அதிர்வைக் காட்டும் ஹேமா கமிட்டி

2024 செப்டம்பர் 1-15

பாலியல் வன்கொடுமை மட்டுமல்ல.. பாலியல் சீண்டல்களும், பாலியல் துன்புறுத்தல்களும் மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும் அணுகப்பட வேண்டியவையே. பணியிடங்களில் நடைபெறும் பாலியல் நெருக்கடிகள் பெரிதும் வெளியில் வருவதில்லை. பெரும் பதவிகளில், அந்தஸ்தில் இருப்போர் தரும் தொல்லைகளும், தொழில் ரீதியான நெருக்கடிகளும் பெண்களைப் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. பலர் தங்கள் துறைகளை விட்டே வெளியேறும் கொடிய சூழலை இத்தகையோர் உருவாக்குகின்றனர். திரைத்துறையில் இத்தகைய அழுத்தங்கள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுவதுண்டு. வெளிப்படையாகத் தெரியும் வகையில் பல செய்திகள் கசிந்ததுண்டு. கேரளாவில் அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை மிகப் பெரும் அதிர்வலைகளைக் கேரளாவில் எழுப்பியுள்ளது. குற்றமிழைத்தோர்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவ்வரசும் உறுதி பூண்டுள்ளது.

கேரள திரைத்துறையில் நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர். முக்கியமான திரைப்புள்ளிகள் பலர்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன. இது பனிப்பாறையின் ஒரு முனைதான். இந்தியாவின் பல மொழிகளிலும், உலகின் பல நாடுகளிலும், திரைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் இத்தகைய நிலை இருப்பதை வெட்கத்தோடு ஏற்கத்தான் வேண்டும் என்பதுடன், உடனடியாகத் தீர்வு காணும் நடவடிக்கைகளாக, விசாரணை உள்ளிட்ட அடுத்த நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுவதும் அவசியமாகும்.