக்கு வந்தார்.

ஜாதி, உயர்வு தாழ்வு, உரிமைகள் மறுப்பு. இவற்றிற்குக் காரணம் சாஸ்திரங்கள் என்பதைக் கண்டு அவற்றை எதிர்த்தார். சாஸ்திரங்களுக்கு அடிப்படை கடவுள், மதம் எனவே அவற்றை ஒழிக்கப் போராடினார்.

திருபரங்குன்றம் மலை

கடவுள் நம்பிக்கை உடனடியாக ஒழிக்கப்பட முடியாது என்பதை உணர்ந்த பெரியார், அது ஒழிக்கப்படும் வரை, கோயில்களில், வழிபாட்டில், பொது இடங்களில் எல்லா மனிதர்களுக்கும் சமஉரிமையும், சமவாய்ப்பும் வேண்டும்; புறக்கணிப்பும், இழிவும் அகற்றப்படவேண்டும் என்று போராடினார்.

பண்டைய தமிழர் மண்ணின் ஒரு பகுதியான கேரளத்தில் வீதியில் நடக்கக் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட போது, அங்குள்ள தலைவர்களின் போராளிகளின் அழைப்பை ஏற்று கேரளா சென்று, தொடர்ந்து பிரச்சாரம் செய்து, போராட்டங்கள் நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்கள் வீதிகளில் நடக்க உரிமைப் பெற்றுத் தந்தார்.

இந்தப் போராட்டமும் வெற்றியும், வடபுலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய அம்பேத்கருக்கு உந்துதலைத் தந்தது.
ஆலய நுழைவுப் போராட்டம்:

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் நுழையக் கூடாது என்ற தடையை அகற்ற, தமது இயக்கத்தவர் மூலம் போராட்டங்கள் நடத்தினார். தடையை மீறி தமது இயக்கத்தவர் கோயில்களில் நுழையச் செய்தார். தடையை மீறியவர்கள் கைது செய்து சிறைத் தண்டனைப் பெற்றாலும், தொடர்ந்து போராட்டங்களை நடத்தி அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் நுழைய உரிமை பெற்றுத் தந்தார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை:

கோயிலில் நுழைந்தால் மட்டும் போதாது, கோயில் கருவறைக்குள் பூசை செய்யும் உரிமையும் எல்லா ஜாதியினருக்கும் வேண்டும் என்று போராடினார். தந்தை பெரியாரின் தொண்டரான கலைஞர் அவர்கள் முதல்வரானதும் அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றத்தில் ஆதிக்கவாதிகள் தடை பெற்றனர். என்றாலும், பெரியாரின் தொண்டர்களான தி.க., தி.மு.கவினர் தொடர்ந்து போராடி, நீதிமன்றத்தில் வாதாடி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைப் பெற்று இன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் பணியாற்றுகின்றனர்.

அனைவருக்கும் கல்வி:

மக்கள் தொகையில் சிறு எண்ணிக்கையிலான உயர் ஜாதியினர், தாங்கள் 90% மேற்பட்ட மக்களை ஆதிக்கம் செலுத்துவதற்காக, அவர்களுக்குக் கல்வி கற்கும் உரிமையை மறுத்து வந்தனர்.

அந்த நிலையை அகற்றி அனைவரும் கல்வி கற்க வாய்ப்பைப் பெற பெரியார் பெருமளவில் போராடினார். அதன் விளைவாய் அனைவருக்கும் படிக்கும் வாய்ப்பு நீதிக்கட்சி ஆட்சி மூலம் கிடைத்தாலும், இராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி கொண்டு வந்து அவ்வாய்ப்பைப் பறிக்க முயன்றார். தந்தை பெரியாரின் கடுமையான போராட்டம் மூலம் இராஜகோபாலாச்சாரியார் பதவி விலக, காமராசர் முதலமைச்சர் ஆகி, பள்ளிக்கூடங்களை அதிகம் திறந்து எல்லா மக்களும் படிக்கும் வாய்ப்பைத் தந்தார்.

இடஒதுக்கீடு:

எல்லா ஜாதியினருக்கும் கல்வி கற்கும் உரிமை கிடைத்தாலும், அனைத்து ஜாதி மக்களுக்கும் உத்தியோகம் பெறும் வாய்ப்பு கிடைக்காத நிலை நிலவியது. அதை ஒழிக்க, தந்தை பெரியார் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உத்தியோகங்களில் உரிய இடஒதுக்கீடு தரப்படவேண்டும், அதற்கு அரசியல் சாசனத்தில் வழி செய்ய வேண்டும் என்று போராடினார். அதன் விளைவாய் அரசியல் சாசனம் திருத்தப்பட்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்று பெரும் பதவிகளில், அலுவலகப் பணிகளில் அமர்ந்தனர்.

பெண் கல்வி:

பெண்களுக்கான கல்விக்குப் பல தடைகள் இருந்தன. அவற்றைத் தன் பிரச்சாரங்கள் போராட்டங்கள் மூலம் தந்தை பெரியார் அவர்கள் தகர்த்து பெண்களும் படிக்கும் நிலையை உருவாக்கினார். அதன் விளைவாய் இன்று தமிழ்நாட்டில் பெண்களே கல்வியில் சிறந்து விளங்கிச் சாதனைப் படைத்து வருகின்றனர்.

பெண்களுக்கு மறுவாழ்வு, சொத்துரிமை:

பெண்களுக்கு மறுமண உரிமையும், சொத்துரிமையும் மறுக்கப்பட்ட நிலை இருந்ததற்கு எதிராய் பெரியார் பெரும் போராட்டங்களை நடத்தி, தொடர்ந்து பிரச்சாரங்களைச் செய்தார். அதன் விளைவாய் பெண்களுக்கு மறுமணம், பெண்களுக்குச் சொத்துரிமை எல்லாம் கிடைத்தன. பெண்கள் ஆண்களைப் போலவே ஆடை அணியவும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கு பெற வேண்டும் என்ற பெரியாரின் எண்ணமும் நிறைவேற்றப்பட்டது.

தனித்து மிளிரும் தமிழ்நாடு:

தந்தை பெரியாரின் உழைப்பால், பிரச்சாரங்களால், போராட்டங்களால் தமிழ்நாடு இந்தியாவிலே அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. பெரியார் வழிவந்த அரசியல் கட்சிகளே தமிழ்நாட்டில் தொடர்ந்து ஆட்சி செய்கின்றன.
மதவாத சக்திகள் பல மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றியது போல, தமிழ்நாட்டிலும் ஆட்சியைப் பிடிக்க பல வகையில் முயன்றும் தொடர்ந்து தோல்வியையே பெற்று வருகின்றனர்.
மதமோதல்களை உருவாக்கி

மக்கள் ஆதரவு பெற முயற்சி:

எந்த வகையிலும் அரசியல் செல்வாக்கைப் பெற முடியாத மதவாத, சனாதன சக்திகள் ஜாதி மோதல்களை, மதமோதல்களை உருவாக்கி அதன் மூலம் மக்களுக்கு வெறியேற்றி, தாங்கள் செல்வாக்குப் பெற்றுவிட வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் முயற்சி வெற்றி பெறும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அவர்கள் முயற்சி வெற்றி பெறாமல் போகவே, மதமோதல்களை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். பெரியார் பக்குவப்படுத்திய மண் தமிழகம் என்பதால், கடவுள் நம்பிக்கை உடைய தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மதவெறி கொண்டு மதமோதல்களை உருவாக்க துணை நின்றதில்லை. என்றாலும் மதவெறி கூட்டம் தொடர்ந்து மதமோதலை உருவாக்க திட்டங்களைத் தீட்டி, மக்களைத் தூண்டும் வேலையைச் செய்கின்றனர்.

கோவையில் கண்ட ருசி:

கோவையில் மதக்கலவரங்களை உருவாக்கி அதன்மூலம் பி.ஜே.பிக்கு ஓரளவு செல்வாக்குப் பெற்றவர்கள், அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் மதக்கலவரங்களை உருவாக்கி வெற்றி பெற வியூகம் வகுத்து செயல்படுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அதற்கு துணை நிற்கவில்லை; துணை நிற்கமாட்டார்கள்.

திருப்பரங்குன்றத்தில்
பருப்பு வேகவில்லை

பெரியார் சிலையைச் சிதைத்தல், கோயில்களைச் சேதப்படுத்துதல், கடவுள் சிலைகளை உடைத்தல் என்று திருட்டுத்தனமாக செயல்பட்டு, அதன்மூலம் கலவரங்களை உருவாக்க முயன்றவர்கள், அவற்றிலெல்லாம் அப்பட்டமான தோல்விகளை அடைந்தவர்கள் தற்போது திருப்பரங்குன்றத்தில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

திருப்பரங்குன்றத்து மலையில் முருகன் கோயில், இஸ்லாமியர் வழிபாட்டிடம் இரண்டும் உண்டு. பல ஆண்டுகளாக இரண்டு வழிபாட்டு இடங்களிலும் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

மலைப்பகுதியில், மற்ற இடங்களில் இந்துக் கோயில்களுடன் இஸ்லாமிய, கிறித்துவ வழிபாட்டிடங்களும் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இந்துமத விழாக்களிலும் மற்ற மதங்கள் தொடர்பு கொண்டுள்ளன.

திருப்பதி மலை

கேரளாவில் அய்யப்பன் கோயிலுக்குச் செல்வோர் வழியில் இஸ்லாமியர் வழிபாட்டிடத்தில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிதம்பரத்திற்கு அருகில் கிள்ளை என்ற ஊரில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டிடம் இந்துக் கடவுள் விழாவோடு தொடர்பு கொண்டுள்ளது. திருமுட்டத்திலிருந்து பூவராகசாமி கிள்ளை கடற்பகுதிக்கு மாசி மகத்திற்கு நீராடச் செல்லும்போது அங்குள்ள இஸ்லாமிய வழிபாட்டிடத்தில் வழிபாடு செய்யப்படுவது நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது.

வேளாங்கன்னி மாதாகோயிலில் கிறித்தவர்களைவிட இந்துக்களே அதிகம் வழிபடுகின்றனர். சிறீரங்கம் கோயில் ரங்கநாதர் துலுக்கநாச்சியாரோடு தொடர்பு கொண்டுள்ளார். திப்பு சுல்தான் ஏராளமான இந்துக் கோயில்களுக்குத் தொண்டும், திருப்பணியும் செய்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்துக் கோயில்கள், கிறித்தவ, இஸ்லாமிய வழிபாட்டிடங்களோடு தொடர்பு கொண்டுள்ளன. மதுரை கள்ளழகர் விழாவிலும் இஸ்லாமியர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அந்த வழக்கத்தின் அடிப்படையில்தான் திருப்பரங்குன்றத்திலும் மலையில் முருகன் கோயிலும் உள்ளது. இஸ்லாமிய வழிபாட்டிடமும் உள்ளது.

முருகனை வழிபடக்கூடியவர்கள் தங்கள் வழக்கப்படி வழிபடுகின்றனர்; இஸ்லாமியர்கள் அவர்கள் வழக்கப்படி வழிபடுகின்றனர்.

மாமிச உணவு படைத்ததாக மதவெறியூட்டலாமா?

இஸ்லாமிய வழிபாட்டிடத்தில் மாமிசம் படைக்கிறார்கள். இது முருகனுக்கு ஏற்புடைய
தல்ல என்கின்றனர். இந்து மதக்கடவுள்கள் எதுவும் சைவக் கடவுள்கள் அல்ல.

சிவனுக்கு கண்ணப்பர் மாமிசம் படைத்திருக்கிறார். முருகனே வேட்டுவப்பெண் வள்ளியை மணந்தவர். வேடர்கள் புலால் உண்பவர்கள். முருகனும் புலால் உண்பவர்தான்.

முருகன் என்ற மலைநிலத்துத் தமிழ்க் கடவுளைச் சுப்ரமணியனாக்கி, சைவக்கடவுளாக்கியது ஆரிய பார்ப்பனக் கும்பல். அது உலக மகாமோசடி. மலை நிலத்து தலைவனைச் சிவனின் நெற்றிப்பொறியில் பிறந்தான் என்று இழிவுபடுத்தியது இஸ்லாமியர்கள் அல்ல ஆரிய பார்ப்பனர்கள்தான்.

தமிழர் வழிபாடு அனைத்தும் மாமிசம் படைத்தல், பலியிடுதல் போன்றவற்றோடு தொடர்புடையதுதான். ஆரியர்களும் பலியிட்டு மாமிசம் உண்பவர்கள்தான். பின்னாளில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள புலால் மறுத்தனர் என்பதே உண்மை பலியிடுதலைக் கண்டித்த புத்தர் செல்வாக்கு பெற்ற நிலையில், அந்தச் செல்வாக்கைத் தாங்கள் பெறவே ஆரிய பார்ப்பனர்கள் தங்களைப் புலால் மறுப்பாளர்களாக மாற்றிக்கொண்டனர் என்பதே உண்மையான வரலாறு.

மதுரா கிருஷ்ண் ஜென்மம் பூமி

ஆக, திருப்பரங்குன்றத்துமலையில் இஸ்லாமிய வழிபாடா? என்ற கேள்வியும், பிரச்சனையும் முருகன் கோயில் உள்ள மலையில் மாமிச விருந்தா என்ற பிரச்சனையும் மதமோதலை உருவாக்குவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்படுவது. இது பெரியார் பக்குவப்படுத்திய மண் என்பதால் பாசிச பா.ஜ.க. பருப்பு இங்கு வேகவில்லை.

வழிபாட்டிடங்கள் இருந்தபடியே இருக்கவேண்டும்

தமிழர்கள் வாழ்ந்த இந்திய மண்ணில் ஆரியர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் வந்து குடியேறியபின், தமிழர்களின் வழிபாடான நிலத்தலைவர்கள் வழிபாடு, பெண்டிர் வழிபாடு, வீரர் வழிபாடு, உறுப்பு வழிபாடு போன்றவை ஆரியர் நுழைவுக்குப்பின் மாற்றப்பட்டன. புராணக்கதைகளைப் புனைந்து எல்லாவற்றையும் மாற்றினர்.

இந்தியா முழுவதும் புத்தமும், சமணமும்தான் பரவி செல்வாக்குப் பெற்றிருந்தன.

புத்தர் சிலையின் தலையை அகற்றி யானைத் தலையைப் பொருத்தி வினாயகர் வழிபாட்டை உருவாக்கினர்.
சமணப் பள்ளிகளையெல்லாம் உடைத்து நொறுக்கிவிட்டு ஆரிய கடவுளுக்குக் கோயில் கட்டினர். திருச்சி மலைக்கோயில் அதற்குச் சரியான எடுத்துக்காட்டு. சிராபள்ளி என்பது சமணக் கோயிலைக் குறிப்பது. அதுவே திரு+சிராபள்ளி=திருச்சிராப்பள்ளியானது. இப்படி பல இடங்களில், பல சமண, பெளத்த வழிபாட்டிடங்களை, தங்கள் கோயில்களாக மாற்றிய மோசடிப் பேர்வழிகளான ஆரியர்கள், இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் பார்த்து, இந்துக் கோயில்களை இடித்துவிட்டு இஸ்லாமிய வழிபாட்டிடங்களையும், கிறித்தவ வழிபாட்டிடங்களையும், கட்டிவிட்டதாகக் கதையளக்கின்றனர். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆண்டவர்கள் இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் தான். அவர்கள் நினைத்திருந்தால் இந்தியா முழுமையும் இஸ்லாமிய அல்லது கிறித்தவ நாடாக ஆக்கி யிருப்பர். ஆனால், அவர்கள் அப்படிச்
செய்யவில்லை. ஆனால், அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம், இந்த மண்ணின் மக்களான கிறித்தவ, இஸ்லாமியர்களை மதத்தைக் காட்டி விரட்டப் பார்ப்பது எவ்வளவு பெரிய மோசடி முயற்சி! பத்து ஆண்டு ஆட்சிக்காலத்திலே இந்தியாவை இந்து நாடாக்கப் பார்க்கிறார்கள்; மற்ற மதத்தார் வெறியேற வேண்டும் என்கிறார்கள். இதில் ஆதிக்கவாதிகள் யார்? அடாவடிப் பேர் வழிகள் யார்? சிந்தித்துப் பாருங்கள்.

இந்த நாடு 1947இல் விடுதலை அடை வதற்கு முன் எதுவேண்டுமானாலும் நடந்தது. என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழ்ந்தன?  ஆனால், விடுதலைக்குப்பின் என்ன முடிவு  செய்யப்பட்டது என்றால், நாம் விடுதலை பெறும்போது வழிபாட்டு இடங்கள் எந்த நிலையில் உள்ளனவோ அந்தந்த நிலையிலேயே அவை தொடரவேண்டும். பழைய வரலாறுகளைக் கூறி, புராண நம்பிக்கைகளைக் காட்டி, மீண்டும் மாற்ற முயற்சிக்கக் கூடாது. அப்படி மாற்ற முயற்சித்தால் அதற்கு முடிவும் இல்லை; தீர்வும் இல்லை.

இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு (திராவிடர்களுக்கு உரிமையானது. ஆரியர்கள் உட்பட மற்றவர்கள் வந்தேறிகள். இன்றைக்குத் தமிழர்களைத் (திராவிடர்களைத்) தவிர மற்றவர்கள் வெளியேற வேண்டும் என்றால் ஏற்பார்களா?
எனவே, விடுதலை அடையும் போது என்ன நிலை இருந்ததோ அந்நிலையை அனைவரும் ஏற்று அதன்படி வாழ்வதே இந்தியாவில் இணக்கம் நிலவவும், அமைதி நிலவவும், ஒற்றுமையும், வளர்ச்சியும் உருவாகவும் உகந்த வழியாகும்.

மற்றபடி மசூதிக்குள் கோயில் இருந்தது; மலையில் வந்து ஆக்கிரமித்துவிட்டார்கள்; அவற்றையெல்லாம் மீட்க வேண்டும். இந்துக்களே எழுங்கள்! என்பதெல்லாம் மதவெறியூட்டி அரசியல் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியே அல்லாமல், இதில் இந்துக்கள் நலம் ஏதும் இல்லை.

திட்டமிட்டு மதக்கலவரம் உருவாக்கம்!

தமிழர் தலைவர் இதுகுறித்து தமது அறிக்கையில், மதக் கலவரங்களுக்குத் தூபம் போட்டு இங்கே ஏதாவது அரசியல் அறுவடை செய்யலாமா என்று ஒரு புது முயற்சியில் – மற்றவை – பிறரை ஏவிவிட்டு கூலிப் பட்டாளங்களைக் களத்தில் இறக்கிப் பார்த்தும்,
அது படுதோல்வியில் முடிந்ததால், கன்னியாகுமரி கடலில் குளித்து, இப்போது ‘மலைகளைக் காப்போம்’ என்றும், அப்பாவிகளை
இதில் ஈர்க்கலாமா என்று பலவித உத்திகளில் தமிழ்நாட்டில் இறங்கியுள்ளனர்!

தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசுக்கு நிதி நெருக்கடி தருதல், அடாவடித்தனம் செய்யும் ஆளுநர் மூலம் நல்லாட்சிக்கு முட்டுக்கட்டை போடுதல், எதிர்பாராமல் நிகழும் மின் கசிவுகளுக்குப் பழிபோட்டு ‘அரசியல்’ நடத்த அதிகாரிகளையே பகடைக்காய்களாக்குதல், ஜாதிக் கலவரங்களைத் தூண்டிட சில சம்பவங்களை மூலதனமாக்கிப் பார்த்தல் முதலிய பலவித ‘‘உத்திகளில்’’ இறங்கியும், திராவிட நாயகரின் தலைமையில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை அசைக்க முடியவில்லை என்பது உறுதியான உண்மை! அத்துடன் உள்ள கொள்கைக் கூட்டணியான மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியை உடைக்கவும் முடியவில்லை என்பதால், திடீரென்று மதக்கலவரங்களைத் தென்மாவட்டத்தில் ஏற்படுத்திப் பார்க்க முனைகின்றனர்!

மலைகளுக்கு ஆபத்தாம்!
மலைகளைக் காக்க வேண்டுமாம்!
இரும்புக்கரம் கொண்டு
அடக்கிட வேண்டும்!

சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெளியூர்களிலிருந்து திரட்டப்பட்ட ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து, ஜாதி, மத வேறுபாடின்றி ஒருங்கிணைந்த சகோதரர்களாக, நல் உறவுகளாக காலங்காலமாய் வாழும் மக்களிடையே மதவெறி ஊட்டி, பிளவுபடுத்த முனைவதில் – பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது!
அந்த வட இந்திய மதவெறி பருப்பு இந்தத் ‘திராவிட மண்ணில்’ – பெரியார் மண்ணில் – சமத்துவ சமூக நீதி மண்ணில் ஒருபோதும்

வேகாது! வேகவே, வேகாது!!

‘கந்தூரி விழாவில்’ ஆடு, கோழி பலியிடுகிறார்கள் சிறுபான்மையினர் என்ற ஒரு போலிக் காரணம் கூறி, மதவெறியை ஊட்டி, மதக்கலவரம் வெடிக்கச் செய்ய முயற்சிக்கும் இந்த மதவெறியைத் தூண்டும் கூட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்!

கோவில்களில் பலியிடவில்லையே!

இந்திய அரசமைப்புச் சட்டப்படி மத விஷயங்கள் என்றால், அது கட்டுப்பாடற்ற சுதந்திரம் அல்ல.
சில உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக்கூட இதில் என்ன காரணத்தாலோ சரியான பார்வை இல்லை என்பது வேதனைக்குரியது!
தமிழ்நாட்டை கலவர பூமியாக்கத் துடிப்போரின் உள் எண்ணத்தைப் புரிந்துகொள்ளாமல், அண்ணா நினைவு நாள் அமைதி ஊர்வலத்தையும், மதக்கலவரத் தூண்டுதலுக்கான ஆர்ப்பாட்டத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் விசித்திர பார்வை – விநோதமாக நீதித்துறையில் வருவது அரசமைப்புச் சட்டத்தின் 25, 26 அடிப்படை மத உரிமைகளையே அலட்சியப்படுத்தப் பார்க்கும் ஒரு தவறான பார்வையே!

கிள்ளை தர்க்கா

குறைந்தபட்சம் கரோனா காலத்துத் தீர்ப்புகளை நினைவூட்டல் அவர்களுக்கு நல்லது!

இந்திய அரசமைப்புச் சட்டம்
என்ன கூறுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமையின்படி மத உரிமை என்பது கட்டுப்பாடற்ற உரிமைகள் அல்ல!
Article (கூறு) 25 Subject to public order, morality and health and to the other provisions of this Part, என்றுதான் உள்ளது.
அதேபோல, Article 26–லும் ஒரே ஒரு வேறுபாடு மட்டும்தான் (25 கூற்றின் பிற்பகுதியில் மாற்றம்).
எனவே, எதனையும் ஆய்வு செய்யாது, உடனே அனுமதியை மட்டும் காவல்துறை அளிக்கவேண்டும் என்று கூறுவது சரியாகுமா?

சட்டம் ஒழுங்கினை (Public Order)பற்றி யோசிக்க வேண்டாமா?

கோவில் வழிபாடு என்று கூறி, உள்ளே சென்று அதைக் கிளர்ச்சிக் கூடமாக்குவதைக் கண்டும் காணாமல் அரசு தனது பார்வையைத்

திருப்பிக் கொள்ள முடியுமா?

ஒன்றுபட்டு சகோதரர்களாக வாழும் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதா?

திருப்பரங்குன்றத்தில் உள்ள மக்கள் மத மாச்சரியத்திற்கு அப்பாற்பட்டு பன்னூறு ஆண்டுகளாக ஒற்றுமையுடன் வாழுகின்றனர். அதைக் குலைப்போர் யாராக இருந்தாலும், தமிழ்நாடு அரசு அதற்கேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முனையும்போது, அதற்கு முட்டுக்கட்டை போட நீதிமன்றங்களைப் பயன்படுத்துவது எவ்வகையிலும் பொதுநலம், பொது அமைதிக்கு உகந்ததாகாது!
இந்து – இஸ்லாமிய – சமண வழிபாட்டுத் தலங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றனவே!

இறைச்சிக் கடைகளும், உணவு விடுதிகளும், சாப்பிடும் மக்களும் இல்லையா?

உ.பி. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு முசாபர் நகரில் திட்டமிட்ட வகையில் ஒரு மதக்கலவரத்தை உருவாக்கி, சிறுபான்மை – பெரும்பான்மை என்று பிளவுபடுத்தி (Polarisation) அரசியல் ஆதாயம் பெற்றதுண்டு. இது சங் பரிவார்களுக்கே உரித்தான அணுகுமுறையே!

திட்டமிட்டே இப்படி வலிய வம்புகளை உரு வாக்கி, மதக்கலவர பூமியாக்க முயற்சிப்பதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. இதனை அரசியல் தூண்டிலாக்கி மீன் பிடிக்க முனையும் காவிக் கூட்டத்தின் கனவுகளும், ஆசைகளும் ஒருபோதும் திராவிட ஆட்சி யில் நிறைவேறாது’’ என்று கூறியுள்ளார்.

எனவே, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்
எச்சரிக்கையை அனைவரும் கருத்தில் கொண்டு, மதவாத சக்திகளின் மதவெறித்தூண்டலை முறியடிக்க வேண்டும்.