காமலாபுரத்தில் பெரியார் சிலை திறப்பு – கி.வீரமணி
மருதூர் சிதம்பரம
மருதூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவிற்கு 1.10.2005 அன்று சென்ற நாம், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் அவர்களின் இல்லம் சென்று, அவருடைய துணைவியார் திருமதி. செண்பக இலக்குமி அவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம்.
பின்னர் அந்த வளாகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழுஉருவச் சிலையைத் திறந்து வைத்தோம்.அருகில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டையும் திறந்து வைத்து, கழகக் கொடியையும் ஏற்றினோம். திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலைக்கு சீரிய பகுத்தறிவாளரும் தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான மா.மீனாட்சிசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சிலைக்கு எதிரே உள்ள தெருவில் மறைந்த சிதம்பரம் பங்கேற்ற இயக்க நிகழ்ச்சிகள் அடங்கிய ஒளி(புகை)ப்பட வரலாற்றுத் தொகுப்பு கண்காட்சியாக அமைக்கப்பட்டு இருந்ததை அனைவரும் கண்டு வியந்தனர்.
மா.மீனாட்சி சுந்தரம்
பின்னர், பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் அவர்கள் இயக்கத்திற்கு ஆற்றிய பணி, அவரது கொள்கைப் பிடிப்பு போன்றவற்றை விளக்கி உரையாற்றினோம்.
கோடியக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டு கணினிகளை வழங்கினோம். இறுதியாக இராசி – கதிரவன் நன்றி கூறினார்.
மன்னார்குடியில் பட்டுக்கோட்டை திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் கைலை ஊமத்துரையின் பெரியார் இல்லத் திறப்பு விழா 1.10.2005 அன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. விழாவில் நாம் கலந்துகொண்டு புதிய இல்லத்தைத் திறந்து வைத்து உரையாற்றினோம்.
அப்போது “பெரியார் கொள்கையை ஒருவர் ஏற்றுக்கொண்டால் அவர்கள் வாழ்க்கையில் தாழமாட்டார்; வெற்றி பெற்றே தீருவார் என்பதற்கு இந்த விழாவே ஓர் உதாரணமாகும்” என பெரியார் கொள்கையின் பெருமையை எடுத்துக் கூறினோம். பின்னர் வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த கல்வெட்டைத் திறந்து வைத்தோம்.
சூரியக் கிரகணத்தின்போது உணவு உண்ணக்கூடாது என்ற மூட நம்பிக்கையை உடைத்தெறியும் வகையில் உணவு உண்ணும் நிகழ்ச்சி 3.10.2005 அன்று திருச்சி காஜாமலை பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் எமது தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அதிரடி அன்பழகன் அறிவியல் சார்ந்த கருத்துகளை விளக்கி உரையாற்றினார். டாக்டர் சோம. இளங்கோவன் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து மூட நம்பிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று பேசினார். பின்னர் நாம் சூரியக் கிரகணம் எதனால் ஏற்படுகிறது? சூரியக் கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாதா? என்பன போன்ற பல்வேறு மூட நம்பிக்கைகளைத் தோலுரிக்கும் வகையில் விளக்கி உரையாற்றினோம்.
தந்தை பெரியார் அவர்களிடத்தும் நமது இயக்கத்தின்பாலும் பேரன்பு கொண்ட வரான ஈரோடு பிராமணப் பெரிய அக்ரகாரம் டி.எம்.இஸ்மாயில் (வயது 71) அவர்கள் 5.10.2005 அன்று மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி இரங்கல் செய்தி அனுப்பி வைத்தோம்.
தர்மபுரி மாவட்டம் காமலாபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை திறப்பு விழா 8.10.2005 அன்று நடைபெற்றது. அதனை ஒட்டி ஊரே விழாக்கோலம்! எங்குப் பார்த்தாலும் வண்ணச் சர விளக்குகள், கழகக் கொடித் தோரணங்கள், வீடுகளில் வாசல்களில் ‘கடவுள் இல்லை’ என்று எழுத்துகளுடன் கூடிய கோலங்கள்! பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சி போல குதூகலத்துடன் காணப்பட்டனர்.
கருஞ்சட்டைக் காற்றே உள்ளே நுழையக்கூடாது என்கிற கட்டுப்பாடு விதிக்கப்பட்ட அந்த ஊரிலே பெரியவர்கள் உட்பட ‘பெரியார் வாழ்க!’ என்று முழக்கமிட்டதும் இளைஞர்கள், ‘கடவுள் இல்லை இல்லவே இல்லை’ என்று ஒலி முழக்கம் செய்ததும் ஒரு தலைகீழ் மாற்றம்!
ஊர் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பேரன் பேத்திகளோடு இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். சொந்தக்காரர்கள் எல்லாம் வெளியூர்களிலிருந்து விழாவைக் காண வந்திருந்தனர்.
விழாவில் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினோம். அப்போது,
“கட்டுப்பாடு மிக்க 50 கழகக் குடும்பங்கள் இந்த ஊரில் இருக்கின்றன. இவை இந்த ஊருக்கே ஒளிவிளக்குகள். அது ஒட்டு மொத்தமாக உள்ள 5,000 குடும்பங்களை விட வெகு சிறப்பானதாகும்.
அனைத்துக் கட்சியினரும் இந்த மேடையில் வீற்றிருப்பது மட்டுமல்லாமல் கட்சிகளைக் கடந்து ஊரே இந்த விழாவில் கூடியிருக்கிறது. தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும் தமிழர்களை இணைக்கக்கூடிய சக்திகள். பிளக்கக்கூடியவை அல்ல என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
எங்களுக்கு உறவு என்பது இரத்த சம்பந்தப்பட்டது அல்ல; கொள்கை சம்பந்தப்பட்டதாகும். அந்த உறவைத்தான் இங்கே காண்கிறோம்.
இந்தக் கிராமம் பெரியார் கிராமமாக உருவெடுத்து ஒரு வட்டார மாநாடாக இங்கே இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூடநம்பிக்கைகளிலிருந்து மக்கள் விடுபட வேண்டும். குழந்தைகளைக் கொடுப்பதுகூட பகவான் செயல் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். இது சரியா? சிந்திக்க வேண்டாமா?” என உரையாற்றினோம்.
விழா மேடையில் தருமபுரி மாவட்டம் பாடி மூக்கப்பட்டியைச் சேர்ந்த பூ. இராசகோபால்- சந்திரா ஆகியோரின் மகள் இரா.செல்வி மற்றும் காமலாபுரம் வே.குமார்- இரத்தினம்மாள் ஆகியோரின் செல்வன் கு.சரவணன் ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை நாம் நடத்தி வைத்தோம். இது ஒரு ஜாதி மறுப்பு- தாலி மறுப்புப் புரட்சித் திருமணமாகும்.
மேலும் விழா மேடையில் செல்வி – முத்து இணையினர் ஒரு புரட்சிகரமான கழகக் கடமையைச் செய்தனர். எமது முன்னிலையில் செல்வியின் கழுத்திலிருந்த அடிமைத்தளையான தாலியை அவரின் துணைவர் முத்து வெட்டி அகற்றினார். அப்போது எழுப்பிய பொது மக்களின் முழக்கம் விண்ணைப் பிளந்தது.
டாக்டர் ச.மீனாம்பாள் – இரா.ப.சந்திரகுமார் இணையரின் மகள் டாக்டர் ச. சந்தனா அவர்களின் இசை அரங்கேற்ற நிகழ்ச்சி 7.10.2005 அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மை அரங்கத்தில் நடைபெற்றது.
ஆடிட்டர் ஆர். ராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் நாம் கலந்துகொண்டு டாக்டர் சந்தனா அவர்களின் பாடல்களைப் பாராட்டி உரையாற்றினோம். அப்போது “ இசைப் பாடல் என்றால் அதில் கருத்தும் இருக்க வேண்டும்; புதுமையும் இருக்க வேண்டும். பழைய பாடல்களில் – பிறமொழிப் பாடல்களில் மதம், ஜாதி, புராண குப்பைகளைப் பாடி மனதைக் கெடுப்பதைவிட, புரியும்படி பாடி மனித சமூகத்திற்கு கேடு செய்யாமல் இருக்க வேண்டுமென்று தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு’ ஏட்டில் எழுதினார்கள். அந்த வகையில் சந்தனா அவர்கள் ஒவ்வொரு சொல்லையும் புரியும்படி சிறப்பாக அழுத்தம் திருத்தமாக உச்சரித்தது பாராட்டுக்குரியது” எனக் குறிப்பிட்டோம்.
பெண்ணாகரம் ராமமூத்தி-சாந்தா ஆகியோரின் பேரனும் த.பு.பழனியப்பன்-இரா.மலர்விழி இணையரின் மகனுமான டாக்டர் எழிலனுக்கும் ஈரோடு மு. பிரகசுபதி-இராசேசுவரி இணையரின் மகள் பொறியாளர் கீதாவுக்கும் ஈரோடு சக்தி துரைசாமி திருமண மாளிகையில் 9.10.2005 அன்று மாலை (4.30-6க்குள்) ராகு காலத்தில் மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா உறுதிமொழி யினைக் கூறச் செய்து மணவிழாவை தலைமையேற்றுநடத்தி வைத்தோம். பின்னர் சுயமரியாதைக் கருத்துகளை எடுத்துக் கூறி உரையாற்றினோம்.
தஞ்சைக் கோட்ட திராவிடர் கழகப் பிரச்சாரக்குழுத் தலைவர் புலிவலம் எஸ்.எஸ்.மணியம் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 11.10.2005 செவ்வாய்க்கிழமை காலை 9.40 மணிக்கு எமது தலைமையில் திருவாரூரில் வெகு சிறப்பாக நடந்தது.
திருவாரூர் மல்லிகா மகால் மானமிகு இராசலட்சுமி நினைவரங்கத்தில் பாராட்டரங்கம்- வாழ்த்தரங்கம் நடைபெற்றது.
எஸ்.எஸ்.மணியம் அவர்களின் மகன் சு.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாக, வாழ்த்துரை வழங்கினோம். அப்போது மணியம் அவர்களின் துணைவியார் மறைந்த அம்மா இராசலட்சுமி அவர்களின் கழகப் பணிகளையும் தொண்டறத்தையும் சிறப்பாகப் பாராட்டி 90ஆம் வயதிலும் சுறுசுறுப்பாகப் பணியாற்றும் மணியம் அவர்களின் செயல்திறனை வெகுவாகப் பாராட்டினோம்.
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் தாளாளர் வீ. சுந்தரராசுலு அவர்களின் 61ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 11.10.2005 அன்று திருச்சி – பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள ‘‘நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில்’’ கொண்டாடப்பட்டது. விழாவில் நாம் கலந்துகொண்டு சுந்தரராசுலு அவர்களைப் பாராட்டி சிறப்புரை வழங்கினோம்.
விழாவில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு சுந்தரராசுலு அவர்கள் ரூ.25,000/- நிதியை தன் குடும்பத்தின் சார்பில் நம்மிடம் நன்கொடையாக வழங்கினார். மேலும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் படித்து மேற்படிப்புக்குச் செல்லும் மாணவிகளுள் ஒரு மாணவியைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் தன் குடும்பம் சார்பில் ரூ.25,000/- நன்கொடை வழங்குவதாக அறிவித்தார்.
விக்கிரவாண்டியில் நல்லாசிரியர் தண்டபாணி- சரோஜா இணையர் இணைநலம் ஏற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இணையர்களுக்குப் பாராட்டு விழாவும், தந்தை பெரியார் 127ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும், பெரியார் இல்லத்தின் கதவில் செதுக்கப்பட்டிருந்த அன்னை மணியம்மையார், டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) உருவத் திறப்பும், மற்றும் பெரியார் – அண்ணா சிலைகள் திறக்கப்பட்டு 10 ஆண்டு நிறைவும், பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு விழாவும், ‘கருப்பு நதியின் சிவப்புப் பயணம்’ என்ற நூல் வெளியீட்டு விழாவும், நல்லாசிரியர் தண்டபாணி உடல் கொடை பத்திரம் வழங்கு விழாவும், நூலகங்களுக்கு நூல்கள் அளிக்கும் விழா’ மற்றும் எமது எடைக்கு எடை நாணயம் வழங்கும் விழா இணைந்த பத்து விழாக்களின் சங்கமம் 15.10.2005 அன்று காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை சீரும் சிறப்புமாக, கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை தலைமையில் நடைபெற்றது. தோழியர் செல்வி வரவேற்புரையாற்றினார்.
முன்னதாக நல்லாசிரியர் த.தண்டபாணி இல்லத்தில் கதவில் செதுக்கப்பட்டிருந்த அன்னை மணியம்மையார் உருவத்தை நாமும் டாக்டர் முத்துலட்சுமி (ரெட்டி) உருவத்தை மோகனா அம்மையாரும் திறந்து வைத்தோம்.
த.தண்டபாணி – சரோஜா குடும்பத்துப் பெரியார் பிஞ்சுகள் சார்பில் எமது எடைக்கு எடை ரூபாய் நாணயம் வழங்கினர்.
‘கருப்பு நதியின் சிவப்புப் பயணம்’ நூலினை நாம் வெளியிட அதை குணசேகரன், பேரூராட்சி தலைவர் அப்துல்சலாம், ம.தி.மு.க. நிருவாகக் குழு உறுப்பினர் தன. விசயகுமார், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ச.அழகுவேல் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இறுதியில் நாம் சிறப்புரையாற்றி விழாவை நிறைவு செய்தோம்.
அரியலூர் மாவட்டம் உள்கோட்டை கிராமத்தில் பெரியார் படிப்பகம், நூலகம், தந்தை பெரியார் சிலை ஆகியவை அமைப்பதற்காக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெயரில் பதிவு செய்யப்பட்ட 10 x 10 இடத்திற்கான பட்டாவை 15.10.2005 அன்று ஜனதா மாணிக்கம், சி.பரமசிவம், மாநில இளைஞரணி அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன், மாவட்டத் தலைவர் சி.காமராஜ், மாவட்டச் செயலாளர் ‘விடுதலை’ நீலமேகன் ஆகியோர் எம்மிடம் வழங்கினர். பெற்றுக்கொண்ட நாம் எடுத்துக்காட்டான இப்பணியை உளமாரப் பாராட்டினோம்.
மத்திய, மாநில அரசுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அடிப்படை உரிமையாக்க வேண்டும்; வேலை நியமனத் தடைகளை ரத்து செய்ய வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். அதனை ஏற்று 20.10.2005 அன்று கழக மாணவரணி சார்பில் தமிழ்நாடெங்கும் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரை அடுத்த வெங்கமேடு தியாகராஜனின் மனைவி கஸ்தூரி அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து வருந்தி, 23.10.2005 அன்று காலை 10 மணிக்கு வெங்கமேட்டில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று மறைந்த கஸ்தூரி அம்மாள் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து மலர் மாலை சூட்டி மரியாதை செய்தோம். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விடை பெற்றோம்.
கரூர் பெரியார் பெருந்தொண்டர் ஏ.கே.சாமி-கனகம்’ இணையரின் மகன் ஏ.கே.எஸ். அண்ணாதுரைக்கும் செ.செல்வராசு – ஜோதி இணையரின் மகள் எஸ்.வசந்திக்கும் வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்த விழா கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள பாக்கியராஜ் திருமண மண்டபத்தில் 23.10.2005 அன்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு நாம் தலைமையேற்று இணையரை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழி ஏற்கச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து உரையாற்றினோம். பின்னர் பவளவிழா காணும் கரூர் ஏ.கே.சாமி – கனகம் இணையருக்கு கழகத்தின் சார்பில் சால்வை அணிவித்துப் பாராட்டுரை வழங்கினோம்.
சமூகநீதி சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சமூகநீதி மாநாடு 23.10.2005 அன்று காலை திருச்சி அருண் ஓட்டலில் நடந்தது. இம்மாநாட்டிற்கு சங்கத் துணைத்தலைவர் டாக்டர் அ.சேப்பன் தலைமை வகித்தார். டாக்டர்கள் ராமநாதன், மோகன் காந்தி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்.நல்லகண்ணு அவர்களது 80ஆவது பிறந்த நாள் நிறைவையொட்டி அவருக்கு நாம் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம். ஆர்.நல்லகண்ணு அவர்கள் மாநாட்டு வாழ்த்துரை வழங்கினார்.
மாநாட்டில் நாம் சிறப்புரையாற்றினோம். அப்போது “சமூகநீதி என்ற குரல் இப்போது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. சமூகநீதியை மறுக்கக் கூடியவர்கள் யார் என்பதை நாம் அடையாளம் காண வேண்டும். டாக்டர்கள் மக்களின் நோயைத் தடுப்பவர்கள். டாக்டர்களின் நோயை மக்கள்தான் தீர்க்க வேண்டும். இந்த நோய் பொது அரங்கங்கள் மூலம் தீர்க்கப்படவேண்டியதாகும்’ எனக் குறிப்பிட்டோம்..
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்திய ‘வாழ்வியல்’ சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி அரங்கத்தில் 24.10.2005 அன்று மாலை 3 மணியளவில் நடைபெற்றது. விழாவில் நாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்வியல் குறித்து சிறப்புச் சொற்பொழிவாற்றினோம்.
மாணவர்கள் இந்த அறிவியல் வளர்ச்சியான யுகத்தில் தாங்கள் எந்தெந்த முறையில் தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; மேலாண்மை தத்துவங்கள் நிருவாகத்தில் கையாளக்கூடிய பிரச்சினைகளை எவ்வாறு எளிதில் தீர்ப்பது; தலைமைக்கான பண்புகள், மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும், எவ்வாறு சமுதாயத்திற்குப் பயன் தருபவர்களாக உருவாக வேண்டும் என்று அப்போது விளக்கினோம்.