மில்லியன் டாலர் கேள்வி !
1. கே : கார்ப்பரேட் நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களில் பெண்களே இல்லாத நிலை உள்ளது. இது, ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை நிறைவேற்றுவதற்கா?
– ராம்குமார், சென்னை.
ப : அதிலென்ன அய்யப்பாடு !
இன்னமும் ஜப்பான் போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளில்கூட இந்தப் பிற்போக்குத்தனம்- மகளிரை பெருநிலைக்கு உயரவிடாமல் ஆண் ஆதிக்கம் படமெடுத்தாடும் நிலை உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்களுக்குச் சிறப்பு இடமே இல்லை என்பதே அதற்குரிய சாட்சியம்.
பா.ஜ.க. சில பெண் அமைச்சர்களைக் காட்டுவது வெறும் திரிபு வாதமே!
2. கே : ஒரே நாடு ஒரே தேர்தல் ஒத்துவராது ஒன்று என்று நன்றாய் அறிந்தும் விடாப்பிடியாய் பிடித்துக்கொண்டிருக்கும் உள்நோக்கம் என்ன?
– தணிகாசலம், கோயம்புத்தூர்.
ப : ஒற்றை ஆட்சி முறை – Unitary State of Federal state ஆக இந்தியா இருக்க வேண்டுமென்ற ஆர்.எஸ்.எஸ். திட்டத்தினை அமலாக்கும் முயற்சியே அது. (“காலம், பணச்செலவு, மிச்சமாகும் என்ற காரணங்கள் பொருந்தாத பொய் ஒப்பனைகள்)
3. கே : ஆளுநர் உரையென்பது அரசின் உரையேயென்பது நெடிய மரபு. அப்படியிருக்க, தனக்கு உடன்பாடில்லாதவை அதில் இருப்பதால் ஆளுநர் படிக்க மறுத்தது சரியா? குடியரசுத் தலைவர் இப்படி மறுத்தால் மோடி அனுமதிப்பாரா?
– ஜானகி அம்மாள், சேலம்.
ப : மில்லியன் டாலர் கேள்வி- பதில் அளிக்க முடியாத பாங்கான கேள்வியும்கூட!
4. கே : பாரத் ரத்னா விருதுகளும், பத்ம விருதுகளும் கேலிக்குரியனவாக ஆகி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
– செந்தில், வண்டலூர்.
ப : ஆம், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்,. கையில் இவை அரசியல் கருவிகளே (Political Weapons). தோல்வி பயமும் காவி ஆட்சியை உலுக்கியதால் பீகாரில் 3 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி மீண்டும் நிதிஷ் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி. அதன் பொருட்டு கர்ப்பூரிதாகூருக்கு ‘பாரத ரத்னா’.
அதுபோல உ.பி.யில் சரண்சிங்கை பிரதமர் பதவிக்கு வராமல் தடுத்த ஆர்.எஸ்.எஸ்., ஜனசங் கட்சிகள்தான், இப்போது அவரது பேரன் சவுத்திரி ஜெய்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளத்தை விலைக்கு வாங்கி தன் பக்கம் இழுக்கவே ‘பாரத ரத்னா’ தூண்டில்-அதே நோக்கத்தில் ஆந்திராவில் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா! தமிழ்நாட்டில் குறிப்பாக பார்ப்பனர் வாக்குகள்
அ.தி.மு.க.வுக்குப் போகாமல் இருக்க எம்.எஸ்.சாமிநாதனுக்கு பாரத ரத்னா.
வாக்கு வங்கி அரசியலில் ஒரு புதிய உத்தி இது! நவீன அரசியல் வித்தையும்கூட!
5. கே : கட்சி நலனைவிட நாட்டின் நலன்தான் இப்போதைய சூழலில் முக்கியம் என்பதை இந்தியா கூட்டணிக் கட்சிகள் உறுதியோடு உள்ளத்தில் கொள்ள, இப்போது ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தை உடனே கூட்டினால் என்ன?
– விஷ்ணு, திருச்சி.
ப : எதை எப்படிச் செய்வது என்பது அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்குத் தெரியும். நாம் கூறவேண்டிய அவசியமில்லை -அது அதிகப் பிரசங்கித்தனம்.
6. கே : பிரதமர் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்லர் என்ற கருத்தைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– வள்ளி, திருத்தணி.
ப : காலங்கடந்த விமர்சனம்- பயனற்றது! அவர் எந்த ஜாதி என்பது முக்கியமல்ல. அவர் அரசியலில் நாட்டையே வித்தைகள் மூலம் ஏமாற்றி வருவது இத்தேர்தலில் பலிக்காது என்பதால் இப்படிப்பட்ட புதிய புதிய வித்தைகளைக் கட்டவிழ்த்து விடுகிறார் என்பதே மக்கள் புரிந்துகொள்ளவேண்டிய முக்கியச் செய்தியாகும்.
7. கே : பா.ஜ.க.வுக்கு 2361 கோடி ரூபாய் நன்கொடை மூலம் வருவாய் என்பது ஏற்புடையதா? மக்களாட்சி மாண்புக்கு உகந்ததா?
– மாலதி, குடியாத்தம்.
ப : மாண்பாவது மண்ணாங்கட்டியாவது – RSSக்கும் பிரதமர் மோடி ஆட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும்!
“நாய் விற்ற காசு குலைக்குமா? கருவாடு விற்ற காசு நாறுமா?” என்பதை நன்கு புரிந்தவர்கள் அவர்கள்! ♦