அம்பேதகர் இந்துவா? பவுத்தரா?

செப்டம்பர் 01-15

– விடுதலை தமிழ்ச்செல்வன்

உன்னுடைய மதமோ இந்து மதம், என்னுடைய மதமும் இந்து மதம் என்றால் நம் இருவருக்கும் சம உரிமை இருக்க வேண்டாமா?

கடவுளை தொழ நினைக்கும் எவரும் கோவில் கருவறைக்குள் எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனுமதிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களால் கோவில் தீட்டாகாது. அதனால் தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனிக் கோவில் ஏற்படுத்துவதை நான் விரும்பவில்லை.

அதனால்தான் ஒரு மாநாடு நடத்தி மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினோம். ஆத்திரம் கொண்ட இந்துக்கள் பார்ப்பனர்கள் அரக்கன் அம்பேத்கர் ஒழிக என்றார்கள்.

சமூகத்தில் புரோகித முறை எனக்கு கவலையை கொடுத்தது. புரோகித கூட்டத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. புரோகிதர்கள் கூட்டம் மனிதர்களை உறிஞ்சி வாழ்ந்து வரும் முறையை ஒழிக்க வேண்டும்.

1929இல் புனேயில் உள்ள பார்வதி கோவிலில் நுழைந்து கர்பக்கிரகத்தை வணங்குவதற்காக தாழ்த்தப்பட்டவர்கள் பயணித்தார்கள். ஆனால் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலின் உள்ளே வந்தால் தீட்டாகி விடும் என்று கோவிலையே இழுத்து மூடிவிட்டார்கள்.

1927இல் துவாராகாவில் புதியதாக கட்டப்பட்ட கோவிலுக்குள் இந்துக்கள் எல்லாம் சென்று வரலாம் என பத்திரிகையில் அறிக்கை வந்தது. கோவில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்று நண்பருடன்  அந்த கோவிலுக்கு சென்றேன். ஆனால் இந்துக்கள் என்று சொல்லும் மேல்ஜாதி மக்கள் ஒன்றுகூடி எனக்கெதிராக கோசம் போட்டு வெளியேற்றப்பட்டேன். இதைவிட இந்துக்களால் ஏற்பட்ட அவமானம் இருக்க முடியாது. என் பாதம் பட்டதால் கோவில் தீட்டாகிவிட்டது என்று சொல்லி சடங்குகள் செய்து கோயிலை புனிதப்படுத்தினார்கள். இப்படி எழுதியது வேறு யாரும் அல்ல. அண்ணல் டாக்டர் அம்பேத்கார் அவர்கள்தான்.

ஆதாரம்: அம்பேத்கர் பேசுகிறார் நூலில் இருந்து…

இப்படி எழுதியது வேறு யாருமில்லை. டாக்டர் அம்பேத்கர் அவர்களே. இதோ மேலும் கூறுகிறார்:-_

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உண்ண உணவும் உடுக்க உடையும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதியும் இல்லாமல் இருக்கும்போது அவற்றை அடையப் போராடாமல் கோவிலுக்கு போய் என்ன செய்யப் போகிறோம்.

கழுத்தில் துளசி மாலை போட்டுக் கொள்வதால் வறுமை ஒழியுமா? ராம நாமத்தை ஜெபிப்பதால் நிலசுவாந்தாரர்களிடம் உங்களுக்கு உள்ள  அடிமை நிலை ஒழியுமா?  புண்ணிய யாத்திரை போவதால் மாத கடைசியில் சம்பளம் கிடைக்குமா?

பெரும்பான்மையான சமூகம் மூடநம்பிக்கையிலும் கடவுள் சேவையிலும் மூழ்கிவிட்டதால் சுயநலவாதிகளும் சாமர்த்தியசாலிகளும் சமூக விரோத செயல்களை செய்து பிழைக்க வழியாகிவிட்டதென 28.09.1932இல் அம்பேத்கர் எழுதி உள்ளார்.

நான் இந்துவாக பிறந்தது என் தவறல்ல. அது கெட்ட வாய்ப்பு, அதைத் தடுக்க என்னால் முடியாது. ஆனால் மனிதாபிமானமற்ற அந்த (இந்து) மதத்தில் வாழ மறுப்பது என் கையில்தான் இருக்கிறது. ஆகவே நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன்.

என்னை பொறுத்தமட்டில் சிலைகளை வணங்குவதை ஏற்றுக்கொண்டதில்லை என்பதுடன் மூடநம்பிக்கைகளை எதிர்த்து வந்தேன்.

இந்து மதம் என்ற ஒரு மதமே இல்லாத நிலையில் கற்பனையாக மக்கள் சிக்கி ஏன் அல்லல்பட வேண்டும். ஆதிகாலத்திலோ (அ) புத்தர் காலத்திலோ ஏன் கீதையிலேகூட இந்து என்றோ இந்து மதம் என்று ஒரு சொல்லோ இருந்ததில்லை.
சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற நம்பிக்கை ஒழிந்தால்தான் உங்கள் ஜாதியை ஒழிக்கும் நோக்கம் கைகூடும்.

எனவே தாழ்ந்துப்போன இந்துமதம் பார்ப்பன மதம் என்று சொல்வதே ஞாயமானது என்ற டாக்டர் அம்பேத்கர் எழுதி உள்ளார். (ஆதாரம் அம்பேத்கர் பேசுகிறார் நூலில் இருந்து…)

கோவில்களில் கோபுரம் ஏன் அத்தனை உயரமாகக் கட்டப்பட்டது? தீண்டப்படாதவர்கள் தூரத்திலிருந்து இறைவனை வணங்கத்தான்.

எத்தனைக் காலமானாலும் சேரிக்குள் ஆதிக்க ஜாதிகளின் சாமிகளோ, சாமி ஊர்வலங்களோ வருவதில்லை (ஆதாரம்: சமகால படைப்புகளில் ஜாதி என்ற நூலிலிருந்து…)

இந்து மதத்தில் உள்ள ஜாதி, தீண்டாமை, இதிகாசம், புராணங்கள், மனுஸ்மிருதிகள், ஆச்சாரங்கள், அனுஸ்டானங்கள் ஒன்றாக இணைந்து தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லப்படும் ஒடுக்கப்பட்ட மக்களை இன்றும் பார்ப்பனியம் ஜாதிரீதியாக, பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற வாழ்விடம், தொழில், உணவு முறை, என்று பல வகைகளில் ஒதுக்கி வைத்ததுடன் ஒடுக்கியும் வைத்தது.

இதையறிந்து இந்த மதத்தைப்பற்றியும், வேத மனுஸ்மிருதி, இதிகாச புராணங்கள் பற்றியும், அவற்றால் ஒடுக்கப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் பற்றியும் அறிந்து தெரிந்து மக்களுக்கு உணர்த்தியவர்கள் வடக்கே அம்பேத்கர் அவர்களும், தெற்கே தந்தை பெரியார் அவர்களும் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இந்து மதத்தின் கொடுமைகளை தினம் தினம் அனுபவித்த அம்பேத்கர் அவர்கள் பல வழிகளிலும் போராடிப் பார்த்து இந்த கழிசடையான பார்ப்பன மதத்தை திருத்த முடியாது என்று கருதி தன்னுடன் பல லட்சம் மக்களுடன் புத்த நெறியை தழுவினார் என்பதுடன் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொல்லும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்து மதத்தால், பார்ப்பனியத்தால் மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுத்தந்தார். ஆனால் அம்பேத்கர் அவர்களால் பெற்றுத்தந்த உரிமையை தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றும் அம்பேத்கர் பெற்றுத்தந்தது சலுகை என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.

நாகாபுரியில் உள்ள தீட்க்ஷா பூமியில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் 5 லட்சம் மக்களோடு 25 உறுதிமொழிகளை கூறி புத்த நெறியை தழுவினார். அவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழிகளில்

1. நான் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவற்றைக் கடவுளாக மதிக்க மாட்டேன். அவைகளை வணங்க மாட்டேன்.

2. இராமனையோ, கிருஷ்ணனையோ கடவுளாக நான் மதிக்க மாட்டேன். அவர்களை நான் கும்பிட்டு வணங்க மாட்டேன்.

3. இந்துமத கடவுள்களான கவுரி (அ) கணபதி அல்லது இந்து மதத்தில் சொல்லப்படுகின்ற கடவுள்களை வணங்க மாட்டேன், ஏற்க மாட்டேன்.

4. கடவுள் அவதாரம் என்ற கருத்தை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

5. புத்தர் மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்.

6. சிரார்த்தம் கொடுப்பது, பிண்டம் கொடுப்பது (திதி திவசம்) போன்ற சடங்குகளைச் செய்ய மாட்டேன்.

7. பார்ப்பனிய மதம்தான் இந்து மதம் இரண்டுக்கும் வேறுபாடு இல்லை. புத்த நெறியின் தம்மத்திற்கு எதிரான எந்த செயலிலும் ஈடுபட மாட்டேன்.

8. பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகளில் எதிலும் ஈடுபட மாட்டேன்.

9. எல்லா மனிதர்களையும் சமமாக கருதுவேன்.

10. நான் சமத்துவத்திற்காகத்தான் பாடுபடுவேன் என்றும், நான் திருட மாட்டேன், நான் பொய் சொல்ல மாட்டேன். நான் எந்தவித தீய போதைக்கும்  அடிமையாக மாட்டேன். நான் மதுவைக் குடிக்க மாட்டேன். புத்த மதமே எனக்கு அடைக்கலம். தம்மமே எனக்கு அடைக்கலம், சங்கமே எனக்கு அடைக்கலம்.

இந்து மதத்திற்கு ஒரே மாற்று வழி புத்தமே என்ற டாக்டர் அம்பேத்கர் அவர்கள் புத்தத்தை தழுவினார்.

ஆனால் அம்பேத்கரை தலைவராக ஏற்றுக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று அவரின் கொள்கைக்காக, கோட்பாட்டுக்காக, இலட்சியத்திற்காக ஏற்றுக்கொண்டார்களா என்ற கேள்வி எழுகிறது. அவரின் கொள்கையைப் புரிந்துகொண்டு செயலாற்றுகிறவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் கூட பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் பெற்றுத்தந்த உரிமையை சலுகை என்று கூறி அவரின் உருவத்தை மட்டும் படமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனை கலந்த உண்மையாகும்.

இந்து ஒருவன் இந்துவாக இருப்பதும், பார்ப்பான் ஒருவன் பார்ப்பானாக இருப்பதும், மேல்ஜாதிக்காரன் ஒருவன் தன்னை இந்து மேல்ஜாதி என்று சொல்லிக்கொள்வதும் ஒன்றும் நமக்கு வியப்போ ஆச்சரியமோ இருக்கப்போவதில்லை.

ஆனால் இந்து மதத்தில், தாழ்த்தப்பட்டவனாக, தீண்டப்படாதவனாக, தொடக்கூடாதவனாக, இழிஜாதியனாக, அரிஜனனாக, சேரியானாக, ஒதுக்கி, ஒடுக்கி வாழும் இவர்கள்தான் உண்மையான இந்து மதத்திற்குரியவனாகக் காட்டிக் கொள்கிறார்கள். தன்னை இந்துவாக பூசிக்கொள்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாகவும், கேள்விக்குறியாகவும் தெரிகிறது. அதற்கு பல எடுத்துக்காட்டுகளையும் ஆதாரங்களையும்  தரமுடியும். (எல்லா இடங்களில் நடப்பவைதான்)

(எ.கா.) தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று அம்பேத்கரின் உருவப்படத்தை (சாமி ஊர்வலம்போல) வண்டியில் வைத்து வீடுவீடாக இழுத்து சென்று தட்டில் பத்தி, கற்பூரம், பழம், தேங்காய் உடைத்து சூடமேற்றி தேரின் அடிபாதத்திதற்கு தண்ணீர் ஊற்றுவது, விழுந்து வணங்குவது. அவரின் பிறந்த நாளுக்கு ஊரே ஒன்று சேர்ந்து விளக்குமாவு எடுப்பது, அதில் ஈடுபடும் இளைஞர்கள் மொட்டை அடித்துக் கொள்வது, சிறப்பு நிகழ்ச்சியாக ஆடல்பாடல் என்ற அரை நிர்வாண நடனமாடுவது போன்ற அம்பேத்கரை இழிவுப்படுத்தும் விதமான சமூக சீரழிவு நிகழ்ச்சிகள் அன்று முதல் இன்று வரை நடந்தே வருகிறது. மொத்தத்தில் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு சாமி என்பதுபோல தாழ்த்தப்பட்ட மக்களே அந்த புரட்சியாளரை ஒரு வழிபடும் தெய்வமாக ஆக்கிவிட்டார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

அதுமட்டும் அல்லாமல் ஊரில் மாரிமுதல் காளிவரை திருவிழா செய்கிறார்கள். அதை நாம் தடுக்க முடியாது. அந்த மாரியம்மன் திருவிழாவில் மாரியம்மனை எந்த முறையிலோ வழிபடட்டும் நமக்கு கவலை இல்லை. ஆனால் மாரியம்மாளோடு எத்தனை எத்தனை தலைவர்களை இணைத்து துண்டறிக்கை, சுவரொட்டி, விளம்பர தட்டிகள் என்று வரைமுறை இல்லாமல் செய்துவருகிறார்கள்.

நன்கு படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் அம்பேத்கர் அவர்களின் உழைப்பால் உயர்ந்தவர்கள் கூட மாரியம்மன் திருவிழாவில், காளியம்மன் திருவிழாவில் மாரி, காளியின் படங்களையும் போட்டு, அத்தோடு புரட்சியாளர் அம்பேத்கர், தோழர் திருமாவளவன், மாவீரன் பிரபாகரன் அவர்களோடு கூட்டாக சேகுவேராவின் படமும் போடுகிறார்கள்.

அடுத்து மாரியம்மன், அம்பேத்கார், நடிகர் விஜயகாந்த், அடுத்த படத்தில் அம்பேத்கர், மாரியம்மன், திருமாவளவன், பிரபாகரன், இரட்டைமலை சீனிவாசன், சேகுவேரா என்றும் இன்னும் இளைஞர்களை சீரழிக்கும் எண்ணற்ற திரைப்பட நடிகர்களின் படமும் அம்பேத்கர் அவர்களின் படத்துடன் இணைத்து போட்டு பல கிராமங்களில் பல நூறு பேனர்களை வைத்துள்ளார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

நம்முன் வைக்கும் கேள்விகள்: நீ இந்துமதவாதியாக இந்து தெய்வங்களை வணங்குபவராக இருந்தால் அம்பேத்கரைப் பயன்படுத்தாதே, அம்பேத்கருக்கும் மாரியம்மனுக்கும், மாரியம்மனுக்கும் பிரபாகரனுக்கும், நடிகர் விஜய் முதல் காந்த் வரை. சேகுவேரா முதல் இரட்டைமலை சீனிவாசன், தோழர் திருமாவளவன் ஆகியவர்களுக்கும் இந்துமதப் பண்டிகையில் மாரியம்மன் திருவிழாவில் ஏதாகிலும் ஒருவராக தொடர்பு உண்டா? இதுபோன்ற அவல நிலையில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இதை அனுமதித்தால், இதுபோன்ற நிகழ்வுகளை கண்டும் காணாமல் போனால் (இந்து மதவாதிகளிடமிருந்து அம்பேத்கர் தன்னை இந்து அல்ல என்று உதறி எரிந்துவிட்டு வெளியே வந்தார்.) இந்த புதிய இந்துக்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே எதிர்காலத்தில் இந்து மதத்தின் தலைவர் அம்பேத்கர் என்று சொல்லும் நிலை (அ) கொண்டாடும் நிலை வரும் என்பது எதிர்கால எச்சரிக்கை.

டாக்டர் அம்பேத்கர் தலைசிறந்த ஆராய்ச்சியாளர், புகழ்பெற்ற சட்ட நிபுணர், ஆரியத்தையும் ஆபாச இதிகாச புராணங்களை வேரறுத்த புரட்சியாளர் அவருக்கு ஈடு அவரேதான். எனவே கடவுள் படங்களையும் வைத்துக்கொண்டு அம்பேத்கர் அவர்களின் படங்களையும் வைத்துக்கொண்டிருந்தால் இதைவிட நாம் அம்பேத்கர் அவர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம் வேறு இருக்க முடியாது.

அம்பேத்கரின் முழக்கங்கள் கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்னும் மூன்று. இதில் முதலாவது கற்பி என்பது. ஆனால் இதனைப் பின்பற்றுவோர் எங்கே என்று கேட்கும் நிலையே உள்ளது என்பதற்கு இந்தப் படங்களே சாட்சி. அம்பேத்கர் படத்தை போட்டுக் கொள்வோர் முதலில் அம்பேத்கர் வரலாற்றைப் படிக்க வேண்டாமா?

உமக்குத் தேவை அம்பேத்கரா? இல்லை இந்துமதமும் அதன் கடவுளுமா என்று முடிவுசெய்யுங்கள்!


 

வழிகாட்டும் பணி

கோவில் திருவிழாக்களில் அம்பேத்கரை அவமதிக்கும் பதாகைகளைப் பற்றிய செய்தியைப் படித்திருப்பீர்கள். அதே போன்ற திருவிழாக்களில் ஒரு சிறந்த முன்னுதாரணப் பணியை கிராமத்திலிருந்து ஊர் கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்க வேண்டும் என்று கேட்ட நண்பர்களுக்காக, சென்னையில் இருக்கும் சகோதரர்களான சசி, சிறீதர் ஆகியோர் செய்து அனுப்பியுள்ளனர், அந்த  விளம்பரப் பதாகை இதோ:

“சாதி என்பது ஒருவித மனநோய். இந்த நோய்க்கான ஆணிவேர் இந்துமத போதனைகளே ஆகும். சாதிக்கு ஆதாரம் கடவுள்; எனவே அதனை ஒழிக்க வேண்டும். பவுத்தத்தில் சமத்துவம் தான் அடிப்படைக் கொள்கை. – புரட்சியாளர் அம்பேத்கர்” என்ற வாசகங்களுடன் அந்த பதாகையை வடிவமமைத்து கட்டியுள்ளனர். இது மகிழ்ச்சிக்குரிய ஒன்று தான் என்றாலும், பெரும்பாலான இடங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *