அண்மைய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன் மிகக்குறைந்த வயதினர் மரணங்களும் அதிகரித்து வருவதைக் காண்கிறோம்.
50 வயதினர் மாரடைப்பினால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதாவது நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு, பக்கவாதம், மாரடைப்பு போன்ற தொற்றா நோய்கள் அதிகரித்துள்ளதை நாம் காண்கிறோம்.
அதேசமயம் காச நோய், மலேரியா அம்மைநோய், காலரா போன்ற தொற்றும் நோய்கள் பெருமளவு குறைந்துள்ளதையும், அவை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதையும் நாம் பார்க்கிறோம். ஏன் இந்த மாற்றம்?
இவையனைத்திற்கும் காரணம் கடந்த 40, 50 ஆண்டுகளில் மக்களின் வாழ்நிலையில் அதாவது மக்களின் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி ஒரு முக்கிய காரணமாகும். ஆம், மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான முதன்மையான காரணங்களில் ஒன்றாக அவர்களது வாழ் (வர்க்க/ ஜாதி) நிலையும் உள்ளது. எடுத்துக்காட்டாக ஏழை குடும்பத்தினரைத் தாக்கும் நோய்கள் வேறாகவும் வசதியானவர்களின் குடும்பத்தினரைத் தாக்கும் நோய்கள் வேறானவையாகவும் உள்ளன.
போதிய சத்துக் குறைவினால் ஏற்படக்கூடிய நோய்களான ரத்த சோகை, காசம், வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியின்மை, எடைக் குறைவு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைவினால் வரக்கூடிய நோய்கள், சுகாதாரமற்ற சூழலால் வரக்கூடிய தோல் நோய்கள், பல் நோய்கள் போன்றவை ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களிடம் குறிப்பாக குழந்தைகளிடம்தான் காணப்படுகின்றன. அதேசமயம் உயர்ஜாதி பணக்காரர்களுக்கு உடல் உழைப்பில் இருந்து முற்றிலும் விடுபட்டதன் காரணமாக உடல் பருமன் (obesity), கெட்டக் கொழுப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, செரிமானக் கோளாறு போன்ற தொற்றா நோய்களின் தாக்குதலுக்கு அதிகமாக ஆளாகின்றனர்.
ஆம், ஒருகாலத்தில் நடுத்தர வர்க்கத்தினர் மருத்துவரிடம் சென்று எனது குழந்தை உடல் தேறவே மாட்டேன்கிறது; ஏதாவது சத்து டானிக் கொடுங்கள் என்று கேட்ட நிலை மாறி இன்று குழந்தைகளின் அதீத உடல் பருமனைக் குறைக்க இலட்சக்கணக்கில் பணம் செலவழிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளதைக் காண்கிறோம்.
அதே போல வாகன விபத்துகளில் இளைஞர்கள் பாதிக்கப்படுவதும் பலியாவதும் அதிகரித்துள்ளது. இதற்கு நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க மக்களின் பொருளாதார வசதி கூடியிருப்பதும் ஒரு முதன்மைக் காரணமாக உள்ளது. நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிகத்திறன் வாய்ந்த இருசக்கர வாகனங்களை இரண்டு, மூன்று இலட்ச ரூபாய் செலவழித்து வாங்கிக் கொடுக்கும் போக்கு இன்று அதிகரித்துள்ளதும் இதற்குக் காரணமாகும்.
முன்பும் இது போன்ற மரணங்கள் ஏற்பட்டன. அவற்றிற்கு போதிய மருத்துவ வசதியின்மை, வறுமை, மக்களின் அறியாமை, மூடநம்பிக்கை போன்றவை காரணங்களாக இருந்தன. ஆனால் இன்று அரசு, தனியார் மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் பிற மாநிலங்களை விடவும் கூடுதலாக இருக்கின்றன. பெரும்பாலான நோய்களுக்கு மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. தற்போது வீட்டில் மகப்பேறு பார்ப்பது ஒழிந்து மகப்பேறு மருத்துவமனைகளுக்குச் செல்வதால் மகப்பேறு காலத்தில் தாய் – சேய் மரணம் பெருமளவு குறைந்துள்ளது. விஷக்கடிகளுக்கு ஆளாகி மரணம் நிகழ்வதும் குறைந்துள்ளது.
ஆக, இப்போதைய நோய்களுக்கும் இளம் வயது மரணங்களுக்குமான காரணங்கள் என்பவை புற சமூகக் காரணிகளை விட அகக் காரணிகளாக மாறியிருப்பதைக் காண்கிறோம். இதில் ஒன்றை மட்டும் விதிவிலக்காகக் கொள்ள வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள நவீனப் போக்குவரத்து வசதி அதிகரிப்பின் காரணமாக உலகம் சுருங்கிவிட்டதால் ஒரு நாட்டைத் தாக்கும் ஒரு நோய்த் தொற்று (கொரானா, ஜிகா போன்ற வைரஸ் காய்ச்சல்கள்) அடுத்த சில மணித்துளிகளிலேயே அருகே இருக்கும் மற்ற நாடுகளுக்கும் பரவி விடுகிறது. இதற்கும் கூட மக்களின் வாழ்க்கைத்தரம் கூடியிருப்பதும் வெளிநாட்டுப் பயணங்கள் – தொடர்புகள் அதிகரித்து இருப்பதுமே காரணங்களாகும்.
எனவே, இன்று மக்களின் வாழ்க்கை முறையில், பழக்க வழக்கங்களில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.
ஆதி மனிதர்கள் ஒரு வேளை உணவுக்காக ஒரு நாள் முழுதும் ஓடி ஓடி, உழைத்தனர். அவர்கள் எப்போது உற்பத்திக் கருவியைக் கண்டு பிடித்தனரோ அன்றிலிருந்து படிப்படியாக மனிதர்களின் உழைப்பு நேரம் குறைந்து ஓய்வு நேரம் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இன்று கருவிகள் பயன்படுத்தப்படாத எந்த ஒரு வேலையும் தொழிலும் எங்குமே கிடையாது. ஆகவே, கடின உழைப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது. அது சரியானதுமாகும்.
உடல் உழைப்பில் இருந்து முற்றிலும் விடுபட்டு மூளை உழைப்பில் ஈடுபட்டுச் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதற்கு இன்றைய புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகள் காரணமாக உள்ளன. இத்தகைய சூழலுக்கு ஏற்ற அறிவியல் வழிப்பட்ட ஒரு வாழ்க்கை முறையும், உணவு முறையும் பண்பாடும் இன்று அவசியத் தேவைகளாக உள்ளன. ஆனால் இங்கு இன்னும் பழைய வாழ்க்கை முறையும், உணவு முறையும், பண்பாடும் ஆதிக்கம் செய்து வருவதால் மனிதர்களின் நேரத்தையும், பொருளாதாரத்தையும் அவை உறிஞ்சி விடுகின்றன.
இன்றும் பழமைவாதச் சிந்தனை மக்களிடம் செல்வாக்குச் செலுத்துவதால், அரசு மருத்துவ
மனைகளோ அல்லது குறைந்தபட்சம் ஆரம்பச் சுகாதார நிலையங்களோ இல்லாத ஊரே இல்லை என்கிற நிலை தமிழ்நாட்டில் வந்த பிறகும் கூட அறிவியலுக்குப் புறம்பான மந்திரித்தல், தாயத்து கட்டுதல், பார்வை பார்த்தல் மட்டுமின்றி, நாட்டு மருத்துவம் மூலிகை மருத்துவம் போன்ற கடந்த பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நம்பிக்கை சார்ந்த மருத்துவங்களுக்கும் ஆட்பட்டு நோயை அதிகமாக்கி சிக்கலான நிலைக்கு வளர்த்துக் கொள்கின்றனர்.
இன்னும் படித்த முட்டாள்கள் சிலர் தங்கள் வீட்டிலேயே வைத்து மகப்பேறு பார்த்துக் கொள்கிறோம் என்கிற விஷப் பரீட்சையில் இன்று இறங்கி பெண்களின் உயிரோடு விளையாடுகின்றனர். ஆகவே, நமது திராவிட மாடல் அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை வளர்த்து வருவதற்கு நிகராக நமது மக்களிடம் அறிவியல் மனப்பான்மை உண்டாகச் செய்வதுடன், நவீனப் பண்பாட்டையும், உணவுப் பழக்கத்தையும், வாழ்க்கை முறை பற்றிய விழிப்புணர்வையும் உண்டாக்க வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது.