மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சாதித்த மாணவி
மின்சார வசதி இல்லாத குடிசை வீட்டில் படித்து 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்த மாணவியின் வீட்டிற்கு உடனடியாக இலவச மின்இணைப்பு வழங்கி தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகில் உள்ள புத்தூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலா. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருடைய இணையர் சுதா. இவர்களின் மகள் துர்காதேவி. கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.
இவ்வாண்டில் நடந்து முடிந்த 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் இவர் 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும் திருவாரூர் மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து வாகை சூடியுள்ளார். துர்காதேவி வீட்டில் மின்சார வசதி இல்லை. மெழுகுவத்தி மற்றும் செல்போன் டார்ச் விளக்கு வெளிச்சத்தில் படித்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
வெற்றி குறித்து மாணவி துர்காதேவி கூறுகையில், ‘நான் 6ஆம் வகுப்பு முதல் கொரடாச்சேரி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறேன். நாங்கள் குடிசை வீட்டில்தான் வசித்து வருகிறோம். எங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை. எனவே நான் மெழுகுவத்தி மற்றும் செல்போன் டார்ச் விளக்கு வெளிச்சத்தில்தான் தினமும் படிப்பேன். எனது பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அளித்த ஊக்கம் காரணமாகவே நான் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. இதற்காக அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவிகித இடஒதுக்கீட்டைப் பயன்படுத்தி நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராக வேண்டும் என்பதே என் இலட்சியம். எங்கள் வீட்டின் அருகில் மூன்று மின்கம்பங்கள் நட்டி மின்இணைப்புப் பெற வேண்டியுள்ளது. அதற்கான பொருளாதார வசதி எங்களிடம் இல்லை. எனவே, தமிழ்நாடு அரசு எங்கள் வீட்டிற்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மாணவியின் நெகிழ்ச்சி கலந்த கோரிக்கை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மூலம் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதில் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டார். இதன்பேரில் மாணவி துர்காதேவியின் குடும்பத்திற்கு அய்ந்தே நாட்களில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவியும் அவரது பெற்றோரும் மகிழ்ச்சியில் திளைத்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
படிப்புக்கு ஏழ்மை ஒரு தடையில்லை; முயன்றால் முடியாதது எதுவுமில்லை; விடாமுயற்சியுடன் இலட்சிய நோக்கம் கொண்டு படித்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த மாணவியின் சாதனை அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் உந்து சக்தியாகத் திகழும் என்பதில் அய்யமில்லை.