வேட்கை உள்ளவன் வென்றே தீருவான் என்பது போல் தான் இந்த பயாஸ்கோப் திரைப்படத்தின் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். சமூகத்தை நேசிப்பவன் தான் அச்சமூகத்தைப் பாதுகாக்க முயற்சிப்பான் என்று சொல்லும் வகையில் அறியாமையால் ஜாதகம் எனும் நம்பிக்கையால் தற்கொலை செய்துகொள்ளும் தன்னுடைய சித்தப்பா மற்றும் நேசிக்கும் இருவர் ஜாதகத்தினால் பலியாகும் இரண்டையும் ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் ஜாதகம் எனும் மூடநம்பிக்கையை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் தனது முன்னொரு முற்போக்குப் படைப்பான வெங்காயம் எனும் திரைப்படத்தினை எடுத்து இளம் வயதில் தனது முதல் படைப்பிலேயே முற்போக்கான இயக்குநர் எனப் பல்வேறு இயக்குநர்களால் பாராட்டப்பட்டவர் சங்ககிரி ராச்குமார். ஆனால், அந்தப் படைப்பிற்குப் பின்னால் உள்ள உழைப்பையும், வலியையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் படம் தான் இந்த பயாஸ்கோப்.
தன்னுடைய சித்தப்பாவின் தற்கொலைக்குக் காரணமான, பணத்திற்காக ஜாதகம் எனும் பெயரில் ஏமாற்றிப் பிழைக்கும் சாமியாரைப் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டுமென எண்ணி, அதை திரை வழியில் பல்லாயிரம் மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்றொரு உணர்ச்சியில் அதனைக் கதையாக எழுதி அதற்கு திரைத்துறையில் உள்ளவர்கள் யாரெல்லாம் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என திரைக்கதை எழுதி அதனை எடுத்துக் கொண்டு சென்னைக்குச் சென்று தயாரிப்பாளரிடம் சொல்லியிருப்பார். அதில் தயாரிப்பாளர் சொன்ன மாற்றத்தினை ஏற்க மனமில்லாமல் ஊர் திரும்புகிறார் இயக்குநர். தன்னுடைய குடும்பத்தினரிடம் தகவலைச் சொல்ல மறுத்தவர்கள், பின்னர் ராச்குமாரின் பிடிவாதத்தால் பணம் கொடுத்து உதவுகின்றனர். படத்தில் தன்னுடைய குடும்பத்தினரையும் , ஊரில் உள்ளவர்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார். லைட் மேன் முதல் கேமரா மேன் வரை தாத்தா, பாட்டிகளை நடிக்க வைத்ததாக இருந்தாலும், அவற்றிற்கு தன்னுடைய கிராமத்தில் உள்ளவர்கள் சொல்லும் எருமை மாடு, ஒட்டகச் சிவிங்கியும், தெர்மாகோல் என்பதை பெருமா கோவில் என்று அவர்கள் பெயர் மாற்றி வைத்து அழைப்பதும், ஆக்சன் என்று சொல்வதற்குப் பதிலாக பாட்டி அச்சக்கன் எனச் சொல்லும்போது நம்மள அறியாமல் சிரிப்பதும் என்று திரையில் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் அதனைப் பயன்படுத்தி அவர்களை வேலை வாங்கிய இயக்குநரின் கெட்டிக்காரத்தனம் தெரிகிறது. படம் ஆரம்பிப்பதற்கு முன் பாட்டியின் குரலில் புகைப்பிடிப்பது புற்று நோயை உண்டாக்கும் என்று கூறுவதிலிருந்து, ஒரு கட்டத்தில் படம் எடுக்கக் கூடுதல் பணம் தேவைப்பட்ட போது தான் குடியிருக்கும் வீட்டையே தேதி குறித்து அடகு வைத்து படப்பிடிப்பை முடித்திருப்பார். சத்யராஜ் வரும் பாடல் காட்சியை எடுக்கும் போது பாட்டி சத்யராஜைப் பார்த்து ‘‘வணக்கம் சத்யராஜ்’’ எனச் சொல்லும் போது என பல தருணங்களில் நம்மில் இருந்து இயல்பாகவே சிரிப்பு வந்து விடும் அளவிற்கு கிராமத்து நக்கல், நையாண்டி என கலப்பாகச் செல்கிறது முன்பாதி…
பின்பாதியில் எடுத்த சினிமாவை வெளியிட விநியோகஸ்தர்கள் தயங்கும்போது, தானே நேரடியாக வெளியிடுவதற்காக தனது கதை கேட்ட பழைய தயாரிப்பாளரிடமே கடன் வாங்கி வெங்காயம் திரைப்படத்தினை வெளியிடுவார். விளம்பரப் போதாமையால் இவ்வளவு பெரும் சிரமப்பட்டு எடுத்த படம் தனது சொந்த ஊரிலேயே திரையிடவில்லை என்று கேள்விப்பட்டு நொந்து போய் சோர்ந்து போன நேரத்தில் இயக்குநர் சேரன் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நேரடியாகத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இப்படி ஒரு படைப்பு எடுத்திருக்கிறாயே என்று இயக்குநரைப் பாராட்டி விட்டு, இப்படத்தினைத் கொண்டு சேர்ப்பது தான் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் நன்றிக்கடன் என்று சொல்லிவிட்டு அதனை அந்தக் காலகட்டத்தில் உள்ள தமிழ்த் திரையுலகில் உள்ள முன்னணி இயக்குநர்களை அழைத்து திரையிட்டுப் பார்க்கச் சொல்லி படத்தினை வெற்றி பெற வைத்திருப்பார். இயக்குநர் சேரன் நேரடியாக வெளியிட்ட அந்த வெங்காயம் திரைப்படத்தின் வசூலான தொகையினை இயக்குநரிடம் ஒப்படைத்து ஊரில் தான் அடகு வைத்த நிலங்களை மீட்கச் சொல்லி அனுப்பி விடுவார் இயக்குநர் சேரன். ஊருக்குத் திரும்பும் வழியில் தயாரிப்பாளரின் சூழ்ச்சியால் தாக்கப்பட்டு ராச்குமார் தன்னுடைய கிராமத்திற்கு நடந்தே வரும் பாதையில் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்குள் பசிக்கொடுமையால் சாப்பிடச் செல்லும் போதும் அங்கே தன்னுடைய திருமணம் நடந்ததற்கு வெங்காயம் திரைப்படமே காரணம் அதற்கு அந்த இயக்குநர் அண்ணனுக்கு இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன் என்று சொல்லும் போதே ராச்குமார் மண்டபத்தை விட்டு வெளியேறுகிறார். ‘‘சாப்பிட்டு போ!’’ என்று சொன்ன கருப்புச் சட்டைக்காரர் ‘‘என்னப்பா சாப்பிட்டாயா’’ என்று கேட்கும் போது, வயிறு நிறைந்து விட்டது என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறுவார் ராச்குமார்.
தான் அடகு வைத்த நிலத்தை மீட்டாரா?, சாமியாருக்கு என்ன நேர்ந்தது?
திருமண மண்டபத்திற்குள் என்ன நடந்தது? வெளியேறியதற்கான காரணம் என்ன? என வலியுடன், திரைப்பாணியில் பிற்பாதியில் கலக்கியிருக்கிறார் இயக்குநர் ராச்குமார்.
படம் எடுத்த விதம் பார்ப்பவர்களுக்குப் புதுமையாக இருக்கும். மேலும் முன்பாதியில் சிரிப்புடனும், பின்பாதியில் படத்தில் சொல்ல வேண்டிய செய்தியைச் சரியாகக் கடத்தியிருக்கிறார்.
சொந்தமாகத் தன்னுடைய கருத்தையோ, கற்பனையையோ படமெடுக்க திரைத்துறை நோக்கி வந்திருக்கும் ஒவ்வொரு இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த பயாஸ்கோப்!
பள்ளிக்கூடத்தில் மொத மார்க் எடுத்தோமா இல்ல ரெண்டாவது மார்க் எடுத்தோமாங்கிறது இல்ல நாமெல்லாம் பள்ளிகோடம் போனங்கிறதே சாதனை என்று படத்தில் வரும் கருத்தைப் போல, விட்ட இடத்தில் தான் தொடர வேண்டும் என்று தன்னுடைய முதல் படம் உருவான விதத்தையே பயாஸ்கோப் படமாக எடுத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார் இயக்குநர் சங்ககிரி இராச்குமார்!