தமிழ்நாட்டில் நடைபெற்ற பெண்ணுரிமை, சமூகநீதிக்கான சுயமரியாதை இயக்கத்தின் போராட்டங்களின் விளைவாக பெண்கள் கல்வி கற்று முன்னேறி வருகின்றார்கள். தந்தை
பெரியார் காண விரும்பிய புரட்சிப் பெண்கள், ஒடுக்கு முறைகளை உடைத்து எழுச்சி பெற்று வருகின்றனர். அத்தகைய சாதனையைப் புரிந்த சாதனையாளர்களில் ஒருவர்தான் சிறீபதி.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிறீபதி எனும் பழங்குடி வகுப்பைச் சார்ந்த பெண், அண்மையில் நடைபெற்ற சிவில் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.திருவண்ணாமலை சிறீபதி தற்போது தனது கணவர் வெங்கட்ராமனுடன் வசித்து வருகிறார். சிறீபதி சட்டப்படிப்பில் இளங்கலை பட்டம் (B.A., B.L.,) முடித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். நீதிபதியாகத் தேர்வாகியுள்ள சிறீபதிக்கு மாண்புமிகு, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதுவும் நமது Dravidian Model அரசு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை எனக் கொண்டு வந்த அரசாணையின் வழியே சிறீபதி, நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்.
அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரது தாய்க்கும் கணவருக்கும் எனது பாராட்டுகள்!
சமூக நீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு சிறீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்!
‘‘நெடுந்தமிழ் நாடெனும் செல்வி- -_ நல்ல
நிலைகாண வைத்திடும்; பெண்களின் கல்வி!
பெற்றநல் தந்தைதாய் மாரே- _ நும்
பெண்களைக் கற்கவைப் பீரே!
இற்றைநாள் பெண்கல்வி யாலே- _ முன்
னேறவேண் டும்வைய மேலே!”
இவ்வாறு புரட்சிக் கவிஞரின் வரிகளை மேற்கோள் காட்டி தமிழ்நாட்டு முதலமைச்சர் கூறியுள்ளார்.
சிறீபதி, “தேர்வில் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த தேர்வுக்குத் தயாராகி வந்த சிறீபதி பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற தேர்வை எழுத நேரில் வந்தார். தனது கிராமத்திலிருந்து 250 கி.மீ. பயணம் செய்து வந்து சிறீபதி, அப்போது குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆகி இருந்தன. மன உறுதியுடன் தேர்வெழுதிய சிறீபதி அதில் தேர்ச்சி பெற்றார். அதன்பின் சில தினங்களுக்கு முன் சென்னையில் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதிலும் தேர்ச்சி பெற்றார்.
சிறீபதியின் பெற்றோர் குறிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள். மலைப்பகுதியான ஏலகிரியில் சிறிது காலம் அங்குள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்த சிறீபதியின் தாய் அவரை வளர்த்தார். சிறீபதி ஏலகிரியில் தங்கி அங்குள்ள அரசுப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, தொலைதூரக் கல்வியில் இளங்கலைப் பட்டம் முடித்து, பின் சென்னையில் இளங்கலை சட்டம் பயின்றார். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் நடைபெற்றது. மூன்று ஆண்டுகள் புலியூரில் தன் கணவருடன் வசித்து வருகிறார். சிறீபதியின் கணவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார்.
சிறீபதி உள்ளிட்ட புலியூர் கிராமத்தில் படித்த – படிக்கும் அனைவரும் 25 கி.மீ. தொலைவில் உள்ள ஜமுனாமடத்தூர் சென்றுதான் மேல்நிலைப்பள்ளி படிக்கும் நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டு சிறீபதி, சிவில் நீதிமன்ற நீதிபதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார். சிறீபதியின் வெற்றியானது, சமூக நீதி தத்துவத்தின் விளைச்சல் ஆகும். ♦