“நாள்தோறும் இரவு நேரத்தில் வானத்தையே உற்று நோக்கிகிட்டு இருக்கியே. என்னதான் பார்க்கிறாய்? எனக்கும் கொஞ்சம் காட்டேன்,” மாதவன் அருகில் வந்து கேட்டான் அவன் நண்பன் பாபு.
“வா பாபு”, என்று இரவுப் பொழுதில் தன் வீட்டுக்கு வந்த பாபுவை வரவேற்றான் மாதவன்.
அப்போது அவன் தன் வீட்டு மாடியில் நின்றுகொண்டு வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மாடியில் ஒரு தொலைநோக்கியையும் அமைத்திருந்தான். அதன் வழியாகவும் வானில் ஒளிரும் கோள்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நீயும் வானத்தைப் பாரேன். எவ்வளவு அழகாயிருக்கு! வானில் கொட்டிக் கிடக்கும் நட்சத்திரங்களையும், அவை கண்சிமிட்டும் அழகையும், நம்மோடு சூரியனைச் சுற்றி வரும் கோள்களையும் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதே!” என்றான் மாதவன்.
“ம்… இயற்கையை இரசிக்கிறாய்! அப்படித்தானே!” என்று கூறியபடியே பாபுவும் தொலைநோக்கி வழியாக நட்சத்திரங்களை நோட்டமிட்டான்.
மாதவன் தொடர்ந்து பதில் சொன்னான்.
“ஆமாம் பாபு. பார்த்து இரசிப்பதோடு நிறுத்திவிடக் கூடாது. அவற்றின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆய்ந்து, அறிவது அவசியம் அல்லவா?”
“மாதவா, அறிவியலாளர்கள் ஆய்வு செய்துகிட்டுதான் இருக்காங்க; அவங்க ஆராய்ச்சி செய்ஞ்சி எவ்வளவோ சொல்லியிருக்காங்க. நீதான் வானவியல் பாடம் படிக்கலையே.
நீ என்ன ஆய்வு பண்ணப்போறே?”
“தெரிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். வானை உற்று நோக்குதல் என்பது எனக்குப் பிடித்தமான ஒன்று. எனக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமே பிடித்ததுதானே! அதோ, அந்த நட்சத்திரங்களோடு கோள்களையும் பார்! அதோ, பிரகாசமாத் தெரிவது வியாழன்; மேலே மங்கலாக சிவப்பாகத் தெரிகிறதே அதுதான் செவ்வாய். எனக்கு மிகவும் பிடித்த கோள் செவ்வாய். அதுபற்றி நான் அதிகம் அறிந்து வருகிறேன். என்ன அழகான கோள் செவ்வாய்.
இதைச் சொல்லும் போது மாதவனின் முகம் மலர்ச்சியுடன் காணப்பட்டது. செவ்வாய்க் கோள் பற்றி அறிவதில் அவனுக்கு அவ்வளவு விருப்பம்.
“நமது பூமியும் ஒரு கோள்தானே? இதைவிட உனக்குச் செவ்வாய்க் கோள் பற்றி அறிய ஆர்வம் ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை. ரொம்ப நேரம் உற்றுப் பார்த்துகிட்டே இருக்கியே, கலிலியோ கலிலிபோல உனக்கும் கண்கள் குருடாயிடப் போவுது.”
“இத்தாலி நாட்டில் பைசா நகரத்தில் பிறந்த கலிலியோ கலிலி சூரியனை அதிக நேரம் பார்த்து ஆய்வு செய்தார். அவர் தன் வாழ்வின் இறுதி நாட்களில் கண்களை இழந்தார். ஆனால், இன்றும் உலகம் அவரைப் போற்றுகிறது. வான ஆய்வுக்கான தொலைநோக்கியை அவர்தான் கண்டுபிடித்தார். 1610இல் அவர் கண்டுபிடித்த தொலைநோக்கி மூலம் வியாழன்கோளின் நான்கு நிலவுகளை அவர் கண்டுபிடித்தார். சூரியன் நிலையானது. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் கருத்தை உறுதி செய்தார். இதனால் அவர் கண்ட பலன் சிறைவாசம். உலகில் வானியல் அறிஞர்கள் மதவாதிகளால் அவமானப்படுத்தப்பட்டார்கள்.”
“உண்மைதான் மாதவா, மதவாதிகள் அறிவியலையும் கண்டுபிடிப்பாளர்களையும் ஆதரிக்கவே இல்லை” அறிஞர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள்”, இதைச் சொன்ன மாதவனின் முகத்தில் கவலை தெரிந்தது.
“பிற்பாடு மதவாதிகள் மன்னிப்பும் கேட்டு விட்டார்கள். உலகில் அறிவியல் அறிஞர்கள் பலர் பல்வேறு கொடுமைகளை அனுபவித்திருக்கிறார்கள். நம் நாட்டிலும் நிறைய அறிஞர்கள் இருந்திருக் கிறார்களே மாதவா?”
“உண்மைதான். வானவியல் ஆய்வுகள் நிறையவே செய்திருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த பல அறிஞர்கள் மதிக்கப்படவில்லையே.”
”நீ யாரைச் சொல்கிறாய் மாதவா?”
“நிறையவே சொல்லலாம். உதாரணமாக ஜி.டி. நாயுடு. அவர் எவ்வளவோ அறிவியல் சாதனைகளைச் செய்தார். இந்தியாவின் எடிசன் என்று அவர் அழைக்கப்பட்டார். எப்படி கணித மேதை இராமானுஜம் அவர்களுக்கு எண்களின் மீதும் ஆர்வம் மேலிட்டதோ அதுபோல ஜி.டி. நாயுடுவுக்கு இயந்திரம் மீதும், தொழில்நுட்பம் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, பழச்சாறு பிழியும் கருவி, பிளேடு போன்ற பல பொருள்களை உருவாக்கினார். விவசாயத்திலும் பல சாதனைகள் செய்தார். 1893ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கலங்கல் என்னும் ஊரில் பிறந்த அந்த அறிஞர் ஊக்கப்படுத்தப்படவில்லை. அவரது கண்டுபிடிப்புகளுக்கு வரி விதிக்கப்பட்டது. ஒருநாள் அவர் கண்டுபிடித்த சாதனங்களை அவரே உடைத்தெறியவும் நேரிட்டது.”
“கணிதமேதை இராமானுஜம் உலகறிந்த மேதையாயிற்றே மாதவா!”
“ஆமாம் பாபு. மிகுந்த பக்தி நிறைந்த அவரை உலகறியச் செய்தவர் நாத்திகரான வெள்ளைக்காரர் பேராசிரியர் ஜி.எச். ஹார்டி என்பவர்தான். இராமானுஜம் அவர்களின் திறமையைக் கண்டு வியந்து அவரை இலண்டனுக்கு வரவழைத்து
எப்.ஆர்.எஸ்ஸாக உயர்த்தியவர் அந்தப் பேராசிரியர்தான். ஆனால், மேதை இராமானுஜம் அவர்கள் தனது 32ஆம் வயதிலேயே இறந்துவிட்டார். அதற்குக் காரணம் அவரது தாயாரின் மூடநம்பிக்கையும் ஒன்றாகும்.”
“அதெப்படி மாதவா?”
“சரியான சைவ உணவு கிடைக்காமல் மேதை இராமானுஜம் இலண்டன் மாநகரில் துன்பப்பட்டார். தனது மனைவி அங்கு வந்தால்தான் உடல்நலம் பெற்று நீண்ட காலம் வாழலாம் என நினைத்தார். ஆனால், அவர் தாயார் தனது மருமகளை இலண்டன் அனுப்ப மறுத்துவிட்டார்.”
“ஏன் மறுத்தாராம் மாதவா?”
“ஒரு ஜோசியக்காரன் இருவரும் சேர்ந்து இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டானாம். இந்த மூடநம்பிக்கைதான் அவர் உயிரை விரைந்து பறித்தது.”
“இதற்கு ஆதாரம் உண்டா மாதவா?”
“இராமானுஜம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்துள்ளது. அதில் இந்தச் செய்தி உள்ளது. மேலும் ரகமி என்பவர் எழுதிய ‘ராமானுஜம்’ என்ற புத்தகத்திலும் இந்தச் செய்தி உள்ளது. மூடநம்பிக்கைகளால் அறிவியல் வளராமல் போனது. அறிஞர்களை ஊக்கப்படுத்தியிருந்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு முன்பே நாமும் அறிவியலில் வளர்ச்சியடைந்திருப்போம். செவ்வாய்க் கோளுக்கு நாம் போய் வந்திருக்கலாம்“, என்று கூறி சிரித்தான் மாதவன்.
“செவ்வாய்க் கோளின் மீது சமூகவியல் படித்த உனக்கு எப்பவும் ஒரு காதல்தான் போல’’, என்று மாதவனைப் பார்த்துக் கேட்டான் பாபு.
“அறிவியல் படித்தால்தான் அறிவியல் மனப்பான்மை வரவேண்டும் என்பது இல்லை. அறிவியல் புத்தகங்கள் பலவற்றை இப்போது நான் நிறையவே படித்து வருகிறேன். தற்போது செவ்வாய்மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியவர் நிலவு மனிதர் என்று போற்றப்படும் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்தான்.”
“அது எப்படி மாதவா?”
“கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி சிங்கப்பூரில் ’பெரியாரும் அறிவியலும்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் இனிமேல் உலகம் என்று சொன்னால் அது நமது பூமி மட்டும் அல்ல, அதனோடு நமது நிலவு, செவ்வாய்க் கோள் ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் என்று சொன்னார்.”
“உண்மைதான் மாதவா. செவ்வாயைச் சிவப்புக் கோள் என்கிறார்களே.”
“ஆமாம் பாபு. அதற்குப் பல காரணங்கள் உண்டு. செவ்வாயின் மேற்பரப்பு இரும்பு ஆக்ஸைடு கொண்டது. ஆக்ஸிஜனேற்றச் செயல்முறைக்கு உட்பட்டதால் செவ்வாய்க்கோளின் மேற்பரப்பிலுள்ள பாறைகள் சிவப்பு நிறம் பெறுகின்றன. அதோடு செவ்வாய் மெல்லிய கார்பன்டை ஆக்ஸைடு வளி மண்டலத்தைக் கொண்டுள்ளது. சூரிய ஒளி அதை ஊடுருவிச் செல்லும்போது சிவப்பு நிறம் பெறுகிறது. மேலும் பல எரிமலைகள் வெடிப்பதாலும் சிவப்பு நிறம் பெறுகிறதாம். அதுமட்டுமல்லாமல் தூசிப் புயல்களாலும் சூரிய ஒளி சிதறியடிக்கப்பட்டு சிவப்புநிறம் கிடைக்கிறதாம்.
“மனிதன் அங்கு உயிர் வாழ முடியாதல்லவா?” என்று கேட்டான்.
“எதிர்காலத்தில் வாழும் சூழ்நிலை உருவாகலாம். மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சந்திரயான்-1 என்ற விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் உள்ளதை உறுதி செய்தார். அதுபோல செவ்வாயில் பல ஆய்வுகள் செய்து பல உண்மைகள் கண்டுபிடிக்கப் படலாம். நாசா அனுப்பிய பர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் இறங்கி ஆய்வு செய்து வருகிறது.
“சரி மாதவா, செவ்வாய்தான் உன் காதலி போலிருக்கு!
நாளை அலுவலகத்திற்குச் சென்று வேலையைப் பார்; செவ்வாயையே நினைத்துக் கொண்டிருக்காதே! அதோடு இல்லாமல் ரெண்டு ஆண்டுகளா பொண்ணு
பார்த்துக்கிட்டு இருக்க. சீக்கிரம் கல்யாணத்தை முடி. செவ்வாயையே கல்யாணம் பண்ணிக்க முடியாதல்லவா? என்று அவனைக் கிண்டலடித்துக் கொண்டே புறப்பட்டுச் சென்றான் பாபு.
ஒரு நாள் அலுவலகப் பணி முடிந்து வெளியே வந்த மாதவன் வீட்டுக்குச் செல்லுமுன் ஏதாவது சிற்றுண்டி சாப்பிடலாம் என நினைத்து ஓர் உணவு விடுதிக்குச் சென்றான். எதிரே உட்கார்ந்த இளம்பெண் அவனிடம் பேச முற்பட்டாள்.
“நீங்க மாதவன்தானே…?” என்று தயங்கியபடி கேட்டாள்.
“ஆமாம். நீங்க…?” என்று கேட்டான் மாதவன்.
“நான் விப்ரோவில் வேலை செய்கிறேன்,” என்று பதில் சொன்னாள் அவள்.
”நானும் அங்குதான் வேலை செய்கிறேன். உங்களை
நான் இதுவரை பார்த்ததில்லையே, என் பெயர் உங்க
ளுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் மாதவன்.
“கணினியில் மணமகள் தேவை பகுதியில் உங்களை
என் பெற்றோர் பார்த்தார்கள். அம்மா என்னிடம் காட்டினார்கள். உன் நிறுவனத்தில் தானே வேலை செய்கிறார் உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியாது என்று சொன்னேன். இப்போது உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்றாள்.
“உங்க பெயர்…?”
“என்னுடைய பெயர் செவ்வாய்ராணி.”
அவள் தன் பெயரைச் சொன்னதும் சற்றே திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் மாதவன்.
“செவ்வாய்ராணியா?” என அவள் பெயரை அவன் வாய் முணுமுணுத்தது.”
“ஆமாம்”, என்றாள் அவள்.
அப்போதுதான் அவளை முழுமையாக ஏறிட்டு நோக்கினான் மாதவன்.
“செவ்வாய்ராணி” மீண்டும் அவன் வாய் முணுமுணுத்தது.
“நான் விரும்பும் செவ்வாய் போலவே அழகான தோற்றம். ஆனால் கருத்த நிறம். அதனால் என்ன? நம் இனத்தின் நிறமே கருப்புதானே!”, என மனதுக்குள் எண்ணிக்கொண்டான்.
அவனது எண்ண ஓட்டத்தை அவள் புரிந்துகொண்டிருப்பாள் போலும்.
அவளது அழகிய உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.
“நீங்க உங்க அம்மாகிட்ட என்ன சொன்னீங்க?” என்று கேட்டான் மாதவன்.
“உங்களுக்குச் சரி எனப் பட்டால் பார்க்கலாம் என்றேன்” என்றாள்.
அதைக் கேட்ட மாதவன் உற்சாகமடைந்தான்.
“உங்க பெயர் வித்தியாசமாக உள்ளதே”, என்றான்.
“ஆமாம். நான் செவ்வாய்க்கிழமை பிறந்ததால் செவ்வாய்ராணி என்று பெயர் வைத்துவிட்டார்கள்”, என்று பதில் சொல்லிவிட்டு கலகலவெனச் சிரித்தாள்.
அவன்- வாய், “செவ்வாய்ராணி, செவ்வாய்ராணி”, என மெல்லியதாக முணுமுணுத்ததைக் கேட்டு மகிழ்ந்தாள்.
இருவரும் மற்றவர் செல்போன் எண்களைப் பெற்றுக்கொண்டனர்.
நாள்தோறும் அவர்களின் சந்திப்பு தொடர்ந்தது.
இந்நிலையில் ஒருநாள் செவ்வாய்ராணியின் தந்தை கலிவரதன் மாதவனின் தந்தை மணவாளனிடம் தொலைபேசியில் பேசினார். மகளின் திருமணம் பற்றி,
மாதவனின் தந்தை மணவாளனும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.
“இருந்தாலும் உங்கள் மகனின் ஜாதகம் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது சரியாப் புரியவில்லை. தெளிவில்லாமல் இருக்கு. பிறந்தவுடன் எழுதிய ஜாதகப் புத்தகத்தைக் கொடுத்தால் நல்லது. எனக்கு ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உண்டு. ஜாதகம் பொருத்தமாக இருந்தால் நாம் மேற்கொண்டு தொடரலாம்”, என்றார் கலிவரதன்.
மறுநாள் மாதவனும் செவ்வாய்ராணியும் உணவு விடுதியில் சந்தித்தனர்.
“என் அப்பா ஜாதகத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர். அம்மாவும் அப்படித்தான். ஆனால், என் விஷயத்தில் தீவிரம் காட்டுவார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. அதிர்ச்சியாகத்தான் இருக்கு,” என்றாள் செவ்வாய்ராணி.
“எங்கள் வீட்டில் அதுபற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், பார்க்க ஆரம்பித்தால் முழுமையாகப் பார்ப்பார்கள். கொஞ்ச நாள் பொறுத்திருப்போம் என்றான்.
ஆனால், அடுத்த இரண்டு நாள்களில் பேரிடியான செய்தி இருவருக்கும் கிடைத்தது. அதாவது செவ்வாய்ராணிக்கு செவ்வாய் தோஷம் உள்ளதாம். ஆனால், மாதவனுக்கு இல்லையாம்.
ஆகவே, ஜாதகப் பொருத்தம் சரியில்லாததால் திருமணம் செய்வது உத்தமம் அல்ல என்று முடிவு செய்யப்பட்டு விட்டதாம். அதனால் பேச்சை முறித்துக்கொள்ள இரு வீட்டாரும் முடிவு செய்துவிட்டார்கள்.
இதைக் கேள்விப்பட்ட இருவரும் தங்கள் பெற்றோரிடம் வாதாடினர். ஆனால் பயனில்லை.
இந்நிலையில் ஒருநாள் இருவரும் வழக்கம்போல் சந்தித்தனர்.
“செவ்வாய்ராணிக்கே செவ்வாய் தோஷமாம். கேட்டாலே சிரிப்புதான் வருது. செவ்வாயில் விண்கலம் இறங்கியாச்சு. அது நகர்ந்து சென்று பாறைகளில் துளை போட்டு ஆராய்ச்சியும் செய்துகொண்டிருக்கு. சிறிய ஹெலிகாப்டரையும் செவ்வாயில் பறக்கவிட்டாச்சு. அறிவியல் எங்கேயோ போய்கிட்டு இருக்கு. ஆனாலும் செவ்வாய் தோஷம் என்றெல்லாம் சொல்லி நம் பெற்றோர்களே மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கிறார்களே!” என்றான் மாதவன்.
“நம் நாட்டில் இருந்தும் மங்கள்யான் என்ற விண்கலம் 2013ஆம் ஆண்டு செவ்வாய்க் கோள் நோக்கிச் செலுத்தப்பட்டது. அது 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாம். இப்படியெல்லாம் இருக்கையில் தோஷம் என்று கதையளப்பதெல்லாம் சுத்த மூடத்தனம்” என்று செவ்வாய்ராணியும் சொன்னாள்.
இருவரும் பகுத்தறிவோடு அணுகி திருமணம் செய்துகொண்டனர்.
மூன்று ஆண்டுகள் கழித்து வீட்டின் மாடியில் மாதவனும் செவ்வாய்ராணியும் தொலைநோக்கி மூலம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களின் குழந்தை செவ்வழகி தரையில் தவழ்ந்து கொண்டிருந்தாள்.
“தோஷத்தை வென்ற தோழன் நீ”, என்று சொல்லிக்கொண்டே வந்த பாபு,
“உங்களைப் போன்றோரின் வாழ்க்கையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான் தோஷம் ஒழிந்து நேசம் வளரும்”, என்றான்.
“உண்மைதான். இப்போது எங்கள் இருவரின் பெற்றோர்களும் மனத்தோஷம் நீங்கி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்”, என்றனர். பாபு மகிழ்வோடு சிரிக்க இவர்களும் சிரித்து மகிழ்ந்தனர். இதைக்கண்ட குழந்தை பொக்கைவாயால் சிரித்தது !