புதுப்பாக்கள்

டிசம்பர் 16-31

ஜாதிச் சமாதி
அருந்ததியர்
வீட்டுத் திருமணம்
அன்று
யாவரும் மயங்கும்
தேவர் குழுவினரின்
வாத்ய இசை,
சங்கம் (பண்டாரம்)
வீட்டாரின்
வித விதமான
மலர் அலங்காரம்,
வன்னியரும்
முதலியாரும்
செய்துவைத்த
வாசமிகு சமையல்,
ஆசாரி செய்த
ஆறுபவுன் சங்கிலியின்
அதீதவடிவம்
மணப்பெண் கழுத்தில்,
கலப்படம் இல்லாமல்
கம்பீரமாய்
காட்சி தரும்
செட்டியார் வீட்டு எண்ணெய்
குத்துவிளக்கில்
பிரகாசமாய்
மணமகன்
வேலைபார்த்த
நாடார் கடை அடைப்பு,
நிரம்பி
வழியுது கூட்டம்
சாலியர் திருமண மண்டபத்தில்

– ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி

மதநெ(வெ)றி
அவனவனும்
அவனவன் மதத்தில்
மிகச் சரியாகவே
இருந்தார்கள்.
அவனோ
தொடவில்லை.
இவனோ
விடவில்லை
படையலை!

– ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி

ஜாதி என்னடா ஜாதி
உன் சாக்கடை ஜாதி

இனம் இனம் என்று
வெறிபிடித்து அலையும் வெறியனே
அழிவது உன் இனமல்ல என் இனமல்ல
அழிவது தமிழினம் அல்லவா

ஜாதி ஜாதி என்று
ஜாதிக்கொரு தலைவன் வைத்து
சமூக நீதிக்கொருக் களங்கம் வைத்தாய்

ஜாதி விட்டொழித்தவன் தாடிக் கிழவன்
அவன் தமிழினத் தந்தை
அவன் விட்டொழித்ததை தூக்கிப்பிடிப்பவன்
தமிழினத்தின் எதிரி.

ஜாதி மதம் தொலைத்துச்
சமத்துவம் போற்றினால்
உயர்வது உன் இனமல்ல என் இனமல்ல
உயர்வது தமிழினம் எனும் திராவிடமே…

– ம. புகழேந்திர சோழன், திருச்சிராப்பள்ளி

 

கடவுள் வாழ்கிறார்

கழிவறை வசதியற்ற கிராமங்களில் மஞ்சள் துணி சுற்றிய மரத்தில்

கடவுள் வாழ்கிறார் …… பேருந்தின் நிறமறியா

ஊர்களில்
கற் சிலையாய்
கடவுள் வாழ்கிறார் …… வறுமை நிமிர்த்தமாய்
குழந்தை தொழிலாளியான சிறுவனின் கழுத்து டாலரில்
கடவுள் வாழ்கிறார் …… கோவில் வாசலில் தட்டேந்தும்
தளர்ந்த காவிப் பெரியவரிலும்
கடவுள் வாழ்கிறார் …… இளம் விதவைகள் வீட்டிலும்
மாற்றுத் திறனாளிகள் மனதிலும் கூட
கடவுள் வாழ்கிறார் …… காலங் காலமாய் அத்தனை கடவுள்களும்
அமோகமாய்
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்,

ஏனோ தெரியவில்லை,
அப்பாவி மனிதர்கள்
வாழ்வதில் தான் எத்தனை  வாழ்வியல் சிக்கல்கள்  ? ?

– ஓவியச்செல்வன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *