விவசாயிகள் மோடி அரசுக்கு
விடை கொடுப்பார்கள்!
1. கே: தமிழில் பெயரிடுவதை ஓர் இயக்கமாகச் செயல்படுத்துவோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதன்மூலம், திராவிடர் கழகக் கோரிக்கைக்கு உடனடி அங்கீகாரம் தந்த முதல்வர் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? – இரவிச்சந்திரன், வேலூர்.
ப : “இரட்டைக்குழல் துப்பாக்கி” “தாய்க்கழகமும் தி.மு.க. கழகமும்” என்பதன் விளக்கமே அது!’
2. கே: பி.ஜே.பி. பெரிய அளவில் வெற்றி பெறும் என்று ஊடகங்கள் வழி ஒரு பொய்யான பிம்பத்தைக் கட்டமைத்து, மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க செய்யப்படும் பித்தலாட்டப் பிரச்சாரத்தை முறியடிக்க என்ன செய்ய வேண்டும் – காசி, குன்னூர்.
ப : நாமும் இடையறாத பிரச்சாரத்தை அடைமழை போல் பெய்ய வைக்க வேண்டும். நிச்சயம் இம்முறை மோடி அரசு – பா.ஜ.க. அரசு வீட்டுக்கனுப்பப் படுவது உறுதி!
மக்கள் வாக்களிப்பு அதற்குக் கிடைக்காமல் ஒருவேளை ஓட்டுப் பெட்டியே வாக்களிக்கப் போகிறதோ என்னவோ! யார் அறிவார்?
3. கே: ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு, தாமே கணக்கெடுப்பு செய்தால் அது பயன் தராதா? தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சரியா?
– மீனாட்சி, பள்ளிப்பட்டு.
ப : ஒன்றிய அரசு செய்ய வேண்டிய வேலை அது! அதை வற்புறுத்திச் செய்ய வைப்பதே சிறந்த பணி. ஏற்கனவே புள்ளி விவரம் தமிழ்நாடு அரசிடம் உள்ளது! மீண்டும் செலவழிப்பது தேவையா என்பதுதான் தி.மு.க. ஆட்சியின் நியாயமான சிந்தனை.
4. கே: ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராய் செய்திகள் வெளியிடும் ‘x’ தள கணக்குகளை முடக்கும் மோடி அரசின் ஆதிக்க, அடக்குமுறைக்கு எதிராய் ஊடகத்துறையினர் என்ன செய்யவேண்டும்? – ராணி, கோயம்புத்தூர்.
ப : உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும். நீதி கேட்கும் முயற்சியில் அதன் கதவைத் தட்டவேண்டும்!
5. கே: டில்லி, அரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரசுடன் மாநிலக் கட்சிகள் தொகுதி உடன்பாடு கண்டுள்ளது இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் அல்லவா? – பாபு, குடியாத்தம்.
ப : பா.ஜ.க. வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி இது!
மீண்டும் நாங்கள்தான் வருவோம் என்று பா.ஜ.க. கூறுவது ஒரு திட்டமிட்ட ஏமாற்று வேலை; மக்களிடம் இது எடுபடாது என்பதை மக்களுக்கு விளக்கும் செய்தி இது!
6. கே: விவசாயிகள் போராட்டம், ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சிக்கு முடிவு கட்ட உதவும் என்ற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? – சாந்தி, வண்ணாரப்பேட்டை.
ப : விவசாயிகள்தாம் மோடி அரசை விடை கொடுத்து அனுப்பப்போகிறவர்கள் என்பது கல்லில் செதுக்கிய எழுத்து ஆகும்!
7. கே: தி.மு.க. அரசின்மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருவது போல ஒரு பொய்யான கருத்தைத் தொடர்ந்து ஊடகங்கள் பரப்புகின்றபோது, திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தாய்க்கழகம் தொகுத்து இத்தேர்தல் நேரத்தில் சிறுநூலாக வெளியிடுமா? – வேலம்மாள், பரங்கிப்பேட்டை.
ப : நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது!
8. கே: தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் அண்மையில் வெளியிட்ட தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மூலம் பெரியார் கொள்கைகள் செயலாக்கம் பெறும் அல்லவா? – குப்புசாமி, புளியந்தோப்பு.
ப : அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு?
9. கே: ‘இந்து தமிழ் திசை’ நாளேடு (22.02.24) இந்தியா கூட்டணி சிதறுவதாய் எழுதியுள்ள 8ஆம் பக்கக் கட்டுரை பற்றித் தங்கள் கருத்து என்ன? – அழகி, ஆரணி.
ப : அது அவர்கள் ஆசையாக இருக்கலாம். அது நிரசையாகும் என்பது போகப் போக உங்களுக்கே தெளிவாகப் புரியும். ♦