தன்னிகரற்ற பன்முக ஆற்றல்

ஆகஸ்ட் 01-15 உங்களுக்குத் தெரியுமா?

திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – மானமிகு கி.வீரமணி அவர்களின் ஆற்றலுக்கு பல்வகைப்பட்ட தனிச் சிறப்புகள் உண்டு.

ஒரு பத்திரிகையாளராக, தந்தை பெரியார் அவர்களின் அன்புக் கட்டளைப்படி விடுதலை நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நாள் முதல், தனது எழுத்துக்கள் மூலம் இயக்கத்தின் லட்சியங்களை, கொள்கைகளை முன்னிறுத்தி ஏற்றம் பெறச் செய்வதுடன், இயக்க ஏடுகளான விடுதலை,  உண்மை,  ‘The Modern Rationalist’ ஆகியவற்றில் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு  புதிது புதிதான பகுதிகளை உருவாக்கி அவற்றை பரிணமிக்கச் செய்வார். தான் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதியை படிப்பதற்கும், எழுதுவதற்கும், சிந்திப்பதற்குமே செலவிடும் பண்பாளர் இவர். எதையும் செய்யாமல் அவர் சும்மா இருப்பதையே காணமுடியாது. பயணம் செய்யும்போதும் கூட எதையாவது படித்துக் கொண்டோ, சிந்தித்துக் கொண்டோதான் இருப்பார். தனது அறிவைப் பற்றியோ ஆற்றலைப் பற்றியோ எள்முனையும் தன்முனைப்பு கொள்ளாத அவர், புதிய புதிய நூல்களைப் பயில்வதன் மூலம் மேலும் மேலும் தனது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளும் தாகம் மிகுந்தவராகவே விளங்குகிறார். என்றாலும் பேசும் போதெல்லாம், தனக்கு பெரியார் தந்த புத்தியே போதும்; சொந்த புத்தி தேவையில்லை என்று கூறத்தவறமாட்டார்.

பத்திரிகையில் புதிய பகுதிகள்

அது மட்டுமல்ல; தான் அறிந்தவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற பத்திரிகையாளர்களுக்கே உரித்தான உயர் பண்பையும்  பெற்று விளங்குபவர் அவர். அவர் விடுதலை இதழில் தொடர்ந்து எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும்.  அதே போன்று உங்களுக்குத் தெரியுமா? என்ற புதிய பகுதியில் The book of General Ignorance என்ற நூலில் இருந்த பல்வேறுபட்ட தகவல்களை மொழியாக்கம் செய்து விடுதலையில் தொடராக வெளியிடச் செய்தார். புதிது புதிதாக வெளிவரும் நூல்களைப் பற்றி இந்து ஆங்கில நாளிதழ் மற்றும் பிற இதழ்களிலிருந்து அறிந்து கொண்டு, அவற்றில் முக்கியமானவை எனத் தான் கருதும் நூல்கள் அனைத்தையும் வாங்கிப்படித்துவிடுவார்; அவற்றில் இருக்கும் உடன்பாடான கருத்துகளை தனது எழுத்திலும், பேச்சிலும் வெளிப்படுத்திவிடுவார். வெளிநாடுகளில் அவரை மிகவும் கவர்ந்த இடம் நூல் விற்பனை நிலையங்கள்தான்.

இயக்கத் தோழர்களின் அன்பு

தந்தை பெரியார் அவர்களைப் போலவே தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளிலும், குக்கிராமங்களிலும் இருக்கும் இயக்கத் தோழர்களைப் பற்றி நன்று அறிந்து வைத்திருக்கும்  அவரது நினைவாற்றல் வியக்கத் தக்கது.  தனது சொந்த பிரச்சினைகள் பற்றி ஒரு சாதாரண இயக்கத் தொண்டர் கடிதம் எழுதினாலும் அவரது பிரச்சினையைத் தீர்த்து வைக்க உதவுவார் அல்லது தக்க வழிகாட்டுவார். ஆதரவற்ற மூத்த பெரியார் தொண்டர்களுக்கு நிதி உதவி செய்து வரும் அவரது உள்ளம் வள்ளல்தன்மை கொண்டது. அவர் மீது இயக்கத் தோழர்களும், தொண்டர்களும் வைத்திருக்கும் பேரன்புக்கும், மரியாதைக்கும் அளவே இல்லை.

தமிழ், ஆங்கில நூலாசிரியராக . . .

தமிழிலும் ஆங்கிலத்திலும் எண்ணற்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார் தமிழர் தலைவர்.  அதில் குறிப்பிடத் தக்கது கீதையின் மறுபக்கம் என்ற தமிழ் ஆங்கில மொழிகளில் வெளிவந்துள்ள ஆராய்ச்சி நூலாகும். குறைந்த விலையில் இயக்கக் கருத்துகள் கொண்ட பிரசுரங்களை வெளியிடும் தந்தை பெரியார் அவர்களின் உத்தியைப் பயன்படுத்தி  2 ரூ, 5 ரூ  என்று மிகக் குறைந்த விலையில் ஏராளமான பிரசுரங்களை வெளியிடச் செய்வதன் மூலம், இயக்கக் கருத்துகள் எளிதாக மக்களிடையே பரவச் செய்கிறார். அதே போன்று தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், கருத்துகள் உலகெங்கும் பரவும் வண்ணம் அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடச் செய்துவருகிறார்.

பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்

இயக்கக் கொள்கைகளைப் பரப்புரை செய்ய இதழ்கள், நூல்களைப் பயன்படுத்துவது போலவே, பொதுக் கூட்டங்களையும், மாநாடுகளையும் தமிழர் தலைவர் ஆக்க பூர்வமாகப் பயன்படுத்தி வருகிறார். நாட்டையும், மக்களையும் பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினை எழுந்தாலும்,  பொதுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் ஏற்பாடு செய்து நடத்தி அவற்றின் மூலம் அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவார். மண்டல மாநாடுகள், சிறப்பு மாநாடுகள், வட்டார மாநாடுகள் என்று மாநாடுகள் ஆண்டு முழுவதும் நடந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மாநாட்டிலும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தவறாமல் இருக்கும். அதே போல பெரியாரியல் பயிற்சி முகாம்கள் ஆண்டுதோறும் குற்றாலத்திலும், ஆண்டு முழுவதிலும் மற்ற வட்டாரங்களிலும் நடத்தப்பட்டு மாணவர்கள், இளைஞர்களுக்கு பெரியார் அவர்களின் கருத்துகள், கொள்கைகள் அறிமுகப்படுத்தி வைக்கப்படுகின்றன.

அதே போல பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலம் விஜயவாடா போன்ற இடங்களிலும் அமைக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்து தருவார்.

தமிழர் தலைவரின் சாதனைகள்

அவர் படைத்துள்ள சாதனைகள் ஏராளம். பத்து வயதில் மேடையேறி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய அவர் தனது 79 வயதில் 69 வயது பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். உலகிலேயே பகுத்தறிவு நாளிதழாக வெளிவருவது நமது விடுதலை ஏடு மட்டும்தான். இந்த ஏட்டிற்கு ஆசிரியராக இருந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள தமிழர் தலைவர் அவர்கள்தான் ஒரு நாளிதழுக்கு நீண்ட காலமாக ஆசிரியராக இருந்தவர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

தமிழர் தலைவரின் பன்முகப் பொறுப்புகளும் கடமைகளும்

ஒரு அரசியல் தலைவரைவிட, ஓர் அமைச்சரை விட அதிக பொறுப்புகளை ஏற்று கடமையாற்றி வரும் தலைவர் தமிழர் தலைவர். கல்வி நிறுவனங்களின் நிர்வாகம் ஒரு புறம், அறக்கட்டளைகளின் நிர்வாகம் ஒருபுறம், இயக்க அமைப்பு நிர்வாகம் ஒரு புறம், நாளிதழ், பத்திரிகைகள் வெளியிடும் பணி ஒரு புறம், புதிய புதிய இயக்க நூல்களைப் பதிப்பித்து வெளியிடும் பணி ஒரு புறம், இயக்கக் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் பணி ஒரு புறம், தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை உலக மயமாக்கும் பணிகள் ஒரு புறம் என்று ஓய்வில்லாமல் உழைத்துவரும் ஒப்பற்ற தலைவர் தமிழர் தலைவர். அவர் காலத்தில் வாழ்ந்து அவருக்குக் கீழே பணியாற்றும் பேற்றினைப் பெற்றிருக்கிறோம் என்பதே நமக்குப் பெருமை அளிக்கும் செய்தியாகும்.

– த.க.பாலகிருஷ்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *