அகத்தியர் குறித்த புராணச் செய்திகளை, ஆராய்ச்சி செய்கின்றோம் என்ற போர்வையில் ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைக் காவிக் கும்பல் கல்விப்புலங்களில் விதைத்து வருவதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கடந்த ஒரு வாரமாக இந்திய அளவில் உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன ஆதரவாளர்களும் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கல்வி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, அகத்தியரைப் பற்றிய கருத்தரங்குகள் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள், சொற்பொழிவுகளை நடத்துமாறும் அதற்கு ஒன்றிய அரசு நிறுவனங்களின் வழியாக செலவுக்குரிய தொகையை அளிக்கின்றோம் என்றும் கூறி, பொம்மை (டம்மி) துணைவேந்தர்களைத் துணைகொண்டு, அகத்தியர் குறித்த கருத்தரங்குகளை நடத்தி வருகின்றனர். இந்தச் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரி பின்வருமாறு அறிவிப்பு ஒன்றினை நாளிதழ்களில் வெளியிட்டுள்ளார். “பதினெண் கீழ் சித்தர்களில் சிறந்தவரான அகஸ்தியர் எழுதிய அகத்தியம் என்ற இலக்கண நூலில் இயல், இசை, கூத்து எனும் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார். சித்த மருத்துவம், ஜோதிடம், யோகா, ஞானம், வர்மம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். அவரது சிறப்புகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு, ‘அருந்தமிழ் கண்ட அகஸ்தியர்’ என்ற தலைப்பிலும் கல்லூரி மாணவர்களுக்கு’அகஸ்தியர் காட்டும் அறிவியல்’ என்ற தலைப்பிலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் கட்டுரைப் போட்டிகளை நடத்துகிறது” (தினமலர் 18.01.2025).
செம்மொழி இலக்கியங்களை ஆராய்ச்சி செய்வதற்குத் தொடங்கப்பட்ட செம்மொழி நிறுவனம், வேதம், புராணம், இதிகாசம், ஜோதிடம், யோகா, ஞானம், வர்மம் குறித்து ஆராய்ச்சி செய்யவும் அவற்றைப் பரப்பவும் தொடங்கியிருப்பது – தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயலாகும்!
தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியங்களைப் பரப்பவேண்டிய செம்மொழி நிறுவனம் அதன் கொள்கைகளுக்கு எதிராக நடப்பதைத் தமிழர்கள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். செம்மொழி நிறுவனத்தின் தலைவர் என்ற முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தச் செயலை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்குமாறும் செம்மொழி நிறுவனத்தையும் அதன் நோக்கத்தையும் பாதுகாக்குமாறு நாம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ் மொழியைச் ‘‘செம்மொழி’’ என்று அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக, இந்திய அரசின் சார்பில் 2004 சூன் மாதம் 6ஆம் நாள் தமிழ் மொழியைச் ‘‘செம்மொழி’’ என்று அதிகாரப் பூர்வமாக இந்திய அரசு அறிவித்தது. இதனால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டு, தமிழின் பழைமையான இலக்கண நூல்களான தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்
உள்ளிட்ட41 நூல்களை ஆராய்ச்சி செய்யவும், அந்நூல்களின் கருத்துகள் மக்களிடம் பரவவும் வழிவகைகள் காணப்பட்டன.
இந்த நிறுவனத்தின் பொறுப்பு அதிகாரியாகப் பேராசிரியர் க.இராமசாமி அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களால் நியமிக்கப்பட்டு, மிகச் சிறப்பான திட்டமிடலுடன், செம்மொழி நிறுவனப் பணிகள் முன்னெடுக்கப்
பட்டன. அவரின் பணிக்காலத்தில் செம்மொழி நிறுவனத்திற்கு உரிய நிலம் தமிழ்நாடு அரசிடமிருந்து பெறப்பட்டு, கட்டடப் பணிகள் தொடங்கப்பட்டன.
முனைவர் இரா. சந்திரசேகரன் என்பவர் செம்மொழி நிறுவன இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டதிலிருந்து அவர் நியமனம் குறித்து, பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. குறைந்த கல்வித்தகுதி, பணியனுபவம் இல்லாதவரை பணியில் அமர்த்தியது முறையில்லை என்று பல அறிக்கைகளைத் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் வெளியிட்டனர். சர்ச்சைக்குப் பெயர்பெற்ற இந்த செம்மொழி நிறுவனத்திற்கு அண்மையில் மருத்துவர் சுதா சேஷையன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார் – தமிழ் படிக்காத பார்ப்பனர் அம்மையார் – வேறு துறையில் படித்த ஒருவரை செம்மொழி நிறுவனத்துக்குத் துணைத்தலைவராக நியமித்தமையை அறிந்த தமிழறிஞர்கள் பலர் அப்பொழுதே அச்செயலைக் கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டனர்.
ஆனாலும், அவர் தொடர்ந்து செம்மொழி நிறுவனத்தின் துணைத்தலைவராக நீடித்து நாளும் பார்ப்பன விஷக் கருத்துகளைப் பரப்பி வருகின்றார். புராணங்களை இலக்கியங்களாகவும், வரலாறாகவும் திரிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். தம்மைத் துணைத்தலைவராக நியமித்த ஒன்றிய அரசுக்குத் தன் விசுவாசத்தைக்காட்ட, அகத்தியர் என்ற ஒரு புதுக்கரடியை நிறுவனத்தின் வழியாக சுதா சேஷையன் உலவவிட்டுள்ளார்.
முன்பு தமிழ்நாட்டு மக்கள் பல நூற்றாண்டுகளாக வழிபட்ட முருக வழிபாட்டைச் சீர்குலைக்க, ஆரியப் பார்ப்பனர்கள் விநாயகன்
என்ற ஒரு கட்டுக்கதையை முற்காலத்தில் கட்டி, விநாயகனை முருகனுக்கு அண்ணனாக்கியதைப் போன்று, தொல்காப்பியரையும் தொல்காப்பியத்தையும் பின்னுக்குத் தள்ளி, அகத்தியரை முதலிடத்துக்குக் கொண்டுவர நினைத்து பார்ப்பனர்கள் செயலாற்றி வருகின்றனர்!
வடமொழிக்காரர்கள் அகத்திய முனிவரைச் சிவன் தென்பகுதிக்கு அனுப்பி, இமயமலை உயர்வு தாழ்வைச் சரிசெய்தார் என்றும், புரட்டோடு – அகத்தியரின் கெண்டிச்சொம்பைக் காக்கைத் தள்ளிவிட, அந்தக் கெண்டிச்சொம்பு தண்ணீர் தான் காவிரியாக ஊற்றெடுத்து வருகின்றது எனவும் பல்வேறு கட்டுக்கதைகளை ஆன்மிகவாதிகளின் வழியாக விதைத்தனர். அந்தப் பொய் விதைகள் முளைத்து, இன்று பரந்து காடாகி நிற்கின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்பதற்கு எதிராக செயல்படுவதை எப்படி ஏற்க முடியும்?
அகத்தியர் இலக்கணம் எழுதினார், தேவாரத்தைத் தொகுத்தார், சித்தர் பாடல்களை எழுதினார், தலைச்சித்தர் இவர்தான் என்பது போன்ற அறிவுக்குப் பொருந்தாத உண்மைக்கு மாறான கருத்துகளைப் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிவருடிகளும் விதைத்து வந்தனர்.
இம்மாதிரியான புரட்டுகளை இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் உண்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இரா.சந்திரசேகரன், சுதா சேஷையன், மாலன், கோதை ஜோதிலட்சுமி குழுவினர் ஏடுகளில் எழுதியும், மேடைகளில் பேசியும் வருவதைப் பகுத்தறிவுவாதிகள் எள்ளி நகையாடவே செய்வர்.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், தமிழ்ச்சங்கங்கள், பள்ளிகளைக் குறிவைத்து மாணவர்களுக்கு அகத்தியர் குறித்த போட்டிகளை, கருத்தரங்குகளை அறிவித்து செயல்படுத்திட தமிழ்நாடு – புதுவை முழுவதும் சூறாவளிப் பயணத்துக்குக் காவிக் கும்பல் திட்டமிட்டுள்ளது். இதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் இந்திய அரசாங்கத்தின் பணம் வாரியிறைக்கப்பட உள்ளது. பதவி, பணம், அதிகாரத்துக்கு அலையும் சில தமிழ்நாட்டுப் பேராசிரியர்கள் இந்த அகத்தியர் கூட்டத்தின் அடிமனது எண்ணங்களைப் புரிந்துகொள்ளாமல், தங்கள் நிறுவனங்களில் அகத்தியர் கருத்தரங்குகளுக்கு ஆதரவு நல்கி, போர்க்கால அடிப்படையில் நடத்தி வருவது அறிவுலகத்தை வெட்கித் தலைகுனியச் செய்யும் செயலாகும்.
அகத்தியரைப் பற்றியோ அவர் இயற்றியதாகச் சொல்லப்படும் அகத்தியத்தைப் பற்றியோ தொல்காப்பியத்தில் எந்த ஒரு குறிப்பும் உண்டா? பரிபாடலில் இடம்பெறும் “பொதியின் முனிவன்” என்ற தொடருக்கு அதன் பழைய உரையாசிரியர் பரிமேலழகர் “அகத்தியன் என்னும் மீன்”(11:11) என்று உரையில் குறிப்பிடுகின்றார். இது மூல நூல் பெயராட்சி இல்லை. “அமர முனிவன் அகத்தியன்” என்னும் சொல்லாட்சி முதன்முதல் மணிமேகலையில்தான் காணப்படுகின்றது. அகத்தியன் என்ற சொல்லாட்சி சிலப்பதிகாரத்திலும் இல்லை. வடமொழி ஆதிகாவியமான வால்மீகி இராமாயணத்தில்தான் அகத்தியன் பற்றிய குறிப்பு உள்ளது என்பார்கள் ஆய்வாளர்கள் – புலவர்கள்.
பிற்காலத்தில் தமிழ் நூல்களுக்கு உரை எழுதியவர்கள் தான் பொதியம், திருமுனி, குறுமுனி என்று தமிழ் இலக்கியங்களில் வரும் இடங்களில் அகத்தியர் என்று பொருள்கொண்டனர். ரிக்வேதம் உள்ளிட்டவற்றில் அகத்தியர் பற்றிய செய்திகள் உள்ளதால்
அவரை வடவராகக் கருதுவதே பொருத்தமாகும். வடவருக்கு ஏன் செம்மொழி நிறுவனம் சிவப்புக் கம்பளம் விரிக்க வேண்டும்?
அகத்தியர் பற்றிய ஆராய்ச்சியைச் சமஸ்கிருத வல்லுநர்கள் செய்யட்டுமே!. அதனை விடுத்து, தமிழ்நாட்டில் தமிழுக்குக் கொடுத்த நிதியை மூடத்தன, புராணங்களுக்குப் புதுமெருகேற்றப் பயன்படுத்தலாமா? ஏன் வடமொழிக்கு வால்பிடிக்க வேண்டும்? முன்பே ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் சமஸ்கிருதத்துக்கு அதிக தொகையும், தமிழுக்குக் குறைந்த தொகையும் வழங்கி வருகின்றது. வருகின்ற தொகையையும் வடமொழிக்கு மடைமாற்றிச் செலவிடுவது எந்த வகையில் நியாயம் ஆகும்?
எனவே, தமிழ்நாட்டு அரசு விழிப்புடன் இருந்து, தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் அறிவுக்குப் பொருந்தாத அகத்தியர் குறித்த கருத்தரங்குகளை, மூடத்தனத்தைப் பரப்பும் வகையில் உள்நோக்கத்துடன் நடத்துவதைத் தடைசெய்ய வேண்டும். அரசின் கொள்கைக்கு முரணாகச் செயல்படும் அதிகாரிகள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட செம்மொழி இலக்கியங்களைப் பரப்பத் தமிழ் அறிஞர்கள் முன்வர வேண்டுதற்குரிய பணிகளில் செம்மொழி நிறுவனமும் தமிழ்நாட்டு அரசும் ஈடுபட வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கின்றோம். இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதே தன்மானம் உள்ளோரின் அவசர அவசிய கடமையாகும்.