பெர்ட்ரண்ட் ரசல் – பெரியார் சிந்தனைகள் ஒரு கண்ணோட்டம்…

2024 அக்டோபர் 16-30 2024 கட்டுரைகள்

சென்ற இதழ் தொடர்ச்சி…

மனிதாபிமானமே வாழ்வின் குறிக்கோள்

அ) பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் உலகின் தலைசிறந்த மனிதாபிமானக் கோட்பாட்டாளர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கருத்துக் கருவூலமாக விளங்கும், ரசல் அவர்களின் எண்பதுக்கும் மேற்பட்ட படைப்புகள் உலகப் புகழ் பெற்றவை ஆகும். ரசலின் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடுள்ள அறிவியல் மேதை ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் அவர்களின் கூற்று இது: “ரசலின் படைப்புகளைப் படித்தறிய நான் செலவிட்ட மணிக்கணக்கான நேரங்கள் மகிழ்ச்சிக்குரியவை” (“I owe innumerable happy hours to the reading of Russell’s works.” -Reminiscent of socrates, Article by Dr. J.t.cornelius. Bertrand Russell birth Centenary souvenir. Published by Indian Rationalist Association 1972. Page. 7)

ஆ) ரசலின் படைப்புகளில் அவரது தன் வரலாற்று நூல் (Autobiography) முக்கிய இடம் வகிக்கிறது. அவரது தன் வரலாறு மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. (தொகுதி ஒன்று 1872-1914. தொகுதி இரண்டு 1914-1944. தொகுதி மூன்று 1944-1969) அந்த தன் வரலாற்றின் முன்னுரையே (Prologue) அவரது மனித இனப் பற்றினைப் பறை சாற்றுவதாக அமைந்துள்ளது. அந்த முன்னுரை கீழ்க்கண்ட வாசகங்களுடன் தொடங்குகிறது.
“எனது வாழ்க் கையில் என்னை நெறிப்படுத்தி நடத் திச் சென்றவை கீழ்க்கண்ட மூன்று (உன்னத) உணர்ச்சிகளே ஆகும். அவை எளிமையானவை என்றாலும் வலிமையானவை. என்னைப் பெரிதும் ஆட்கொண்டவை.

1. அன்பு காட்டுவதில் பெருவிருப்பு.

2. அறிவு தேடலில் ஈடுபாடு.

3. மனித இனம் படும் துன்பங்களைக் கண்டு தாங்க இயலாது எழும் பேரிரக்கம்.” (The Prologue to Bertrand Russell’s Autobiography begins with these words: “Three passions simple but overwhelmingly strong have governed my life. The longing for love, the search for knowledge, and unbearable pity for the suffering of mankind.” The sage of common sense. Article by Vasantha surya. Page 13. Bertrand Russell birth Centenary Souvenir published by Indian Rationalist Association 1972),

தஞ்சை
பெ. மருதவாணன்

இ) மனித இனத்தின் மீது அன்பு பாராட்டி, அறிவு கொளுத்தும் நோக்கில், நாடெங்கும் சுழன்று உலவிட பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டதும், மக்கள் படும் துன்பங்களுக்குக் காரணம் பேத நிலையே என உணர்ந்து, அதனை அகற்றுவதற்காக மனிதாபிமான அடிப்படையில் வாழ்நாளெல்லாம் பேசியதும் எழுதியதும், போராடியதும் தொண்டு செய்துமே, தந்தை பெரியார் அவர்களை ஓர், உலக மானுடம் தழுவிய தலைவராக உயர்த்தின என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் மனிதப் பற்றின் அடிப்படையில் அமைந்த தனது தொண்டினைக் குறித்து அவர் வெளியிட்ட கருத்துகளில் ஒரு சிலவற்றை இங்குக் காண்போம்:-

1. “நான் ஒரு பகுத்தறிவுவாதி. நான் ஒரு பகுத்தறிவு வாதி மட்டுமல்லாமல் நாட்டு மக்களிடையே நிலவிவரும் (மூட) நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்ற சிந்தனைவாதி ஆனதால், எனக்கு மதம், கடவுள், புராணப் பற்றோடு, நாட்டுப் பற்று, மொழிப் பற்று, இலக்கண இலக்கியப் பற்று கிடையாது. மனிதப் பற்று, சமுதாயப் பற்று ஒன்றுதான் எனக்குண்டு. அந்தச் சமுதாய இழிவு ஒழிய, மானமற்ற இழிநிலை போகவுமே நான் தொண்டாற்றி வருகிறேன். இதன்மூலம் நான் எதிர்பார்ப்பதெல்லாம் நம் சமுதாய மக்கள், மற்ற உலக மக்களைப் போல இழிவற்று மானத்தோடு அறிவோடு நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான்.”
(‘விடுதலை’ 25.12.2015 பக்கம் 2)

2. ”மக்கள் உலகம் முழுதும் ஒன்றுபட வேண்டும். மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதியில்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்திலே பொறாமை, வஞ்சகம், துவேஷம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேடவேண்டும். இதுதான் எனது ஆசை.”
(‘குடி அரசு’ 7.8.1938)

3. “ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறது என்ற தன்மை இருக்கிற வரையிலும்,
ஒருவன் தினம் ஒரு வேளை கஞ்சிக்கு வழியின்றி பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு வயிற்றைத் தடவிக்கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிறதுமான தன்மை இருக்கிற வரை
யிலும், ஒருவன் இடுப்புக்கு வேஷ்டி இல்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேஷ்டி போட்டுக்கொண்டு உல்லாசமாகத் திரிவதான தன்மை இருக்கிற வரையிலும், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுவதையும் தங்கள் சுயவாழ்வுக்கே என்று எண்ணிக்கொண்டிருக்கிற வரையிலும், (எனது)சுயமரியாதை இயக்கம் இருந்துதான் தீரும். மேற்கண்ட தன்மைகள் ஒழிகிற வரையில் இவ்வியக்கத்தையும் ஒழிக்க யாராலும் முடியாது.
(‘குடிஅரசு’ 1.6.1930)

(தொடரும்)