அரசர் குடும்பம் தன்னில் பிறந்தவர்;
வரலாற் றேட்டில் வாழும் தலைவர்;
அன்பினர்; அருளினர் வி.பி. சிங்கோ
நன்னெறி பிறழா நயத்தகு நாயகர்!
கடமை மறவர்; களங்கம் இல்லார்
மடமைப் போக்கை மனத்தில் எண்ணார்!
தொண்டறம் தன்னில் தோய்ந்து மகிழ்ந்தவர்!
கண்ணியம் மிக்கவர்; கலைஞரின் தோழர்!
மக்கள் யாவரும் உரிமை எய்தவே
தக்க சமத்துவம் தழைக்கச் செய்தவர்;
வெறுப்பை விதைத்து வீண்பழி அடையார்;
பொறுப்பாய் அரசியல் சட்டம் மதித்தவர்!
விலைபோ கின்ற இழிந்த மனத்தரை
விலைக்கு வாங்கும் வெறித்தனம் அறியார்!
தலைமைக் கான தகுதியை என்றும்
நிலையாய்ப் பெற்றவர்! நேர்மைத் தடத்தினர்
நமது நாட்டின் ஏழாம் தலைமை
அமைச்சர் ஆகி அழகு சேர்த்தவர்!
போற்றரும் சமூக நீதிக் காவலர்!
மற்றார் மதிக்கும் மாண்பைப் பெற்றவர்.
இவரே மண்டல் ஆணையப் பரிந்துரை
உவகை மிகவே ஏற்றவர்! வாழ்வில்
எழவே இயலாப் பிற்பட் டோரும்
எழுந்திட இருபத் தேழைத் தந்தவர்!
வெந்திறல் சான்ற வீறுசால் அரிமா!
இந்திய அரசியல் திருப்பு முனையிவர்;
வஞ்சம் அறியார்! வன்மம் புரியார்!
நெஞ்சில் வாழ்த்தி மகிழ்வோம் யாமே!