Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…

திருமண வாழ்வில் பாலியல் வல்லுறவு

சென்ற இதழ் தொடர்ச்சி…

அ. விரும்பத்தகாத பாலியல் துன்புறுத்தல்களுக்கு உடன்படவேண்டிய நிலை பரத்தைமைத் தொழிலைவிட திருமண உறவில்தான் (Marital Rape) பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது என்பது ரசலின் கணிப்பு. இதுபற்றி தனது நூலின் 11ஆவது அத்தியாயத்தில் பரத்தைமை (Prostitution) என்ற தலைப்பில் பின்வருமாறு ரசல் குறிப்பிடுகிறார்.

வெறும் உடற் பசி வேகத்தில் பாலுறவில் ஈடுபடுவதால் வருத்தமே விளையும். வருத்தத்தில் விஷயங்களின் ஏற்றத்தாழ்வுகளை உணர முடியாது. பரத்தையர் விஷயத்தில் மட்டுமேயன்றி மணஉறவிலும் இவ்வுண்மை பொருந்தும். பொதுவாகப் பெண்கள் வாழ்க்கை நடத்துவதற்கு மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் வசதி திருமணம்தான். வேசித் தொழிலைவிட மணவாழ்க்கையில்தான் விரும்பத்தகாத பாலுறவுச் செயல்களுக்குப் பெண்கள் உடன்பட வேண்டியிருக்கிறது (168) (If nevertheless it is performed from the sheer strength of physical urge it is likely to lead to remorse and in remorse a man’s judgement of value are disordered. This applies of course not only to prostitution but almost as much to marriage. Marriage is for women, the commonest mode of livelyhood and the total amount of undesired sex endured by woman probably greater in marriage than in Prostitution. (Marriage and morals. Chapter XI Prostitution Page 153)

ஆ) தந்தை பெரியார் அவர்கள் பெண் ஏன் அடிமையானாள் எனும் தனது நூலின் முதல் அத்தியாயத்தில் கற்பு என்ற தலைப்பில் எழுதும்போது “கற்புக்காகப் புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள் சட்டங்கள் மாய வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். இதன் உட்பொருள் என்ன? திருமண வாழ்வில் கணவனால் கொடுமையான மிருகச் செயல்கள் பலவும் (பாலியல் வல்லுறவு உட்பட) மனைவியின்மீது நிகழ்த்தப்படுகின்றன என்பதுதான்.

பாலுறவு வாழ்க்கை என்பது
தனிப்பட்ட சொந்த விஷயம்

அ. கருவுறுதலின்றி நிகழும் பாலுறவின்பத் தொடர்புகள் அனைத்தும் தனிமனிதர்களுடைய விருப்பத்துடன் கூடிய சொந்த விஷயங்களாகக் கருதப்பட வேண்டும் என்பது ரசலின் கருத்து. தனது திருமணமும் ஒழுக்கமும் எனும் நூலின் 12ஆவது அத்தியாயத்தில் சோதனைத்திருமணம் என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

கருவுறுதலே இல்லாத பாலுறவுத் தொடர்புகள் யாவையுமே தனிமனிதனுடைய சொந்த விஷயங்களாகக் கருதப்படவேண்டும். குழந்தைகளைப் பெறாமல் ஒன்றாகக் கூடி வாழ வேண்டும் என்று ஓர் ஆணும் பெண்ணும் முடிவு செய்தால் அது அவர்களுடைய சொந்த விஷயமேயன்றி வேறு எவர் ஒருவரின் (தலையீட்டுக்குரிய) விஷயமல்ல. (I Think that all sex relations which do not involve children should be regarded as a purely private affair and that if a man and a woman choose to live together without having children, that should be no one’s business but their own. Marriage and Morals Chapter XII Trial marriage Pages 165-166)

ஆ) 1. ரசலைப் போலவே தந்தை பெரியார் அவர்களும் இது குறித்துச் சிந்தித்துள்ளார். தனது ‘பெண் ஏன் அடிமையானாள்’ எனும் நூலின் மூன்றாம் அத்தியாயத்தில் காதல் என்ற தலைப்பில் எழுதும்போது “ஓர் ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலியவைகளைப் பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்றும் மூன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ, நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட உரிமையே கிடையாது என்று சொல்லுகின்றோம்… இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசிங்கித்தனமும் அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றுந்தான் சொல்லவேண்டும்.

2. இது தொடர்பாக தந்தை பெரியார் அவர்கள் தனது இனிவரும் உலகம் எனும் நூலில் மேலும் குறிப்பிடுவதாவது:-
பெண் அடிமையோ, ஆண் ஆதிக்கமோ, இல்லாமலும், பலாத்காரமோ வற்புறுத்தலோ உடல்நலத்திற்குக் கேடோ இல்லாமலும் ஒத்த காதல், ஒத்த இன்பம், ஒன்றுபட்ட உணர்வு கொண்ட கலவி(sex)யால் சமுதாயத்திற்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ எவ்வித கெடுதியும் ஏற்பட்டுவிடாது.

வாழ்நாள் திருமண உறவு எனும் வன்முறைக் கட்டுப்பாடு

அ. விருப்பமற்ற நிலையிலும் திருமணம் என்ற பெயரில் கட்டுப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு வாழ்நாள் முழுதும் நிர்ப்பந்த வாழ்க்கை நடத்த வேண்டிய சமூக நடைமுறையை ரசல் – பெரியார் ஆகிய இருபெரு மக்களும் ஏற்கவில்லை. ரசல் அவர்கள் தனது ‘திருமணமும் ஒழுக்கமும்’ எனும் நூலின் 10ஆம் அத்தியாயத்தில் திருமணம் என்ற தலைப்பில் எழுதும்போது ”இக்கால உலகைக் கவனித்து மணவாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக்கக் கூடிய சூழ்நிலைகள் யாவையென்றும் மகிழ்ச்சியற்றதாகச் செய்வன யாவையென்றும் நம்மை நாமே வினவிக்கொண்டால் ஒரு விந்தையான முடிவுக்கே வருவோம். மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு நாகரிக முதிர்ச்சியடைந்துள்ளனரோ அவ்வளவுக்கு அவர்களால் வாழ்நாள் முழுவதும் ஒரு துணைவருடனோ துணைவியுடனோ மகிழ்ச்சியாக வாழ்வது இயலாத காரியமென்றே தெரிகிறது” என்று குறிப்பிடுகிறார். (When we look round the world at the present day and ask ourselves what conditions seem on the whole to make for happiness in marriage and what for unhappiness we are driven to a somewhat curious conclusion that the more civilized people become the less capable they seem of lifelong happiness with one partner. Marriage and morals chapter X Marriage. Page 135)
ஆ. தந்தை பெரியார் அவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தனது பெண் ஏன் அடிமையானாள் எனும் நூலில் கற்பு, காதல் ஆகிய தலைப்புகளில் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத் தக்கது. அவை வருமாறு:-

1. கற்புக்காகப் பிரியமற்ற
இடத்தைக் கட்டி அழுது கொண்டி
ருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள்
ஒழிய வேண்டும்.
(அத்தியாயம் ஒன்று, கற்பு)

2. இந்தக் காதல் காரணத்
தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு
மனைவி ஒரே ஒரு புருஷனுடன்
மாத்திரமிருக்க வேண்டிய
தென்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படு
கிறது. (அத்தியாயம் மூன்று, காதல்)

3. நமது நாட்டில் ஒரு தடவை புருஷன் பெண்சாதி என்கிற சொந்தம் ஏற்பட்டு
விட்டால் பிறகு அந்தப் பெண்ணுக்குச் சாகும் வரைக்கும் வேறு எந்தவித சுதந்திரமும் இல்லையென்றும் புருஷன் அப்பெண்ணின் முன்பாகவே பல பெண்களைக் கட்டிக்கொண்டு கூடி வாழலாம் என்றும் புருஷன் தன் மனைவியைத் தன்னுடைய வீட்டில் வைத்துக்கொண்டு அவளுடன் ஒன்றித்து வாழாமலிருந்தும்கூட மனைவி புருஷனைச் சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமேயொழிய இன்பத்திற்கோ இச்சையைத் தீர்ப்பதற்கோ, அவனைக் கட்டுப்படுத்த உரிமை இல்லை என்று கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.

(அத்தியாயம் ஒன்று, கற்பு) “யூஜெனிக்ஸ்” எனும் இனமேம்பாட்டியல்

அ) யூஜெனிக்ஸ் (Eugenics) எனும் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி “மனித மரபணுவை மேம்படுத்தி வளமான மனித இனத்தை உருவாக்கும் அறிவியல் என்று பொருள் கூறுகிறது. (Science of the Production of healthy offspring with the aim of improving the human genetic stock. oxford advanced learner’s Dictionary of current English 1985. Page 292)

ஆ) ரசல் அவர்கள் ‘திருமணமும் ஒழுக்கமும்’
(Marriage and morals) எனும் தனது நூலின் 18ஆம் அத்தியாயத்தில் இன மேம்பாட்டியல் (Eugenics எனும் தலைப்பில் இதுபற்றிய தனது கருத்துக்களை விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் முதன்மையான சிலவற்றை இங்கு சுருக்கமாகக் காண்போம்:-

1. ஓரினத்தை, முயற்சி எடுத்துக்கொண்டு தக்க வழிமுறை மூலம் உயிர் நூல் ரீதியாக வளர்ச்சி காணச் செய்வதே இனமேம்பாட்டியல் என்று கூறப்படுகிறது. இக்கருத்து டார்வின் தத்துவத்தின் மீது எழுந்த ஒன்றாகும். இனமேம்பாட்டியல் கழகத்தின் தலைவராக சார்லஸ் டார்வினின் மகன் இருப்பது பொருத்தமானது. ஆனால், இனமேம்பாட்டியல் கழகத்தின் தந்தையாக விளங்குபவர் ஃபிரான்சிஸ்கால்டன் (Francis Galton) என்பவர் ஆவார். மனித வாழ்க்கையில் காணும் சாதனைகளுக்கு பரம்பரை மரபு முக்கியக் காரணம் என்று அவர் கூறினார்.

2. மனிதனின் மன ஆற்றலில் எந்த அளவு பரம்பரையாலும், எந்த அளவு கல்விப் பயிற்சியாலும் (அச்சாதனைகள்) உருவாகின்றன என்று அறிவதற்கு இதுவரை விவரங்கள் கிடைக்கவில்லை. இனமேம்பாட்டியலை ஆதரிப்போர் அவர்களுடைய உயிர்நூல் தத்துவ நல்லறிவுடன் அய்யப்பாட்டுக்குரிய சமூக இயல் கருத்துகளைச் சேகரித்துத் தங்கள் அபிப்பிராயங்களுக்காக வாதிடுகிறார்கள். ஆகையால் இனமேம்பாட்டியல் ஆதரவாளர்கள் கூறும் சில குறிப்பிட்ட விவரங்கள் குறித்து நாம் எவ்வாறு கருதினாலும் அதை எள்ளி நகையாடக் கூடாது.

3. இன மேம்பாட்டியல் நேர்மறை (Positive), எதிர்மறை (Negative) என இருவகைப்படும். நல்ல இனங்களை வளர்ச்சியடையச் செய்து பெருக்குவது நேர்மறை என்றும் நல்லதல்லாதவை பெருகாமல் செய்வது எதிர்மறையென்றும் கொள்ளலாம். எதிர்மறையைப் பொறுத்தவரை அமெரிக்காவில் சில மாநிலங்களில் அது பரவியுள்ளது. தகுதியற்ற மக்களை மக்கட்பேறு பெறாதபடி மலடாயிருக்கச் செய்வது இங்கிலாந்தின் அரசியலிலும் நடைமுறை சாத்தியமாகிக் கொண்டு வருகிறது. பலவீனர்களும் திடமான மனநலன் இல்லாதவர்களும் இம்முறையால் பெரிதும் குறைய நேரிடும்.

4. மனநலமில்லாதவர்களை மட்டுமே குழந்தைகளைப் பெறாவண்ணம் செய்ய வேண்டுமென்பது எனது கருத்து. இன்றைய நிலையில் யார் உயர்ந்த இனத்தவர் என்று நிர்ணயிப்பது கடினமாயினும் சந்தேகத்துக்கு இடமின்றியுள்ள இவ்வேற்றுமைகளை இன்னும் சிறிது காலத்தில் விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறமுடியுமென்று இவ்விஷயம் குறித்துச் சிந்திப்பவர்கள் ஒவ்வொருவரும் அறிவர்.

5. ஒரு குடியானவன் அவனிடமுள்ள காளை களில் அடுத்த தலைமுறைக்கான மாட்டினை உற்பத்தி செய்ய வேண்டிய பொலிகாளையைத் தேர்ந்தெடுப்பதில் அதனுடைய வம்சத்தில் முன்னால் இருந்த பசுக்கள் அதிகமாகப் பால்
கொடுத்தனவா என்ற விஷயத்தையே கவனிப்பான்.

கடாரியின் (ஈனாத இளம்பசு) பண்புகளைக் காளை தன் வித்தாகப் பசுவுக்கு அளித்து உதவுகிறது. விஞ்ஞான முறையில் வளர்ப்பதால் எல்லா வீட்டு விலங்குகளின் தரமும் வெகுவாக அபிவிருத்தி கண்டுள்ளது. அதுபோலவே மக்களினமும் விரும்பத்தக்க எந்த வழியிலும் வளர்ச்சி காண முடியும் என்று கூறலாம்.

6. இன்னும் நூறு ஆண்டுகளுக்குள் பரம்பரை இயல்புகள் பற்றிய மரபியல் விஞ்ஞானமும் (Science of heredity) உயிர்வேதியியல் விஞ்ஞானமும் (Bio-Chemistry) நன்றாக முன்னேறிய பிறகு யாருமே ஒப்புக்கொள்ளும் வகையில் இன்றுள்ளதைவிட மேலான மனித இனத்தைப் படைக்க முடியும்.

7. விஞ்ஞான அடிப்படையில் (மனித) இனப்பெருக்கம் நடைபெறவேண்டுமானால் ஒவ்வொரு தலைமுறையிலும் இரண்டு சதவிகித ஆண்களையும் இருபத்தைந்து சதவிகிதப் பெண்களையும் இனவிருத்தி செய்வதற்கு என்று ஒதுக்கிவிட வேண்டும். பருவம் அடைந்ததும் நடைபெறும் உடற்தேர்வில் தேறாதவர்கள் மலடாயிருக்கும்படி செய்யப்படுவர். காளை, குதிரை போன்றே தந்தையும் தன்னால் பிறக்கும் குழந்தையிடம் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது.

8. இத்திட்டத்தால் குறிப்பிடத்தக்க விளைவு ஏற்படும் என்று தெரியவரும். வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இன்னும் பழங்குடி மக்கள் இருந்திருப்பின் இன்று அந்த நாடுகள் உலக நாகரிக வளர்ச்சிக்காக ஆற்றியுள்ள பெரும் பங்கை ஆற்றியிருக்கவே முடியாது. விஞ்ஞான அடிப்படையின் மீதும், மூடநம்பிக்கையில்லாமலும் அமையுமானால் இனமேம்பாட்டியல் கருத்துகள் செல்வாக்குப் பெற வழியேற்படும். இப்போதையவிட இன்னும் உறுதியாக விஞ்ஞானம் கூற இயலும்போது இனமேம்பாட்டியல் குறித்துச் சமூகம் இன்னும் துல்லியமான போக்கினைக் கடைப்பிடிக்க நேரும்.

9. தலைசிறந்த மரபில் வந்த ஆடவர்கள் தந்தையாக விளங்கத்தக்கவர் என்ற கிராக்கி ஏற்படும். மற்றவரோ… தந்தைத் தன்மை பெற விழைந்தால் அவர்கள் ஒதுக்கப்படுவர். இனமேம்பாட்டியல் கூறுகளை மிகவும் அருமையாகவே கருத வேண்டியிருக்கிறது. இந்த இனமேம்பாட்டு மனப்பான்மை சில அசாதாரண விஞ்ஞான மனம் படைத்தவர்களின் சொந்த நெறிமுறையாகத் தொடங்க வேண்டு
மெனினும் நாளடைவில் அது வளர்ந்து பெருகி பிறகு சட்டத்திலும் இடம் பெறும். தக்க விதத்தி லுள்ள பெற்றோர்களுக்குப் பரிசளிப்பது அத்தகுதியற்றவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்றும் உருப்பெறக்கூடும் என்றும் ஊகிக்கலாம்.

10. நம்முடைய தனிப்பட்ட இயல்புணர்ச்சியின் விஷயத்தில் விஞ்ஞானம் குறுக்கிடவிடும் எண்ணம் அருவருக்கத்தக்கது. ஆனால், பலகாலமாக மதத்தின் பெயரால் இருந்த குறுக்கீட்டைவிட மிகவும் குறைவாகவே விஞ்ஞானக் குறுக்கீடு இருக்கும்.
இ) ரசலைப் போலவே தந்தை பெரியார் அவர்களும் யூஜெனிக்ஸ் எனும் இனமேம்பாட்டியல்
பற்றிச் சிந்தித்துள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய உண்மையாகும். தந்தை பெரியார் அவர்களின் மிகச்சிறந்த எதிர்காலவியல் (Futurology) படைப்பாகிய “இனிவரும் உலகம்” எனும் நூலில் காணப்படும் இனமேம்பாட்டியல் கருத்துகள் வருமாறு:-
(எதிர்காலத்தில்) நல்ல திரேகத்துடனும் புத்தி நுட்பமும் அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலி காளைகளைப் போல, தெரிந்தெடுத்து மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜக் ஷன் மூலம் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பெறச் செய்யப்படும். ஆண்- பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்துவிடக்கூடும்.

(தொடரும்)