பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்.

2024 கட்டுரைகள் நவம்பர் 16-30

கற்பு என்ற பெயரில் உலவும் பொய்ம்மைகள்

அ) கற்பு என்பதையும் திருமண உறவு என்பதையும் கேலிக்கூத்தாக்கும் வகையில் உயர்வர்க்கத்தினரும் மதகுருமார்களும், எவ்வாறு சமூக ஒழுக்கக்கேட்டிற்கு வழிவகுக்கும் முறையற்ற பாலியல் உறவுகளில் திளைக்கிறார்கள் என்பதை ரசல் அவர்கள் தனது திருமணமும் ஒழுக்கமும் எனும் நூலின் ஆறாவது அத்தியாயத்தில் வீரமும் காதலும் (Romantic Love) என்ற தலைப்பில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார் :-

1. பிஷப்புகள் தம் புத்திரிகளுடனேயே வெளிப்படையாக பாவமான வாழ்க்கை நடத்தினர்.(69)

2. மணஉறவில்லாமலேயே பாலியல் உறவு வைத்திருந்தார் என்பதற்காகவும் ஒழுக்கம் கெட்ட நடத்தையுள்ளவர் என்பதற்காகவும் 23ஆவது ஜான் எனும் (Pope John XXIII) போப்பாண்டவர் கண்டிக்கப்பட்டுள்ளார்.(70)

3. கான்டர்பரி மடத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தூய அகஸ்டின் மீது
(St. Augustine at Canterbury) 1771ஆம் ஆண்டில் நடந்த விசாரணையில் ஒரு கிராமத்தில் மட்டும் அவருக்குக் கள்ள உறவினால் பிறந்த 17 குழந்தைகள் இருந்ததாகத் தெரியவந்தது.(70).

4. ஸ்பெயின் நாட்டில் தூயபெலேயோ (St. Pelayo) மடத்துத் தலைவருக்கு எழுபது காமக்கிழத்திகள் இருந்தனர் என்று 1130ஆம் ஆண்டில் அத்தாட்சியுடன் நிரூபிக்கப்பெற்றுள்ளது.(71)

தஞ்சை
பெ. மருதவாணன்

 

5. லீஜ் எனும் இடத்தில் பணியாற்றிய மூன்றாவது ஹென்றி எனும் மதகுருவுக்கு (Hendry III Bishop of Liege) கள்ள உறவினால் ஏற்பட்ட 65 குழந்தைகள் இருந்தனவென்பதற்காக 1274ஆம் ஆண்டில் அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.(71)

6. கன்னிமாடங்கள் (Nunneries) பொது மகளிர் மனைகளாக (Brothels) இருந்தனவென்றும், அவற்றில் குழந்தைக் கொலைகள் (Infanticides) அதிகமாக நடந்தனவென்றும், மணவுறவில்லாமல் சமயகுருமார்கள் பாலியல் உறவுகொண்டு ஒழுகியதால் தாய்மார்கள் சகோதரிகளுடனும் கூட அவர்கள் வாழ அனுமதிக்கப்படவில்லை என்றும் இடைக்கால எழுத்தாளர்கள் குறித்துள்ளனர். (71)

7. கிறிஸ்துவ சமய சீர்திருத்த இயக்கம் (Reformation) தோன்றுவதற்குச் சிறிது காலத்துக்கு முன்னர் பாவமன்னிப்புக் கோரும் இடங்களே விபசாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டன என்று அடிக்கடி குற்றங்கள் சாட்டப்பெற்றன. (72).

8. அமெரிக்கா முழுவதிலுமே மணமாகி மிகவும் உயரிய கவுரவத்துடன் வாழும் பெண்களில் பலர் மணம் செய்வதற்கு முன்னர் பல காதலர்களுடன் பாலியல் உறவு அனுபவம் பெற்றவர்களாகவே இருக்கின்றனர். (அத்தியாயம் 12, சோதனைத் திருமணம் பக்கம் 173)

9. பண்டைய உலகில் புனித விபசாரம் என்னும் பழக்கமும் பரவியிருந்தது. சில இடங்களில் நல்ல பெரிய வீட்டுப் பெண்களும் கோயிலுக்குச் சென்று அங்கு கோயில் பூசாரியுடனோ அல்லது வேறு அந்நியருடனோ பாலியல் உறவு கொண்டனர். வேறு சில இடங்களில் பெண் பூசாரிகளே புனிதமான விபசாரிகளாக இருந்தனர். இவ்வாறான பழக்கங்கள் அநேகமாக தெய்வங்களின் உதவியால் பெண்கள் கருவுறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியிலிருந்து எழுந்தனவாயிருக்கலாம். (அத்தியாயம் 4, குறி வழிபாடு, துறவறம், பாவம் பற்றிய விவரங்கள். பக்கம் 39)

ஆ) (மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒழுக்கக்கேடர்கள் போன்ற பலரும் சமுதாயத்தில் மதிப்புக் குறையாமல் கவுரவத்தோடு உலாவரும்போது) ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராது உணர்ச்சி வசப்பட்டு சூழ்நிலை காரணமாக ஒழுக்கம் தவற நேர்ந்த கணவனோ, மனைவியோ யாராயினும் அதனைப் பொருட்படுத்தாமல், பொறுத்துக்கொண்டு புறந்தள்ளி ஏன் மணவாழ்க்கையை இனிதே தொடரக்கூடாது எனும் கருத்தை ரசல் அவர்கள் முன் வைக்கிறார்.

பெர்ட்ரண்ட் ரசல்

இதுபற்றி அவர் தனது திருமணமும் ஒழுக்கமும் எனும் நூலின் 16ஆம் அத்தியாயத்தில் மணவிலக்கு என்ற தலைப்பில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஒழுக்கம் தவறுதல்(Adultery) மாத்திரம் மணவிலக்குப் பெற காரணமாயிருக்கக் கூடாது என்பதே எனது கருத்து. தன்னடக்கக் கட்டுப்பாடுகளாலும் ஒழுக்க உணர்வினாலும், ஒழுக்கக் கேட்டுக்கு மக்கள் இரையாகாமலிருந்தாலொழிய, மற்றபடி வாழ்நாட்களில் எப்போதாவது உணர்ச்சி மிகுதியால் ஒழுக்கம் தவற வேண்டிவரும். ஆனால், அத்தகைய தூண்டுகையுணர்ச்சிகள் எப்போதாவது ஏற்பட்டுவிட்டால் (அதனாலேயே) மணவாழ்க்கையின் நோக்கம் நிறைவேறாமல் (சிதைந்து) போய்விட்டதென்று சொல்வதற்கில்லை.

அப்போதும் கணவன் மனைவியருக்கிடையே அன்பு இருக்கும். தம் இருவரையும் பிணைக்கும் மணவாழ்வு தொடர்ந்து நீடிக்கட்டுமென்று அவர்கள் இருவருக்குமே விருப்பமிருக்கும். இந்த…. ஒரு விஷயத்திற்காக கணவன் – மனைவி இருவரும் வீண் பொறாமையுணர்ச்சியால் உந்தப்பட்டு சோகமும் கோபமும் கலந்த வெறியாட்டத்திற்கு ஆளாவது அவசியமில்லையென்று கருதினார் களாயின. அத்தகைய இடையிடையே ஏற்படும் விருப்பார்வங்கள் உண்மையாகவே அவர்களுடைய மகிழ்ச்சிக்குத் தடையாயிருக்க முடியாது… இருவரிடையே உள்ள அன்பு குலையாமலிருக்கும்போது இதுபோன்றவற்றைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறு தற்காலிக விருப்பார்வம் ஏற்படுவது சகஜமே. ஒழுக்கம் தவறுதல் சம்பந்தமான உளவியல் பற்றிய உண்மை, மரபொழுக்க முறையைப் பொய்யாக்கிவிட்டது. வேண்டுமென்றே ஒரு கணவன் தன் மனைவியைக் காட்டிலும், வேறொருத்தியை அதிகமாக நேசித்தாலும் ஒரு மனைவி தன் கணவனைக் காட்டிலும் வேறொருவனை அதிகமாக நேசித்தாலும் (மட்டுமே) ஒழுக்கம் தவறுதல் மணவிலக்குக்குச் சரியான காரணமாகும்.

(251-252) (Adultery in itself should not, to my mind be a ground of divorce. Unless people are restrained by inihibitions or strong moral scruples it is very unlikely that they will go through life without occasionally having strong impulses to adultery; But such impulses, do not by any means necessarily imply that the marriage no longer serves its purpose. There may still be ardent affection between husband and wife, and every desire that the marriage should continue… Imfidelity in such circumstance ought to form no barrier whatever to subsequent happiness, and infact it does not, where the husband and wife do not consider it necessary to indulge in melodramatic orgies of Jealousy. We may go further and say that each party should be able to put up with such temporary fancies as are always liable to occur, provided the underlying affection remains intact. The psychology of adultery has been falsified by conventional morals… adultery therefore is no ground for divorce, except when it innolves a deliberate Preference for another person, on the whole to the husband or the wife as the case may be. Marriage and Morals. Chapter XVI Divorce. Pages 230-231)

2. பாரத தேசம் என்றும், புண்ணிய பூமி என்றும் பார்ப்பனியம் கொண்டாடும் இந்த நாட்டில் மிகவும் பிரமாதப்படுத்திப் பேசப்படும் கற்பு எனும் பதிவிரதாதர்மம் என்பது சிறிது காலத்துக்கு முன்பு வரை எப்படி சந்தி சிரித்தது என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் தனது ‘பெண் ஏன் அடிமையானாள்?’ எனும் நூலில் இப்படித் தோலுரித்துக் காட்டுகிறார்:

1. விபசாரம் (கற்பின்மை) என்பது ஒருவனுடைய பாத்தியதைக்கு ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப் பாட்டிற்கு மாத்திரம் விரோதமே தவிர, உண்மையான ஒழுக்கத்திற்கு விரோதமல்ல என்பதற்கு மற்றொரு உதாரணம் கூறுவோம்:-
மலையாள நாட்டில் இரண்டு மூன்று ஆண்கள் ஒரு பெண்ணை மனைவியாக ஏற்படுத்திக்கொள்ளுகின்ற வழக்கம் உண்டு. ஆனால், அந்தப் பெண் மேற்கண்ட இரண்டு மூன்று புருஷர்களைத் தவிர மற்ற ஆண்களிடம் அதுவும் தங்களுக்கு மனைவி யாயிருக்கும் காலத்தில் பிற ஆண்களிடம் சம்பந்தம் வைத்துக்கொண்டால் மாத்திரம்தான், அதை விபசாரமாகக் கருதி சில சம்பவங்களில் கொலைகள்கூட நடக்கின்றன.

2. மற்றும் சில வகுப்புகளில் தங்கள் இனத்தார் தவிர மற்ற இனத்தாரிடம் சாவகாசம் செய்தால் மாத்திரம் விபசாரமாய்க் கருதப்படுகிறது.
3. ஆகவே, இவைகளையெல்லாம் கவனித்துப்பார்த்தால் விபசாரம் (கற்பின்மை) என்பது ஒரு குறிப்பிட்ட கொள்கைமீது பொதுவான ஒழுக்கக்குறைவு என்கின்ற தத்துவத்தில் எப்போதும் பழக்கத்தில், அமலில் இல்லையென்பது விளங்கும் (அத்தியாயம் 6 விபசாரம்)

ஆ) பெண்ணடிமைத்தனத்திற்கு மதமோ, சட்டமோ (ஆண்களோ) மட்டும் காரணமல்ல வென்றும் பெண்களும் ஒரு காரணம் என்பதையும் தந்தை பெரியார் அவர்கள் அதே நூலில் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்.

“இந்த நிலை (அதாவது பெண்ணின் அடிமை நிலை) சட்டத்தாலும் மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற்கில்லாமல் பெண் சமூகமும் ஒப்புக்கொண்டு இந்நிலைக்கு உதவி புரிந்து வருவதினாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்லவேண்டும்.

அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த ஜாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுக்கவும், விலக்கவும் முந்துகின்றார்களோ அது போலவே பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துகளென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள்” (அத்தியாயம் ஒன்று. கற்பு)

இ) பெண்கள், பிறவியிலேயே கடவுளால் கற்பிழந்தவளாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறும் இந்து தர்ம சாஸ்திரங்களின் யோக்கியதையைத் தந்தை பெரியார் இங்கு அம்பலப்படுத்துகிறார்.

1. பெண்கள் விஷயமாய் இந்து மதம் சொல்லுவதென்னவென்றால், கடவுள் பெண்களைப் பிறவியிலேயே விபசாரிகளாகப் படைத்துவிட்டார் என்பது ஆகச் சொல்லுகின்றதுடன், அதனாலேயே பெண்கள் எந்தச் சமயத்திலும் சுதந்திரமாய் இருக்கவிடக்கூடாதென்றும், குழந்தைப் பருவத்தில் தகப்பனுக்குக் கீழும், வயோதிகப் பருவத்தில் (தாம் பெற்ற) பிள்ளைகளுக்குக் கீழும் பெண்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சொல்லுகிறது.

2. பெண்கள், ஆண்களும் மறைவான இடமும் இருளும் இல்லாவிட்டால்தான் பதிவிரதைகளாக இருக்க முடியும் என்று அருந்ததியும், துரோபதையும் சொல்லி தெய்வீகத் தன்மையில் மெய்ப்பித்துக் காட்டியதாகவும் இந்துமத சாஸ்திரங்களும் புராணங்களும் சொல்லுகின்றன.

(அத்தியாயம் 10 பெண்கள் விடுதலைக்கு “ஆண்மை” அழியவேண்டும்)

– தொடரும்