சமதர்மம் என்றால், சாதாரணமாக பாரபட்சமற்ற நீதி, சமத்துவம், பேதமற்ற அதாவது உயர்வு, தாழ்வு இல்லாத நிலை என்பதாகும். ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும், அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல் கீழ் நிலை இருந்து வருகிறது.
இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்கு சமதர்மக் கொள்கை ஆட்சி அவசியம் என்றால், மதக்காரர்களுக்கும், கடவுள் நம்பிக்கைக் கொண்ட ஆஸ்திகர்களுக்கும் கஷ்டமாயிருக்கிறது. உழைப்பாளி மக்கள் உடல் வருந்தியுழைத்த பின்னும் குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும், குடி இருப்பதற்கு ஓட்டைக் குடிசை கூட இல்லாமல் பரிதவிக்கும் பொழுது எந்தவிதமான வேலையும் செய்யாது, பணக்காரனாக இருக்கின்ற சந்தர்ப் பத்தால், அக்கிரமமாக அநீதியாக தொழிலாளர் களைக் கொடுமைப்படுத்திக் கொண்டு, தான் மட்டும் படோடோபம் டம்பாச்சாரித்தனமாக வீண் விரையமாக்குவது சரியல்ல.
எல்லோரும் கஷ்டப் பட்டு வேலை செய்து பலனை எல்லோரும் சமமாக அனுபவிக்கலாம் என்று சொன்னால், அது முதலாளி களுக்கும், பணக்காரர்களுக்கும், ஜமீன்தார், மிட்டா மிராசுதார் முதலியவர்களுக்கும் விரோதம் என்று வீண் கூக்குரலிடப்படுகிறது. சாதாரணமாக இன்று ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அதுபோலவே ஒரு கிராமம், ஒரு ஜில்லா ஒரு மாகாணம் அல்லது தேசத்திலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போலவும், உள்ள பூமியும், பொருளும் எல்லாம் குடும்ப பொதுச் சொத்து போல் எல்லா மக்களுக் கும் பொதுவாகிய அக்குடும்பத்துக்குச் சொந்தமே அன்றி தனித்தனியாக அவனவன் இஷ்டம்போல் அனுபவிக்கும் தனி உரிமை யாருக்கும் இல்லை. எல்லோரும் ஒன்றுபட்டு ஆளுக்கொரு வேலை செய்து, உண்டு உடுத்தி இன்ப வாழ்வு வாழ வேண்டுமென்பதுதான்தான் சமதர்மம், மற்றபடி இதில் பயப்படத்தக்க காரியமும், புரியாத காரியமும் இல்லை.
இந்த சமத்துவமான வாழ்க்கை வேண்டுமென்று கூறும்பொழுது சமதர்ம விரோதிகளான மதவாதிகளும், ஆஸ்திகர்களும் துள்ளிக் குதித்து அது கடவுளுக்காகாது. அவனவன் முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்றாற்போல் சுகமான வாழ்க்கையோ, கஷ்டமான வாழ்க்கையோ நடத்துகிறான். பணக்காரனாகவோ, ஏழையாகவோ இருப்பது கடவுள் சித்தம் அவர் கடாட்சத்தால் அவனுக்கே தனி உரிமை கொடுக்கப்பட்ட பொருள்களைப் பொதுவுடைமை ஆக்கப்படல் அநீதி, கடவுள் கட்டளைக்கு விரோதம் என்று கூப்பாடு போடுகிறார்கள். இன்றைக்கு முனிசிபல் கட்டடத்தையோ, பொது ரஸ்தாவையோ, ரயில்வேயையோ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு உரிமையில்லையெனக் கூற முடியும்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவற்றை அனுபவிக்கிறார்களா? இல்லையா? இதனால் எந்தக் கடவுளுக்கு, மதத்துக்கு அல்லது பணக்காரனுக்கு ஆபத்து வந்துவிட்டதாகக் கூற முடியுமா? “மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாததான பல வசதிகளையும், சாதனங்களின்றி மற்றவர்கள் கஷ்டப்பட்டாலும், பரவாயில்லை. எனக்குத் தேவைக்கு மேலிருந்தாலும், நான் அனுபவிப்பதற்கு வேண்டிய அளவுக்கு மேலிருந் தாலும், அது சும்மா இருந்து வீணாக அழிந்து போவதானாலும், பிறர் அனுபவிக்க நான் பார்க்கக் கூடாது என்றாலும், குறுகிய புத்தியும், கீழான எண்ணமும், சுயநல உணர்ச்சியும் கொண்டவர் களுக்கும்தான் உழைக்கக் கூடாது, உடல் வளையக் கூடாது. ஆனால், பிற மக்கள் உழைப்பதினால், விளையும் பயனைத் தட்டிப் பறித்து அனுபவிக்க வேண்டும் என்னும் சூழ்ச்சிமிக்க சோம்பேறி களுக்கும்தான் சமதர்மம் கசப்பாகவோ, வெறுப் பாகவோ, விரோதமாகவோ இருக்குமே தவிர, அவர்கள் இதைப்பற்றி மறுப்பார்களே தவிர மற்றபடி உடலைச் சாறாகக் கசக்கிப் பிழிந்து வேலை செய்யும் பாட்டாளி மக்களுக்கு இந்தக் கொள்கை ஒரு நாளும் விரோதமானதல்ல. பெரிதும் சாதகம் செய்யவல்ல வாழ்க்கை நிலைமை உயர்த்தவல்ல ஜீவ தாது இது என்றுதான் கூறவேண்டும். உலக ஜனத் தொகையில், 100க்கு 90 பேருக்கு மேற்பட்ட தொழிலாளிகள் பாமர மக்கள் ஆகியவர்களுக்கு அனுகூலமாயிருக்கின்றன. இந்தத் தத்துவத்தை நியாய புத்தியும், நேர்மையும் நோக்கமும், பரந்த மனப்பான்மையும் கொண்ட அனைவரும் ஆதரித்துத்தான் தீருவார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் மலிந்த இன்றைய சமுக அமைப்பால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ, சாந்தியோ, சமாதானமோ உண்டு என்று கூற முடியுமா? ஏழைக்கு கஞ்சியில்லை, கட்டத் துணி இல்லை, இருக்க வீடில்லை. ஓய்வில்லை, இல்லாத பிள்ளைக்கு கல்வி வசதி இல்லை என்பன போன்ற பல ஓயா கவலையே கவலையாய் சதா வறுமைக் கடலிலே கிடந்துழல்கிறான். பணம் படைத்த பணக்காரர்களுக்கோ இருப்பதைக் காக்கவேண்டும், மேலும் பெருக்க வேண்டும், பிறர் கவராது காப்பாற்றவேண்டும் என்றும் கவலையோடு பேராசை மிகுதியால் மேலும் மேலும் செல்வத்தைப் பெருக்கவே ஆசைப்படுகின்றார்கள். சாதாரணமாக ஒரு தோட்டி வேலை செய்யும் கீழ்தர நிலையில் உள்ளவன், ஆடு, கோழி வளர்த்துக் கொஞ்சம் பணக்காரனாக வேண்டும். பின்னர் மணியக்கா ரனாக ஆக வேண்டும் என்றெண்ணுகிறான். மணியக்கார வேலை கிடைத்தாலும், தாசில்தாராக வேண்டுமென்று ஆசிக்கிறான். அப்படியானாலும், கலெக்டர் ஆகவேண்டும், கவர்னர் ஆகவேண்டும். வைஸ்ராயாக வேண்டும், ஏக சக்கிராதிபதியாய் உலகாள வேண்டும். இன்னும் இதற்குமேல் வேறு உலகங்கள் இருந்தாலும் அவற்றையும் தான் ஒருவனே கட்டி ஆளவேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்னவென்றால், கஷ்டப்பட்டு உழைக்காது சுகவாழ்வு நடத்துவதும், தேவைக்குமேற்பட்ட சொத்துகளுக்கு சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும், தனி மதிப்புக்குப் பாத்திரமானது என்றும், கண்ணியமானது என்றும் கருதுகின்ற ஒரு “மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.
இந்த மூட நம்பிக்கையின் பயனாய்த் தான் மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது, பிறரையும் அனுபவிக்க விடாது, வைக்கோல் போரைக் காக்கும் நாய்போல் வாழ்கின்றான். இந்தத் தனிவுடைமை வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குப் பயன்படக் கூடிய பல பொருள்கள் சாதனங்கள் வீண் விரையம் செய்யப்படுகின்றன.
உதாரணமாக மோட்டார் காரை எடுத்துக் கொள்வோம். ஒரு செல்வந்தர் குடும்பத்துக்குத் தனியாக ஒன்று அல்லது மேற்பட்ட கார்கள் வைத்துக் கொண்டிருப்பது இன்றைய அனுபவம். ஒரு நாளில் சாதாரணமாக ஒரு மனிதனுக்கு மூன்று அல்லது நான்கு மணிநேர தேவைக்காக உபயோகிக்கப்படும் மோட்டார் ஒரு நாளில் இருபது மணிநேரம் வீணாக யாதொரு பயனும் இன்றி இருக்கிறது. இதில் வீணாக பணம் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலை மாறி பஞ்சாயத்து போர்டு அல்லது முனிசிபாலிட்டிகளில் ஜனத்தொகைக்குத் தக்கவாறு 10, 15, 20 கார்கள் வைத்துக் கொண்டால், பொதுவில் தேவைப்பட்ட நேரங்களில் உபயோகித்துக் கொண்டால் வீணாக பணம் முடங்கிக் கிடக்க வேண்டிய தேவையில்லை.
இம்மாதிரியான முறைகளை அனுசரிப்பதால் வீண் விரயங்கள் தடுக்கப்பட்டு மக்கள் எல்லோரும் மனித வாழ்வை இன்ப மயமாக்கும் பல சாதனங்களையும் அனுபவித்துப் பயன்படுத்திக் கொள்ளச் சந்தர்ப்பம் ஏற்படும். இதற்கு பாடுபடாது பிறருழைப்பில் படோடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான, பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை என்பது தெளிவாக்கப்பட வேண்டும்.
செங்குந்த மகாஜன மகாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு,
(`புரட்சி, 10.6.1934).