தமிழினத்தார் உலகெங்கும் வாழ்கின்றார்! வாழ்வில்
தன்மானம் இனமானம் உயிரெனவே காப்பர்!
தமிழர்தம் புத்தாண்டின் தொடக்கம்தை முதல்நாள்!
தமிழர்க்கு முகவரியும் தமிழ்மொழியே ஆகும்!
தமிழரது திருநாளோ பொங்கல்நாள் ஆகும்!
தகவார்ந்த உழவர்தம் அறுவடைநற் றிருநாள்
தமிழினத்தின் செம்மாந்த மாண்பெல்லாம் காப்போம்!
தக்காங்கு தொலைத்திட்ட பண்பாட்டை மீட்போம்!
கழனிகளில் விளைந்திட்ட நெல்மணிகள் எல்லாம்
களிப்பூட்டச் சோர்வெல்லாம் காணாமல் போகும்!
உழக்காலே கடலளக்க முயல்வாரோ நாளும்
உறுசெல்வம் ஈட்டுதற்கே உரியவழி நாடும்
பழக்கத்தை அதிகாரச் செருக்காலே கொண்டார்
பகுத்தறிவுப் பேரொளியைக் கையிரண்டால் மறைப்பார்
அழப்போகும் காலம்மிக அண்மைத்தே! நாமும்
ஆர்த்தெழுவோம் சூளுரைப்போம்! அகப்பகையை வெல்வோம்!
வெல்வதற்கே மிகத்துடித்துத் தமிழினத்தை வீழ்த்த
வேதங்கள் மனுதருமம் புராணங்கள் என்றே
பொல்லாத நச்சுவிதை பொழுதெல்லாம் ஊன்றிப்
பொய், புரட்டை மடமையினை அரங்கேற்றி வந்தார்!
இல்லாத கதையளந்தே ஏய்த்திட்டார்! நம்மோர்
எடுபிடியாய் அவர்பின்னே அலைந்திடவே செய்தார்!
வல்லவராம் பெரியாரோ வசையாவும் நீங்க
வழிகாட்டி ஆரியத்தின் வேரறுத்தார் அன்றோ?
பரிவோடு பொங்கல்நல் வாழ்த்துரைப்போம் நாமும்!
பண்டிருந்த தமிழ்வீரம் பறைசாற்றி எழுவோம்!
நரிக்குணத்தர் வஞ்சகத்தை நாடென்றும் ஏற்கா!
நயத்தக்க அருஞ்செயல்கள் நன்றாற்றி உழைப்போம்!
கரவுடையோர் கைகளிலே கன்னக்கோல் இருப்பின்
கடுமிழப்பு நமக்கெல்லாம் நேராதோ நன்றாய்ப்
புரிந்திடுவீர்! பொறுப்புணர்ந்தே புரட்சியினை விதைப்போம்!
பொற்காலம் புலர்ந்திடவே பண்ணிசைப்போம் நாமே!