நம்ம ஊருக்கு எப்பவுமே இப்படி நடந்ததில்ல; யாரு செஞ்ச குத்தமோ முனீசுவரன் கோபத்துக்கு ஆளா-யிட்டோம்; ஊரே இனி பூண்டோடு அழிஞ்சி போயிடும்; அதோட கோபத்தை சாந்தி பண்ணாதான் முனீசுவர சாமியோட நடமாட்டம் குறையும். ஊர் கூட்டத்தில் பூசாரி பேசிக் கொண்டிருந்தார். சுமார் நூறு வீடுகள் கொண்ட சின்ன கிராமம் முத்துக்காடு; பெயருக்கேற்ற அழகிய கிராமம்; போக்குவரத்து வசதி குறைவு; எப்படிப் போனாலும் மூன்று கிலோ மீட்டர் நடந்தால்தான் ஊரை அடைய முடியும். ஊருக்கு வெளியே உள்ள வண்டிப் பாதையில் எப்போதாவது லாரி, டிராக்டர் செல்லும்; பேருந்து எதுவும் வருவது கிடையாது.
ஊருக்கு மேற்கே அம்மன் கோயில்; அதையும் தாண்டி ஆற்று நீரோடை; அதைக் கடந்து தென்மேற்குப் பகுதியில் வானுயர்ந்த மரங்க-ளோடு அடர்ந்த காடு; இந்தக் காடு காட்டிலா-காவைச் சேர்ந்ததாக இருந்தாலும் இதைக் காவல் காப்பதே இந்த கிராமம்தான். மலையடி-வாரத்தில் உள்ள இந்த காட்டுக்கு ஒரு தியாக வரலாறே உண்டு.
வெள்ளைக்காரர்கள் இருப்புப்பாதை போட்ட காலம். தண்டவாளத்திற்கு அடியில் போடும் படுக்கைக் கட்டைகளுக்காக இந்தக் காட்டை குறிவைத்தார்கள். அப்போது இவ்வூரில் தலைவராக இருந்த முத்தையா, வெள்ளைக்கார கவர்னர் வரை சென்று காட்டைக் காப்பாற்ற மனு கொடுத்தார். இருந்தாலும் தேவை கருதி வெள்ளைக்கார படை காட்டை வெட்ட இறங்கி விட்டதாம். ஊரிலிருந்த அவ்வளவு பேரும் சென்று ஆளுக்-கொரு மரத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார்-களாம். ஒருத்தரை வெட்டினால் மற்றவர்கள் பயந்து ஓடி விடுவார்கள் என்றெண்ணி முதலில் முத்தையா தலையை சாய்த்தனர். தலைவன் சாவுக்குப் பிறகும் ஊரார் யாரும் அசைய-வில்லை. ஊராரின் உறுதிப்பாட்டைக் கண்டு வெள்ளைப்படை பின்வாங்கியது. தன்னையே பலி கொடுத்த முத்தையா பேரால் இந்த கிராமமும், காடும் முத்துக்காடு என்றழைக்கப்-படுகிறது.
இப்படிப்பட்ட ஊருக்கு கடந்த சில நாட்களாக நிம்மதி இல்லை. இரவு பத்து மணிக்குமேல் பயங்கர ஓசையுடன் ஒரு நெடிய உருவம் தினமும் நடமாடுகிறது. இதனால் யாரும் இருட்டிய பிறகு ஓடையைத் தாண்டி செல்வதே இல்லை. இதைப்பற்றித்தான் ஊர் கூட்டத்தில் பூசாரி பேசிக்கொண்டிருந்தார். என்ன செய்யலாம்? முடிவா சொல்லுங்க என்று ஒரு பெரியவர் அவசரப்படுத்தவே, பூசாரி தீர்மானமாக பேச ஆரம்பித்தார்:
நம்ம ஊரையே காவு கேட்டுத்தான் இந்த சாமி அலையுது. அதை சாந்தி செய்யனும்னா கிடா வெட்டி, பொங்கலிட்டு ஊரே விழா எடுக்கணும். வர்ற செவ்வாய்க்கிழமை முனீசுவரனுக்கும் பிடிச்ச நாள். அன்னைக்கே நடத்திடுவோம். அதுவரைக்கும் இருட்டினதுக்கப்-புறம் யாரும் நடமாடக் கூடாது.
ஊரார் அனைவரும் பூசாரி சொல்லுக்கு மறுபேச்சு பேசமாட்டார்கள். சுமார் மூன்றாண்டு-களுக்கு முன் இந்த ஊர் வந்து சேர்ந்தார். அவர் வந்த பிறகுதான் பாழடைந்த அம்மன் கோவில் புதுப்பொலிவு பெற்றது. அவரே பூசாரியாக இருந்து அருள்வாக்கும் தருவார். அவர் சொல்வது ஊராருக்கு வேதவாக்கு; இப்போதும் அப்படியே ஏற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.
அறிவரசு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். ஓரளவு சிந்திக்கக்கூடியவன்; ஊருக்கு ஏற்பட்டு விட்ட இந்த இடையூறு குறித்து வருத்தம். வெண்மை நிற நெடிய உருவத்தைக்-கண்டு அச்சமே; இருப்பினும் இனம் புரியாத சந்தேகம் அவனுக்குள்.
இன்றும் வீடு வந்து படுத்தான்; தூக்கம் வரவில்லை; அதையே சிந்தித்தபடி புரண்டு புரண்டு படுக்கிறான்; ஊ..ஹும்; தூக்கம் வந்தால்தானே. தன் வீட்டு சன்னல் வழியே அந்த திசையை பார்த்துக் கொண்டிருக்கிறான். லேசான நிலவொளியில் அம்மன் கோயில் தெரிகிறது. அதோ! அந்த உருவமும் தெரிகிறது. வழக்கம்போல தெருவுக்கு நேராக வரும்போது அதே பயங்கர ஓலம். மெல்ல நடந்து செல்கிறது. ஆனால் கால்கள் தெரியவில்லை; ஏறத்தாழ பத்தடி உயரம்; வெள்ளை நிற முக்காடு; இப்போது காட்டை நோக்கி செல்கிறது; அறிவரசுக்கு நள்ளிரவு கடந்த பின்தான் உறக்கம் வந்தது.
மறுநாள் பள்ளிக்கு செல்லும்போது துணிச்சலான சில மாணவர்களுடன் கலந்து பேசினான். இவன் மீது கொண்ட நம்பிக்கை-யால் இவனுடைய திட்டத்திற்கு அவர்களும் சம்மதித்தனர். அந்த மாணவர்கள் இரவு உணவை முடித்துக் கொண்டு அறிவரசுடன் தங்கிப் படிக்கப் போவதாகக் கூறிவிட்டு வந்து விட்டனர். இரவில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரித்தே அனுப்பப்-பட்டனர்.
இரவு ஒன்பது மணி வாக்கில் ஊரே அமைதியாக இருந்தது. இந்த அச்சம் கலந்த மயான அமைதியில் அறிவரசும் நண்பர்களும் அம்மன்கோயில் சென்று எதிரில் உள்ள புதரில் ஒளிந்து கொண்டனர். எங்கும் இருட்டு; குருட்டுத் துணிச்சலில் இந்த சோதனையில் இறங்கி விட்டார்கள்.
வழக்கமான அந்த பத்துமணி; செருப்புக் காலுடன் யாரோ நடந்துவரும் சத்தம், ஏதோ ஒரு உருவம் சுற்றுமுற்றும் பார்த்தபடி கோயிலுக்குள் சென்றது. சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு நெடிய உருவம் வெள்ளை முக்காடு அசைய வெளியில் வந்தது. அந்த உருவம் இவர்களைக் கண்டுபிடித்து விடுமோ என்ற அச்சத்தில் நடுங்கியபடி சிறுவர்கள்; ஆனால் அந்த உருவம் வழக்கமான இடம் சென்றது. இப்போது அந்த பயங்கர ஓசை; சிறிது நேரத்திற்குப் பின் ஓடையைக் கடந்து காட்டை நோக்கிச் செல்கிறது. இரண்டு கால்கள் தெளிவாகத் தெரிகின்றது. காட்டை நெருங்கும்போது மேலும் இரண்டு மனித உருவங்கள் சேர்ந்து கொண்டன. என்னதான் நடக்கிறது என்று அறிய சிறுவர்கள் அங்கேயே இருந்தனர்.
நடுநிசி வேளையில் அந்த நெடிய உருவம் மீண்டும் கோயிலுக்குள் நுழைகிறது. சிறிது நேரத்தில் முதலில் நுழைந்த சிறிய உருவம் வெளியில் வந்து பூசாரி வீட்டை நோக்கி செல்கிறது. உற்றுப் பார்த்தனர். பூசாரியேதான். எதுவும் நடக்காததுபோல் சிறுவர்கள் வீடு திரும்பிவிட்டனர்.
மறுநாள் பகல் நேரத்தில் அறிவரசு அம்மன் கோயில் பக்கம் சென்றான். விழாக்களில் ஆடும் பாவைக் கூத்து பொம்மைகள் அங்கிருந்தன. சுமார் ஆறடி உயரம் இருக்கும். அதற்குள் நாம் புகுந்து கொண்டு ஆடும்போது சுமார் பத்தடி உயரம் இருக்கும்.
நெடிய உருவப் புதிர் கொஞ்சம் விடுபட்டது. இருப்பினும் அந்த பயங்கர ஓலம், காட்டருகே வந்த அந்த உருவங்கள் இன்னும் புரியவில்லை. ஏதோ நடக்கக்கூடாத ஒன்று நடப்பதற்கான சதிவேலை என்று யூகிக்க முடிந்தது. அனைத்து மாணவர்களும் அறிவரசின் ஆலோசனைப்படி நடந்து ஊரைக் காப்பாற்ற முடிவு செய்தனர்.
விழாவிற்கு முந்திய நாள் ஊரே சுறுசுறுப்-பாகிவிட்டது. பொங்கலுக்கான பொருட்கள் வாங்க அவரவரும் நகரத்துக்குப் பறந்து கொண்டிருந்தார்கள். அத்தனை சுறுசுறுப்பும் இரவு ஏழு மணிக்குள் அடங்கிவிட்டது. பிறகு மக்கள் நடமாட்டமே இல்லை. வழக்கம்போல மயான அமைதி.
இன்றும் இரவு பத்து மணிக்கு அதே ஓலம், அறிவரசு நண்பர்கள் படை சூழ ஆழ்ந்த யோசனையில் இருந்தான். நெடிய உருவத்தின் நடமாட்டத்தை நோட்டம் விட்டார்கள் நண்பர்கள். அந்த ஓலம் தொடர்ந்து கொண்டிருந்தது.
கடைசி நாளாச்சே; சாமியோட ஆட்டம் கொஞ்சம் அதிகமாத்தானிருக்கும் என்று கூறிக்கொண்டிருந்தார் பக்கத்து வீட்டுப் பெரியவர். இருந்தாலும் அறிவரசு கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தான். நெடிய உருவம் ஓடையைக் கடந்து காட்டை நோக்கி சென்றுவிட்டது.
இன்றைக்கு ஏனோ விதவிதமான சத்தம் கேட்கிறது. பறவைகளின் ஒலி, வாகனங்களின் ஒலி என கலந்தபடி கேட்கத் துவங்கியது. ஊர் மக்கள் ஏதோ ஒரு இனம் புரியாத அச்சத்தில் தூங்கியும் தூங்காமலும் இருந்தனர். இந்த சிறுவர்கள் குழு மட்டும் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருந்தனர். காட்டை நோக்கிச் செல்லும் அந்த வண்டிப் பாதையில் தொடர்ச்சியாக வாகனங்களின் ஒலி; நண்பர்கள் விழிப்படைந்தனர்.
சிறுவர்கள் வீடு வீடாகச் சென்று நடக்கக் கூடாத ஒன்று நடப்பதாகக்கூறி அனைவரையும் ஒன்று சேர்த்தனர். பொருட்கள் வாங்க நகரத்துக்குப் போன பூசாரியைத் தவிர மற்ற அனைவரும் இருந்தனர்.
படித்த பிள்ளைகளின் ஆலோசனைப்படி அனைவரும் அந்த வண்டிப் பாதைக்குச் சென்று பாதையின் குறுக்கே பெரிய பெரிய தடைகளை ஏற்படுத்தினர். பக்கத்து புதர்களில் பதுங்கிக் கொண்டனர். காட்டுப்பக்கம் தொழிற்சாலை போல ஏதோ ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் நான்கைந்து லாரிகள் காட்டுப் பகுதியிலிருந்து விளக்கு கூட இல்லாமல் மெதுவாக வருகின்றன. பாதையில் உள்ள தடையில் முட்டி முதல் லாரி நின்றது. அதையொட்டி மற்ற வண்டிகளும் நின்றன. லாரிகளில் வெட்டப்பட்ட காட்டு மரங்கள்; மிகவும் விலை உயர்ந்தவை.
மாடு மேய்க்கிற பசங்க எதையாவது போட்டு வச்சிருப்பாங்க; ஓரமா தள்ளிட்டு சீக்கிரம் வண்டியை எடுப்பா; விடிஞ்சா ஊரார் வந்திடுவாங்க.
ஊராருக்கு இது கேட்ட குரலாகத் தெரிகிறது. ஆம். பூசாரியின் குரலேதான். ஊரார் அனைவரும் எழுந்து பாதையின் குறுக்கே நின்றார்கள்.
பூசாரியும் மற்றவர்களும் இதை எதிர்பார்க்க-வில்லை; வாகனங்களை நிறுத்தி-விட்டு ஓட முற்பட்டார்கள். ஒரு சிலர் தவிர மீதி பேர் பூசாரியுடன் பிடிபட்டனர். எதிர்-பாராதவிதமாக காவல்துறையினரும், காட்டிலாகாவினரும் அப்போது வந்து சேர்ந்தனர். பாதி பேரை அங்கே நிறுத்திவிட்டு அதிகாரிகள் காட்டுக்கு சென்றனர்.
கடத்தல்காரர்கள் கொடுத்த ஒரு லட்சம் ரூபாய்க்காக முனீசுவரனாக நடமாடியது நான்தான் என்று பூசாரி ஒப்புக்கொண்டார்.
அறிவரசு கொடுத்த தகவல்தான் இன்று காட்டைக் காப்பாற்றியது. அப்படியும் பத்துப் பதினைந்து மரங்களை வெட்டிவிட்டார்கள். இருந்தாலும் கடத்தல்காரர்களை கூண்டோடு பிடித்துவிட்டோம் என்றார் காட்டிலாகா அதிகாரி.
விடிந்ததும் ஊர் மக்கள் முடிவெடுத்தபடி அம்மன் கோயிலில் பொங்கல் விழா நடத்தினார்கள். அந்த நேரத்தில் அறிவரசு தன் நண்பர்களுடன் காட்டில் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருந்தான்.
– பொதட்டூர் புவியரசன்