வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்

கட்டுரைகள் ஜுன் 16-30 2024

பகுதி 2
(ஆ) சமத்துவம், கண்ணியம், சகிப்புணர்வு

1. இனவாதம், இனப்பாகுபாடு, இனவெறுப்பு முதலான சகிப்பின்மையும் சகிப்பின்மையின் பிற உருவங்களும்

19. சர்வதேச சமுதாயத்தைப் பொறுத்தவரையும் மனித உரிமைத்துறையில் உலகு தழுவிய அளவிலான நிகழ்ச்சித் திட்டத்துக்கும் இனவாதமும் இனப் பாகுபாடும் ஒழிக்கப்பட வேண்டியது முதல் நோக்கமாக அமைய வேண்டுமென இம்மாநாடு கருதுகிறது. அதிலும் குறிப்பாக சமூக வாழ்வின் அம்சமாகவே நிலைநிறுத்தப்பட்டுவிட்ட நிறவெறி போன்ற அம்சங்களும் தத்துவ அடிப்படையிலான மேலாண்மை இனவழி உயர்வு, தனிப்படுத்தப்படல் (exclusivity) இனவாதத்தின் தற்கால உருவங்கள் வெளிப்பாடுகள் ஆகியவை அழிக்கப்படவேண்டும்.

20. எல்லாவித உருவங்களிலும் வெளிப்பாடுகளிலும் தோன்றும் இனவாதம் இன வெறுப்பு, இவை சம்பந்தப்பட்ட சகியாமை ஆகியவற்றைத் தடுத்துப் போராட உடனடி நடவடிக்கை எடுக்குமாறும், இத்துறையில் வலுவான கொள்கைகளை உருவாக்குமாறும் எல்லா அரசாங்கங்களையும் இம்மாநாடு வற்புறுத்துகிறது. தேவைப்பட்டால் இதற்காக தண்டனைக்கான வகையுரைகள் உட்பட தக்க சட்டங்களை இயற்றுமாறும், இத்தகைய எதிர்ப்புக்காக தேசிய நிறுவனங்களை ஏற்படுத்துமாறும் வலியுறுத்துகிறது.

22. சிந்தனை, சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம், மத சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டென்பதை ஒப்புக்கொண்டும் தத்தம் சர்வதேசக் கடப்பாடுகள் நிமித்தமும், தத்தம் சட்ட அமைப்பு களுக்குரிய மதிப்பு கொடுத்து, மகளிர்க்கெதிரான பாகுபாட்டுப் பழக்கங்கள், வழிபாட்டிடங்களைத் தூய்மை கெடுத்தல் முதலியன உள்ளிட்ட மத அல்லது நம்பிக்கை அடிப்படையிலான சகியாமை, அது குறித்த வன்முறை ஆகியவற்றுக்கெதிரான தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கங்களை இம்மாநாடு வேண்டுகிறது…

23. (குறிப்பிட்ட பிரிவினரை ஒட்டுமொத்தமாகத் தீர்த்துக்கட்டுவதன் மூலம்) ‘இனத்தைத் தூய்மைப்படுத்துகிற’ வகையான குற்றங்களைச் செய்கிறவர்களும், அத்தகு பாதகச் செயல்களை அனுமதிப்போரும் அந்தந்த நபர்களே அதற்குப் பொறுப்பாக்கப்பட்டு அத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு விளக்க மளிக்க வேண்டியவராக்கப்படவேண்டும். பன்னாட்டுச் சமுதாயம் அத்தகைய மீறல்களுக்கு சட்டபூர்வமான பொறுப்பேற்க வேண்டியவர்களை நீதியின் பிடிக்குள் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளவேண்டும்.

24. இனத்தூய்மைப்படுத்தலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர, அதை எதிர்த்துத் தனியாகவும், ஒருவரோடொருவர் சேர்ந்தும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இந்த மாநாடு அரசுகளனைத்தையும் கேட்டுக் கொள்கிறது. அருவருப்பூட்டும் இந்த ‘இனத் தூய்மைப்படுத்தல்’ பழக்கத்துக்கு இரையான மக்கள் பலனளிக்கக் கூடிய, தகுந்த நிவாரணத்துக்கு உரியோர் ஆவார்.

2. தேசிய இனவழியான, மத-மொழி சிறுபான்மையினர்

26. தேசிய-இனவழியான-மத-மொழி சிறுபான்மையினர் உரிமை பற்றிய பிரகடனத்துக்கு இணங்க அத்தகைய சிறுபான்மையரின் உரிமைகளைப் பேணவேண்டும், பாதுகாக்க வேண்டும் என்று உலக (நாடுகள்) சமுதாயத்தையும் அரசுகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

27. தேவையான இடங்களிலெல்லாம் தத்தம் நாட்டின் அரசியல் – பொருளாதார – சமூக கலாச்சார வாழ்விலும் பொருளாதார முன்னேற்றத்திலும் எல்லாவகையிலும் அத்தகைய சிறுபான்மையினர் முழுப்பங்கேற்க வகை செய்யும் நடவடிக்கைகளும் இதில் அடங்க வேண்டும்.

31. ஆதிக்குடிகள், சமூகவாழ்வின் எல்லா அம்சங்களிலும், குறிப்பாக தாம் சம்பந்தப்பட்ட அம்சங்களில், முழுமையாகவும் சுதந்திரமாகவும் பங்கெடுக்க அரசுகள் உறுதி செய்யவேண்டுமென்று மாநாடு வேண்டுகிறது.

33. எல்லா புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள், அவர்தம் குடும்பத்தாரின் உரிமைகள் ஆகியவற்றின் பாதுகாப்பினை அரசுகள் உறுதி செய்யவேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

34. புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் அவர்கள் வசிக்கும் நாட்டின் பிற மக்களுக்கும் அதிகப்படி இணக்கத்தையும் சகிப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கதென்று இந்த மாநாடு கருதுகிறது.

4. குழந்தைகளின் உரிமைகள்

47. உலகளாவிய உச்ச நடவடிக்கைத் திட்டத்தின் இலட்சியங்களை அடைவதற்கான நடவடிக்கைகளை வசதிவாய்ப்புகளுக்கு ஏற்ப, உயர்ந்தபட்ச அளவுக்கு, பன்னாட்டுக் கூட்டுறவுடன் மேற்கொள்ளுமாறு எல்லா நாடுகளையும் மாநாடு வலியுறுத்துகிறது. தமது தேசிய நடவடிக்கைத் திட்டத்தில், ‘குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை’யையும் உட்பொதியுமாறு ஒருங்கிணைத்துக் கொள்ளுமாறு இந்த மாநாடு அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது. இவ்வகை தேசிய நடவடிக்கைத் திட்டங்கள் மூலமும், சர்வதேச முயற்சிகள் மூலமும், தாய்சேய் உயிரிழப்பு விகிதங்களையும் சத்துணவுக் குறைவு, கல்லாமை ஆகியவற்றின் விகிதங்களையும் குறைக்கவும் பாதுகாப்பான குடிநீர், அடிப்படைக்கல்வி ஆகியவை கிடைக்கச் செய்யவும் குறிப்பிடத்தக்க முன் முக்கியத்துவம் தரப்படவேண்டும். தேவை நேரும் இடங்களிலெல்லாம் தேசிய நடவடிக்கைத் திட்டங்கள் இயற்கைப் பேராபத்துகளிலிருந்தும், ஆயுதப் போராட்டங்களிலிருந்தும் ஏற்படும் பேரழிவூட்டும் நெருக்கடிகளுக்கெதிராகப் போரிடவும் இவற்றுக்கிணையாக எல்லை மீறிய வறுமையில் வாடும் குழந்தைகளின் துயரங்களுக் கெதிராகப் போரிடவும் வகை செய்யவேண்டும்.

48. சர்வதேசக் கூட்டுறவுடன் கடுமையான சிரம சூழ்நிலைகளுக்கு ஆளாகியிருக்கிற குழந்தைகளின் மோசமான பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டுமென எல்லா அரசுகளையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. குழந்தைகளுக்கெதிரான சுரண்டல், குழந்தைகளைத் தவறாக நடத்துதல், ஆகியவற்றுக்கெதிராக வலுவாகப் போராட வேண்டும். அவற்றின் அடிப்படைக் காரணங்களை ஆராயவேண்டும். பெண் சிசுக்கொலை, குழந்தைத் தொழிலாளர் கொடுமை, குழந்தைகளை விற்றல், உடலுறுப்புகளை விற்றல், குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தல், ஆபாச நூல்களுக்குப் பயன்படுத்தல், போன்ற பிற பாலியல் கொடுமைகளுக்கெதிராக பயனுள்ள நடவடிக்கைகள் தேவை.

49. பெண் குழந்தைகளின் மனித உரிமைகளைப் பேணுவதையும் வெற்றிகரமாகப் பாதுகாப்பதையும் உறுதி செய்வதற்காக அய்.நா மற்றும் அதன் சிறப்பமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் இந்த மாநாடு ஆதரிக்கிறது. பெண் குழந்தைகளுக்கெதிரான பாகுபாடுகளுக்கு ஆதரவாகவும் அவர்களுக்கு இன்னல் விளைவிப்பதாகவும் உள்ள சட்டங்களையும் விதிமுறைகளையும் நீக்குமாறும் பழக்கவழக்கங் களை அகற்றுமாறும் இம்மாநாடு எல்லா அரசுகளையும் வற்புறுத்துகிறது.

50. ஆயுதப் போர்களின்போது குழந்தைகள் பாதுகாப்பை வலுப்படுத்தும் வழிகளைப் பற்றி ஆராய அய்.நா. பொதுச் செயலர் ஓர் ஆய்வினைத் துவக்க வேண்டும் என்ற கருத்தினை இம்மாநாடு வலுவாக ஆதரிக்கிறது. போர்ப் பகுதிகளில் குழந்தைகளுக்கு உதவி கிட்டுமாறு செய்யவும், பாதுகாப்பளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; மனித நேய நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப் படவேண்டும். போர்க் கருவிகளை, அதுவும் ஆட்கொல்லி கண்ணிவெடிகளை, சகட்டு மேனிக்குப் பயன்படுத்துவதிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் அவற்றில் இருக்கவேண்டும். போரினால் மனமுறிவு ஏற்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கும், கவனிப்புக்குமான தேவைகள் விரைந்து கவனிக்கப்பட வேண்டும். படைகளுக்கு ஆள்சேர்ப்பதில் குறைந்த பட்ச வயதினை உயர்த்துவது பற்றி ஆராயுமாறு குழந்தைகள் உரிமைகள் பற்றிய குழுவினை இந்த மாநாடு வேண்டுகிறது.

5. சித்திரவதையிலிருந்து விடுதலை

57. எனவே, சித்திரவதை செய்யும் பழக்கத்துக்கு உடனடியாக முடிவுகட்டும்படியும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தையும் இதர ஆவணங்களையும் செயல்படுத்துவதன் மூலமும், தேவைப்படுமிடங்களில், இப்போதுள்ள ஏற்பாடுகளை வலுப்படுத்துவதன் மூலமும் இந்தத் தீமையைக் காலகாலத்துக்குமாக ஒழித்துக்கட்டுமாறும் எல்லா அரசுகளையும் இம்மாநாடு வற்புறுத்துகிறது.

62. அய்.நா. பொதுச்சபை ‘காணாமற் போக்கடிக்கப்பட்ட அனைவரது பாதுகாப்புக்குமான’ பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதை வரவேற்கும் இம்மாநாடு ‘கட்டாயமாய்க் காணாமற் போகவைக்கும்’ செயல்களைப் புரிவோரின் நடவடிக்கைகளை தடுக்கவும், நிறுத்தவும், தண்டிக்கவும் எல்லா அரசுகளும் பலனுள்ள நிருவாக நடவடிக்கைகளும் சட்டமியற்றல்களும், நீதித்துறை நடவடிக்கைகளும் எடுக்கவேண்டுமெனவும் கோருகிறது. எந்தச் சூழ்நிலையிலும், அவர்களது எல்லைக்குட் பட்ட மண்ணில் அத்தகைய காணாமல்போக வைத்தல் நிகழ்ந்திருக்கலாமென்று நம்புவதற்குக் காரணமிருந்தால், அதுபற்றி விசாரணை நடத்துவதும், அத்தகைய குற்றச்சாட்டு ஏதும் நிரூபணமானால் குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர்வதும் எல்லா அரசுகளுக்கும் உள்ள கடமை என்று இம்மாநாடு மீண்டும் உறுதியிட்டுரைக்கிறது.

6. ஊனமுற்றோர் (மாற்றுத் திறனாளர்)உரிமைகள்

63. எல்லா மனித உரிமைகளும், அடிப்படைச் சுதந்திரங்களும் உலகளாவியவை. ஆகவே எந்த விலக்குமின்றி ஊனமுற்றோர்க்கும் அவை உரியவை என்று இம்மாநாடு மீண்டும் உறுதியிட்டுரைக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், நல்வாழ்வுக்கும், கல்விக்கும் வேலைக்கும், தற்சார்ந்த வாழ்வுக்கும், சமூகத்தின் சகல துறைகளிலும் துடிப்பாகப் பங்காற்றவும் அனைவருக்கும் சமவுரிமை உண்டு. எனவே ஊனமுற்ற ஒருவருக்கெதிரான நேரடியான பாகுபாடும் சரி, எதிர்மறையான ஊறுவிளைக்கும் வித்தியாசப்படுத்தலும் சரி, அவரது உரிமையை மீறுவதாகும். இந்தப் பத்தியில் கூறும் உரிமைகளும் இன்னபிற உரிமைகளும் கிட்டுவதை உறுதிசெய்யும் வகையில், தேவைப்படுமிடங்களிலெல்லாம் சட்டங்களில் தக்க ஏற்பாடுகள் செய்தோ அனுசரணைகளை ஏற்படுத்தியோ வழிசெய்யுமாறு அரசாங்கங்களை இந்த மாநாடு வேண்டிக்கொள்கின்றது.

64. ஊனமுற்றோருக்கு எங்கும் இடமுண்டு. பொருள் ரீதியாகவோ, நிதிப்பற்றாக்குறையோ, சமூக அல்லது மனவியல் பூர்வமானதோ-சமூக நிர்ணயிப்புக்குட்பட்ட எவ்வகைத் தடைகளிருப்பினும், அவர்கள் சமூகத்தில் முழுமையாகப் பங்கெடுப்பதைக் குறைக்கவோ குலைக்கவோ செய்யும் தடைகளைத் தகர்த்து அவர்களுக்கும் சம வாய்ப்புத்தரப்பட வேண்டும்.

7. மனித உரிமைக் கல்வி

78. சமுதாயங்களிடையே நிலையானதும் நல்லிணக்கம் கொண்டதுமான உறவுகளை எய்தவும்-பேணவும், பரஸ்பர புரிந்துகொள்ளலையும் சகிப்புணர்வையும், அமைதியையும் ஏற்படுத்தவும் மனித உரிமைக் கல்வியும் மனித உரிமை பற்றிய பயிற்சியும், அதுசார்ந்த பொதுத் தகவல் அமைப்பும் அவசியத் தேவைகளென்று இம்மாநாடு கருதுகிறது.

79. அரசுகள் எழுத்தறிவின்மையை ஒழிக்கப் பாடுபடவேண்டும். மனித ஆளுமையின் முழுமேம்பாட்டை நோக்கியும், மனித உரிமைகள் அடிப்படைச் சுதந்திரங்கள் ஆகியவை மீதான மரியாதையை வலுப்படுமாறும் கல்வியை வழிப்படுத்த வேண்டும். பள்ளிகள் கல்லூரிகள் முதலானவற்றிலும் முறை சாராக் கல்வியிலும் மனித உரிமைகள், மனிதநேயச் சட்டங்கள், மக்களாட்சி, சட்டத்தின் நேரிய ஆட்சி ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்குமாறு எல்லாக் கல்வி நிறுவனங்களையும் அரசுகளையும் இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

80. மனித உரிமைகள் மீதான கடப்பாடு உலகம் முழுதிற்கும் இருக்கிறது. அதனை வலுப்படுத்தும் வகையில் விழிப்பையும் பொதுஅறிவையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்காக, சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் உருவாக்கப்பட்டுள்ள ஆவணங்களில் கண்டுள்ளபடியாக, மக்களாட்சி சமாதானம் – மேம்பாடும் சமூக நீதியும் போன்றவை மனித உரிமைக் கல்வியில் இடம்பெறவேண்டும்.

81. அய்.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டுக் கழகம் (யுனெஸ்கோ) ஏற்பாடு செய்த மனித உரிமையும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான பன்னாட்டு மாநாடு 1933 மார்ச் திங்கள் ஏற்றுக் கொண்ட மனித உரிமைக்கும் மக்களாட்சிக்குமான கல்வி குறித்த உலக நடவடிக்கைத் திட்டத்தையும் பிற மனித உரிமை ஆவணங்களையும் கருத்திற் கொண்டு இம்மாநாடு அரசுகளை மகளிரின் மனித உரிமைத் தேவைகளையும் குறிப்பாக மனதில் கொண்டு உயர்ந்த பட்சம் பரவலான மனித உரிமைக் கல்விக்கும், பொதுத் தகவல் பரிமாற்றத்துக்கும் உறுதியளிக்கக்கூடிய குறிப்பான திட்டங்களையும் நடைமுறைக் கொள்கைகளையும் தீட்டுமாறு கேட்டுக் கொள்கிறது.

82. பன்னாட்டு அமைப்புகள், தேசிய நிறுவனங்கள், அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றின் உதவியுடன், அரசுகள் மனித உரிமைகள் பற்றியும் பரஸ்பர சகிப்புத் தன்மையையும் பற்றிய விழிப்புணர்வை வளர்க்க வேண்டும். அய்.நா. நடத்திய மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பொதுத் தகவல் பிரச்சாரத்தை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது. அரசுகள் மனித உரிமைக் கல்வியை ஆரம்பிக்க வேண்டும், ஆதரவளிக்க வேண்டும். இத்துறையில் பொதுத் தகவல் பரிமாற்றத்துக்கும் பயனுள்ள வகையில் ஏற்பாடுகள் செய்யவேண்டும். மனித உரிமை தொடர்பான கல்விக்கும் பயிற்சிக்கும் அரசுகள் எந்த உதவி கேட்பினும் அய்.நா.வின் அறிவுரைப் பணிக் குழுக்களும், தொழில் நுட்ப உதவித் திட்டங்களும் உடனடியாக உதவ சக்தியுள்ளவையாக இருக்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமை ஆவணங்களிலும் மனித நேயச் சட்டங்களிலும் குறிப்பிட்டுள்ள தர நிர்ணயிப்புகள், இராணுவம், சட்டத்தை நிறைவேற்றும் அதிகார அமைப்புகள், காவல்துறை, சுகாதாரத்துறை போன்ற முக்கியமான அமைப்புகளில் அவற்றைச் செயல்படுத்தும் தனிமுறைகள் பற்றிய கல்வி, பயிற்சித் தேவைகளிலும் அய்.நா.வின் மேற்சொன்ன அமைப்புகளின் உடனடி உதவி கிட்டவேண்டும். இத்தகைய கல்வி நடவடிக்கைகளை வளர்க்கவும், ஊக்குவிக்கவும், மய்யப்படுத்தவுமான நோக்கத்தில் ‘அய்.நா. மனித உரிமைக் கல்வியின் பத்தாண்டு’ என்ற ஒன்றைப் பிரகடனப்படுத்துவது பற்றியும் சிந்திக்க வேண்டும். (முற்றும்)