இந்துமதமும் அதன் கடவுளர்கள்,சடங்குகள் அனைத்தும் பார்ப்பனீயத்தின் பிழைப்புக் கருவிகள் அல்லாமல் வேறில்லை என்பதைப் பார்ப்பனர்கள் காலந்தோறும் நிரூபித்து வருகிறார்கள். ஆடி மாதம் ஆகாத மாதம்; மார்கழி மாதம் பீடை மாதம் என்று சொல்லிவைத்துவிட்டார்கள்.
அதனை நம்பும் இந்துமதத்தைச் சுமக்கும் தமிழர்கள், அம்மாதங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்துவ தில்லை. ஆனால்,பார்ப்பனர்கள் தங்கள் இல்லத் திருமணங்களை சிரமமில்லாமல் குறைந்த செலவில் நடத்திக் கொள்கிறார்கள். சடங்கு-சம்பிரதாயங்கள் எல்லாம் தாம் ஏற்படுத்தியவை என்பதால் அதனை தனக்காக எப்படிவேண்டுமானாலும் வளைத்துக் கொள்ள அவர்களால் முடிகிறது.
பார்ப்பானர்கள் கடல் தாண்டக் கூடாது என்பது சம்பிரதாயம். ஆனால், மதன் மோகன் மாளாவியா என்ற வட இந்திய அரசியல்வாதி அயல்நாடு செல்லும் சூழலில் அதனைத் தவிர்க்கவில்லை. மாறாக என்ன செய்தார் தெரியுமா? கையோடு ஒரு மண் உருண்டையையும் கொண்டு சென்றார். அதாவது அயல்நாடு சென்றாலும் தன்னுடைய நாட்டில்தான் அவர் இருக்கிறாராம்.
ஆரியமொழியில் மிலேச்சர்களான வெள்ளைக்காரன் கண்டுபிடித்துக் கொடுத்த நவீனத் தொழில் நுட்பங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தம்முடைய ஆரிய இன ஆதிக்கக் கருவிகளான கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளை இன்னும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு தமிழர்களை மூடத்தனத்தில் வைத்திருக்கிறார்கள்.
கடந்த கல்கி (30.09.2012) இதழில் ஸ்ரீ ரங்கம் மாதவன் என்ற பூஜை செய்யும் தொழில் புரிபவரின் பேட்டி வெளியாகியுள்ளது. கணினி மூலம் இணையதளம் வழியாக பூஜை, தர்ப்பணங்களைச் செய்கிறாராம். முதலில் தொலைபேசி வழியாகச் செய்துகொண்டிருந்தாராம். இப்பொழுது இணையத்தில் காமிரா மூலம் அமாவாசை தர்ப்பணம்,ஆவணி அவிட்டம் பூஜைகளைச் செய்கிறாராம்.
இங்கே இரவில் இவர் கர்மத்தை செய்து வைக்க அமெரிக்காவில் இருப்பவர் பகலில் அதைத் திருப்பிச் சொல்கிறார். மந்திரங்களை இரவில் சொல்லலாமா என்று கேட்ட நிருபரிடம், மந்திரங்களை இரவில் சொல்வது தவறில்லை; கோவிலில் மட்டுமே ஒலித்த மந்திரங்கள் இப்போது செல்போன், டி.வி.டி, தொலைக்காட்சிகளில் ஒலிக்கின்றன; சாஸ்திரங்கள் தொழில்நுட்பங்களை எதிர்ப்ப தில்லை என்று கூறுகிறார் இந்த மாதவன்.
இங்கே இரவில் மந்திரங்களைச் சொல்ல அங்கே பகலில் நடக்கிறது. அப்படியானால் ஒரு நாளே கூட தள்ளிப் போகலாம். அமாவாசை நாள் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் வேறுவேறு நாள்தானே? அப்படியானால் எந்த நாளில் இங்கிருந்து சொல்லப்படுகிறது? அந்த நாள் தர்ப்பணத்துக்கு உகந்த நாளாக எப்படி இருக்கமுடியும்?
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில்தான் சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்ய வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, இரவில் சொல்ல பகலில் தர்ப்பணம் செய்து காசு பறிக்கும் வேலையை இன்னொரு பக்கம் நியாயப்படுத்துவது எவ்வளவு பெரிய மோசடி.
தொழில் நுட்பங்களுக்கும் வேத சாஸ்திரங்களுக்கும் என்ன தொடர்பு? தொழில்நுட்பங்களை வேதங்களுக்குத் தெரியுமா?
உலக மாற்றங்களையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு, அறிவியல் வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய இனத்தின் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஆரியம் போடும் வேஷமல்லவா இது!
தான் பிழைக்க முன்னுக்குப் பின் முரணாக மட்டுமல்ல, எப்படியும் பேசும் ஆரியம் என்பது இதுதானோ?
– அன்பன்