தமிழ்மொழி தமிழினம் தமிழ்நா டென்றும்
அமிழா நெடும்புகழ் அடைந்திட வாழ்வில்
பெரியார் அண்ணா பீடுசால் நெறியில்
சரியாய் அய்ந்து முறையாய் ஆண்டவர்
தரணி புகழும் தமிழினத் தலைவர்!
பரணி இலக்கணப் பாட்டுடைக் குரிசில்!
அஞ்சுகம் முத்து வேலரின் செல்வன்
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும்
உயரிய குணமும் ஒருங்கே சான்ற
அயரா உழைப்பினர்; ஆளுமை மிக்கவர்;
குறளோ வியமும் வள்ளுவர் கோட்டமும்
குறளார் தமக்கே குமரியில் சிலையும்
படைத்த முதல்வர்; பகைவர் விளைத்த
தடைகள் யாவையும் தகர்த்த அரிமா!
திருப்பு முனையைத் திரையுல கத்தில்
விருப்புடன் நல்கிய வினைத்திறம் மிக்கார்!
நெருக்கடி கால நெருப்பாற் றினிலும்
இருப்பை, மதிப்பை இருத்திய சொற்கோ!
சமூக நீதி தழைத்திட உழைத்தவர்!
நமதின மேன்மை நயந்தவர்; நாளும்
உரத்த சிந்தனை உடன்பிறப் பினர்க்கே
முரசொலி ஏட்டில் முத்திரை பதித்தவர்!
பார்ப்பன எதிர்ப்பை, பகுத்தறி வொளியை
பார்க்குள் அனைவரும் சமநிலை என்பதை
சந்தி சிரிக்கும் சழக்கர் பேசிடும்
இந்தித் திணிப்பை எதிர்ப்போம் என்பதை
முன்னர் முழங்கிய மொழிப்போர் மறவர்!
தன்மா னத்தைச் சுயமரி யாதையைத்
தன்னுயிர் மூச்சென எண்ணி வாழ்ந்தவர்!
இன்னல் எதிர்வரின் வருந்தார்! கலங்கார்!
மிகுபுகழ்ச் செந்தமிழ் மொழிக்குச் செம்மொழித்
தகுதியும் கிடைத்திடச் செய்தவர்! போற்றும்
கன்னித் தமிழின் காவலர் கலைஞர்
என்றும் மணப்பார் தமிழர் நெஞ்சிலே!
– முனைவர் கடவூர் மணிமாறன்