திராவிடக் குரிசில் ஆசிரியர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

2024 கவிதைகள் டிசம்பர் 1-15 2024

திராவிடக் குரிசில்! திக்கெலாம் புகழும்
திராவிடர் கழகத் தலைவர் அய்யா
தொண்ணூற் றிரண்டில் சுவடு பதிப்பவர்
எண்ணிய எண்ணியாங் கெய்திட உழைக்கும்
தறுகண் மறவர்; தகைசால் தமிழர்!
வெறுப்பை விதைப்போர் வீழ்ந்திடச் செய்த
பெரியார் போற்றிய பீடுசால் அரிமா!
நரியார் வஞ்சகம் நசுக்கிடும் மாண்பினர்!
சட்டம் பயின்றவர்! சால்போ நிறைந்தவர்
திட்டம் இடுவதில் தேர்ந்தவர், தெளிந்தவர்
முத்திரை பதிக்கும் முனைப்பு மிக்கவர்!
பத்தாம் அகவைச் சிறுவனாய் இருந்த
காலம் முதலே காந்தச் சொற்களால்
ஞாலம் மதித்திடும் மாண்பைப் பெற்றவர்!
‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’,
கெடுதலைப் போக்கும் ‘திராவிடப் பொழில்’,
படும்படிச் சொல்லும் ‘மாடர்ன் ரேஷனலிஸ்ட்’
அடும்இதழ் அய்ந்தின் இணையிலா ஆசிரியர்
நால்வகை வருணம், ஜாதி, மதங்கள்
நூல்தரும் பேதம் நொறுங்கிடச் செய்பவர்!
நேர்மை, ஒழுக்கம், வாய்மை, உழைப்பு,
சீர்மை, ஈகம் உருவாய் ஆனவர்!
சமத்துவம் நிலவிடச் சமூக நீதி
கமழ்ந்திட வெற்றிகள் கனிந்திட வாழ்கவே!