காரைக்குடி அரங்கசாமி!- வி.சி.வில்வம்

2024 கட்டுரைகள் ஜுலை 16-31

உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம்! படுத்தப் படுக்கையாய் இருந்தார். பல செய்திகள் பேசிய நிலையில், இயக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்துப் பேச்சுக் கொடுத்தோம். சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து கொண்டார். பேசச் சிரமப்பட்டாலும், நினைவு தப்பாமல் பேசினார்.

நாம் சந்தித்த அன்றுதான் (மே 28) அவரது பிறந்த நாள்! ஒரு வாழ்த்தோடு பேச்சைத் தொடர்ந்தோம். முழுவதுமாகப் பேசி முடித்து, நாமும் திரும்பி வந்துவிட்டோம். இந்நிலையில் ஜூன் 24 அன்று அரங்கசாமி அவர்கள் மறைந்துவிட்டார். இறக்கும் சூழ்நிலையில் அவர் இல்லாவிட்டாலும், திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மறைந்து போனார்! அவருடன் பேசிய செய்திகளை இங்கே “உண்மை” இதழில் வெளியிட்டுப் பகிர்ந்து கொள்கிறோம்!

இளையான்குடி பொது நூலகம்!

ச.அரங்கசாமி அவர்கள் 1944ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகேயுள்ள பஞ்சாத்தி என்னும் கிராமத்தில் பிறந்தவர். வயது 80. குக்கிராமத்தில் பிறந்தாலும் எம்.ஏ.பி.எட்., முடித்து, 1976ஆம் ஆண்டில் ஆசிரியர் பணிக்குச் சென்றவர்.
8ஆம் வகுப்புப் படிக்கும் போதே பத்திரிகைகள், புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வந்துள்ளது. இளையான்குடி பொது நூலகத்தில் அறிஞர் அண்ணாவின் நூலைப் படித்தே, அவருக்குக் கடவுள் மறுப்புச் சிந்தனை துளிர்விட்டுள்ளது. இதற்கிடையில் 3ஆம் வகுப்பு படிக்கிற போது, குலக்கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வருகிறார். இந்தத் திட்டத்தை எதிர்த்து, அவ்வூர் இளைஞர்கள் பாடல்களைப் பாடி விழிப்புணர்வு செய்துள்ளார்கள். “தலைமுன் குடும்பி வைத்தவரே, உங்கள் ஜம்பம் பலிக்காது” எனத் தொடங்கும் அப்பாடலைக் கிராமத்தில் மாணவர்களும் பாடிக் கொண்டிருப்பார்களாம்! திராவிடச் சிந்தனைகள் அங்கிங்கெனாதபடி

இருந்ததற்கு இது ஓர் உதாரணம்!
எதிர்ப்பில் வளர்ந்த கொள்கை!

குக்கிராமத்தில் பிறந்து மாணவர் பருவத்திலேயே பகுத்தறிவுச் சிந்தனைகொண்டதால் வீடு மற்றும் கிராமத்தில் எதிர்ப்பு அதிகம்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பெற்றோர் அழைத்துப் போவதுண்டு. அர்ச்சகர் திருநீறு கொடுத்தால், அதை நெற்றியில் வைத்துக் கொள்ளாமல், தூரத்தில் இருக்கும் தூண் மேல் கொட்டிவிடுவாராம். இதனால் வீட்டிற்கு வந்து முதுகில் வாங்கிக் கொள்வாராம்.

எதிர்ப்புகள் வந்தால் ஒரு கொள்கைக்காரர் என்ன செய்வார்? மேலும், மேலும் உறுதியாவார்! அந்த அடிப்படையில் வீட்டில் இருந்த தன் ஜாதகத்தைக் கொளுத்தி இருக்கிறார். பள்ளியில் ‘நீ விரும்பும் தலைவர்’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதச் சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் காந்தி, நேரு பற்றி எழுத, இவரோ தந்தை பெரியார் பற்றி எழுதியிருக்கிறார். அதுவும் 1957 கால கட்டத்தில்! பெரியாரைப் பற்றி எழுதுகிற போது அவர் கடவுள் இல்லை என்றார், ஜாதி, மதத்தை ஒழிக்கச் சொன்னார் என்றெல்லாம் எழுத வேண்டும் அல்லவா? அதைக் குக்கிராமத்தில் பள்ளியில் படிக்கும் போதே செய்திருக்கிறார்.

30 ஆண்டுகள் ஆசிரியர் பணி!

பியூசி படிப்பைச் சிவகங்கையில் முடித்திருக்கிறார். ஹிந்தி எதிர்ப்புப் போரில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த சிவகங்கை இராஜேந்திரன் இவரின் வகுப்புத் தோழராம்! அரங்கசாமி, இராஜேந்திரன், இராஜகோபால் ஆகிய மூவரும் அடிக்கடி நூலகத்தில் சந்தித்து, இயக்கத்தில் செயல்படுவதன் அவசியம் குறித்துப் பேசுவார்களாம்!

1976ஆம் ஆண்டு காரைக்குடி மாடல் பள்ளிக்கு மாறுதல் கிடைக்கிறது . 4 ஆண்டுகள் அங்கே பணி செய்து, பின்னர் பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 15 பள்ளிக்கூடங்களில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்! 30 ஆண்டு ஆசிரியர் பணி அவருக்குச் சொந்தமானது!

பகுத்தறிவுப் பாடங்கள்!

இந்நிலையில் 1976இல் காரைக்குடிக்குப் பணி மாற்றலாகி வருகிறார். 1977இல் பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர்.சாமி அவர்கள் மூலம் காரைக்குடி கழகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதேநேரம் சிவகங்கை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும் செயல்படுகிறார். சற்றொப்ப 20 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தவர். சாலைக்கிராமத்தில் மட்டும் 15 தோழர்களைப் பகுத்தறிவாளர்கள் கழகத்தில் இணைத்துள்ளார்.‌ இயக்க நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளில் பெரும்பாலும் பங்கேற்றுள்ளார். பெரியார் கூட்டங்களில் நான்கைந்து முறை நேரில் கலந்து கொண்டுள்ளார்.

மாணவர்களிடம் அறிவியல் பூர்வமான பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துரைத்தவர். கிராமம் ஒன்றில் பணியாற்றிய போது, பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசுகிறார் எனப் பெற்றோர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். உடனிருந்த ஆசிரியர் ஒருவர், “நான் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றுவேன் எனச் சிவன் கோயிலுக்கு என்னை அழைத்துப் போனீர்கள். அது சரியென்றால், இவர் அறிவியல் ரீதியான பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசுவதும் சரிதான்”, எனப் பெற்றோர்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

கெட்ட நேரத்தில் கையொப்பம்!

அதேபோல பெரியார் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார். ஆய்வுக்கு வந்த கல்வி அதிகாரி ஒருமுறை இதனைப் பாராட்டியுள்ளார். பல்வேறு பகுதிகளில் பணியாற்றுகிற போது, அங்கே இருக்கும் இயக்கத் தோழர்களின் அறிமுகம் கிடைக்கும். ஒருமுறை அரியலூர் லெப்பைக்குடிக்காடு பகுதிக்குப் பணி மாற்றம் கிடைத்துள்ளது. முதன்முறை கையொப்பம் இடச் சென்ற போது, நல்லநேரம் பார்த்துக் கையொப்பம் இடுங்கள் என சக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ஆனால் அரங்கசாமி அவர்கள் கெட்ட நேரமாகப் பார்த்துக் கையொப்பம் இட்டுள்ளார்.

நானும் பெரியாரிஸ்ட் தான்!

இதைக் கவனித்துக் கொண்டிருந்த தலைமை
யாசிரியர், விசாரிக்கத் தொடங்கியுள்ளார். நான் பெரியார் கொள்கையைக் கடைப்பிடிப்பவன் என இவர் சொல்ல, தலைமை ஆசிரியரோ என் பெயர் தங்கராஜ், பெரம்பலூர் அருகேயுள்ள எசனை எனது ஊர், நானும் பகுத்தறிவாளர் கழகத்தில் தான் இருக்கிறேன் எனக் கூறியிருக்கிறார். ஆசிரியர் அவர்கள் தான் எனது திருமணத்தை நடத்தி வைத்தார் எனவும் கூறியுள்ளார்.
பணியாற்றிய இடங்களில் இப்படி பல அனுபவங்கள் கிடைத்துள்ளன. காரைக்குடி அருகே அரியக்குடி கிராமத்தில் வேலை பார்த்த போது பள்ளி ஆண்டு விழாவில், “மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியை இவரே நடத்தியுள்ளார். இதற்காகவே பயிற்சியும் எடுத்துள்ளார். மாணவர்களுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்துள்ளார்.

மனிதாபிமானச் செயல்கள்!

இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும், விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பதை முழுமையாகச் செயல்படுத்தியுள்ளார். அந்த
வகையில் கல்வியிலும் சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளார். பின்தங்கிய மாணவர்
களுக்கு இலவசமாகத் தனிப் பயிற்சி (டியூசன்) கொடுப்பது, புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, பொருளாதார உதவிகள் செய்வது எனத் தம் இறுதிக் காலம் வரை மனிதாபிமானப் பணிகளைச் செய்துள்ளார்!
பள்ளியில் மட்டுமின்றி, கிராமத்திலும் களப் பணிகள் நிறைய செய்துள்ளார்.‌ தெருமுனைக் கூட்டங்கள், தொடர் கூட்டங்களும் நடத்தியுள்ளார். வழக்குரைஞர் அருள்மொழி அவர்களைத் தம் வீட்டில் 3 நாட்கள் தங்க வைத்து, கிராமப் பிரச்சாரம் செய்துள்ளார். குறிப்பாக சாலைக்கிராமம் பகுதியில் ஆசிரியரைஅழைத்து மட்டுமே 3 நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

பெரியார் பெருந்தொண்டர் விருது!

பணி ஓய்விற்குப் பிறகு காரைக்குடிக்கு இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். 2 ஆண்டுகள் காரைக்குடி மாவட்டக் கழகச் செயலாளராகவும், 12 ஆண்டுகள் மாவட்டத் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.‌ சாமி.திராவிடமணி அவர்கள் மூலமே பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகத்தில் மாவட்டப் பொறுப்புகள் வகித்து, அவர்களின் ஆலோசனையின் பேரில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

மாவட்டப் பொறுப்பிற்கு வந்த பிறகு காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் ஆசிரியரை அழைத்து 4 முறை கூட்டங்கள் நடத்தியுள்ளார். தேவகோட்டையில் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் பெரியார் பெருந்தொண்டர் விருதை ஆசிரியர் இவருக்கு வழங்கியுள்ளார். தம்மிடம் இருந்த “இராவணன் வித்தியாதரன்” என்கிற பழம்பெரும் தமிழ் நூலை ஆசிரியருக்கு இவர் வழங்கியுள்ளார். அதை மறுபதிப்பு செய்கிற போது முன்னுரையில் ஆசிரியர் இவர் பெயரைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

நினைவில் நிற்கும் தோழர்கள்!

ஆசிரியர் அவர்களுக்கு அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அந்த ஒளிப்படத்தை “டைல்ஸ்” கற்களில் பதித்து, காரைக்குடி கழக மாவட்டத்தின் மூலம் ஆசிரியருக்குக் கொடுத்தார்கள். இந்தப் புதுச் சிந்தனை பலரது பாராட்டையும் பெற்றது!

காரைக்குடி மரக்கடை சுப்பிரமணியம், ஜெகதீசன், சாக்கோட்டை இளங்கோவன், அரியக்குடி சுப்பையா, கோட்டூர் சக்தி ஆசிரியர், சனவேலி முத்தழகு, சாலைக்கிராமம் எழில்வேலன், தேவகோட்டை கமலம் செல்லத்துரை, தேவ.சீனி.அருணன், மருத்துவர் சுப்பிரமணியம், ஆசிரியர் மு.முருகன், மு.சுந்தரமூர்த்தி, மு.சு.பெருவழுதி உள்ளிட்ட பலரோடும் சேர்ந்து இயங்கிய நினைவுகள்

அவருக்கு இருக்கிறது!
நான் இறந்துவிட்டால்...

கைத்தடி ஊன்றி நடக்க முடியாத காலத்திலும், தனி வாகனம் பிடித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். பெரியார் திரைப்படத்திற்கு ரூ 25 ஆயிரம், பெரியார் உலகத்திற்கு ரூ 25 ஆயிரம் என்பதோடு, சிறிய நன்கொடைகளை ஏராளம் வழங்கியவர். மட்டுமின்றி கொஞ்சமும் தயங்காமல் பிறரிடமும் நன்கொடைகள் பெறுவதில் திறமையானவர்!

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன் தம் இணையர் சாரதா அவர்களை அழைத்துள்ளார். ‘நான் மறைந்துவிட்டால் எனக்கு எந்த இறுதிச் சடங்கும் செய்யக் கூடாது’ என்று கூறியிருக்கிறார். கண் கலங்கிய சாரதா அவர்கள், ‘உங்களுக்கு முன்னால் நான் இறந்து
விட்டால் என்ன செய்வீர்கள்’ என அழுதிருக்கிறார். ‘அப்படி நடந்தால் உன் சுயமரியாதையை நான் காப்பாற்றுவேன்; மாறாக நடந்தால் எந்தச் சடங்குகளும் இன்றி என்னை அனுப்பி வைக்கவும்’ என ஆசிரியர் அரங்கசாமி கூறியிருக்கிறார்.

குன்றாத சுயமரியாதை!

பொன்மலர், வண்டார் குழலி என இரண்டு பெண் பிள்ளைகள் இவருக்கு! இருவருமே சிறப்பான கல்வி கற்று, அரசுப் பணியில் இருக்கிறார்கள். அரங்கசாமி அவர்களின் உடல் காரைக்குடியில் வைக்கப்பட்டு, பின்னர் அவரின் சொந்த ஊரான சாலைக்கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. கிராமங்களில் கூட்டம் கூடும்போது, பலரும் பல கருத்துகளைக் கூறுவார்கள்.

ஆனால், இரண்டு பெண் பிள்ளைகளும் அரணாக நின்று, தந்தையின் சுயமரியாதையை வீழாமல் பார்த்துக் கொண்டார்கள்! இறந்தாலும் என் கொள்கை வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தான் பெரியார் பெருந்தொண்டர்கள்! இந்தச் சுயமரியாதை மனிதர்களுக்கு வேறென்ன ஆசை இருக்கப் போகிறது?

பிறந்த நாளில் நேர்காணல் செய்து, மறைந்த பிறகு வரும் அவரின் நினைவுகள்! அரங்கசாமி அவர்களுக்கு நமது புகழ் வணக்கம்! 