ஆரியப் பார்ப்பனர்களின் கலாச்சாரக் கூறுகளும், பார்ப்பனரல்லாத பிற மக்களின் பண்பாட்டுக் கூறுகளும் அடிப்படையில் வேறு வேறானவை. அதற்கான பல சான்றுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று பசுவைப் புனிதம் என்று போற்றுவது.
பசு மாடு பாப்பார மாடு, காளை மாடுதான் நம்ம மாடு என்று வழக்குரைஞர் அருள் மொழி அவர்கள் பேசிய காணொளி யூடியூப்பில் ரொம்ப பிரபலம். உண்மை என்ன? சற்று ஆராய்வோம்.
பசுமாட்டை ஏன் பார்ப்பனர்கள் போற்றினார்கள்? அடிப்படையில் ஆரியர்கள் ஒரு நாடோடிக் கூட்டத்தினர். கால்நடைகளை மேய்த்து வளர்ப்பது
தான் அவர்களின் முதன்மையான தொழில் ஆரம்பத்தில் அவர்கள் விவசாயத்தையோ, அது சார்ந்த வேறு தொழில்களையோ அறிந்திருக்கவில்லை.
விவசாயம் செய்வதற்கு வளமான நிலமும், நீர் வளமும் தேவை. அவ்வாறான சூழல் அவர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மத்திய ஆசியப் பகுதியில் இல்லை. கி.மு. 1500இல் இருந்து 600 வரை வேதகாலம் என்று கருதப்படுகிறது. அதற்கும் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதாவது கி.மு.2000 வாக்கில் இருந்து அவர்கள் வெவ்வேறு குழுக்களாக இடம்பெயர்ந்து வந்திருக்கின்றனர் என்பது ஆய்வாளர்கள் முடிவு.
விவசாயத்தை அறிந்திராத மக்களுக்கு கால்நடைகளே முக்கிய ஆதாரமான சொத்து என்று இருந்தவர்களுக்கு, அவற்றின் பெருக்கத்
திற்குக் காரணமாக இருக்கும் பசுக்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு பெரும் மந்தையில் இனப்பெருக்கத்திற்குத் தேவையான சில காளைகளைத் தவிர மற்றவற்றை அடித்து உண்ண வேண்டியதுதான். இவை தவிர, காளைகளால் எந்தப் பெரிய நன்மைகளும் இல்லை. ஆனால், பசுக்கள் அப்படி இல்லை.
அவற்றால் இனப்பெருக் கம் மட்டுமல்ல, பால், தயிர், நெய் என பல்வேறு உணவுப் பொருள்களும் கிடைக்கின்றன. எனவே,
ஆடு, மாடுகளை மட்டுமே நம்பி வாழும் நாடோடிக் கூட்டத்திற்கு பசு மாடுகள் மிக மிகத் தேவையானவை.
ஆனால், ஓர் இடத்தில் நிலையாகத் தங்கி வாழும் மக்களுக்கும் நீரைத் தேக்கி விவசாயம் செய்யத் தெரிந்த மக்களுக்கும் பசுமாட்டினால் கிடைக்கிற பயனைவிட காளை மாடுகளால் தான் கூடுதல் பயன்கள் கிடைக்கின்றன.
வண்டிகளை இழுக்கவும், ஏர் உழுவதற்கும், மனித உழைப்பைக் குறைத்து உற்பத்தியைப் பெருக்குவதற்கும் எருதுகள் பெரிதும் உதவி புரிகின்றன. ஆரியர்களின் வருகைக்கு முன்னரே இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் விவசாயத்தை அறிந்திருந்தனர். அதனால்தான் ஆரியர்களின் வருகைக்கும் முன்னரே கி.மு.3300 வாக்கில் தொடங்கி கி.மு.1300 வாக்கில் முடிவுற்றதாக அறியப்படும். சிந்துவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் நீர்மேலாண்மை கொண்ட நகர நாகரிகத்தைக் கட்டி எழுப்பியிருந்தனர்.
அங்குக் கிடைக்கும் பொருள்களில் காளையின் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் காளையின் முக்கியத்துவம் தெரிகிறது. இதை எளிதாகப் புரிந்துகொள்ள ஓர் உதாரணம் போதும் வீட்டில் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு குட்டிகள் தேவை இல்லை. எனவே, ஆண் நாய்களையே விரும்புகின்றனர்; வளர்க்கின்றனர். ஆனால், குட்டிகளை விற்றுப் பணம் சம்பாதிக்கும் தொழில் செய்பவருக்கு ஆண் நாய்கள் தேவை இல்லை. ஏனெனில், அவரது நோக்கம் வளர்ப்பது அல்ல; விற்பதுதான் எனவே, அவர் பெண் நாய்களை வைத்திருக்கிறார்.
இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் கால்நடைகளை மட்டுமே சொத்தாகக் கருதுகிற நாடோடிக் கூட்டத்திற்குப் பசுமாடுகள்தான் முக்கிய மானவை. ஆனால், நிலங்களைக் கையகப்படுத்தி விவசாயம் செய்யும் மக்களுக்கு, நிலங்களே முதன்மை
யான சொத்து. அதற்கு உறுதுணையாக இருக்கிற காளைமாடுகளே அவர்களுக்கு முக்கியமானவை. பசுமாடுகள் இரண்டாம் பட்சமானவைதாம்!
ஆனால், தேவைகள் கருதி ஒன்றைப் புனிதமென்றோ, மற்றொன்றை இழிவு என்றோ வேறுபடுத்தாத பார்ப்பனரல்லாத மக்கள் மாடுகளில்கூட இந்தப் பேதத்தைப் பாராட்டியதில்லை. ஆனால், மனிதன் முதல் மாடுகள் வரை எல்லாவற்றிலும் தரம் பிரித்து அதை மேல் – கீழ் என்று வகைப்படுத்தும் ஆரியப் பார்ப்பனர்கள் பசுமாட்டைப் புனிதமானது என்று கதை கட்டிவிட்டனர். இன்றும் கூட காளை மாடுகள் நமக்குப் புனிதமானவையல்ல. ஆனால், அவர்கள் பசுக்களைப் புனிதமென்று கொண்டாடுகின்றனர்.
நாம் காளைகளை விவசாயத் தேவைகளுக்காகப் போற்றுகிறோம். உணவுத் தேவைகளுக்காக அவற்றை உண்ணவும்கூட செய்கிறோம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்ற வீரத்தைப் பிரதிபலிக்கும் பண்பாட்டு விளையாட்டுகளும் நம்மிடமுண்டு. இன்று உழுவதற்கு டிராக்டர் விதைப்பு இயந்திரம் அறுவடை இயந்திரம் என விவசாயமே நவீனப்பட்டுவிட்டதால் காளைகளின் தேவை பெருமளவு குறைந்துவிட்டது. அதனால் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், ஆரியப் பார்ப்பனர்களுக்கு அப்படி இல்லை. என்னதான் வாழ்க்கை நவீன மயமானாலும் தங்கள் பண்டைய அடையாளமான பசுவையும் அதன் புனிதத்தையும் பாதுகாக்க பல்வேறு சடங்குகள் செய்துகொண்டே இருக்கின்றனர்.
பல லட்சங்கள் செலவு செய்து பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டிய வீட்டுக்குள் முதன் முதலில் பசுவைக் கொண்டுவந்து விட்டால்தான் சிறப்பாகுமென்று பார்ப்பன புரோகிதர்கள் சொல்கிறார்கள். அதனை நம்பி நம்மில் பலரும் அதைச் செய்கிறோம்.
பசு, காளை இவை இரண்டிலுமே அவர்களுக்கும் நமக்குமான அடிப்படை பண்பாட்டு வேறுபாடுகள் புதைந்து கிடக்கின்றன.
இதில் நாம் எருமை மாட்டை விட்டு விட்டோமே…! தமிழர் பண்பாட்டில் காளைகளை விடவும். எருமைகள் மிக மிக முக்கியமான விலங்குகள், அவை சங்க இலக்கியங்களில் வளத்தின் குறியீடாகப் பாடப்படுகின்றன. சங்க இலக்கியங்களைக் காணும்போது, அதில் எல்லா மக்களும் நிலத்தைச் சீர்படுத்தி விவசாயம் செய்தவர்கள் அல்ல. மருத நிலம் மட்டுமல்லாது வேறு நால்வகை நிலங்களும் இருந்திருக்கின்றன.
எல்லா நிலப்பரப்பிலும் காணப்படும் விலங்காக இருப்பது எருமை மாடுகள்தான். ஆம்பல் என்று சொல்லப்படும். அல்லி மலர்களையும், நீர் நிலைகளில் காணப்படும் எருமை மாடுகளையும் பாடாத அகத்திணைப் பாடல்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக அய்ங்குறுநூற்றில் எருமைப் பத்து என்னும் பத்து பாடல்கள் எருமை மாட்டையும் அது உள்ள சூழலின் சிறப்பினையும் சிறப்பித்துப் பாடப்பெற்றுள்ளன.
எருமையின் பெயரில் பல ஊர்கள் தமிழ்நாட்டிலும் தென் மாநிலங்களிலும் உள்ளன. சங்க இலக்கியத்தில் எருமையூரன் என்னும் மன்னனை, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வென்றதாக அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.
அய்.ஏ.எஸ். அதிகாரியும், ஆய்வாளருமான திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் “அணி நடை எருமை” என்று எருமை மாட்டின் சிறப்புகளையும், அவை தமிழர் பண்பாட்டின் அடையாளமாக எவ்வாறு திகழ்கிறது என்பதையும் சொல்கிறார்.
கூடுதலாக, எருமைகளைக் குறித்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாக்கியங்கள், அவற்றையும் நம்மையும் இழிவுபடுத்துவனவாகவே இருக்கின்றன என்று வருத்தப்படுகிறார்.
எப்போதிலிருந்து நாம் எருமை மாடுகளை இழிவுபடுத்தினோம்…? ஆரியக் கூட்டம் பசுக்களைப் புனிதம் என்று சொன்னபோதே அவர்கள் நுழைந்த இந்தியத் துணைக் கண்டத்தில் அவர்கள் கண்ட நீர் எருமைகளை இழிவாகக் கருதத் துவங்கிவிட்டனர்.
அது உருவத்தில் கரியதாக இருந்தது. அவர்களுக்குக் கூடுதல் அருவருப்பைக் கொடுத்திருக்கலாம். இங்குள்ள கருப்பு நிற மக்களையும் தங்களையும் பிரித்துக் காண்பிப்பதற்காக வருணக் கோட்பாட்டை உருவாக்கிய கூட்டமல்லவா…! மாட்டிலும் கூட தங்களது வருண பேதத்தைக் காட்டிவிட்டனர்.
அவற்றை காலன் அதாவது எமனின் வாகனம் என்றும், அதைக் காண்பதே அபசகுனம் என்றும் இழிவுபடுத்தி எழுதியதும், நடத்தியதும்தான் முதன்மையான காரணம். நாமும் இன்று அவர்களின் பழக்கத்தில் கருப்பு நிறத்தையும், எருமைகளையும் வெறுப்பவர்களாக மாறிப்போனோம்.
பண்டைய சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட தால், எருமை நமக்குப் புனிதமானது என்பதல்ல. காளைகளைத் தொன்று தொட்டு விவசாயத்திற்கும், ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளுக்கும் பயன்படுத்துவதால் அவை பசுவை விட உயர்ந்தது என்பதல்ல.
ஒன்று உயர்ந்தது; மற்றொன்று தாழ்ந்தது என்பதே ஒரு பார்ப்பனியக் கண்ணோட்டம்தான். அந்த உயரத்தில் பசுவை நாம் வைக்க வேண்டியதுமில்லை. இதர விலங்குகளை இழிவுபடுத்தவும் வேண்டியதில்லை.
இந்த அடிப்படையில்தான். ஆரியமும் திராவிடமும் பண்பாட்டில் மட்டுமல்ல, கருத்தோட்டத்திலும் வெவ்வேறானவை; முரண்பாடானவை.