மருத்துவர்
சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர்
மனம் குறித்த பல்வேறு அடிப்படைத் தகவல்களைப் பற்றிப் பார்த்தோம். அதே போலவே மனநலம் என்பது குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு மனநலமின்மைகள் குறித்தும் சில புரிதல்களுக்கு வந்திருக்கிறோம். இன்றைய காலத்தில் மனநோய்கள் அல்ல, மனநலமின்மைகளே அறைகூவல் விடுவனவாக இருக்கின்றன, மிக எளிமையாகச் சரி செய்து கொள்ளக்கூடிய மனநலப் பிரச்சினைகள் கூட, மனம் மீதான எதிர்மறையான பார்வையின் காரணமாகப் புறக்கணிக்கப்படுகின்றன. அதன் விபரீதமான விளைவுகளை அண்மைக் காலங்களில் அதிகமாகப் பார்க்கிறோம்.
மனநோய் என்றால் என்ன? எத்தனை விதமான மனநோய்கள் இருக்கின்றன? மனநோய்கள் வருவதற்கான காரணங்கள் யாவை? மனநோய்களுக்கான தீர்வுகள் என்ன? நவீன நரம்பியல் மருத்துவ வளர்ச்சியின் விளைவாக மனநலத்துறைக்கு விளைந்த நன்மைகள் எவை? என்பன குறித்தெல்லாம் இனி பார்க்கலாம்.
மனதின் மூன்று பரிமாணங்களான
• சிந்தனைகள்
• உணர்வுகள்
• அறிவாற்றல்
இவற்றின் சமநிலை பாதிக்கப்படும் போது அது அந்தத் தனிப்பட்ட நபரின் நடவடிக்கைகளைப் பாதிக்கும். பாதிப்படைந்த ஒருவரின் நடவடிக்கைகள் அவரையோ அல்லது அவரைச் சுற்றி உள்ளவர்களையோ தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் பாதித்தால் அவரின் மனம் நோய்மை அடைந்திருக்கிறது என்று பொருள்.
உதாரணத்திற்கு, மனச்சோர்வு (Depression) என்ற மனநோயை எடுத்துக்கொள்வோம், இதில் மனதின் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கும். இதன் விளைவாக அவரின் மனம் முழுவதும் கவலையும், சோர்வும் ஆட்கொண்டிருக்கும். அவரைச் சுற்றி என்ன நடந்தாலும் அதை அவரால் முழுமையாக உணர முடியாது, மகிழ்ச்சிகரமான நிகழ்வு நடந்தால் கூட அந்த மகிழ்ச்சியை அவரால் உணர முடியாது, அவரது எண்ணங்கள் அனைத்தும் எதிர்மறையாகவும், நம்பிக்கையற்றதாகவும் இருக்கும், இந்த மன நிலையில் அவர் எடுக்கக்கூடிய முடிவுகள் அனைத்தும் விபரீதமானதாகவும், தெளிவற்றதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும். இந்த மனநிலையால் அவரும் அவரைச் சார்ந்தவர்களும் மிகவும் பாதிப்படைவார்கள், இந்த நிலை இரண்டு வாரங்களுக்கு மேலாக நீடிக்குமேயானால் அவரது மனம் நோய்மையுற்றிருக்கிறது என்று பொருள்.
மனநோய் என்பது இதுதான். ஒருவரின் உணர்வுகளோ, எண்ணங்களோ, அறிவாற்றலோ பல்வேறு காரணங்களால் பாதிப்படையும் போது, அது அந்தத் தனிப்பட்ட நபரின் கட்டுப்பாட்டை மீறியும், சூழலுக்கு ஒவ்வாமலும், மிதமிஞ்சியும் அவரின் பல்வேறு நடவடிக்கைகளில் வெளிப்படும். இந்த வெளிப்பாடுகளைச் சரியாகப் புரிந்து, நோய்மையின் தன்மையைக் கண்டறிந்து, அதற்கு முறையான சிகிச்சையை அளிப்பதன் மூலம் அந்த மனநோயைக் குணப்படுத்த முடியும். எந்த வகை மனநோய் என்பதைப் பொறுத்து அது குணமாக எவ்வளவு காலம் ஆகும் என்று சொல்ல முடியும். பெரும்பாலான மனநோய்கள் மிக எளிதில், விரைவில், முழுமையாகக் குணமாகக்கூடியவை. சில தீவிர மனநோய்களுக்கு மட்டும் நீண்ட காலம் சிகிச்சையளிக்க வேண்டியிருக்கும். ஆனால் அவை மிக மிக அரிதானவை.
முந்தைய காலங்களில் நாம் அதிகமாகப் பார்த்த தீவிரமான மனநோய்கள் எல்லாம் நவீன மருத்துவ அறிவியல் வளர்ச்சியின் காரணமாகவும், மிக விரைவாகவே சிகிச்சையளிக்கப்படுவதாலும் இப்போது மிக அரிதானவையாகிவிட்டன. இன்றைய காலங்களில் பெரும்பாலான மனநோய்கள் எல்லாம் மிகவும் மிதமானவை, எளிதாகக் குணப்படுத்தக்கூடியவை, முறையான சிகிச்சைகளினால் முழுமையாகச் சரியாகக்கூடியவை.
மனச்சிதைவு, மூளை வளர்ச்சியின்மை போன்ற நோய்களை எல்லாம் இப்போது பார்ப்பதே அரிது.அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களாலும், சிக்கல்களாலும், நெருக்கடிகளாலும் உருவாகக் கூடிய மனவுளைச்சலும், மனச்சோர்வும், மனப்
பதட்டமுமே இன்றைய காலங்களில் மிக அதிகமாக இருக்கின்றன. அதுவும் இளைய தலைமுறையினரிடம் இந்த மனநலப் பிரச்சினைகள் அதிகளவில் இருக்கின்றன. அதுவே அவர்களின் விபரீதமான செயல்களுக்கும், போதை, தற்கொலை, அதீத டிஜிட்டல் பயன்பாடு போன்ற ஆபத்தான நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருக்கின்றன. அதனால் மனநோய் என்றாலே பைத்தியம், சுய நினைவு இருக்காது, சுத்தமாக இருக்க மாட்டார்கள், ஆபத்தானவர் களாக இருப்பார்கள் என்று நினைப்பதெல்லாம் பழங்கால மனப்பான்மை. அப்படியெல்லாம் இப்போது எந்த மனநோய்களும் இல்லை.
இன்றைய சூழலில் மனநோய்கள் என்பவை யாருக்கோ புத்தி பேதலிப் பினால் வரக்கூடிய ஒன்றல்ல, நம் எல்லோருக்கும் நமது அன்றாட வாழ்வின் சுமையால் எப்போது வேண்டுமானாலும் வரக்கூடியவையே. அது முந்தையக் காலங்களைப் போல ஆபத்தான ஒன்றாகவோ, சரி செய்ய முடியாத ஒன்றாகவோ, புரிந்து கொள்ள முடியாததாகவோ இன்று இல்லை. மிக எளிமையானதாகவும், உடல், உளவியல், சமூகம் சார்ந்ததாகவுமே இருக்கிறது. அதைச் சரி செய்வதும் சுலபம். சரி செய்த மனநலப்
பிரச்சினைகள் திரும்ப வருவதும் இயல்பானதே!.
கேள்வி :
டியர் டாக்டர்,
“நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி” என்றால் என்ன? அந்தப் பர்சனாலிட்டியைக் கொண்டவர்களுடன் நாம் இணைந்து வாழ முடியுமா? அவர்களோடு இருப்பது நம்மை எந்த வகையிலாவது பாதிக்குமா?
– சுபா, சென்னை
பதில் :
பர்சனாலிட்டி என்றால் தமிழில் ‘ஆளுமை’ எனச் சொல்லலாம். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆளுமை இருக்கும். அதாவது நமக்கிருக்கும் பண்புகளின் தொகுப்புதான் ஆளுமை. நமது எண்ணங்கள், சிந்தனைகள், மதிப்பீடுகள், பழகும் முறைகள், விருப்பங்கள், வெறுப்புகள், அணுகுமுறைகள் என அத்தனையிலும் நமது ஆளுமைப் பண்புகளே வெளிப்படும். ஆளுமைப் பண்புகள் என்பவை நமது மரபணுவில் உள்ளன. அதனால் நாம் யார் என்பதை நமது மரபணுக்களே தீர்மானிக்கின்றன.
நமது ஆளுமையின் பண்புகள் நம்மையோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களையோ தொடர்ச்சி யாகக் காயப்படுத்தினால் அதுவே ஆளுமைக் குறைபாடு (Personality Disorder) ஆகும்.
‘நார்சிசம்’ என்பது ஒருவகையான சுய மோகம். நார்சிசத்தின் ஏதேனும் சில பண்புகள் நம் எல்லோரிடமும் இருக்கும். முகநூலில் நமது பதிவுக்கு எத்தனை விருப்பக்குறிகள் வந்திருக்கின்றன என திரும்பத் திரும்பப் பார்ப்பது ஒரு நார்சிசப் பண்பே. எத்தனை விதமான பண்புகள் ஒருவரிடம் இருந்தாலும் அந்தப் பண்புகளை நமக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமானதாக மாற்றிக்கொள்வதே முதன்மையான, முக்கியமான பண்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நார்சிசம் என்னும் பண்பு முதன்மையாக மாறிப்போய் அதன் நிமித்தம் மற்றவர்களின் மீது எந்த வித மதிப்புகளும் இல்லாமல் தன்னைப் பற்றியே எப்போதும் சிந்தித்து, தன்னைப் பற்றியே எப்போதும் சிலாகித்துக்கொண்டு, ஒரு பரஸ்பர புரிதல்களும், அங்கீகாரங்களும் இல்லாமல் சுய மோகத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்தால் அது தான் நார்சிஸ்டிக் பர்சனாலிட்டி.
அவர்கள் மீதான ஒரு சிறு விமர்சனத்தைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்களுக்கு இந்தத் தற்புகழ்ச்சி இருக்கும். அது ஒரு திகட்டாதப் போதையாக இருக்கும். அதனால் மற்றவர்களோடு ஓர் இணக்கமான பிணைப்பையும் அவர்களால் எப்போதும் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. அவர்களின் பலவீனங்களை யாரேனும் சுட்டிக் காட்டி விட்டால் அவர்களின் மீது வெறுப்பையும், வன்மத்தையும் எந்த இரக்கமும் இல்லாமல் காட்டுவார்கள்.
பொதுவாகவே நார்சிஸ்டுகள் தங்களைப் பாராட்டுபவர்களை மட்டுமே தங்களைச் சுற்றி வைத்துக் கொள்வார்கள். ஏதேனும் சில சாதகங்களுக்காகப் பாராட்டுபவர்களும் அவர்கள் உடன் இருப்பார்கள். அந்தச் சாதகங்களுக்காகவே அவர்கள் நம்மைப் பாராட்டுகிறார்கள் என்பதைக் கூட உணராத வகையில்தான் நார்சிஸ்டுகள் இருப்பார்கள். நார்சிஸ்டுகளுடன் இணக்கமாக வாழ்வதற்கு ஒரே ஒரு நிபந்தனை தான் இருக்கிறது. அவர்களைச் சகித்துக் கொள்ளும் பொறுமை நமக்கு இருக்கவேண்டும். அவர்களிடம் இருந்து எந்த வித ஆழமான பிணைப்பையும், அங்கீகாரத்தையும் எதிர்பார்க்காமல் அவர்களை நம்மால் சகித்துக் கொள்ள முடியுமென்றால் நாம் அவர்களோடு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
(தொடரும்)