உலகக் கோப்பை கேரம் போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்ற தங்க மங்கை காசிமா!

2024 டிசம்பர் 1-15 2024 பெண்ணால் முடியும்

அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கேரம் வாகையர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனைச் சிகரத்தை எட்டியுள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை காசிமா.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மெகபூப் பாஷா. ஆட்டோ ஓட்டுநர். இவரது மகள் காசிமா (வயது 17). இவர் அண்மையில் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த 6வது உலகக் கோப்பை கேரம் வாகையர் போட்டியில் கலந்து கொண்டு மகளிர் தனிப்பிரிவு, மகளிர் இரட்டையர் பிரிவு, குழுப் போட்டி என மூன்று பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். கடின உழைப்பும் முறையான பயிற்சியும் விடா முயற்சியுமே இவரைச் சாதனையின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

மகளின் சாதனை குறித்து அவரது தந்தை மெகபூப் பாஷா கூறுகையில் ‘‘வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சியான தருணம் இது. ஒட்டுமொத்த இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. எனது மகளுக்கு 8 வயதிலிருந்தே கேரம் விளையாட்டில் பயிற்சி அளித்து வருகிறேன். அதை நன்றாகப் பயன்படுத்தி சாதனை நிகழ்த்தி தமிழ்நாட்டிற்கும் எங்கள் குடும்பத்திற்கும் பெருமை தேடித் தந்திருக்கிறார். திராவிட மாடல் அரசின் சாதனை மகுடத்தில் காசிமாவும் ஒரு முத்து. போட்டியில் பங்கேற்க 1.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காசிமாவின் சாதனையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் ‘‘அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கேரம் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை காசிமா முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள். பெருமை கொள்கிறேன் மகளே…! எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ள தங்கமங்கை காசிமா சாதனை குறித்து பேட்டியளிக்கையில் ‘‘உலகக்கோப்பை கேரம் போட்டியில் பங்கேற்க உதவிய முதலமைச்சர் அவர்களுக்கும் துணை முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளைஞர்கள் விளையாட்டில் பங்கேற்க முன்வரவேண்டும். என்னைப் போல் சாதனை படைத்து நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியும். எளிய குடும்பத்தவராக இருப்பினும் ஏழ்மை என்பது வெற்றிக்கு ஒரு போதும் தடையாக இருக்காது என்பதையே காசிமாவின் இமாலய வெற்றிச் சாதனை உலகிற்கு உணர்த்துவதாக உள்ளது. வெற்றிப் பயணம் தொடர்ந்திட வாழ்த்துக்கள்..!