– வி.சி.வில்வம்
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை” வகுப்புகள் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில், திருச்சி, கே.கே.நகரில் அமைந்துள்ள பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றன .
எத்தனை வடிவங்கள்!
திராவிடர் இயக்கங்கள் தான், இந்த மக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக் கொள்கைகளை எத்தனை, எத்தனை வடிவங்களில் நடத்துகிறது!
நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த இயக்கம் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், மாநாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம், பாடல், தெருக்கூத்து, திரைப்படம் எனப் பலப்பல வகைகளில் பிரச்சாரம் செய்கிறது!
அதுவும் ஆரிய நுழைவின் இரண்டாயிரம் ஆண்டு சீரழிவைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. இதுபோன்ற நாடு தழுவிய இயக்கம் உலகில் உண்டா எனத் தெரியவில்லை. அதுவும் வன்முறை இன்றி, எதிரிகளுக்கு ஆபத்து இன்றி கருத்தியல் போர் புரிந்தே பெரும் சாதனைகளைப் படைத்திருக்கின்றன!
அறிவும்! அறிவியலும்!
இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய வடிவம் தான் மந்திரமா? தந்திரமா? என்பது! இது மிகவும் சுவையானது; வியப்பானது! அதேநேரம் அறிவும், அறிவியலும் கலந்த உத்தி! இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. அவையனைத்தும் பணத்திற்காக! நம் இயக்கங்கள் செய்வது பகுத்தறிவை வளர்ப்பதற்காக!
இன்னும் சொன்னால் இந்தியா போன்ற ஆன்மிக நாடுகளில் தனி மனிதர்கள் தங்களிடம் சக்தி இருப்பதாகவும், நாங்கள் தான் மனிதக் கடவுள்கள் எனவும் பரப்ப இதைப் பயன்படுத்துகிறார்கள்.
கவனச் சிதைவு!
மந்திரம் என்பதே ஒரு கவனச் சிதைவு தான்! உலகம் முழுவதும் இப்படியான “ஏமாற்றும்” போக்கு இருக்கிறது. அதாவது ஒரு விசயம் குறித்துப் பேசாமலும், சிந்திக்காமலும் இருக்க, அவர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடுதல்! உலகம் முழுவதிலும் உள்ள ஆதிக்கவாதிகளின் நடைமுறை இது!
சாதாரணமாகக் குழந்தைகளுக்கு உணவூட்டும் போது, அங்கே பார் நிலா என்பார்கள். குழந்தையின் கவனம் மாறும். மாறிய அந்த அரை நொடியில் உணவு வாயில் திணிக்கப்படும். நிலாவுக்கு மசியாத குழந்தைகளை, அங்கே பார் பூச்சாண்டி என்பார்கள். அங்கே பார் பூனை என்பார்கள். ஆக தந்திரங்கள் என்பது அதிசயமாக இருக்கலாம், பயமுறுத்தலாக இருக்கலாம், விளையாட்டாய் கூட இருக்கலாம்! ஆக ஒரு விசயத்தைச் சாதித்துக் கொள்ள ஒரு மனிதன், இன்னொரு மனிதருக்கு வைக்கும் தந்திரமே இங்கு மந்திரம்!
மந்திரமல்ல; தந்திரமே!
உலகமே விஞ்ஞானப் பூர்வமாக மாறிவிட்டது. புதிய, புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன! ஆனாலும் இந்தியாவில் இராமர் என்று ஒருவர் இருந்தார், அவர் இங்கே தான் பிறந்தார் என 4 ஆயிரம் கோடியை நாசமாக்கி, கோயில்
கட்டி இருக்கிறார்கள். மோடியின் 10 ஆண்டு கால கருப்பு ஆட்சியை மூடி மறைத்து, மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இந்த இராம நாமம்!
இதே திசை திருப்பும் வேலையைத் தான் இந்த இயக்கமும் செய்தது. ஆனால், நல் வழியில் செய்தது, சரியான பாதையைக் காட்டியது, அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுத்தது! எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள் என்பதைச் செய்து, பிறகு எப்படி ஏமாற்றினோம் என்பதையும் சேர்த்துச் சொல்வார்கள். மற்றவர்கள் நடத்துவது போல, இது மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி அல்ல, “மந்திரமல்ல; தந்திரமே” எனும் நிகழ்ச்சி!
பார்வையாளர்களுக்குப் பிடிக்கவேண்டும்!
தனிப்பட்ட ஓர் உரைக்கும், இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. ஒரு நிகழ்ச்சியில் அல்லது ஒரு வகுப்பில் பேசுகிற போது, கேட்பவர்களுக்கு அது ஈர்ப்பில்லாமல் போகலாம். சிலர் தாம் தயாரித்த செய்திகளை “ஒப்புவித்தல்” பாணியில் அப்படியே பேசுவார்கள். எதிரில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து அறிய முற்படுவதில்லை. கொள்கைகளை 30 விழுக்காடு பெற்றவர்கள், 50, 60, 80 என விழுக்காட்டின் தன்மையில் தோழர்கள் மாறக்கூடும். சிலர் சுழியம் (0) என்கிற அளவில் கூட இருப்பார்கள். ஆக நம் மனநிலைக்கு ஏற்ப பேசுவதை விடவும், எதிரில் இருப்பவர்களின் மனநிலை அறிந்து பேசுவது அவசியமாகிறது; அதுவே முக்கியத் தேவையாகவும் இருக்கிறது!
எந்த உரை அல்லது எந்த வகுப்புகள் போரடிக்கிறதோ, அப்போதே பார்வையாளர்கள் கவனம் சிதறிவிடுகிறது. பார்வை நம்மிடம் இருக்கும், ஆனால், கவனம் வேறிடத்தில் இருக்கும். சில நேரம் பார்வைகளும் நம்மை விட்டுப் போய்விடும். தனி உரை என்பது படிப்பதைப் போன்றது. எப்போது போரடிக்கிறதோ அப்போது விலகி விடுவார்கள். மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் படம் பார்ப்பதைப் போன்றது. இன்றைக்கு எழுத்து ஊடகங்களை விட, காட்சி ஊடகங்கள் முன்னணியில் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
பெருகி வரும் உணர்வுகள்!
மந்திரமா தந்திரமா செயல்களைக் கண்களால் பார்ப்பார்கள், காதுகளால் கேட்பார்கள், வாயால் சிரிப்பார்கள், கைகளால் தட்டுவார்கள், கண்களின் புருவத்தை உயரே விரிப்பார்கள், மொத்த முகத்திலும் ஆச்சர்யத்தைக் கொண்டு வருவார்கள், விடை தெரியாத விசயங்களுக்கு என்ன பதில் என சிந்திப்பார்கள், ஆர்வம் மிகும்போது இருக்கையின் முன் பகுதிக்கே வந்துவிடுவார்கள். ஆக அந்தந்த நேரத்தில் எல்லா உறுப்புகளும் வேலை செய்கின்றன; உணர்வும் சுறுசுறுப்பாய் இயங்குகிறது!
மற்றொன்று, இதை நடத்துகிறவர்களுக்கு இயல்பாகவே நகைச்சுவைப் பேச்சு வந்துவிடுகிறது. பேச்சில் நகைச்சுவை இல்லையென்றால், செயல் போரடித்துவிடும். நம் தோழர்கள் நல்ல நகைச்சுவையோடு இந்நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறார்கள்.
ஏமாளிகள் பலவகை!
மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி எல்லோரையுமே குழந்தையாக மாற்றிவிடும். வயது வித்தியாசம் இல்லை. அதனால் தான் ஆன்மிக விசயங்களில் வயது வித்தியாசம் இன்றியும், கல்வி வித்தியாசம் இன்றியும் ஏமாளிகள் நிறைய இருக்கின்றனர்!
இன்னும் கூர்ந்து கவனித்தால் பாரதீய ஜனதா கட்சி ஹிந்து மதத்தை மய்யமாக வைத்து ஆட்சி செய்கிறது. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பும், வன்முறையும் எல்லை மீறிச் செல்கின்றன. இந்த மனித மீறல்களை எந்த இஸ்லாமிய நாடுகளும் கண்டு கொள்வதில்லை. மாறாகப் பிரதமர் மோடி இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், அங்குள்ள தலைவர்களுடன் நட்பு பாராட்டுவதும், வணிகத்தில் ஈடுபடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது! ஆக இந்த நாடுகளுக்கு மதம் என்பது தம் தவறுகளை மறைக்கும் ஒரு கருவியே ஆகும். தம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே இது பயன்படுகிறது.
பணமே பிரதானம்!
முதலாளித்துவம் என்பதற்கு எந்த நிரந்தரக் கொள்கைகளும் இல்லை. பண வரவு ஒன்று தான் குறிக்கோள். கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்தால், பல நூறு கோடிகள் கிடைக்கும் என்றால் அதையும் முனைப்போடு பெரியளவில் செய்வார்கள். வாழ்நாள் முழுவதும் முதலாளித்துவத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த சேகுவேரா படத்தை உடைகளில் பொருத்தி இலாபம் பார்ப்பது போல!
ஆக, உலகம் முழுவதும் கவனத்தைத் திசை திருப்பி பல்வேறு வகையான இலாபங்களை, நன்மைகளை அடைகிற போது, தமிழ்நாட்டின் திராவிடர் இயக்கங்கள் தான், தீய வழியில் இருக்கும் கவனத்தை, நல் வழியில் பயன்படுத்த இதுபோன்று நிகழ்ச்சிகளைப் பல்லாண்டுகளாய் செய்து வருகிறது. வருங்காலத் தலைமுறைக்கும் இந்தப் பகுத்தறிவுப் பணியைப் பயிற்சியாய் சொல்லிக் கொடுக்கிறது!
பெரியாரின் பொன்மொழி!
“மனிதன் தானாகப் பிறக்கவில்லை; அதனால் தனக்காகவும் வாழக் கூடாது”, என்பது பெரியாரின் பொன்மொழி! அவ்வழியே தோழர்களின்
வழியும்!