இயக்க வரலாறான தன் வரலாறு (352) தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 10ஆம் ஆண்டு விழா ! – கி.வீரமணி

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் உளவியல் டிசம்பர் 1-15 2024

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான இளைஞர் விழா திருப்பூர் தெற்கு ரோட்டரி ஹாலில் 29.1.2006 அன்று நடைபெற்றது. தலைவர் நடராஜன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஆளுநர் கே.என். பிள்ளை விழாவைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் நாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது, ‘‘ஒரு காலத்தில் பெண்களை அழுத்தி வைத்திருந்தனர். இப்போது அனைத்திலும் பெண்கள் முதலிடத்தில் உள்ளனர். படிப்பு என்பது வேறு; அறிவு என்பது வேறு. மாணவர்கள் பட்டறிவும், பகுத்தறிவும் பெற வேண்டும். அறிவாற்றலைக் கூர்தீட்டிக் கொள்ள நல்லப் புத்தகங்களைத் தேர்வு செய்து படியுங்கள். அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனித நேயம் போன்றவற்றைப் பகுத்தறிவு உள்ள ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டும்’’ என மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி உரையாற்றினோம்.

ஜாதி, தீண்டாமை ஒழியவும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் சார்பில் 1.2.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மறியல் போராட்டம் நடந்தது. தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த மறியல் போராட்டத்தில் திராவிடர் கழக தொண்டர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 1.2.2006 அன்று முற்பகல் 11 மணியளவில் பல்லாயிரக்கணக்கான தோழர்கள் பங்கு பெற எமது தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

ஜாதி – தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தி நடந்த மறியல் போராட்டத்தில் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள்

கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் போராட்டத்தை விளக்கி தொடக்க உரையாற்றினர். 500க்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள், தோழியர்களை போலீசார் கைது செய்தனர். 40ஆம் முறையாக நாம் கைதானோம். அப்போது ‘‘இந்தப் போராட்டம் இத்தோடு முடிந்துவிடக் கூடியது அல்ல; தந்தை பெரியார் அறிவித்த இந்தப் போராட்டம் வெற்றி பெறுகிற வரை ஓயாது’’ என்று சூளுரைத்தோம்.

சமூக நீதிக்கட்சித் தலைவர் கா.ஜெகவீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் ஆகியோர் எம்மை வாழ்த்தி வழியனுப்பினர். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசி வழி வாழ்த்து தெரிவித்தார்.

கவிதா – எழிலரசன் இணையேற்பு விழாவில் மணமக்களை வாழ்த்தும் ஆசிரியர்.

பண்ருட்டி ஆசிரியர் மு.கோவிந்தசாமி- தலைமையாசிரியை கோ.கவுரி இணையரின் மகள் கவிதாவுக்கும் புலவர் இரா.சஞ்சீவிராயர்- புலவர் க.மு.கலைமணி இணையரின் மகனும் திருச்சி சிறீசங்கரா ஆயுர்வேதக் கல்லூரி விரிவுரையாளருமான எழிலரசனுக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா பண்ருட்டி சிறீ பார்வதி மஹாலில் 3.2.2006 அன்று காலை 8.40 மணியளவில் நடைபெற்றது. மணவிழாவிற்கு நாம் தலைமை ஏற்று வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச் செய்து நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தி சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கினோம்.

 

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் துணைவியார் ஜி.எஸ்.சரோஜா அம்மையார் அவர்கள் 3.2.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினோம்.

ஏ.ஈ.ஆர். நாதன்

நாம், எமது இணையர் மோகனா அம்மையாருடன் 4.2.2006 அன்று காலை 10 மணியளவில் கல்லக்குறிச்சியில் உள்ள கோ.சாமிதுரை அவர்களது இல்லத்திற்குச் சென்று மறைந்த சரோஜா அம்மையார் உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம்.

மறைந்த சரோஜா அம்மையார் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவரது கண்கள் கல்லக்குறிச்சி அரிமா சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

பகுத்தறிவுச் சிந்தனையாளரும் சென்னை கே.என்.அறிவியல் மய்ய நிறுவனருமான டாக்டர் கா.நடராசன் அவர்கள் 31.1.2006 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 5.2.2006 அன்று காலை நாம் நேரில் சென்று மறைந்த டாக்டர் நடராசன் உடலுக்கு மலர் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். மறைந்த டாக்டர் கா.நடராசன் அவர்களின் கண்கள் மருத்துவமனைக்குச் கொடையாக அளிக்கப்பட்டன.

காவேரிப்பட்டணம் ஒன்றியம் பெண்டர அள்ளியில் அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடியினை 8.2.2006 அன்று நாம் ஏற்றி வைத்தோம். இந்நிகழ்ச்சிக்கு அறிவரசன் தலைமை தாங்கினார். தா.திருப்பதி, மு.தியாகராசன், கோ.திராவிடமணி, பழனி புள்ளையண்ணன், வீ.செங்குட்டுவன், கே.சி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக நமது கொள்கைகளை விளக்கி நிறைவுரையாற்றினோம்.

சுயமரியாதைச் சுடரொளி ஊற்றங்கரை அ.பழனியப்பன் அவர்களின் சகோதரர் கே.ஏ.அரங்கநாதன் – கே.பேபி இணையரின் மகன் ஆர்.ராஜா அண்ணாமலைக்கும் அம்பாசமுத்திரம் பி.சுப்பையா – பூங்கொடி இணையரின் மகள் எஸ்.லட்சுமிக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் 8.2.2006 அன்று காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. மணவிழாவுக்குத் தலைமையேற்று, மணமக்களை உறுதி மொழியினைக் கூறச் செய்து, எவ்விதச் சடங்கு, சம்பிரதாயமுமின்றி திருமணத்தை மிக எளிமையாக நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினோம்.

விழாவில் தொழிலதிபர் சேலம் ராமசாமி உடையார், காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் விடியல் சேகர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திப் பேசினர்.

பெரியார் முத்தமிழ்மன்ற விழாவில் இயக்குநர் சேரனுக்கு ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்புச் செய்யும் ஆசிரியர்..

மாத்தூர் தலைமை ஆசிரியர் அண்ணா சரவணன், தலைமையாசிரியை மு. இந்திராகாந்தி ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரில் கோட்டைத் தெருவில் பல்வேறு மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் வகையில் புதிதாக வடிவமைத்திருந்த ‘ஆசிரியர் கி.சிதம்பரம் நினைவு இல்லம்’ திறப்பு விழா 8.2.2006 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது. விழாவில் நாம் கலந்துகொண்டு புதிய இல்லத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், புதிய இல்லம் அமைக்கும் போது நம் மக்கள் ‘வாஸ்து’ என்ற பெயரில் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் கழகக் கொள்கைகளையும் விளக்கிப் பேசினோம்.

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஏ.ஈ.ஆர்.நாதன்(வயது 80) அவர்கள் 10.2.2006 அன்று மறைவுற்ற செய்தி யறிந்து வருந்தினோம். இயக்கத்தின் சார்பில்
பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். குறிப்பாக, குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, தேசப் பட எரிப்பு என முக்கியப் போராட்டங்களில் ஈடுபட்டவர். ஜாதி ஒழிப்புப் போராட்டமான அரசமைப்புச் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். மேடை ஏறினால் பல மணி நேரம் தட்டுத் தடங்கல் இல்லாமல் பேசும் ஆற்றலாளர்.
இவரும், அடையாறு அரங்கநாதன், ஆலந்தூர் இராமச்சந்திரன் ஆகிய மூவரும் அனைத்துப் போராட்டங்களிலும் இணைபிரியா தோழர்கள். பெரியார் திடல் அமைந்துள்ள இடம் வாங்கப்பட்டு, 1962ஆம் ஆண்டு வாக்காளர் மாநாட்டுக்கு சரிசெய்யப்பட்டபோது, அந்தப் பணியில் ஈடுபட்டவர்கள்.

சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் இறுதியாகப் பேசிய பொதுக்கூட்டத்திற்கு (19.12.1973) தலைமை வகித்த சிறப்புக்குரியவர். அவரின் அளப்பரிய தொண்டுக்கு கழகம் சார்பில் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி 11.2.2006ஆம் தேதிய ‘விடுதலை’
ஏட்டில் இரங்கல் செய்தி வெளியிட்டோம்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா முதல் நாள் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 11.2.2006 அன்று இரவு 7 மணிக்குத் தொடங்கி மிகக் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார்.

அடுத்து தத்துவக் கவிஞர் குடியரசு அவர்களுடைய படத்தை கா. வேழவேந்தன் அவர்கள் திறந்து வைத்துப் பேசியதாவது:

‘‘தந்தை பெரியார் திடலுக்கு வந்து இங்குள்ள இந்த உணர்வுகளைக் கடன் வாங்கிக் கொண்டு செல்லவேண்டும். இந்த உணர்வுகள்தான் நமக்கு வேண்டும் என்ற உணர்வோடு வந்தேன்.

பெரியார் திடலுக்கு வந்தால்தான் புத்துணர்வே வருகின்றது. நான் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல அண்ணன் கலைஞர் அவர்களிடம் அனுமதி கேட்ட பொழுது ‘‘நம்முடைய பகுத்தறிவுப் பாசறைக்குப் போய்விட்டு வா’’ என்று சொல்லி மகிழ்ச்சியோடு அனுப்பினார்கள்.

தமிழர் தலைவர் அவர்களுடைய கரங்களால் விருது அளிக்கப்பட்டதை பெருமகிழ்ச்சியாகக் கொள்கிறேன். யார் பாராட்டினால் பெருமையோ அந்தப் பெருமையை இன்றைக்குப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன்.

இது எங்கள் பாடி வீடு. தந்தை பெரியார் அவர்கள் கொஞ்சமும் சளைக்காமல், துவளாமல் சுற்றுப்பயணம் செய்து எப்படி இந்தச் சமுதாயத்திற்காகப் பாடுபட்டாரோ அதுபோல, தந்தை பெரியாரின் தத்துவங்களை எல்லாம் உலகமெல்லாமம் தம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் பரப்பிக் கொண்டு வருகின்றார்.

எனக்கு இன்றைக்கு விருது வழங்கியிருக்கிறீர்கள். பத்து ஞானபீட விருது பெற்றாலும் பெருமை இல்லை. 100 சாகித்ய அகாடமி விருது கிடைத்திருந்தாலும் பெருமை இல்லை.
அதைவிட நீங்கள் அளித்திருக்கின்ற விருதைத்தான் பெருமையாகக் கருதுகிறேன்’’ என்று கூறினார்.

விழுப்புரம் செல்வராசு கலை நிகழ்ச்சியின் இடைவேளையில் நாம் உரையாற்றினோம். அப்போது ‘‘அவருடைய கவிதை வரிகள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய கருத்துகளை ஒட்டியதாகவே இருக்கும். அவருடைய பாடல்களில் பகுத்தறிவு, தன்மானம், இனமானம் இருக்கும்.

உலக நாடுகளிலிருந்து 450 கவிஞர்களில் முதல் கவிஞராக இருந்து முதல் பரிசைப் பெற்றிருக்கிறார் என்றால், அதைப் பார்த்து திராவிட இயக்கத்தைச் சார்ந்த நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். அவருடைய நூல்களை நான் படித்திருக்கின்றேன். அவருடைய நூலுக்கு அணிந்துரையும் தந்திருக்கின்றேன்.

திராவிட இயக்கத்தில் சரியான இலக்கியங்கள் இல்லை என்ற ஒரு போலித்தனமான – தவறான கருத்துகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
திராவிட இயக்கத்திலிருந்து இலக்கியங்களுக்கு அளித்த கருவூலங்களைப் போல வேறு கருவூலங்களே இருக்க முடியாது; சொல்ல முடியாது.
வேழவேந்தன் அவர்களுக்குத் தாய் வீட்டுப் பாராட்டு என்றால் அது தாலாட்டைப் போன்றது.

வேழவேந்தன் அவர்களை தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டுவதைப் போல தந்தை பெரியார் முத்தமிழ் மன்றமும் பாராட்டுகின்றது. அந்தப் பாராட்டை இங்கு பதிவு செய்கின்றது.
விழுப்புரம் செல்வராசு அவர்கள் கடந்த 34 ஆண்டுகளாக 8000 நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றார். வில்லுப்பாட்டு என்றால் முதலில் மண்பானைதான் (கடம்) இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இங்கு மண்பானை இல்லை. நவீன கருவிகளை காலத்திற்கு ஏற்ப அவர் மாற்றியிருப்பது பாராட்டத்தக்கது.

கலைஞர்கள் பகுத்தறிவாளர்களாக இருப்பது மிக மிக அவசியம். கிராமப்புறங்களில் விழுப்புரம் செல்வராசு அவர்களின் வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சிகளை திராவிடர் கழகம் பயன்படுத்தும். அவருடைய குழுவினருக்கு நமது சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றோம். கலையிலே பண்பாட்டுப் படை எடுப்பு என்பதுதான் ஆபத்தானது. அந்தப் பண்பாட்டுப் படைஎடுப்பை முறியடிக்கின்ற வகையிலே விழுப்புரம் செல்வராசு அவர்களின் கலை நிகழ்ச்சிகள் பயன்படுத்தப்படும்.

நம் இறையனார் அவர்கள்தான் ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற நிகழ்ச்சியையே நடத்துவார். இன்றைக்கு அவர் படத்தை நாம் இங்கு திறந்திருக்கின்றோம். அதேபோல கவிஞர் குடியரசு அவர்களுடைய இடி முழக்கத்தையும் நாம் கேட்டிருக்கின்றோம். தமிழர்களுக்கு இளைப்பாறுதலைக்கூட நாம்தான் சொல்லித்தர வேண்டியிருக்கின்றது’’ என உரையாற்றினோம்.

தொடர்ந்து விழுப்புரம் செல்வராசு அவர்களின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இறுதியாக சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வை.கலையரசன் நன்றி கூறினார்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி 12.2.2006 அன்று இரவு 7 மணிக்கு சென்னை – பெரியார் திடலில் நடிகவேள் ராதா மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் வரவேற்றுப் பேசினார்.கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்துப் பேசினார்.
பின்னர் பேராசிரியர் இராசகோபாலன் அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. ‘‘மக்களை மிகுதியும் சீரழிப்பது தொலைக்காட்சிகளே’’ என்ற தலைப்பில் பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரான், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, ஆவடி இரா. திருநாவுக்கரசு ஆகியோர் வாதிட்டனர்.

‘‘மக்களை மிகுதியும் சீரழிப்பது ஏடுகளே’’ என்ற அணியில் பேராசிரியர் இரா.செல்வகணபதி, பேராசிரியர் சொக்கலிங்கம், வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் வாதிட்டனர். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள், தங்கள் வாதங்களை எடுத்துரைத்தனர்.

இப்பட்டிமன்றத்திற்குப் பேராசிரியர் முனைவர் தி.இராசகோபாலன் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கினார்.

அடுத்து நாம் பட்டிமன்றத்தில் உரையாற்றிய இரு அணியினருக்கும், நடுவருக்கும் சால்வை அணிவித்து உரையாற்றினோம்.

கல்லக்குறிச்சியில் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை அவர்களின் துணைவியார் மறைந்த சரோஜா அம்மையார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் படத்திறப்பு நிகழ்ச்சி கல்லக்குறிச்சி எம்.கே.பி. மண்டபத்தில் 12.2.2006 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.

கடலூர் கோட்டப் பிரச்சார அமைப்புக் குழுத் தலைவர் புலவர் ந.தங்கவேலன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நாம் கலந்துகொண்டு சரோஜா அம்மையார் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து இரங்கலுரையாற்றுகையில், ‘‘இந்த வீட்டில் நடைபெறும் எத்தனையோ மகிழ்ச்சியான விழாவில் நான் பங்கேற்றிருக்கிறேன். ஆனால், இன்றைக்கு இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த வேதனையான ஒன்றாகும்.

நானும் நண்பர் சாமிதுரை அவர்களும் ஒன்றிப் போனவர்கள். எங்களை யாரும் பிரிக்க முடியாது. கொள்கையிலே – பண்பாட்டிலே என்றைக்கும் ஒன்றிப் போனவர்கள். 48 ஆண்டு
களுக்கு முன்பு இவர்களுடைய மணவிழாவினை நானும் அன்னை மணியம்மையாரும் பங்கேற்று நடத்தி வைத்தோம்.
இளமைப் பருவத்திலேயே நாங்கள் இருவரும் தந்தை பெரியார் கொள்கைப் பற்றால் மிகவும் ஈர்க்கப்பட்டவர்கள். பசு மாதிரி இருப்பார். ஆனால், புலி மாதிரி செயல்படக்கூடியவர். சாமிதுரை அவர்கள் தந்தை பெரியாரிடம் அவரது திருமணத்திற்குத் தேதி கேட்டார்.

அப்போது அய்யா அவர்கள் சிதம்பரத்தில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டதால் அம்மாவையும் என்னையும் அவரது திருமணத்தை நடத்தி வைக்க அனுப்பி வைத்தார்.
நாங்கள் சென்று மணவிழாவை நடத்தி வைத்தோம்.

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். இன்று மீளாத் துயரத்தில் இந்தப் படத்தினை நானே திறந்து வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்
கிறேன். எவ்வளவுதான் இருந்தாலும் வாழ்விணையர்கள் பிரிவு என்பது வாழ்வில் தாங்க முடியாத துயரமாகும்’’ எனக் குறிப்பிட்டோம்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற பத்தாம் ஆண்டு நிறைவு விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 13.2.2006 அன்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் கவிஞர் செ.வை.ர.சிகாமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். வரியியல் அறிஞர் இராசரத்தினம் தலைமை தாங்கினார். கழகப்பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், மு.நீ.சிவராசன், கோ.தங்கமணி, செ.ர.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.

விழாவில் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்

அவர்களுக்கு நாம் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தோம். பின்னர் இயக்குநர் சேரன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ‘பெரியார் விருது’ வழங்கிக் கவுரவித்தோம். இறுதியில் நாம் நிறைவுரையாற்றி விழாவை நிறைவு செய்தோம்.

(நினைவுகள் நீளும்…