உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

2024 கட்டுரைகள் பிப்ரவரி 16-29, 2024 மற்றவர்கள்

கீழே தரப்பட்டிருப்பது பாரிசில் 1995இல் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டின் 28ஆம் அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைத் திட்ட வரையறை’ ஆகும்.

முன்னுரை

1. சர்வதேச கல்வி மாநாட்டின் 44ஆம் அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதே இந்த வரையறையின் நோக்கமாகும். பல்வேறு சமூகங்களின் நிலைமைகளுக்கேற்ப தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நடைமுறைக்கான உத்திகளாகவும் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் மாற்றிக்கொள்ளப்படக்கூடிய வழிகாட்டு நெறிகளை இது முன் வைக்கிறது.

2. இது விரைவான மாறுதல்களும் மாற்றங்களும் நிகழும் காலம். சகிப்பின்மை வெளிப்பாடுகள், இனப் பண்பாட்டின் வெறுப்பின் தோற்றங்கள், தன் அனைத்து வடிவங்களிலும் உருவங்களிலும் பயங்கரவாதத்தின் எழுச்சி, பாகுபாடுகள், போர், ‘அந்நியர்’க்கு எதிரான வன்முறை, செல்வர்க்கும் இல்லார்க்கும் இடையிலான பிளவுகளின் வளர்ச்சி ஆகியவை நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் தோன்றும் காலம். இக்காலத்துக்கேற்ப, அடிப்படை சுதந்திரம், அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றை உறுதி செய்தல் நிலைத்து நிற்கக் கூடியதும் சமத்துவ அடிப்படையிலானதுமான சமூக- பொருளாதார மேம்பாட்டை வளர்த்தல் என்ற இரண்டையும் குறிவைத்து செயல்முறை உத்திகள் உருவாக்கப்படவேண்டும். ஏனென்றால் இவை யாவுமே ஒரு சமாதானக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்குத் தேவையான பங்களிப்பைத் தருவன. அதற்கு மரபுசார்ந்த கல்விப் பணிமுறை
களில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது.

3. உலகில் இன்று காணும் சவால்களை எதிர்காணுவதற்குரிய ஒன்றுபட்ட பயனுள்ள வழியில் செயல்பட உதவக்கூடிய ஆவணங்களைத் தனக்காக ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று உலக நாடுகள் அண்மையில் உறுதிபூண்டன. இந்தத் திசையில் மனித உரிமைகள் பற்றிய உலக மாநாட்டில் (வியன்னா, ஜூன் 1993) ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘மனித உரிமைகளுக்கான வியன்னா பிரகடனமும் நடவடிக்கைத் திட்டமும்’ மனித உரிமைகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான சர்வதேசப் பேரவைக் கூட்டத்தில் (மாண்ட்ரியல் நகர் மார்ச் 1993) ஏற்கப்பட்ட ’மனித உரிமகளும் மக்களாட்சியும் பற்றிய கல்விக்கான உலக நடவடிக்கைத் திட்டம்’, இணைக்கப்பட்ட பள்ளிகள் திட்ட உத்தி மற்றும் நடவடிக்கைத் திட்டம் (1994-2000) ஆகியன உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள், மேம்பாடு இவற்றைப் பேணுவதில் எதிர்கொள்ள நேரும் சவால்களைச் சந்திக்க உதவும் முயற்சிகளாகும்.

4. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறையானது ‘நாடுகளுக்கிடையிலான ஒத்திசைவு, ஒப்புறவு, உலக அமைதி இவற்றுக்கான கல்வி பற்றிய பரிந்துரை’, ‘மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் தொடர்பான கல்வி’ ஆகியவற்றால் உந்தப்பட்டு தனது உறுப்பு நாடுகள், பன்னாட்டு அரசாங்கங்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோர் முன்பு ‘உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வி தொடர்பான சிக்கல்களையும் அவற்றை எதிர்கொள்வதற்கான உத்திகள் பற்றியும் ஒருங்கிணைவான, நிகழ்நாளுக்குரிய ஒரு பார்வையை முன் வைக்கிறது. பொது மாநாடு தன் 27ஆம் அமர்வில் வேண்டியபடி இதனைச் செய்கையில் நடப்பில் உள்ள நடவடிக்கைத் திட்டங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் நடைமுறை முக்கியத்துவம், பயன்தரு வலிமை ஆகியவற்றை வலுப்படுத்துவதே நோக்கமாயிருக்கிறது. எல்லா நாட்டு மக்களுக்கும் கல்வியறிக்கை, புதிய வழிகள் காண்பதற்காக கடந்தகால அனுபவம் அடிப்படையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் விழைவு. அதற்குத் தக்க வண்ணம் இந்தத் திட்டவரையறை செயல்பாடுகளுக்கான கோட்பாடுகளையும் இலக்குகளையும் அடையாளம் காட்டுகிறது; ஒவ்வொரு அரசுக்கும் ஏற்ப அது வகுத்துக் கொள்ள வேண்டிய கொள்கைகளை உருவாக்குவோர் கவனத்துக்கு கருத்துரைகளை முன்வைக்கிறது. பிரகடனத்தில் கண்டுள்ள கடப்பாடுகளுக்கேற்ப அத்துடன் தம்மைப் பிணைத்துக்கொண்ட நாடுகள் தம்முள் ஒப்புறவுடன் செயல்பட வகை செய்கிறது. ஆய்வுக்குரிய தலைப்புகளை நிர்ணயிக்க முயற்சிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை ஒரு இசைவான முழுமைக்குள் இணைத்துக் கொண்டுவர முயற்சிக்கிறது. அனைத்து மட்டங்களிலும் கல்வியை மறு ஒழுங்கு செய்ய முயல்கிறது. முறைகளை மறுசிந்தனைக்குட்படுத்துகிறது; கற்பிக்கும் கருவிகளை மறுபரிசீலனை செய்கிறது. ஆராய்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆசிரியப் பயிற்சியை மேம்படுத்துகிறது. ஆக, கல்விமுறை மேலும் வெளிப்படையானதாக அனைவரும் பங்கெடுப்பதன் மூலம் உருப்பெற உதவுகிறது.

5. மனித உரிமகள் யாவும் உலகளாவியன, பிரிக்க முடியாதன, ஒன்றையொன்று சார்ந்தன, ஒன்றுக்கொன்று தொடர்பானவையுமாம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான உத்திகள் குறிப்பிட்ட வரலாற்றுபூர்வமான, சமயபூர்வமான, பண்பாட்டியல் பூர்வமான அம்சங்களையும் கணக்கில் கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியின் இலக்குகள்:

6. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி, ஆகியவற்றுக்கான கல்வியின் இறுதி இலக்கு, ஒவ்வொரு மனிதரின் மனதிலும், அமைதிப் பண்பாட்டுக்கு அடித்தளமாயமைந்துள்ள உலகளாவிய மதிப்பீடுகள், நடத்தைகளையும் விதைப்பதாகும். வெவ்வேறு சமூக- பண்பாட்டுச் சூழ்நிலைகளிலும்கூட உலக முழுவதிலுமே ஒப்புக்கொள்ளப்படக்கூடிய பொதுவான மதிப்பீடுகளை இனங்காண இயலும்.

7. சுதந்திரத்தை மதிக்கவும், அதன் சவால்களைச் சந்திக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவுமான வலிமையை கல்வி தரவேண்டும். சிரமங்களையும் நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள குடிமக்களைப் பழக்குவதும், பொறுப்புகளுக்கும் சுயசார்புக்கும் அவர்களைத் தயார் செய்வதுமே இதன் பொருளாகும். குடிமக்களின் கடப்பாட்டிற்கு உரிய மதிப்பினை ஒப்புக்கொள்வது, சிக்கல்களைத் தீர்ப்பதற்கு மற்றவர்களுடன் இணைந்து உழைப்பது, நியாயமும் சமாதானமும் ஜனநாயகமும் நிலவும் ஒரு சமூகத்தைப் படைக்க முயல்வது ஆகியவற்றுடன் சுய பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு இணைந்திருக்கிறது.

8. பால்வேறுபாட்டிலும், சமூகங்களுக்கிடையிலான வித்தியாசங்களிலும் மனிதருக்கு மனிதர் உள்ள வேறுபாட்டிலும், பண்பாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளிலும் காணக்கிடக்கும் மதிப்பீட்டு முறைகளை இனங்காணவும் ஏற்கவும் தேவைப்படும் சக்தியையும், ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளல், அறிவைப் பகிர்ந்துகொள்ளல், ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கான வலிமையையும் கல்வியானது தரவேண்டும். மக்கள் தாம் நேர்காணும் நிலைமைகளைப் புரிந்துகொள்ளுவது அவர்களது சொந்த வாழ்வு சமூக வரலாறு பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நிகழ்வதையும், எனவே சிக்கல்களுக்கான ஒரே தீர்வு என்றெதுவும் எந்த ஒரு தனி மனிதர் கையிலோ, தனி ஒரு குழுமத்தின் கையிலோ இல்லையென்பதையும், ஒவ்வொரு சிக்கலுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வு இருக்கமுடியும் என்பதையும் வித்தியாசங்கள் நிறைந்த உலகில் கலாசாரப் பன்முக சமுதாயத்தின் உறுப்பினராக வாழ நேர்ந்துள்ள மனிதர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகையினாலே, மக்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும், சமமானவர்களாக பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ள வேண்டும். பொது அணுகுமுறைகளைக் காண்பது நோக்கமாயிருக்க வேண்டும். இப்படியாக கல்வி, சமூகங்களுக்கிடையேயும், மனிதர்களுக்குள்ளும் சமாதானம், நட்பு, ஒற்றுமை ஆகியவற்றை வலுப்படுத்தும் கருத்துகளையும் தீர்வுகளையும் ஒன்றுகூட்டுவதை ஊக்குவிப்பதாக, சுயஅடையாளங்களை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்.

9. வன்முறையில்லாமல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வலிமையை அது மேம்படுத்த வேண்டும். மாணவர்கள் சகிப்புணர்வு, பாசம், பகிர்ந்துகொள்ளுதல், (அடுத்தவர் பற்றிய) அக்கறை போன்ற மாண்புகளை இன்னும் வலுவாக உருவாக்கிக் கொள்ளத் தேவைப்படுகிற உள்மன அமைதி மேம்படுவதை வளர்க்க வேண்டும்.

10. அறிவார்ந்த தீர்மானங்கள் எடுக்கவும், சமகால நிலைமைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் என்று மட்டுமின்றி எதிர்காலம் பற்றிய தெளிந்த கண்ணோட்டத்தின் அடிப்படையிலும் தமது முடிவுகளையும் செயல்களையும் தீர்மானிக்கவும் தேவையான திறமையை, கல்வி மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.

11. கல்வியானது குடிகளுக்கு பண்பாட்டு மரபுகளை மதிக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் , நிலைத்து நிற்கக்கூடிய (பொருளாதார) மேம்பாட்டுக்கு இட்டுச் செல்லக்கூடிய உற்பத்தி முறைகள், நுகர்வு இயல்புகள் ஆகியவற்றைக் கைக்கொள்ளவும் கற்றுத்தர வேண்டும்.
தனியார் மதிப்பீடுகள்- கூட்டு மதிப்பீடுகள் ஆகியவற்றிடையேயும், உடனடியான அடிப்படைத் தேவைகளுக்கும் நீண்டகால அக்கறைகளுக்கிடையேயும் ஒத்திசைவு காணுவதும் தேவையாகும்.

12. சமச்சீரான நெடுங்கால வளர்ச்சிக்கான நோக்கிலமைந்த, சமத்துவத்தையும் ஒற்றுமையையும் தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் ஏற்படுத்தத் தேவையான உணர்வுகளை விதைப்பதாயும் கல்வி அமைய வேண்டும்.
உத்திகள்

13. இந்த இலக்குகளை நிறைவேற்ற, கல்வியமைப்புகளின் உத்திகளும் நடவடிக்கை விதங்களும் சீரமைக்கப்படுவதன் தேவை தெளிவானது. கற்பித்தல் முறை, நிறுவன நிருவாகம், இரண்டிலுமே இந்தச் சீரமைப்பு அவசியம் தேவை. மேலும் அனைவருக்கும் அடிப்படைக்கல்வி அளிப்பது, உலகளாவிய மனித உரிமை என்பதன் பிரிக்க முடியாத- பிரிக்கக்கூடாத பகுதியான மகளிர் உரிமை பேணுதல் ஆகிய இரண்டும் உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வியில் அடிப்படையான அம்சங்களாகும்.

14. உலக அமைதி, மக்களாட்சி, மனித
உரிமைகள் பற்றிய கல்விக்கான உத்திகள்:
அ. விரிவான பார்வை கொண்டமைய வேண்டும். முழுமை கொண்டு விளங்க வேண்டும். அதாவது பலவகை அம்சங்களையும் தழுவி இருக்கவேண்டும். அவற்றில் சில அம்சங்களை பின்வரும் துணைப் பகுதிகளில் விவரமாகக் காண்போம்.
ஆ. அவை எல்லா வகையான, எல்லா நிலைகளுக்குமான, எல்லாவிதமான கல்விகளுக்கும் பொருந்தவேண்டும்.
இ. கல்வித்துறையில் பங்காளிகளாக உள்ள எல்லாரையும், சமூகமயமாக்கும் பணியிலும் உள்ள எல்லா அமைப்புகளையும் சமூக நிறுவனங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.
ஈ. நகரளவில், நாட்டளவில், வட்டார அளவில் உலகளவில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
உ. கல்வி நிறுவனங்களுக்கு அதிக சுயாட்சி தரக்கூடிய வகைக்கு மேலான்மை முறைகளையும், நிர்வாகத்தையும், ஒருங்கிணைப்பையும், பணி மதிப்பீட்டையும் ஒழுங்கமைத்தலின்மூலம் அவை குறிப்பிட்ட வகையில் நடவடிக்கைத் திட்டங்களை ஏற்படுத்தவும், உள்ளூர் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும், மேம்பாட்டு புது உத்திகளை ஊக்குவிக்கவும், நிறுவனத்தின் வாழ்வில் அக்கறை கொண்ட அனைவரையும் செயலூக்கத்தோடு மக்களாட்சி முறையில் பங்களிக்கச் செய்வனவாக அமைய வேண்டும்.
ஊ. யாருக்காகச் செய்கிறாமோ அவர்களது வயது மனநிலை ஆகியவற்றுக்கிசைய அமைய வேண்டும். பயில்வோர் ஒவ்வொருவரின் கற்கும் சக்தியின் பரிணாம வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
எ. தொடர்ச்சி உடையனவாயும் முரணற்றவை யாயும் விளங்க வேண்டும். உத்திகளின் தடைகளும் பயன்களும் மதிப்பிடப்பட வேண்டும். மாறிவரும் சூழல்களுக்கேற்ப உத்திகளைத் தொடர்ந்து பயன்படுத்த மதிப்பீட்டு முறை உதவும்.
ஏ. பொதுவாக கல்வியிலும், குறிப்பாக ஓரம்கட்டப்
பட்டவர்கள், வசதியற்றோர், கல்வியிலும் மேற்
கண்ட இலக்குகளை அடையத் தேவையான ‘வசதிகள்’ பற்றியும் சிந்திக்க வேண்டும்.

15. மாறுதல்கள் எந்த அளவு தேவை,
செயல்பாடுகளுக்கிடையிலான முன்னுரிமைப் படுத்தல், எந்த வரிசையில் நடவடிக்கைகளை நடைமுறையில் மேற்கொள்ள வேண்டும் ஆகியவை பற்றிய முடிவுகளை இறுதி செய்யும் முன்பாக முடிவெடுக்கும் எல்லா மட்டங்களிலும் மாறுபட்ட வரலாற்றுப் பின்னணி, பண்பாட்டியல் மரபுகள், நாடுகள் வட்டாரங்களின் மேம்பாட்டு நிலைகள், நாட்டுக்குள்ளேயே கூட மேம்பாட்டு நிலையில் இருக்கக்கூடிய வித்தியாசங்கள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

16. முறையான கல்வியிலும் சரி, முறைசாராக் கல்வியலும் சரி, முறைசாராக் கல்வியிலும் சரி, எல்லா மட்டங்களிலும் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய பாடங்கள் இடம் பெறுவது தீவிர முக்கியத்துவம் பெறுகிறது.
கல்வியின் உள்ளடக்கம்

17. ஒற்றுமை, படைப்புத்திறன், குடிமைப் பொறுப்புணர்வு, வன்முறை தவிர்த்த வழிகளில் பூசல்களுக்குத் தீர்வு காணும் வலிமை, விமர்சன சக்தி போன்ற மாண்புகளை உருவாக்குவதை வலுப்படுத்த, எல்லா மட்டத்திலும் பாடத்திட்டத்தின் உலகளாவிய பரிமாணங்கள் கொண்ட குடிமைக்கல்வி இடம் பெற வேண்டியது அத்தியாவசியமாகும். உலக அமைதியை உருவாக்கும் கூறுகள் பற்றிய அக்கறைகள் கல்விக்கு இருக்க வேண்டும். பல்வேறு மோதல்கள், அவற்றின் காரணங்களும் விளைவுகளும், மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப் பிரகடனத்தையும், மகளிர்க்கெதிரான சகலவகைப் பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை, குழந்தைகள் உரிமை பற்றிய உடன்படிக்கை, போன்ற தேசிய சர்வதேசிய நிர்ணயிப்புகள் ஏற்பட்ட விதம், மக்களாட்சியின் அடிப்படைகள், இனவாதம், பெண்ணியப் போராட்ட வரலாறு, மற்ற பாகுபாடுகளையும் ஒதுக்குமுறைகளையும் எதிர்க்கும் இயக்க வரலாறுகள் ஆகியவற்றைப் பற்றிய அக்கறையும் கல்வியைத் திட்டமிடுவதில் இருக்கவேண்டும். பண்பாடு, மேம்பாடு தழுவிய சிக்கல்கள், இனங்களின் வரலாறுகள், அய்நா. முதலிய உலக அமைப்புகளின் பங்கு பணி பற்றியெல்லாமும் சிறப்புக் கவனம் செலுத்தப்படவேண்டும். அமைதி, மக்களாட்சி, மனித உரிமை பற்றியெல்லாம் கல்வி அமைய வேண்டும். விசேஷமான பாடங்களுக்கு மட்டுமே அழுத்தம் தருவதாக இருக்கக்கூடாது. கல்வி குறுக்கப் படலாகாது.

இந்தச் செய்திகளைப் பரப்புவதாகவே கல்வி முழுவதும் அமைய வேண்டும். அதுபோலவே பாடநூல் சீர்திருத்தமும் உலக அளவிலும் தேசிய அளவிலும் மற்றவர் பண்பாட்டுக் கூறுகளை மதிக்கவும், புரிந்து கொள்ளவும் அறிவைத் திருப்பிவிடும் போக்கில் அமைய வேண்டும். உள்ளூர் சிக்கல்களையும் உலக நாடுகள் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதையும் இணைப்பதாக பாடநூல்கள் இருக்க வேண்டும் நாட்டுக்கு நாடு மதமும் பண்பாடும் மாறுவதால் அவரவர் பண்பாட்டுச் சூழலுக்கு எத்தகைய அறநெறிக் கல்வி பொருந்தும் என்பதை நாடுகள் ஒவ்வொன்றும் தாமே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நிறவனத்தின் சூழ்நிலையும் மக்களாட்சி மாண்புகளுக்கு இசைந்ததாக இருந்திட வேண்டும்.
கற்பிக்கும் கருவிகளும் வசதிகளும்

18. கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள எல்லாரிடமும் அவர்கள் வசம் போதுமான கல்விக் கருவிகளும் வசதிகளும் இருக்க வேண்டும். எதிர்மறையான உருவகிப்புகளையும் ‘மற்றவர்கள்’ பற்றிய காமாலைப் பார்வையையும் தவிர்க்கும் வகையில் தேவையான மாற்றங்களைப் பாடநூல்களில் கொண்டு வருவது அவசியம். பாடநூல் தயாரிப்பில் பன்னாட்டுக் கூட்டு முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாடநூல்களும் கல்விக் கருவிகளும் பிறவும் புதிதாகத் தயாரிக்கப்படும்போதெல்லாம் அவ்வப்போது உள்ள சூழல் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். குறித்த பொருள் பற்றிப் பேசும்போது பாடநூல்கள் அதன் பல பரிமாணங்களையும் பேச வேண்டும். அந்த நூல் எந்தப் பண்பாட்டின்/தேசியத்தின் பின்புலத்தில் எழுதப்பட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புலப்படுத்தப்பட வேண்டும். யுனெஸ்கோ, அய்.நாவின் பிற அமைப்புகள் ஆகியவற்றின் ஆவணங்கள் கல்விக்கூடங்களில் பரவலாகப் பரப்பப்படுவதும் பயன்படுவதும் விரும்பத்தக்கதாகும். அதிலும் குறிப்பாக பொருளாதாரக் காரணங்களினால் கல்விக் கருவி உற்பத்தி விரைவாக இல்லாத நாடுகளில் இது மிகவும் விரும்பத்தக்கது.. உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி பற்றிய கல்விக்காக தொலைதூரக் கல்விக்கான தொழில்நுட்பங்களும், நவீன தகவல் தொடர்பு முறைகளும் ஏற்படுத்தித் தரப்படவேண்டும். l