பா.ஜ.க. ஆட்சி நீடிக்காமல் செய்வது உடனடித் தேவை!

2024 ஆசிரியர் பதில்கள் செப்டம்பர் 16-30-2024
1. கே : ஒத்திசைவுப் பட்டியலில் கல்வியுள்ள நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை மாநிலங்கள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியுமா?
– ப.வேலுச்சாமி, தர்மபுரி.
ப : சட்டப்படி முடியாது. எதிர்க்கும் நம்மைப் பணிய வைக்க வேறு வேறு யுக்திகளை- நிர்ப்பந்தங்களைக் கையாளுகிறார்கள். தி.மு.க. அரசு, ‘கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’ என்று கேட்கும் அரசாகவே இருக்கும்; இருக்க வேண்டும்!
2. கே : கல்வித்துறையில் மட்டுமல்ல; எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் அதிகாரிகளாக, ஆசிரியர்களாக, காவல் அதிகாரிகளாக ஊடுருவியுள்ள நிலையில் இவர்களைக் கண்காணிக்க, கட்டாயமெனில் களையெடுக்க, இனி ஊடுருவாமல் தடுக்க அரசுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
– ச. பூபதி, பெரியபாளையம்.
ப : மக்களை ஆயத்தப்படுத்தி, மைனாரிட்டி பா.ஜ.க. அரசின் ஆட்சி காலம் நீடிக்காமல், புதிய மாற்றத்திற்கான விடியலை ஏற்படுத்த, மேலும் கட்டுப்பாட்டுடன் ஒத்தக் கருத்துள்ள கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம் – அவசரம்!
3. கே : தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் கல்வித்  தரம் தேசிய சராசரியைவிடக் கீழே போய்விட்டதாகக் கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவியின்  கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– கே. கோவிந்தன், தர்மபுரி.
ப: காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்தானே!
4. கே : பள்ளிகளில், அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை கொண்டாடுவது சட்டப்படி சரியா? சரியில்லையென்றால் இவற்றைத் தடுக்க அரசு என்ன செய்ய வேண்டும்?
– கே. சீனிவாசன், வாணியம்பாடி. 
ப: மதச்சார்பின்மைக் கூட்டணியில் பகுத்தறிவாளரின் திராவிட மாடல் ஆட்சி
தான் இப்போது நடைபெறும் தமிழ்நாடு  அரசு. கொள்கை நிலைப்பாட்டினை வற்புறுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் மத நிகழ்ச்சிக்கு இடமே தரக்கூடாது – அது எந்த மதவிழா, ஜாதி விழாவாக இருந்தாலும்!
5. கே  : அனைத்துத் துறையிலும் ஆர்.எஸ்.எஸ்.  ஊடுருவலைத் தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, செயல் திட்டங்களை வகுப்பீர்களா?
– க.பரமேஸ்வரன், பாளையங்கோட்டை. 
ப : முடிந்த அளவுக்குச் செய்வோம்! அது சரி; எல்லாமே நாம்தானா? மற்றவர்கள் பங்குதான் என்ன?
6. கே   : தொழில் தொடங்க உகந்த  மாநிலமாக சென்ற ஆண்டு 3ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு அத்தகுதியை இழந்துவிட்டதாக அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளது பற்றித் தங்கள் கருத்து என்ன?
– ஆர். ராதா, சிந்தாதிரிப்பேட்டை. 
ப: ஏற்புடையதல்ல; திட்டமிட்டுப் பரப்பப்படும் திரிபுவாதப் புளுகு இது !
7. கே: மத்திய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்புக் குழுவை ஒன்றிய அரசு திடீரென கலைத்திருப்பதன் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தாமதப்படுத்த பா.ஜ.க. அரசு முயல்கிறது என்ற காங்கிரசின் குற்றச்சாட்டுக் குறித்து தங்கள் கருத்து என்ன?
– வெ. கோபால், அருப்புக்கோட்டை. 
ப: காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு சரியானதே!
8. கே : கொல்கத்தா மருத்துவப் பெண் வல்லுறவு படுகொலையை ஒட்டி மேற்குவங்க அரசு மரணதண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றியுள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– ப. இளங்கோவன், குடியாத்தம்.
ப : வேகம் வரவேற்கத்தக்கது. ஆனால், விவேகம் இதில் குறைவானதே! நடைமுறையில் இது வருமா என்பது கேள்விக்குறி !