மணக்கும் தமிழ் – பெரு. இளங்கோ, திருவொற்றியூர்.

2024 ஆகஸ்ட் 1-15, 2024 நூல் மதிப்புரை

நூல் : மணக்கும் தமிழ்
ஆசிரியர் : முனைவர் கடவூர் மணிமாறன்
வெளியீடு : விடியல் வெளியீட்டகம்
பக்கங்கள் : 112
விலை : ரூ.120/–_

எழுத்தாள்வோர்- தனித்தமிழை எடுத்தாள்வோர் அருகி வரும் இக்காலத்தில் தனித்துவமாய் தமிழில் பல நூல்கள் படைத்து, தாம் ஓர் எழுத்தாளர் என்பது மட்டுமின்றி, தமிழ் இலக்கண மரபு வழிக் கவிதைகள் யாப்பதில் வல்லவர் என்பதையும் ஒரு சேரப் பெற்று விளங்குபவர் கடவூர் மணிமாறன்.

பாவளம் சேர்த்தும் நாவளம் கொண்டும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பாவரங்கு, கருத்தரங்குகளில் முழங்கி தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். பல இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எனத் தம் படைப்பாற்றல் மூலம் நாட்டோரால் நன்கறியப்பட்டவர்.
பகுத்தறிவாளர்; பண்பாளர்; சீர்திருத்த எண்ணம் கொண்ட சீரிய சிந்தனையாளர். தந்தை பெரியார்தம் கொள்கைத் தடம் மாறாமல் தம் கருத்துகளைப் பாக்களாகவும், நூல்களாகவும் விதைத்து, தமிழர்தம் உள்ளங்களில் தமிழுணர்வையும் இனவுணர்வையும் விளைவிக்கும் சீரிய சொல்லேருழவர்தான் கடவூர் மணிமாறன்.

தமிழும் தமிழுரும் மேம்பட வேண்டுமென்ற உயர்நோக்குடன் இவர் யாத்த ‘மணக்கும் தமிழ்’ என்னும் பாச்சேலைக்குள் போந்தோம்.
உண்மையிலேயே ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டப்புரட்ட கவிதைப் பூ(பா)க்களின் மணம் கமழ்கிறது. தொடங்குகின்ற மணக்கும் தமிழ் முதலாய் இயற்கை மாட்சி ஈறாய் உள்ளடங்கியுள்ள அறுசீர், எண்சீர் விருத்தங்களையும் எண்ணிலடங்கா எதுகை மோனைகளுடன் தளை தட்டாமல் கொண்டு சேர்த்திருக்கும் பாங்கு இவர்தம் மரபுக் கவிப்புலன் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.
தொடக்கத்தில் தமிழைக் காக்கும் கருத்தோட்டத்தில்,

“தன்னிகரே இல்லாத தகைமை சான்ற
தனித்தமிழில் அங்காடிப் பெயர்கள் மற்றும்
முன்னெழுத்தில் கையெழுத்தில் எதிலும் எங்கும்
முத்தமிழே அரசோச்சச் செய்வோம் நாமே!”
என்று, நம் கடமையை உணர்த்தும் இவர்,
“பித்தரென வேற்றுமொழி மயக்கி வீழ்ந்து
பிதற்றுகின்றார்; உளறுகிறார்! எழுத்தில் பேச்சில்
முத்திரையைப் பதிக்கின்ற பெயர்கள் தம்மில்
முத்தமிழைக் காணோமே!”

என்றும் நினைந்து வருந்துகிறார்.
தமிழில் பிறமொழி கலப்போர்மீது கோபத்துடன்,

“பேசுவதில் எழுதுவதில் பிழையாய் நாளும்
பிறமொழிச்சொல் மிகக் கலந்து கொலையே செய்வார்;
காசு பணம் இவற்றுக்கே அடிமை யானார்;
கவின்தமிழைக் காப்பாரோ? கழறுவீரே!” என்றும்,
“பேச்சினில் எழுத்தில் வேண்டாப்
பிறமொழிக் கலப்பைச் செய்வோர்
மூச்செலாம் தமிழே என்றே
முழங்குதல் சரியோ?”

என்றும் கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றார்.
சாதி – மதம் பிடித்தோரால் என்ன விளையும் என்பதை,

“வெறிகொண்டு சாதி மதம் விளம்பி நின்று
வெற்றோலம் இடுவோரைக் கண்டே அஞ்சிக்
குறிக்கோளும் நெடுந்தொலைவில் விலகிச் செல்லும்;
குழப்பங்கள், கலகங்கள் நாட்டில் தோன்றும்!

என்ற பாடல் வரிகள் மூலம் இன்று நாட்டில் மதவெறி அமைப்புகளால் நடத்தப்படும் வன்முறைகள்
மற்றும் வெறுப்புப் பிரச்சாரம் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டி உண்மை நிலையை எடுத்தோதுகின்றார்.

எழுத்தாளர்கள் என்கிற போர்வையில் சமுதாயத்திற்குத் தேவையில்லாதவற்றை எழுதி, வருங்காலத் தலைமுறையினரின் சிந்தனைப் போக்கையே மாற்றுவதைக் கண்டு வெகுண்ட இவர், உண்மை எழுத்தாளன் யார் என்பதை,

“தவறுகளை இடித்துரைப்போன், எதற்கும் –_ அஞ்சாத்
தன்மானம் மிக்கோனே எழுத்து வேந்தன்” என்றும்,
“நாட்டுநடப் பெல்லாமும் நன்றாய் ஓர்ந்து
நடுநிலைமை பிறழாமல் நவில வல்ல
பாட்டாளி எழுத்தாளன் ஆவான்; வீணே
பாழ்படுத்தும் சிந்தனைகள் விதைப்போன்-அல்லன்”

என்னும் வரிகள் மூலம் எழுத்தாளன் என்பதற்குரிய இலக்கணத்தை விளக்குகின்றார்.
பாவலர் யார் என்பதை,

“விழிப்பை பொறுப்பை வீரம் பொங்கிடச்
சிறுமை விளைப்போர் செயலைச் சாடி
நெருப்பாய்ச் சொற்களை நெய்வான் பாட்டில்”
“உண்மைப் பாவலன் உயரிய நோக்கினன்
எண்ணத் தூய்மையன்; இலக்கை உரைப்பவன்;
இனம்மொழி நாட்டை இன்னுயிர் போலும்
மனத்தில் நினைக்கும் மானம் மிக்கவன்”

என்ற வரிகள் மூலம் உணர்த்துகிறார்.
தாம் புரட்சிக் கவிஞரின் வழித்தோன்றல் என்பதைக் காட்டிடும் வண்ணம்,

“வாழ்வில் தென்றல் வீசட்டும்!
வையம் புகழ்ந்து பேசட்டும்!
தாழ்வு யாவும் ஓடட்டும்!
தமிழை வாய்கள் பாடட்டும்!” என்றும்,
“பொய்யும் புரட்டும் நீங்கட்டும்!
புரட்சி எங்கும் ஓங்கட்டும்!”
“எண்ணம் செயல்கள் இணையட்டும்!
இளைஞர் தொண்டில் முனையட்டும்!”
‘‘உண்மை நேர்மை வாழட்டும்!
ஒழுக்கம் வாழ்வில் ஆளட்டும்!!” என்றும்,

தம் கவிதை வரிகளில் அடியெதுகைஅமையுமாறு வைத்திருப்பதிலிருந்து மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.
வாழ்வியல் பகுதியில், மாந்தர் வாழ்க்கை நிலைபற்றிக் கூறுகையில்,

“அறியாமைக் குழிக்குள்ளே கிடக்கின்றார்;
அறநெறிக்கு மாறாக நடக்கின்றார்,”
“உண்மையினை நம்பாமல் ஒதுக்கிடுவார்;
உதவாத மடமையினைப் புதுக்கிடுவார்”
எண்ணத்தில் உறுதியினை இழந்திடுவார்
இயலாராய் வெந்துயரில் உழன்றிடுவார்!”

என்று இவ்வரிகளின் மூலம் சுட்டிக் காட்டும் இவர், இவற்றினின்றும் மீள,

“இருளினை மனத்தில் குவிக்காதே!
இழப்புகள் வந்திடின் தவிக்காதே!” என்றும்
“இடர்கள் தடைகள் நொறுக்கிடுவாய்
இடண்டகப் போக்கை வெறுத்திடுவாய்!
மடமை நெறிகள் ஒதுக்கிடுவாய்!
மலரும் குமுகம் புதுக்கிடுவாய்”
என்றும் அறிவுறுத்துகிறார்.

மொழியை இனத்தினைப் போற்று – _ வேண்டா
மூட நெறிகளைத் தூற்று!
பழிகள் வருவதைத் தடுப்பாய்- _ புரட்சிப்
பாதையைத் தேர்ந்து நடப்பாய்!

என்று கொள்கை வழிகாட்டுகின்றார்.

பொதுவாக, மனித சமுதாயத்தில் – குறிப்பாக தமிழ்ச் சமுதாயத்தில் காணப்படும் குறைகளையும் அவற்றை விலக்கி வாழும் நெறிமுறைகளையும், அறிவுரைகளையும் தனது பாட்டு வரிகளின்மூலம் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. மனித சமுதாயம் மேம்பாடடைவதற்கான கருத்து
களைத் தம் பாட்டு வரிகளில் விதைப்பவர்களே கவிஞர்கள் என்ற வகையிலே தம் சிந்தனை ஓட்டத்தைச் செவ்வனே செலுத்தி செம்மையானதோர் நூலைச் செய்துள்ளார் கடவூர் மணிமாறன்.

“நுட்பமிகு யாப்பியல் கற்றோர் தாமும்
தொட்டிட அஞ்சும் துறையினில் ஒன்றாம்
கட்டளைக் கலித்துறைப் பாக்கள் தம்மை
கட்டிய பாங்கிவர் புலமை சொல்லும்!’’ – (இளங்கோ)

முத்தாய்ப்பாக இந்நூலில் தாய் தந்தை ஆசான் ஆகியோரைப் போற்றும் பாங்கில் அவர்தம் கடப்பாட்டுணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வகையில் தன்னை ஈந்து ஆளாக்கிக் கல்வி பெறவைத்த தம் பெற்றோரான கன்னியம்மாள், பழனியப்பனார் மற்றும் தனக்கு ஆசிரியராய் அமைந்து வழிகாட்டிப் புலமை பெறவைத்த ஆசான் பாலசுந்தரனார் ஆகியோரைப் போற்றியுள்ளார். மேலும், டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார், கலைவாணர், காமராசர், தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் ஆகியோரையெல்லாம் நெஞ்சில் நிறுத்தி அவர்தம் சிறப்புகளை விதந்து போற்றியுள்ளதிலிருந்து இந்நூலாசிரியர் மூத்தோர் போற்றும் பண்பினைக் காட்டியுள்ளார்.

இந்நூலைப் படிக்கத் தொடங்கி அதன் கடைசி
வரியைப் படித்து முடிக்கும்போது ஒவ்வொருவரும் தமிழ் உணர்வு, தமிழ் இனவுணர்வு, தமிழ்நாட்டு
ணர்வு, சுயமரியாதை உணர்வு, இவற்றுடன் பகுத்தறி
வையும் மனித நேய உணர்வையும், சீர்திருத்த எண்ணத்
தையும் பெற்று, எதிர்ப்புகளைத் தகர்-த்தெறியும் ஆற்றலையும் பெறுவர் என்பது திண்ணம்.
மணக்கும் தமிழ்நடை மெய்யாகவே மனத்தை இயக்கும் தமிழ்ப்படை என்றே சொல்லலாம்!

– பெரு. இளங்கோ, திருவொற்றியூர்.