ஏறக்குறைய 69 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 22 ஆம் வயதில் இளைஞர் ஒருவர் ‘தோழன்’ என்ற இதழில், “தலைவரென்போர் யாரெனக் கேட்டால்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதுகிறார். ஆந்துரு மராய் (Andre Mourois) என்ற பிரெஞ்சு எழுத்தாளரின் ‘The Art of Living’ என்ற நூலில் இடம்பெற்ற 9 அத்தியாயங்களில் கொடுக்கப்பட்டிருந்த தலைமைப் பண்புக்கான இலக்கணத்தைப் படித்து, தன் வாழ்வில் தான் ஏற்றுக்கொண்ட தலைவருடன் அவ்விலக்கணத்தைப் பொருத்திப் பார்த்து, தனது தலைவரின் வியக்கத்தக்க பண்புகளுடன் ஒப்பிட்டு எழுதுகிறார். அவ்வாறு எழுதிய இளைஞர்தான், தற்போது 92 ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
தன் வாழ்வில் அவர் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவரான “தந்தை பெரியார்” பற்றிய கட்டுரைதான் அது! 2024 ஆம் ஆண்டிலும் அக்கட்டுரையை வாசிக்கும்போது நம்முள் பல ஆச்சரியங்களும் வியப்பும் ஏற்படுகின்றன. அதில் முதன்மையான வியப்பு என்னவெனில், 1955 ஆம் ஆண்டில் 22 வயதான ஒரு இளைஞருக்கு பிரெஞ்சு எழுத்தாளரின் நூலினைப் படிக்க ஏற்பட்ட ஆர்வம். மற்றொன்று அதனை வாசிக்கும் நேரத்தில், தனது எண்ணவோட்டங்கள் முழுவதும் தான் ஏற்றுக்கொண்ட தலைவரின் மீதே இருந்தது. சிந்தனையுடன் நிறுத்தாமல், அதற்கான எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். எத்தகைய அறிவுத் தெளிவின் வெளிப்பாடு!
ஆந்துரு மராய் எழுதிய தலைவருக்கான இலக்கணத்திற்கு ‘தந்தை பெரியார்’ என்ற உருவம் கொடுத்தார் ஆசிரியர் வீரமணி. தந்தை பெரியார் பற்றிய அந்த எழுத்துகளுக்கு நாம் வடிவம் கொடுத்தால் அது ‘ஆசிரியர் வீரமணியாக’ தெரிகிறது.
தலைவருக்கான பண்பாக அதில் குறிப்பிடப்பட்டவை :
1. அவரைத் தலைவர் என்று மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். மரியாதை காட்ட வேண்டும். மதிப்பளிக்க வேண்டும்.
2. ஒரு தலைவருக்கு நாட்டு நிலைமையை உணர்ந்து செயலாற்றக் கூடிய வினைத் திட்பம் இருக்க வேண்டும்.
3. அடிக்கடி கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்; வெட்டிப் பேச்சை வெறுத்து ஒதுக்கித் தள்ள வேண்டும். நாட்டின் முன்னேற்றம், கொண்ட கொள்கைகளைச் செயலாக மலரச் செய்வது என்பன பற்றிய சிந்தனைக்கே தனது நேரத்தை எடுத்துக் கொள்வது.
4. உழைப்பு, சக்தி, சொல்வன்மை, பொறுமை.
5. ஆற்றப்போகும் முக்கியச் செயல்களை உரிய காலத்தில், உரியவர்களிடம், உரிய முறையில் சொல்வது.
6. சிறந்த உடல்நலம், நிறைந்த தைரியம்.
7. எளிய முறையில் வாழ்வது.
8. அமைதியை இழக்காமல் இருப்பது.
9. சிறந்த ஒழுக்கம்.
மேற்கூறிய தலைவருக்கான இலக்கணம் அனைத்தும் 100 விழுக்காடும் பொருந்தியிருக்கும் தலைவர், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள்! ஒவ்வொரு பண்பு குறித்தும் தனிக் கட்டுரைகள் எழுதும் அளவிற்கு அவரின் வாழ்க்கைப் பயணம் நமக்கு வாழ்வியல் பாடத்தைக் கற்றுத் தருகின்றது. அதிலும் குறிப்பாக ‘சிறந்த ஒழுக்கம்’ எனும் பண்பு. தலைவர்கள் என்போர் மட்டுமின்றி, பொதுவாகவே மனிதர்கள் சறுக்கும் இடமே ‘தனிமனித ஒழுக்கம்’ தான். எல்லாவற்றிலும் நான் நேர்த்தியாக இருக்கிறேன் என்று பெருமைப்படும் பலரும், ஒழுக்கம் என்ற வரையறை வருகின்றபோது, சற்று பின்தங்குவதைப் பார்த்துள்ளோம். நிறைந்த அறிவு கொண்டவர்களும், ஒழுக்கமின்றிச் செயல்பட்டு, வெகு மக்களின் வசைச் சொற்களுக்கு ஆளாகும் நிலைமை எல்லாம் ஏற்பட்டு இருக்கின்றன. ஆனால், 82 வருட பொது வாழ்வில், தனிமனித ஒழுக்கத்துடன், உடல்நிலையையும் சமூக நிலையையும் பாதிக்கும் வேறுபட்ட சிறு பழக்கமுமின்றி வாழும் தலைவர், நம்முடைய ஆசிரியர் தான்.
“தலைவருக்குள்ள மிக முக்கியப் பண்புகளில், ஆந்துரு மராய் அதிகம் வலியுறுத்துவது ஒழுக்கத்தைப் பற்றியும், சிறந்த நடத்தையைப் பற்றியும்தான். அவர் எந்தத் தலைவராயிருப்பினும் அவர் ஒழுக்கத்தின் உயர் சின்னமாக விளங்க வேண்டும். தலைவனைப் பின்பற்றுவதென்றால் ஒழுக்கமும் அதனுடன் சேர்ந்ததே. ஒழுக்கத்திற்கே பொது வாழ்விலிருக்கின்ற எல்லோரும் முதலிடம் தரவேண்டும். ஒழுக்கமில்லாத தலைவனை விட ஒழுக்கத்துடன் வாழும் சாதாரணத் தொண்டன் எத்தனையோ மடங்கு உயர்ந்தவன் என்பதை பொதுவாழ்வில் உள்ளவர்கள் உணர்ந்தே தீர வேண்டும். “நான் வீட்டில் எப்படி இருந்தால்தான் என்ன, உங்களுக்கு வேண்டியது எனது கொள்கை சார்ந்த அறிவுரை தானே” என்று கூறுபவர்கள் பொதுவாழ்வின் மின்மினிகளே தவிர, ஒளி விளக்குகள் ஆக மாட்டார் என்பதை உணர வேண்டும்.
சில “தலைவர்களுடைய” ஒழுக்க ஈனத்திற்குப் பதில் கூறுவார்கள் “அவர்களும் மனிதர்கள்தானே” என்று! வேடிக்கையான, விநோதமான பதில்! அவர்கள் மனிதர்கள் (மிருக உணர்ச்சிகள் மங்கி, மறையாமல், தலைவிரித்தாடும் மனிதர்கள் என்பது இன்னும் பொருந்தும்) என்பதை நாம் மறுக்கவில்லை. அவர்கள் சாதாரண மனிதர்கள் என்ற தகுதியிலேயே இருக்க வேண்டியவர்களே தவிர, தலைவர்கள் என்ற தகுதிக்குச் சிறிதும் லாயக்கற்றவர்கள்.
‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’
என்ற குறளை தனி மனிதன் மறந்தாலும் தலைவர்கள் மறக்கக் கூடாது. அறிவு, ஒழுக்கம் இவை இரண்டும் தேவைதான். ஆனால் இந்த இரண்டில் எது தேவை என்றால், ஒழுக்கத்திற்கே நாம் தரும் முதலிடம் செல்லும் என்பது உறுதி. ஒழுக்கம் என்ற ஒரே சொல்லில் எல்லாம் அடங்கிவிடும். நாணயம், நேர்மை, உண்மை, சொன்ன சொல் தவறாமை இவற்றின் கூட்டுத்தொகை தானே ஒழுக்கம்!
இத்தகையப் பண்புகள் ஒருங்கே சேர்ந்த ஓர் உருவம் தென்னாட்டில் பொது வாழ்வில் உலவுகிறது என்றால் அவர் நம் தலைவர் பெரியார், பெரியார் ஒருவரே!” என்று அக்கட்டுரையில் ஆசிரியர் எழுதினார்.
ஆசிரியர் எழுதிய ஒவ்வொரு வரிக்கும் உருவம் கொடுத்தால் அதில் அவரின் முகமே நம் கண் முன் வருகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியின்றி வாழ்பவர்கள் தான் சிறந்த தலைவர்களாய் நீடித்து நிலைபெற முடியும். வீட்டிலும் பொது வெளியிலும் வேறு வேறு முகமின்றி, ஒழுக்கத்திற்கே முன்னுரிமை தருபவராக ஆசிரியர் விளங்குகிறார். பயணங்களின் போது அவரின் இப்பண்பு, பொது மக்களையும் வியப்படையச் செய்கிறது. எவ்வித அரசியல் கட்சியையும் சாராத, பெரிதாக அரசியல் பற்றி கண்டு கொள்ளாத ஒரு தோழர் ஒருமுறை என்னிடம் கூறிய செய்தி என்னை வியப்படையச் செய்தது. உங்கள் தலைவர் ஒரு “Disciplined Leader” என்றார். இந்த ஒற்றை வார்த்தைக்குள் அத்தனை அர்த்தங்களும் பொதிந்துள்ளன. எதிர் சித்தாந்தவாதிகளாய் இருப்பினும், அவர்கள் ஆசிரியரிடம் அண்ணாந்து பார்க்கும் பண்பும் இதுதான். பார்ப்பனர்கள் இத்தனை ஆண்டுகள் முயற்சித்தும், ஆசிரியரிடம் ஒரு சமூகக் கேடான பழக்கத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளனர்.
‘ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து’ என்றார் பெரியார். அப் பொதுச்சொத்தின் மொத்த உருவமாக ஆசிரியர் திகழ்கிறார். வீழ்த்த நினைத்து வருபவர்களும் இவர்தம் உயர் பண்பினைப் பார்த்து வியந்து திரும்புகின்றனர். சோ தொடங்கி இன்றைய ஒன்றரைப் பார்ப்பனர்கள் வரை இதற்கு விதிவிலக்கு இல்லை. ‘இவரைப் போல் ஒழுக்கத்தில் சிறந்து இரு’ என்று பொது வாழ்வில் நீங்கள் ஒருவரைச் சுட்டி அறிவுரை கூற நினைத்தால், “ஆசிரியர் வீரமணி போல் ஒழுக்கத்தில் சிறந்து இரு” என்று தான் கூற முடியும்.
ஆம், ஒழுக்கத்தின் இலக்கணம் யாரெனக் கேட்டால், அவர் ஆசிரியர்தான்!