திருவண்ணாமலை
திராவிடர் எழுச்சி மாநாடு !
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் துணைவியாரும், திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினருமான சுந்தராம்பாள் அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு 14.10.2004 அன்று நண்பகல் 11.00 மணியளவில் நாமக்கல் மாவட்டம் பொத்தனூரில் நடைபெற்றது. திருமதி. மோகனா வீரமணி அவர்களுடன் கலந்துகொண்டு இரங்கலுரையாற்றி, பொத்தனூர் க. சண்முகம் அவர்களின் மகன் வீரபத்திர செங்குட்டுவன், மருமகள் சாந்தி, மகள் -மருமகன்கள் வி.தமிழரசி- ம.விவேகானந்தன், இரா. மலர்க்கொடி- கோ. இரவீந்திரன் ஆகியோருக்கு நானும், மோகனா வீரமணி அம்மையார் அவர்களும் ஆறுதல் கூறினோம்.
சுந்தராம்பாள் படம் திறந்து வைத்து ஆசிரியர் மரியாதை செலுத்துகிறார்
கரூர் மாவட்டத்தில் பழம்பெரும் பெரியார் தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற வீரருமான கே.ஆர். கண்ணையன் அண்மையில் இயற்கை எய்தினார். கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நாமும் திருமதி.மோகனா அவர்களுடன் 14.10.2004 நாளன்று பிற்பகல் 2.00 மணியளவில் சென்று, அவரது துணைவியார் தனலெட்சுமி அம்மாள், மூத்தமகன் கே.காமராஜ், மருமகள் கே.சியாமளா, மகள் டி.ராணி, மருமகன் தினகரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம்.
தமிழ்நாடு திரையுலகின் பழம்பெரும் சிறந்த இசையமைப்பாளரும், தந்தை பெரியார் மீதும் எம்மீதும் நீங்காத பாசம் கொண்டவரும், திராவிடர் கழகப் பாடல்களுக்கு முதன்முதலில் இசையமைத்து பல ஒலிப்பேழைகள் வரக் காரணமாக இருந்தவரும், 75 படங்களுக்கு இசையமைத்த வருமான ’கலைமாமணி’ டி.ஆர். பாப்பா அவர்கள் 14.10.2004 அன்று மறைவுற்ற செய்தி அறிந்து, நாம் 15.10.2004 அன்று காலை 9.30 மணியளவில் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம். அதுசமயம் அவரின் மகன்கள் இராமமூர்த்தி, சீனிவாசன், மகள் உஷா ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம். அப்போது பிரபல திரைப்பாடகர் சீர்காழி டாக்டர் சிவசிதம்பரம், பின்னணிப் பாடகி டி.கே. கலா ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், விடுதலை ராதா, சாமி. திராவிடமணி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
‘கலைமாமணி’
டி.ஆர். பாப்பா
திருவண்ணாமலையில் 16.10.2004 அன்று தந்தை பெரியாரின் 126ஆம் பிறந்த நாள் விழா மற்றும் “திராவிடர் எழுச்சி மாநாடு” மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதலாவதாக, திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினரின் கலை நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்குத் தொடங்கி மிகச் சிறப்பாக ஒரு மணி நேரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் இயக்கப் பாடல்களுக்கு இசையமைத்த, மறைந்த டி.ஆர். பாப்பா அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
அடுத்து மாநாடு 10.35 மணிக்குத் தொடங்கியது. வேலூர் மாவட்ட தி.க. தலைவர் குடியாத்தம் வி. சடகோபன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
திராவிடர் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.வெ.கி. ஆசான் மாநாட்டிற்குத் தலைமை வகித்துப் பேசினார்.
திருவண்ணாமலை திராவிடர் எழுச்சி மாநாட்டில் தீச்சட்டி ஏந்தும் ஆசிரியர்
“வருண தர்மம் (கீதை)” என்ற தலைப்பில் பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி மாநிலத்தலைவர்- பெரியார் பேருரையாளர் அ. இறையன், “சங்பரிவார்” என்ற தலைப்பில் கழக தகவல் தொடர்பு துறை அமைப்பாளர் வழக்குரைஞர் அருள்மொழி, “இதிகாசங்கள்” என்ற தலைப்பில் ஆவடி மாவட்ட தி.க., தலைவர் ஆவடி ஆர். திருநாவுக்கரசு, பெண்ணடிமை” என்ற தலைப்பில் கவிஞர் செ.வை. ர.சிகாமணி, “மனு தர்மம்” என்ற தலைப்பில் மாநில இளைஞரணி அமைப்பாளர் க. சித்தனைச்செல்வன், “புராணங்கள்” என்ற தலைப்பில் மு. தமிழ்மொழி ஆகியோர் நண்பகல் வரை நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றினர்.
ஆயிரக்கணக்கானோர் அணி வகுத்து வந்தனர். குறிப்பாக திருப்பத்தூர், மணியம்மையார் மகளிர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் முழக்கமிட்டு வந்தனர். அந்த மாவட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.கே.சி. எழிலரசன் மற்றும் பொறுப்பாளர்கள் விருதினையும் தொகையையும் கழகத் தலைவர் அவர்களிடம் மேடையில் பெற்றுக்கொண்டனர்.
சு.தெ.மூர்த்தி படம் திறந்து வைத்து மரியாதை செலுத்துகிறார் ஆசிரியர்
இரண்டாம் பரிசினை தருமபுரி மாவட்டம் பெற்றுச் சென்றது. பெரிய எண்ணிக்கையில் பங்கு கொண்டனர்.
மாவட்டக் கழகத் தலைவர் மு.மனோகரன், செயலாளர் வேப்பிலைப்பட்டி தமிழ்ச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் விருதினை தொகையினையும் பெற்றுக்கொண்டனர். அந்த நிதியைக் கழகப் பாதுகாப்பு நிதிக்குத் திருப்பி அளித்தனர்.
கலை வீரமணி அவர்களின் ஏற்பாட்டில் திண்டிவனம் அன்புக்கரங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் அணிவகுப்பைப் பற்றிப் பேசாதவர்கள் யாரும் இல்லை.
150 மாணவ, மாணவிகளும், 20 ஆசிரிய மாணவிகளும் இந்த அணி வகுப்பில் பல்வேறு வயதினரும் சிறப்பான சீருடையுடன் முகப்பில் அணிவகுத்து வந்தனர்.
எங்கள் திராவிடப் பொன்னாடே! என்ற பாடல் முழங்க அவர்கள் வீரநடை போட்டு கழகக் கொடிகளைக் கம்பீரமாக ஏந்தி வந்தனர்.
இரவு நடைபெற்ற நிகழ்வில் 1. மதச்சார்பின்மை, சமூகநீதியை வலியுறுத்தியும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தனியார் துறையில் இடஒதுக்கீட்டை வற்புறுத்தியும், தாழ்த்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் காலியாகவுள்ள பணியிடங்களை உடன் நிரப்பக் கோரியும்,
2. வேலை வாய்ப்பைத் தடைசெய்யும் செயல்களில் அரசுகள் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தியும்,
3. உயர்நீதிமன்ற நியமனங்களில் அனைத்து வகுப்பினருக்கும் வாய்ப்பளிக்க வேண்டியும்,
4. பொடா சட்டம் நீக்கத்திற்கு வரவேற்புத் தெரிவித்தும்
5. தமிழில் அர்ச்சனை, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் இவற்றை அமல்படுத்தக் கோரியும்,
6. விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரியும்
7. சனாதனத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவண்ணாமலை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க. பொருளாளர் ஆர்க்காடு நா. வீராசாமி, ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, சி.பி.அய்., மாநிலத் துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் பெரிதும் பாராட்டி அவை நிறைவேற தத்தம் கட்சிகள் துணை நிற்கும் என்று மாநாட்டில் அறிவித்தனர்.
மாநாட்டின் நிறைவாக, தீர்மானங்களை விளக்கியும் வலியுறுத்தியும் மதவெறியைக் கண்டித்தும் நாம் நீண்டதொரு விளக்க உரையாற்றினோம்.
நெல்லை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மறைந்த பி. சிவனணைந்த பெருமாள்- ராஜம்மாள் ஆகியோரின் மகன் மதிவாணன் அபுதாபியில் பணியில் இருந்தபோது 19.10.2004 அன்று மறைவுற்றார் என்பதறிந்து வருந்தினோம்.
அன்று பிற்பகல் 1.30 மணியளவில், மதிவாணன் உடலுக்கு மலர் மாலை வைத்து நாம் இறுதி மரியாதை செலுத்தினோம். மூத்த சகோதரர் பொறியாளர் சி. மனோகரன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.
பிகார் தலைநகர் பாட்னாவிலுள்ள தியாகமூர்த்தி சந்தபூரி இயக்கத்தைச் சேர்ந்த இந்திரகுமார், தினேஷ்குமார் ஆகியோர் 20.10.2004 அன்று எம்மைப் பெரியார் திடலில் சந்தித்து, அவர்களுடைய ஆங்கிலம் மற்றும் இந்தி நூல்களைப் பரிசளித்தனர். நன்றி கூறி அவற்றைப் பெற்றுக்கொண்டு அவர்களுடன் சிறிது நேரம் சமூக நீதி குறித்து உரையாடினோம்.
சேலம் ராசு – மணி ஆகியோரின் மகள் இரா. அறிவுச்சுடர் மற்றும் எம். செட்டிப்பட்டி கிருட்டினன்- பாலம்மாள் ஆகியோரின் மகன் டாக்டர் கி. நவநீதன் ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழா 24.10.2004 ஞாயிறு அன்று சேலம் மத்திய கூட்டுறவு வங்கி திருமணக் கூடத்தில் நடைபெற்றது. கழக துணைப் பொதுச் செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன் உறுதிமொழி கூறி வாழ்க்கை இணை ஏற்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். நாம் திருமணத்தினை நடத்திவைக்க வர இயலாத நிலையில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஒலி நாடா ஒலிபரப்பப்பட்டது. திருமணத்திற்கு இயக்கத்தின் பொறுப்பாளர்களும், பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களும் திரளாக வந்து கலந்துகொண்டனர்.
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி சிங்கப்பூர் சு.தெ. மூர்த்தி அவர்களின் படத்திறப்பு விழா நிகழ்ச்சி சிங்கப்பூரில் 24.10.2004 அன்று நடைபெற்றது. அன்னாரின் படத்தைத் திறந்து வைத்து நாம் ஆற்றிய உரையில்,
“இந்தக் கூட்டம் ஆறுதல் உரை, இரங்கலுரை என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டம் என்பதை பேராசிரியப் பெருமக்கள் இங்கே எடுத்துரைத்திருக்கிறார்கள். எனக்கு முன் பேசிய அறிஞர்கள் அதனை வழிமொழிந்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையிலே ஏறத்தாழ 50 ஆண்டு காலம் மிக நெருக்கமாக இருந்த ஓர் அரிய குடும்பத்தினுடைய சகோதரரை இழந்த நிலையில் உங்கள் முன்னால் வந்து நிற்கின்றேன். எனவே நான் இங்கு வந்தது இவர்களுக்கு ஆறுதல் சொல்லுவதற்காக அல்ல; மாறாக, ஆறுதலைப் பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்பதை உணர்ச்சியை அடக்கிக்கொண்டு உங்கள் முன்னாலே சில கருத்துகளைக் கூற விழைகின்றேன்.
தலைவர் தந்தை பெரியார் அவர்களிடத்திலே நாங்கள் எல்லாம். அருமைச் சகோதரர் மூர்த்தி போன்றவர்கள் எல்லாம் எங்களை இணைத்துக் கொண்டதால் என்ன கிடைத்தது என்று யாராவது கேட்டால், எங்களுக்குச் சொல்லக்கூடிய பதிலெல்லாம் யாருக்கும் கிடைக்காத மானமும், அறிவும் எங்களுக்குக் கிடைத்தது என்பதுதான் (கைதட்டல்)
தந்தை பெரியார் அவர்கள் எளிமையாகச் சொல்வதெல்லாம் பாடங்கள். அந்தப் பாடங்களைப் படித்தவர் இன்றைக்குப் படமாக மாறியிருக்கிறார்.நாம் திறந்தது வெறும் மூர்த்தி அவர்களது படமல்ல; இது ஒரு பாடப்புத்தகம்.
மு.அறிவுக்கண்ணு – சதும் தாமஸ் ரவீந்திரநாத் ரெட்டி இணையேற்பு நிகழ்வில் ஆசிரியர்.
மூர்த்தி அவர்களுடைய வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள். என் மனநிலை எப்படியிருக்கும்? மூர்த்தி அவர்களுடைய திருமணத்தை நான் தலைமை தாங்கி நடத்தியவன். அதைவிட பெரிய வாய்ப்பு அவருடைய அன்புச் செல்வன் மதியினுடைய திருமணத்தையும் தலைமை தாங்கி நடத்தியவன்.
அதேபோல், மூர்த்தி அவர்களுடைய 75ஆம் ஆண்டு பிறந்தநாள் நூல் வெளியீட்டு விழா- இவை அத்தனையும் நடத்தி, இவ்வளவும் நடத்தியவன்.
பெரியார் பெருந்தொண்டர்கள் என்று சொன்னால், அதற்கு என்ன இலக்கணம்? குயில் மொழியிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் சொன்னார்கள்.
“பற்றற்ற உள்ளம்
பகைக் கஞ்சா பேராண்மை
வற்றாத தன்மான உணர்ச்சி
கற்றற்குரிய கடப்பாடு
குலையாத உறுதி”
இவை அய்ந்தும் பெரியார் தொண்டருக்கு அணி கலன்,அந்தக் கவிதைக்கு ஒரு முழு இலக்கணமாக சிங்கப்பூரிலே தேடிக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டுமானால், அவர்தான் சுயமரியாதைச் சுடரொளியான சிங்கப்பூர் அருமைச் சகோதரர் மூர்த்தி ஆவார்கள். அதற்குத்தான் இந்தப் படம் திறக்கப்பட்டிருக்கின்றது.
நலமற்ற நிலையில் உடல் தள்ளாடினாலும், உள்ளம் தள்ளாடாமல், கொள்கை தள்ளாடாமல் இருந்தவர்.
சு.தெ.மூர்த்தி அவர்களுக்கு வீரமணி என்ற பெயரில் அந்த விருது வழங்கப்பட்டாலும் அது பெரியார் விருதுதான். காரணம் வீரமணி ஒரு பெரியார் தொண்டன். தொடர்ந்து அந்தப் பணிகள் நடக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் அந்தப் பெயரை வைக்கிறோம் என்று பன்னாட்டு நிருவாகிகள் உரிமை எடுத்துக் கொண்டு என்னிடத்திலே சொன்னார்கள். நான்கூட பெரியார் விருது வையுங்கள் என்று சொன்னேன். இல்லை பெரியாருக்கு விருதுகள் இருக்கிறது. பெரியாருடைய பணிகள் நடைபெறுகின்றன.
பெரியாருக்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் இது தொடருகிறது என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும். அதற்காகத்தான் இந்த விருது என்று அவர்கள் உரிமை எடுத்துக்கொண்டு சொன்னார்கள்.
பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் குழு ஆசிரியரைச் சந்தித்து நன்றி தெரிவிக்கின்றனர்.
அவரை உற்சாகப்படுத்த வேண்டும்; ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விருதை வழங்கினோம்.
திருச்சியில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை நடத்துகின்றோம். அனாதை இல்லம் என்று நாங்கள் சொல்லுவதில்லை. குழந்தைகளுக்கு அனாதை என்ற உணர்வு ஊட்டக்கூடாது என்பதற்காக நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்றுதான் பெயர் வைத்துள்ளோம். அந்தக் குழந்தைகளுக்கு பெயரின் முன்னெழுத்துக்களே ஈ.வெ.ரா.ம. (E.V.R.M.) என்றுதான் இருக்கும். எனவே, அந்தக் குழந்தைகள் இல்லத்திற்கு அருகிலே பல லட்ச ரூபாய் மதிப்பிலே ஒரு நூலகம் கட்டப்பட்டிருக்கின்றது.
அந்த நூலகத்திற்கு சிங்கப்பூர் பெரியார் பெருந்தொண்டர் சு.தெ.மூர்த்தி அவர்களுடைய பெயர் சூட்டப்படும் என்பதை இங்கே அறிவிக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டேன்.
பெரியார் மனித நேய மன்றம்’ (Periyar Humanist Association)
24.10.2004 அன்று சிங்கப்பூர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மானமிகு சு.தெ.மூர்த்தி அவர்களின் படத்திறப்பிற்கு வருகை தந்த தோழர்களுடன் கலந்து எடுத்த முடிவின்படி 31.10.2004 ஞாயிறு அன்று காலை 11.30 மணியளவில் எமது தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியோடு சிங்கப்பூரில் நடைபெற்றது.
அமைப்பின் நோக்கம், அமைப்பின் செயல் திட்டங்கள் பற்றி விவரித்துப் பேசினோம்.
மன்றத்தின் புரவலர்களாக கவிமாமணி திரு.மா.அன்பழகன், பேராசிரியர் திரு. இரத்தினகுமார் ஆகியோர் மன்றத்தின் தலைவராக வீ. கலைச்செல்வன், துணைத் தலைவர்களாக தோழியர் கி. குடியரசி, பெரியார் பெருந்தொண்டர் ஆருர்சபாபதி, செயலாளர்களாக பெரியார் பெருந்தொண்டர்கள் சோ.வி. தமிழ்மறையான், எம். இலியாஸ் ஆகியவர்களும், துணைச் செயலாளர்களாக தோழியர் மு.சீ. மலையரசி, சு.தெ.மதியரசன், பொருளாளர் நா.மாறன், துணைப்பொருளாளர் ச.இராசராசன், செயற்குழு உறுப்பினர்களாக கு.ராஜா, ரெங்கராசன், கண்ணையன், மதிவாணன், சுந்தரசாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெரியார் மனித நேய மன்றம் சார்பில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பெரியார் பெருந்தொண்டர்கள் சு.தெ.மூர்த்தி, கோட்டூர் பாலசுப்பிரமணியம், கரூர் கண்ணையன் ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. எதிர்வரும் டிசம்பரில் சிங்கையில் தந்தை பெரியார் விழாவை மிகச் சிறப்புடன் எடுப்பதெனவும், “சொற்கொண்டல்” முருகு சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டும், குன்றக்குடி ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களை அழைத்து பெரியார் விழாவை சிறப்பாக நடத்துவதெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. சிங்கப்பூரில் பல துறைகளில் மனித நேயத்தோடு செயல்கள் புரிந்தவரைப் பாராட்டுதல், விழிக்கொடை, குருதிக்கொடை, உறுப்புக்கொடை முதலியவற்றை ஊக்கப்படுத்தல்.
செயலாளர் கோ.வீ. தமிழ்மறையான் நன்றி கூறினார்.
இன்றைய தி.க.பொருளாளரும் அன்றைய மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரியுமான வீ. குமரேசன் அவர்களின் வாழ்விணையர் மன்னர் திருமலை நாயக்கர் கலைக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் திருமதி, உஷா தேவி அவர்கள் கடந்த நவம்பர் 7ஆம் தேதி இயற்கை எய்தினார்.
அன்று மாலை 4.20 மணியளவில் மதுரை திருநகரிலுள்ள வீ.குமரேசன் இல்லத்திற்குச் சென்று, மறைந்த திருமதி. உஷா தேவியின் உருவப்படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி, வீ.குமரேசன் அவருடைய மகன்கள் கார்க்கி, திலீபன், தந்தையார் வீராசாமி, மாமனார் நடராஜன், மாமியார் கஸ்தூரி அம்மாள், தங்கைகள் ரேணுகாதேவி, வாசுகி ஆகியோருக்கு ஆறுதல் கூறினோம்.
பாரத ஸ்டேட் வங்கியிலுள்ள பார்ப்பன ஆதிக்கம் பற்றி ஆதாரப்பூர்வமான தலையங்கத்தினை ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிட்டு உண்மை நிலையினை மக்களுக்குத் தெரிவித்து உதவிய நமக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி எஸ்.சி., எஸ்.டி., ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் 29.11.2004 அன்று சென்னை – பெரியார் திடலுக்கு வருகை தந்து நம்மைச் சந்தித்துவிட்டு தங்கள் மகிழ்ச்சியையும் அன்பான நன்றியினையும் தெரிவித்தனர்.
குடந்தை நகர திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளரும், மேலக்காவேரி எஸ். நடராசன்- ரஞ்சனி ஆகியோரின் மகன் காமராஜுவுக்கும், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் இலுப்பூர் ஜி இராசசேகரன்- தையல் நாயகி ஆகியோரின் மகள் இரா. பாரதிக்கும் 28.11.2004 காலை கும்பேஸ்வரர் திருமஞ்சனவீதியிலுள்ள தங்கம்மாள் திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணையேற்பு விழாவினை நாம் தலைமையேற்று, மணமக்களுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியைக் கூறி, நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம். கழக துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், குடந்தை ஒன்றிய துணைச் செயலாளர் நாகராசன் உள்ளிட்ட கழகத்தின் முக்கிய நிருவாகிகள் மணமக்களை வாழ்த்திப் பேசினர்.
வடசென்னை மாவட்டம் மேற்கு கே.கே. நகரைச் சேர்ந்த ந.முத்துவண்ணன்- விசயா ஆகியோரின் மகள் மு. அறிவுக்கண்ணு மற்றும், ஆந்திர மாநிலம் அனந்தபூரைச் சேர்ந்த எஸ்.எஸ். பிரகாஷ் ரெட்டி – சாந்தம்மா ஆகியோரின் மகன் சதும் தாமஸ் ரவீந்திரநாத்ரெட்டி ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா சுயமரியாதைத் திருமண முறையின் அடிப்படையில் 30.11.2004 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் சென்னை- பெரியார் திடலில், எனது தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் பூங்குன்றன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமகள், அருள்மொழி(பிரச்சாரச் செயலாளர்), சாமி. திராவிடமணி, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
சேலம் மாவட்டம் சின்னப்பன்பட்டி திராவிடர் கழகத் தலைவரும், தமிழக மூதறிஞர் குழுவின் தலைவர் பேராசிரியர் ஞான. அய்யாசாமி அவர்களின் சம்பந்தியும், புருனை நாட்டில் பணியாற்றும் இதய மருத்துவ வல்லுநர் டாக்டர் ஜி. திருநாவுக்கரசு எம்.ஆர்.சி.பி., அவர்களின் தந்தையுமான மானமிகு எஸ்.பி. கணேசன் அவர்கள் 2.12.2004 அன்று சென்னையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்தினோம். குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து இரங்கல் செய்தி அனுப்பினோம்.
மதுரை மாநகரின் ‘விடுதலை’ நாளேட்டின் முகவரும், திராவிடர் கழக இளைஞரணி செயல்வீரருமான செல்லையா- சரஸ்வதி ஆகியோரின் மகன் மதுரை விடுதலை செல்வத்திற்கும், மதுரை வடபழஞ்சி ஏ.செல்லையா- செ.சண்முகவள்ளி ஆகியோரின் மகள் அனிதாவுக்கும் 5.12.2004 அன்று மாலை 6:30 மணியளவில் மதுரை (ஆட்டு மந்தை) சிம்மக்கல்லிலுள்ள யாதவர் திருமண மண்டபத்தில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை நாம் நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம். மாநில தி.க. சட்டத்துறை அமைப்பாளர் கி. மகேந்திரன் தலைமை வகித்தார். பிரச்சாரக் குழுத் தலைவர் தே. எடிசன் ராஜா முன்னிலை வகித்தார். மா. பஞ்சராஜ் நன்றி கூறினார்.
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும், பெரியார் பெருந்தொண்டருமான விழுப்புரம் இரா. கஜேந்திரன்(வயது 80) அவர்கள் அக்டோபர் மாதம் 29ஆம் நாள் இயற்கை எய்தினார். அன்னாரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 12.12.2004 அன்று காலை 10.30 மணியளவில் விழுப்புரம் நகர் கன்னியாகுளம் சாலையிலுள்ள குரு திருமண மண்டபத்தில் நடந்தது. விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் க.மு. தாஸ் தலைமை வகித்தார். சென்னை தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கத் தலைவர் கி.பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தி.க. செயலாளர் சு. நடராசன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
நாம் மறைந்த விழுப்புரம் இரா.கஜேந்திரன் படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்தியபின் (தொடர்ந்து 45 நிமிடங்கள்) மறைந்த இரா.கஜேந்திரன் அவர்கள் கட்டுப்பாடுமிக்கவராகவும், இறுதிவரை லட்சியத்திற்காகத் தொண்டாற்றியும், கழகத்திற்கு இப்பகுதியில் சிறப்பான வகையில் பணியாற்றி எதிர்கால இளைஞர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து வழிகாட்டியது பற்றியும் எடுத்துரைத்தோம். அதேபோல், கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தந்தை பெரியார் காலம் தொட்டு இறுதிவரை கழகத்தின் செயல்பாடுகளிலும், அனைத்து மாநாடுகள், போராட்டங்களிலும் பங்கேற்றுள்ள அரும்பெரும் தொண்டர் எனப் புகழாரம் சூட்டி நினைவுரையாற்றினோம். கழகப் பொறுப்பாளர்கள் நினைவுரையாற்றினர். பேரன் பொறியாளர் துரை.அருண்பிரசாத் நன்றி கூறினார்.
எஸ்.எஸ். திருநாவுக்கரசு படத்திற்கு மரியாதை செலுத்துகிறார் ஆசிரியர்.
காஞ்சிபுரம் தொகுதி அண்ணா தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், மேனாள் தமிழ்நாடு செய்தி விளம்பரம் – சுற்றுலா – வனத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.திருநாவுக்கரசு அண்மையில் காலமானார். டிசம்பர் 15ஆம் நாளன்று காஞ்சிபுரம் வருகை தந்த நாம் மறைந்த மேனாள் அமைச்சருடைய இல்லத்திற்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரின் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். அதுசமயம் அவருடைய உதவியாளரும் 25ஆம் வட்ட அண்ணா தி.மு.க. செயலாளருமான வரதன் மற்றும் உறவினர் ஆறுமுகம் ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினோம். உடன் கழக நிருவாகிகள் வந்திருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரைச் சேர்ந்த து.கோவிந்தராஜுலு- அனுசுயாம்மாள் ஆகியோரின் மகனும், மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளருமான கோ. சுந்தருக்கும் கடலூர் மாவட்டம் சோனஞ்சாவடி பா. சீதாபதி- தனம்மாள் ஆகியோரின் மகள் காயத்திரி தேவிக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா, போளூர் டி.எஸ்.பி. திருமண மகாலில் 15.12.2004 அன்று காலை நாம் தலைமை வகித்து ஒப்பந்த உறுதிமொழியைக் கூறி சிறப்பாக நடத்தி வாழ்த்துரையாற்றினோம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பழம் பெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு “வாயாடி” சுப்பிரமணியம் 1986ஆம் ஆண்டில் மறைவுற்றார். 15.12.2004ஆம் நாள் புதன்கிழமை போளூரில் கோ.சுந்தர்- சீ. காயத்திரி திருமண விழாவை நடத்தி விட்டு காஞ்சிபுரம் செல்லும் வழியில் போளூரிலுள்ள இடுகாட்டில் அமைக்கப்பட்ட “வாயாடி” சுப்பிரமணியத்தின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செய்து, புகழாரம் சூட்டினோம். கோட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் பா.அருணாச்சலம், வேலூர் மாவட்ட அமைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
(நினைவுகள் நீளும் )