இயக்க வரலாறான தன் வரலாறு (351)
மதுரை சுயமரியாதைச் சுடரொளி மானமிகு பே.தேவசகாயம் – அன்னத்தாயம்மாள் ஆகியோரின் பெயரனும், தே. எடிசன் ராசா – சுசீலாராணி விஜயலட்சுமி இணையரின் மகனுமான எ.வைக்கம் பெரியாருக்கும் சென்னை பட்டாபிராம் டி.ஜேம்ஸ் – மனோன்மணி இணையரின் மகள் ஜே. அனிதா பொன்மலருக்கும்,
மற்றும் தே.எடிசன் ராசா – சுசீலாராணி விஜயலட்சுமி இணையரின் மகன் எ. ஈரோட்டுப் பெரியாருக்கும் மதுரை மாவட்டம் பாலமேடு கே.சி.காமாட்சி – சிந்தாமணி இணையரின் மகள் கா. நித்யாவுக்கும், மற்றும் தே.எடிசன் ராசா – சுசீலாராணி விஜயலட்சுமி இணையரின் மகன் எ.செல்வப்பெரியாருக்கும் மதுரை அய்யர் பங்களா எஸ். சக்திவேல்- இந்துராணி இணையரின் மகள் ச.இராஜேஸ்வரிக்கும் என மூன்று இணையர் வாழ்க்கைத் துணையேற்கும் விழா ‘பீடை மாதம்’, என்று கூறப்படும் மார்கழி மாதம் எமகண்டத்தில் 8.1.2006 ஞாயிறு காலை 11 மணியளவில் மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் கி.மகேந்திரன் அறிமுகவுரையாற்றினார். மணமகனின் தந்தை தே.எடிசன் ராசா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் நாம் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்க்கை இணைநல ஒப்பந்த உறுதிமொழியைக் கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து சுயமரியாதைத் திருமணம் ஏன் நடைபெற வேண்டும் என்பதை விளக்கிச் சிறப்புரையாற்றினோம்.
மு.ரெங்கசாமி அவர்களின் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தும் ஆசிரியர்.
விழாவில் ‘தினத்தந்தி’ நாளிதழின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன், மேனாள் சட்டமன்ற சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், மதுரை ஆதீனகர்த்தர், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், மோகன் எம்பி., நன்மாறன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதே நாளில் மாலை 6 மணியளவில் மாவட்ட அமைப்பாளர் தோழர் ச.இராசேந்திரன் – பானுமதி இணையரின் மகள் விஜயலட்சுமிக்கும் மதுரை பகுத்தறிவாளர் தோழர் வி.டி.பாலு – விஜயராணி இணையரின் மகன் முத்தமிழ்ச் செல்வனுக்கும் இணையேற்பு விழா மதுரையில் உள்ள அன்னை இராசாமணி சங்கரலிங்கம் அரங்கத்தில் ‘பீடை மாதம்’ என ஒதுக்கப்படும் மார்கழி மாதத்தில் 8.1.2006 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்று மக்களுக்கு விழிப்பூட்டியது. மணமக்களைப் பாராட்டியும், வந்திருந்தவர்களுக்கு தெளிவூட்டியும் சுயமரியாதைக் கருத்துகளை எடுத்துக் கூறினோம்.
அகில இந்திய யாதவ மகாசபை தலைவர் தெ.நாகேந்திரன் அவர்கள் 13.11.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 8.1.2006 அன்று மதுரையில் உள்ள அவரது இல்லம் சென்று மறைந்த தெ.நாகேந்திரன் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம்.
மதுரையில், பழக்கடை முருகானந்தம் புதிதாகக் கட்டியுள்ள தந்தை பெரியார் இல்லத்தை 8.1.2006 அன்று என் இணையர் திருமதி.மோகனா அம்மையாருடன் நேரில் சென்று பார்வையிட்டோம். புதிய இல்லத்திற்கு வருகை தந்த எம்மை வேல்முருகன், ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
உல்லியக்குடியில் பெரியார் சிலையைத் திறந்து வைக்கும் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்கள்…
அரியலூர் மாவட்டம் உல்லியக்குடியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா, ஜாதி ஒழிப்புக்கான சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டு சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர் மு.ரெங்கசாமி படத்திறப்பு நிகழ்ச்சி 9.1.2006 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியாக பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் மார்பளவுச் சிலையைத் திறந்து வைத்து, கழகக் கொடியை ஏற்றி வைத்தோம். பின்னர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மு.ரெங்கசாமி அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவரது படத்தைத் திறந்து வைத்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினோம். நிகழ்வின் நிறைவாக சிறப்புரையாற்றினோம்.
சுயமரியாதைச் சுடரொளி – சட்ட எரிப்பு வீரர் திருவரங்கம் வடக்கு வாசல் எஸ்.கே.பெரியசாமி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். 9.1.2006 அன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு அவரின் இல்லத்திற்கு நாம் நேரில் சென்று மறைந்த எஸ்.கே. பெரியசாமி அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். பின்னர் அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி இரங்கலுரையாற்றினோம்.
எஸ்.கே.பெரியசாமி
தஞ்சையில் கலை இலக்கியத் திருவிழா ‘புதிய பார்வை’ இதழ் ஆசிரியர் ம. நடராசன் அவர்கள் தலைமையில் 2006 ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மூன்றாம் நாளான 16.1.2006 அன்று நடந்த நிகழ்ச்சியில் நாம் கலந்துகொண்டு உரையாற்றினோம். அப்போது, ‘‘மத்திய- மாநில அரசுகள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும்; தமிழ்ப் பற்றாளர்கள், உலகத்தமிழ் அறிஞர்களை அழைத்து தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க சென்னையில் மாபெரும் மாநாடு நடத்தப்படும்; தமிழர் திருநாள் மனித நேயத்திற்கும் உணர்வுகளுக்கும் உரித்தான ஒன்றாகும்’’ என விளக்கவுரையாற்றினோம்.
விழாவில் மதுரை ஆதீனம், தொல்.திருமாவளவன், தமிழ் அறிஞர்கள் மற்றும் நடிகர் கார்த்திக், நடிகர் செந்தில், திருச்சி வேலுச்சாமி, எல்.கணேசன், அன்பழகன், காமாட்சி நாயுடு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எஸ்.கே.பெரியசாமி அவர்களின் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார் ஆசிரியர்…
திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 16.1.2006 அன்று காலை 11 மணியளவில் தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் துரை.சக்ரவர்த்தி விடுதியில் எமது தலைமையில் நடைபெற்றது. இதில், நுழைவுத் தேர்வை ரத்து செய்த தமிழ்நாடு அரசைப் பாராட்டியும் வேலை வாய்ப்பை அரசியல் சட்ட அடிப்படை உரிமையாக்கிட ஒன்றிய அரசை வற்புறுத்தியும் மற்றும் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு சிறைபுகத் தயாராய் இருக்கும்படி கேட்டுக்கொண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மதுரை ஆதீனம் அவர்கள் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரிக்கு 16.1.2006 அன்று காலை வருகை புரிந்தார். அப்போது கல்லூரியில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தை நாம் அவருக்கு வழங்கினோம். பின்னர் ‘பெரியார் புரா’ சார்பில் செங்கிப்பட்டியில் முதல் விழாவை மதுரை ஆதீனம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
டி.கே.கைலாசம் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் ஆசிரியர்
அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் அருப்புக்கோட்டை டி.கே. கைலாசம் நினைவு அறக்கட்டளை (நிறுவனர்: கைலாசம் அவர்களின் மகன் டி.கே.சுப்பிரமணியம்- ஓய்வு பெற்ற ஆசிரியர்)யின் சார்பில் ‘பெரியார் பேருரையாளர்’க்கான சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் சிறப்புடன் நடைபெற்றது.
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் வரவேற்று உரையாற்றினார்.
திருச்சி- கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் ஆர்.இராசேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புரையை நிகழ்த்தினார்.
திருச்சி பெரியார் மாளிகை வளாகம் ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ டி.டி.வீரப்பா மன்றத்தில் இரண்டாவது சொற்பொழிவுக் கூட்டம் 17.1.2006 செவ்வாய் காலை 10.30 மணியளவில் எமது தலைமையில் நடைபெற்றது.
பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு (திருச்சி)
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அறிமுகவுரை ஆற்றினார். லால்குடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஆல்பர்ட் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு நாம் தலைமை வகித்தோம்.
திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ‘‘தந்தை பெரியார் காணும் உலகம் – நெறிகளும் – தீர்வுகளும்’’ என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் பெரியார் பேருரையாளருக்கான சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.
தொடர்ந்து நாம் தந்தை பெரியார் அவர்களின் உயர் எண்ணங்களை ஆய்வுரையாக நிகழ்த்தினோம்.
எமது தலைமை நிறைவுரைக்கு முன்பாக அருப்புக்கோட்டை டி.கே.கைலாசம் நினைவு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்திய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு ‘பெரியார் பேருரையாளர்’ என்கிற சிறப்புத் தகுதியை அறிவித்துப் பாராட்டி பொன்னாடை போர்த்தி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் ரூ.1,000 வழங்கினோம். இந்தச் சிறப்புக்கு முழு தகுதியுள்ள கலி.பூங்குன்றன் அவர்கள் சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிறந்த பெரியாரின் மாணவர் என்று பாராட்டினோம். அன்று மாலை திருச்சியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு விழாவில் மூத்தபெரியார் பெருந்தொண்டர்களுக்கு நினைவுப் பரிசளித்துப் பாராட்டினோம்.
பெரியார் பெருந்தொண்டர் கழகத் தோழர் எருக்கஞ்சேரி நாராயணசாமி அவர்களின் இணையர் யசோதா(வயது 72) அவர்கள் 17.1.2006ஆம் தேதி மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம்.
செந்துறை நகரில் 21.1.2006 அன்று மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க 80ஆம் ஆண்டு நிறைவு விழா, தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு, எமக்கு எடைக்கு எடை முந்திரிப் பருப்பு வழங்கும் விழா ஆகியவை சிறப்பாக நடைபெற்றன.
மாநாட்டில் ஆசிரியருக்கு எடைக்கு எடை முந்திரிப் பருப்பு வழங்கும் காட்சி
தமிழ் மறவர் கீ.வை. பொன்னம்பலனார் திடலில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார்.ஒன்றியத் தலைவர் இரத்தின ராமச்சந்திரன் வரவேற்புரையாற்றினார். சிற்பி இராஜனின் மந்திரமா? தந்திரமா? என்ற மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இயக்கப் பாடல்களைப் பாடி கலகலக்கச் செய்தார் பாப்பாநாடு பாஸ்கர். மாநாட்டுக் கொடியினை இர.இளங்கோவன் ஏற்றி வைத்தார்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார். பெரியார் பன்னாட்டமைப்பைச் சார்ந்த அரசு செல்லையா அவர்கள் இயக்கக் கொள்கைகள் – சாதனைகள் குறித்துப் பேசினார். பின்னர் பெரியார் பெருந்தொண்டர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
நிறைவாக, சுயமரியாதை இயக்கம் பற்றியும் பெரியார் பெருந்தொண்டர்கள் உழைத்த உழைப்பு பற்றியும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்பதை விளக்கியும் நாம் உரையாற்றினோம். இறுதியாக மா.சங்கர் நன்றி கூறினார்.
நாராயணகுரு அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் அவரின் சிலை திறப்பு விழா மதுரை அழகரடி தெருவில் 26.1.2006 அன்று காலை 11.30 மணியளவில் தொடங்கியது. விழாவிற்கு அழகரடி அவ்வை ஜானகி மருத்துவமனை டாக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். இல்லத்துப் பிள்ளைமார் சங்க மாநில துணைத் தலைவர் க.சண்முகவேல் முன்னிலை வகித்தார்.
விழாவில் நாம் கலந்துகொண்டு மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த நாராயணகுரு அவர்களின் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம். அப்போது, ‘‘நாராயணகுரு அவர்கள் மனிதநேயம் கொண்டவர்; மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று போதித்தவர்; மனித குலத்தின் பிரிவுகள்- பிளவுகள்- பேதங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்று வலியுறுத்தியவர். ஜாதிகளைப் பற்றிப் பேசாதே என்று கட்டளையிட்டவர். நல்ஒழுக்கத்தைப் போதித்து குடிகாரரைத் திருத்தினார். சக மனிதர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி மனித நேயத்தை வலியுறுத்தினார்’’ என அவரது பெருமைகளை அடுக்கிக் காட்டி உரையாற்றினோம்.
பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் சார்பில் மாநில அளவிலான ‘சடுகுடு’ விளையாட்டுப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டுத் திடலில் 26.1.2006 முதல் 29.1.2006 வரை நான்கு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
‘சடுகுடு’ போட்டியைத் தொடங்கி வைத்த சிவந்தி ஆதித்தன்
அவர்களுடன் வீரர்களின் அணிவகுப்பை ஆசிரியர் பார்வையிடுகிறார்.
26.1.2006 அன்று முதல் நாள் போட்டியை ‘தினத்தந்தி’ அதிபரும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவருமான சிவந்தி ஆதித்தன் அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். எமது தொடக்கவுரையில், இந்தச் ‘சடுகுடு’ விளையாட்டு இந்தியா முழுவதும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் இந்த ஆட்டம் ஏதோ ஒரு நலிந்த ஆட்டம் போலவும், இந்த நாட்டிலே வர்ணாசிரம தர்மத்தாலே எப்படி மேல் ஜாதி, கீழ் ஜாதி என்று இருக்கிறார்களோ அதுபோலவும் விளையாட்டில் கூட மேல்ஜாதி விளையாட்டு – கீழ்ஜாதி விளையாட்டு என்பதைப் போல இன்றைக்கு வந்துவிடக் கூடாது என்று நினைத்து எல்லோருக்கும் அந்த உணர்வை ஊட்ட வேண்டும் என்பதற்காக பெரியார் விளையாட்டுக் கழகத்தை நாங்கள் தொடங்கினோம். இளைஞர்களுக்கு நல்ல மூச்சுப் பயிற்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் ‘சடுகுடு’ போட்டிகள். இதைப் பெரிய அளவில் ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு சிறப்பை உண்டாக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டு உரையாற்றினோம்.
வீரவிளையாட்டில் 9ஆவது கருப்பு பெல்ட் பெற்ற மனோகர் அவர்களுக்கும் மாநில கபடிக் கழக அமைப்புச் செயலாளர் ஏ.சபியுல்லா அவர்களுக்கும் நாம் பயனாடை அணிவித்துப் பாராட்டினோம்.
போட்டியின் நிறைவு விழா 29.1.2006 அன்று மாலையில் எமது தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை புரிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர். சிங்காரவேலு அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தோம். பின்னர் ‘சடுகுடு’ போட்டிக்கு ரூபாய் 1 லட்சம் வழங்கிய பெரியார் பெருந்தொண்டர் நெடுவை. வை. குப்புசாமி அவர்களுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினோம்.
அடுத்து, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. பெண்கள் அணியில் முதல் பரிசு பெற்ற கலா சிமென்ட்ஸ் அணிக்கு ரூ.75,000/- பரிசுத் தொகையை நீதியரசர் எஸ்.ஆர்.சிங்காரவேலு அவர்கள் வழங்கினார்.
ஆண்கள் அணியில் முதல் பரிசு பெற்ற சென்னை அய்.சி.எஃப் அணிக்கு ரூ.1 லட்சமும் தந்தை பெரியார் சுழற்கோப்பையையும் இரண்டாம் இடம் பிடித்த சன் பேப்பர் மில் அணிக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசு வென்ற துறைமுகம் அணிக்கு ரூ.50 ஆயிரம், நான்காம் பரிசு பெற்ற கன்னியாகுமரி – அளத்தங்கரை அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகைகளை நாம் வழங்கினோம்.
பின்னர், போட்டி நடுவர்களுக்கு சந்தனமாலை அணிவித்துப் பாராட்டினோம். இறுதியில் உரத்தநாடு நா.இராமகிருட்டினன் நன்றி கூறினார்.
நினைவுகள் நீளும்…