நகர்நோக்கிய இடப்பெயர்வு நம் பார்வையில்!

2024 கட்டுரைகள் மே16-31,2024

-…- குமரன் தாஸ் -…

விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று காந்தியார் சொன்னார் என்பார்கள். உண்மைதான். இன்றளவும் இந்தியா ஓர் விவசாய நாடுதான். நமது மக்கள்தொகையில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால், அவர்களுடைய கோரிக்கையையும் போராட்டத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணிக்கிறது என்பது வேதனையானது.

அந்த விவசாயம், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 99.9% பார்ப்பனரல்லாத மக்களின் தொழிலாக இருப்பதை அனைவரும் அறிவர். மேலும் வறட்சி அல்லது புயல் மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள், இடுபொருள் விலையேற்றம், விளைபொருள்களுக்கேற்ப கட்டுபடியாகாத விலை, விவசாயம் எந்திரமயமாக்கல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகளும், விவசாயக் கூலிக்காரர்களும் கிராமத்தை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களில் குடியேறுதலும், பிற தொழில்களுக்கு மாறுவதும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு இலவச மின்சாரம், மானியங்கள், விவசாயக் கடன் தள்ளுபடி போன்றவற்றை மாநில அரசு நடைமுறைப்படுத்தி வருவதையும் நாமறிவோம்.

இன்றைக்கு தென்மாவட்டக் கிராமங்கள் பலவற்றில் மக்கள் இல்லாமல் வீடுகள் பூட்டிக் கிடப்பதைக் காண்கிறோம். இதனை ஓர் அவலமாக அல்லது எதிர்மறை நிகழ்வாகக் கற்பிக்கும் போக்கு இங்கு நிலவுகிறது. அவ்வாறு பார்க்க வேண்டியதில்லை என்று தோன்றுகிறது.
இயல்பான சமூக வளர்ச்சிப் போக்கின் தவிர்க்க இயலாத விளைவுகளும் இதனுள் உண்டு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும் கூட பல நூறு வீடுகள் ஆளில்லாமல் பூட்டிக் கிடக்கின்றன. அவ்வீடுகளில் வசித்த மக்கள் பெரு நகரங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ குடிபெயர்ந்து விட்டதை நாம் காண்கிறோம். இதனைச் சமூகப் பொருளாதார வளர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் நாம் கிராமத்து மக்களின் வெளியேற்றத்தை மட்டும் விவசாயத்தின் பின்னடைவாக, அல்லது சீரழிவாக மட்டும் ஏன் பார்க்க வேண்டும்?

எடுத்துக்காட்டாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்த குடும்பங்கள் பல தங்களது மிகப் பெரிய அழகிய மாட மாளிகைகளை விட்டு விட்டு சென்னையிலோ அல்லது பிற மாநிலங்களிலோ குடியேறி அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் போய் வசிக்கின்றனர். இன்னும் பலர் வெளிநாடுகளுக்கும் சென்று குடியேறி விட்டனர். காரைக்குடியில் உள்ள அவர்களது மாளிகைகள் பல பராமரிப்பு இன்றியும் ஆள் அரவம் இன்றியும் அல்லது வயதானவர்கள் காவல்காரர்களாக மட்டுமே வசிக்கும் நிலையில் உள்ளதைக் காண்பது வருத்தமளிக்கக் கூடியதுதான். ஆனால் பிள்ளைகள் உயர் படிப்பைப் படித்து அதற்கேற்ற நவீன வேலைகள் கிடைத்து மாநகரங்களுக்கோ, பிற மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டிய சூழலில் வயதான பெற்றோரும் உடன் சென்று விடும்போது வீடுகளோ நிலங்களோ இதுபோல அநாதைகளாவது தவிர்க்க முடியாத ஒன்று தானே!

இதுபோலத்தான் கிராமப்புறத்திலும் குழந்தைகளின் கல்வி, வேலை ஆகியவற்றை முன்னிட்டு அருகில் உள்ள சிறு அல்லது பெருநகரங்களில் குடியேறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக இன்றைக்கு காரைக்குடியில் குடியிருக்கும் பெரும்பான்மையோர் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களே ஆவர். இதன் காரணமாக அவர்களது பூர்வீகக் கிராமத்தில் வீடுகளும் நிலபுலங்களும் பராமரிப்பு இன்றிக் கிடக்கின்றன.

இவை எல்லாமே சமூக வளர்ச்சியின் விளைவுகளே ஆகும். மேலும் நமது தமிழ்நாட்டு மக்கள் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக புகழ்பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ள நகரங்களை நோக்கி இடம்பெயர்தல் நடை பெறுவதாலும் இந்நிலை ஏற்படுகிறது.
ஆனால், இதனை தமிழ்நாடு முழுவதும் முதலில் துவங்கியவர்கள் பார்ப்பனர்களே ஆவர். அவர்கள் தான் தமிழ்நாட்டுக் கிராமங்களையும் அங்கே தாம் பூஜை செய்து வந்த கோயில்களையும் கடவுள்களையும், தமது வீட்டையும் நிலத்தையும் விட்டு விட்டு நவீனக் கல்வி, வேலை, அரசதிகாரம் ஆகியவற்றை நோக்கி நகர்ந்தனர்.

அவர்களது வீடுகளை வாங்கி இடைநிலை சமூகத்தினர் பலர் குடியேறினர், நிலங்களை இடைநிலை சமூகத்தினரும் பட்டியலின மக்களும் வாங்கி விவசாயம் செய்தனர். இந்த நிகழ்வுப் போக்கு மேலிருந்து கீழ் நோக்கி அடுத்தடுத்த சமூகத்தினரிடமும் படிப்படியாக நடைபெற்று வருகிறது. என்னவொரு முக்கியமான வேறுபாடு என்றால் இவ்வாறு கிராமத்தை விட்டு வெளியேறும் பார்ப்பனர்களின் அக்கிரகாரம், மற்றும் இடைநிலை சமூகத்தினரின் வீடுகளை விலைக்கு வாங்கி பட்டியலின மக்கள் குடியேறும் நிலையை மட்டும் இன்றும் நாம் காண முடிவதில்லை. அதே போலவே ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள காலனி/சேரியில் இருந்த மக்கள் பல்வேறு காரணங்களை முன்னிட்டு நகர்ப்புறம் நோக்கி நகர்ந்து விடும் நிலையில் அவர்களது வீடுகளைப் பிற (உயர்) ஜாதியினர் வாங்கி குடியேறுவதில்லை என்பதும் உண்மையாகும்.
ஆக, கிராமப்புற விவசாயத்தை விட்டு வெளியேறுதல் என்பதற்கான காரணங்கள் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாம், அதிகாரத்தை நோக்கிய இடப்பெயர்வு, முன்னேற்றத்திற்கான இடப்பெயர்வு, ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான சமத்துவம் நோக்கிய இடப்பெயர்வு என பல்வேறு காரணங்கள் உள்ளன. இத்தகைய சூழலில் தான் மீண்டும் கிராமத்திற்கு , விவசாயத்திற்குத் திரும்புங்கள் என்ற முழக்கமும், மாதம் 2 லட்சம் சம்பளம் தந்த அய்.டி. கம்பெனி வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்து ஆண்டுக்கு 50 இலட்சம் சம்பாதிக்கும் இளம் விவசாயி என்ற அட்டைப்படக் கட்டுரைகளையும் (பசுமை விகடன்), கார்ப்பரேட் முதலாளியை எதிர்த்து சண்டையிட்டு விவசாயத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடும் அமெரிக்க ரிட்டர்ன் கதாநாயகர்களையும் (தமிழ்த் திரைப்படங்களில்) அண்மை காலத்தில் மிகுதியாகப் பார்க்கிறோம்.

விவசாயி சேற்றிலே கால் வைத்தால் தான் நாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்ற வசனம் முன் எப்போதையும் விட இப்போது ஓங்கி ஒலிக்கிறது. மேலும் இந்த அறிவுரையானது படித்துப் பட்டம் பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த பார்ப்பனரல்லாத இளைஞர்களை நோக்கியோ அல்லது படித்து நல்ல வேலைக்குப் போய் முன்னேறத் துடிக்கும் எளிய கிராமப்புற பார்ப்பனரல்லாத இளைஞர்களை நோக்கியோ தான் சொல்லப்படுகிறது.
இந்த அறிவுரையைக் கேட்டு பார்ப்பன இளைஞர்கள் எவரும் வேலையை விட்டுவிட்டு நிலத்தில் இறங்கி கலப்பையைப் பிடித்து உழப்போவதில்லை, ஆடு மாடு மேய்த்து வாழ்க்கை நடத்தப் போவதுமில்லை. ஆகவே, விவசாயத்தைப் புனிதமாக்குவது, “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்…..” என்று திருவள்ளுவரைத் துணைக்கழைப்பது போன்ற செயல்கள் அனைத்தும் படித்து நவீன வாழ்க்கையை வாழத் துடிக்கும் கிராமத்துப் பிள்ளைகளை மீண்டும் கிராமத்திலேயே முடக்கிப் போட்டு பழைய வாழ்க்கை முறையில் மூழ்கடிக்க நினைக்கும் உயர் ஜாதிய, வர்க்கத் தந்திரமாகவே பார்க்க வேண்டியுள்ளது.

கிராமப்புறப் பிள்ளைகள் அதிக அளவில் உயர் கல்வி பயிலவேண்டும் என்ற நமது வலியுறுத்தல் வேளாண்மைக்கு எதிரானது அல்ல. வேளாண்மையில் அவ்வளவு பேருக்கும் வேலை வாய்ப்பும் இல்லை. எனவே, கைத்தொழில் செய்; வேளாண்மைத் தொழில் செய்; பட்டப் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற பிரச்சாரங்கள் அறியாமையின் விளைவு அல்லது அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடு என்பதை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

விவசாயம் புனிதமானது, உலகைக் காக்கும் உன்னதத் தொழில்! உலகத்திற்கே சோறு போடுபவன் விவசாயி! என்று எழுதிச் சம்பாதிக்கும் பத்திரிகையாளர்களும், இயற்கை விவசாயத்திற்கு ஆதரவாகத் திரைப்படம் எடுத்து கோடி கோடியாக கல்லாக் கட்டும் திரைத்துறையினரும், விவசாயத்தையும் ஆடு மாடு மேய்த்தலையும் அரசு வேலையாக்குவேன் என மேடையில் முழங்கும் அரசியல் தலைவர்களும் அவர்களின் பிள்ளைகளை முதலில் இப்புனிதமான விவசாயத்தைக் காக்கும் பணிக்கு அனுப்பி ஒரு 25 ஆண்டுகளுக்கு கிராமத்துப் பிள்ளைகளுக்கு விடுதலை அளித்து அவர்கள் படித்து பொறியாளர், மருத்துவர், அரசுத்துறைச் செயலாளர், நீதிபதி, பத்திரிகையாளர் போன்ற புனிதமற்ற வேலைகளைச் செய்து வயிறுவளர்க்க அனுமதிக்க வேண்டுகிறோம்.

கொஞ்சக் காலத்திற்கு உங்கள் பிள்ளைகளின் கால்கள் புனிதமான சேற்றில் இருக்கட்டுமே!