முனைவர் வா.நேரு
“மொழி என்பது உலகப் போட்டி போராட்டத்துக்கு ஒரு போர்க் கருவியாகும்” என்றார் தந்தை பெரியார். வர்ணத்தின் அடிப்படையில் ஜாதிக்கொடுமையால் படிக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் இன்றைக்கு உலகப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு, தாங்களும் சுயமரியாதை உணர்வு மிக்க மனிதர்களாக ஆவதற்கான கருவியாகத் தந்தை பெரியார் வழியில் கல்வியைக் கையில் எடுத்திருக்கிறார்கள். தாங்கள் படித்து முன்னேறுவது மட்டுமல்ல, தங்களைப் போல இருக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுப்பவர்களாக மாறுகின்றார்கள்.
ஆங்கிலேயர் ஆட்சியில் தாங்கள் அதிகாரம் பெறுவதற்கான கருவியாக ஆங்கிலத்தைப் பார்ப்பனர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். இன்றைக்கும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். அதிகாரம் பெறுவதற்கான ஒரு வழி ஆங்கிலம் என்னும் விழிப்புணர்வு இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. ஆங்கிலம் கற்கவேண்டும் என்னும் விழிப்புணர்வு தமிழ்நாடு தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களில் பார்ப்பனரல்லாத மக்களிடம் ஏற்பட்டு இருக்கிறது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள அய்தராபாத் நகரத்தில் ‘பெரியார் கல்விக் கழகம் (Periyar Educational Society) என்னும் ஓர் அமைப்பு வைத்திருக்கிறார்கள்.அதில் ஒரு பகுதியாகப் ‘புலே ஆங்கிலம் பேச்சுப் பயிற்சி மய்யம் சார்பில் (Phule’s Spoken English) இணையத்தின் வழியாக குவியம் (Zoom) மூலம் பாடம் நடத்துகின்றார்கள். அதில் பல பேர் பங்கு பெற்றுப் பயிற்சி பெறுகின்றார்கள். ஒரு பயிற்சி வகுப்பில் 40 முதல் 50 பேர்வரை இணைந்து ஆங்கிலத்தில் பேசுவதில் புலமை பெறுகிறார்கள். 30 நாட்கள் மிகத் தீவிரமான பயிற்சியைக் கொடுத்துப் பயிற்சியாளர்களை ஆங்கிலத்தில் பேச வைக்கிறார்கள்.
இந்தப் பெரியார் கல்விக்கழகத்தின் தலைவர் திரு.கர்ரி மல்லேசம் (Karre Mallesam) . இவர் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். முடித்தவர், அய்தராபாத் நகரத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார். ஆந்திராவில் உள்ள எதிஸ்ட் சொசைட்டி ஆப் இந்தியா என்னும் அமைப்பின் உறுப்பினர். அந்த அமைப்பு இந்திய நாத்திகக் கூட்டமைப்பில் (FIRA) இருக்கிறது.
புலே ஆங்கிலம் பேசும் பயிற்சியின் 64ஆம் அணி தொடக்கவிழா இணையத்தின் வழியாக இந்த ஆண்டு(2024) ஆங்கிலப் புத்தாண்டு நாளான ஜனவரி 1 அன்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. அந்தத் தொடக்கவிழாவில் இணையத்தின் வழியாகக் கலந்துகொள்ளத் திரு.கர்ரி மல்லேசம் என்னை அழைத்திருந்தார். அந்தத் தொடக்க விழாவில் அவர் பேசுகின்றபோது, இன்றைக்கு உலக அளவில் இணைக்கும் மொழியாக ஆங்கிலம்தான் உள்ளது, கணினி மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகளோடு கூறி ஆங்கிலம் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். பின்பு,”தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் உள்ளது. அவர்கள் மாநிலத்தில் அவர்களின் தாய்மொழியான தமிழையும், இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் மட்டும் படித்தால் போதும். அதனை மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகு, சட்டமாக்கி, தங்கள் மாநில மாணவர்களைக் காப்பாற்றி உள்ளார்கள். இளம்வயதில் நமது தெலங்கானா மாநில மாணவர்களுக்கு இருக்கும் இந்தி மொழிச்சுமை அவர்களுக்கு இல்லை.நமது மாணவர்கள் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் கற்கின்றார்கள். மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் குறிப்பாகச் சமூக நீதி அடிப்படையில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் கூடுதல் சுமை இல்லாமல் படிக்கின்றார்கள்” என்று குறிப்பிட்டார். உண்மையிலேயே நிகழ்வில் கலந்து கொண்ட எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. தேவைப்படுகிறவர்கள் எந்த மொழியையும் குறுகிய காலத்தில் இன்றைய நவீன உலகில் கற்றுக்
கொள்ளமுடியும். அப்படி உலகம் முழுவதும் செல்லும் தமிழர்கள் அந்தந்த நாட்டு மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்.அப்படித்தான் ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி, டச்சு மொழி எனப் பல மொழிகளை அந்த நாட்டுக்குச் செல்லும் தமிழர்கள் கற்றுக்கொள்கிறார்கள். பயன்பெறுகிறார்கள். ஆனால், ஆதிக்கம் செய்வதற்காக நம் மீது ஒரு மொழி திணிக்கப்பட்டால் அதனை அடியோடு எதிர்த்து நுழையவிடாமல் செய்வதுதான் தந்தை பெரியார் பணி. அப்படித்தான் இந்திமொழி எதிர்ப்புப் பணி நம் பணி.
இந்திப் பாம்பு தமிழ்நாட்டு மாணவர்களைக் கடிப்பதற்குப் பல முறை முயற்சி செய்திருக்கிறது. 1938-இல் அன்றைய ஆட்சியாளர் ராஜாஜியால் இந்தி திணிக்கப்பட்டபோது தந்தை பெரியார் அவர்கள், மறைமலையடிகள், திரு.வி.க, அறிஞர்அண்ணா, நாரண துரைக்கண்ணன் போன்ற தமிழ் அறிஞர்களின் துணையோடு நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாகத் துரத்தி அடிக்கப்பட்டது. “இந்தி எதிர்ப்புப் போராட்டம் 03.06.1938இல் தொடங்கி 21.02.1940 வரை நீடித்தது. மொத்தம் 1271 பேர் சிறைப்பட்டனர்.அதில் பெண்கள் 73 பேர்.குழந்தைகள் 32 பேர். தந்தை பெரியாருக்கு இரண்டாண்டுக் கடுங்காவல் தண்டனை. அறிஞர் அண்ணாவுக்கு 4 மாதத் தண்டனை.தாளமுத்து, நடராசன் என்ற இரண்டு வீரர்கள் சிறைக்கொடுமையால் மாண்டனர்.” எனத் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்” என்னும் நூலில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.
முதல் இந்தி எதிர்ப்புப் போரிலேயே தமிழ்நாடு கொடுத்த விலை அதிகம்.அதைப்போல 1948-இல் நடந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1952, 1953, 1954 ஆண்டுகளில் நடந்த புகைவண்டி நிலையங்களில் இருக்கும் இந்தி எழுத்துகள் அழிப்புப் போராட்டங்கள், 01.08.1955-இல் தந்தை பெரியார் அவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராக அறிவித்த ‘தேசியக் கொடி எரிப்புப் போராட்டம், ‘ பின்பு தி.மு.க.வால் நடத்தப்பட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனத் தமிழர்களின் குருதி ஓட்டத்திலேயே இந்தி எதிர்ப்பு உணர்வை ஊட்டிய இயக்கம் திராவிட இயக்கம்.தந்தை பெரியாருக்குப் பின்பும் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் பல போராட்டங்கள் இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாட்டில் நடைபெற்றன_ நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் 22 மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. அந்த 22 மொழிகளில் ஒன்று இந்தி. போட்டித் தேர்வினை எழுதுவதற்காக மாணவ, மாணவிகள் அப்ளிகேசன் போடும்போது,எந்த ஊரில் நீங்கள் தேர்வு எழுதுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். நாம் மதுரை, திருச்சி, சென்னை என்று எந்த ஊர் அருகில் இருக்கிறோமோ அந்த ஊரினைத் தேர்வு செய்கின்றோம்; தேர்வு எழுதுகின்றோம்.அதனைப்போல இந்த 22 மொழிகளில் எந்த மொழியில் தேர்வு எழுதுகிறீர்கள் என்று கேட்டு நாம் தமிழ் என்றால் தமிழும் ஆங்கிலமும் இருக்கும் வினாத்தாள்,இன்னொருவர் மலையாளம் என்று கேட்டால் அவருக்கு மலையாளமும் ஆங்கிலமும் இருக்கும் வினாத்தாள், மற்றொருவர் இந்தியில் வேண்டும் என்று கேட்டால் அவருக்கு இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் வினாத்தாளைக் கொடுக்கவேண்டும். இப்போது இருக்கும் கணினிக் காலத்தில் இப்படி வினாத்தாள்கள் கொடுப்பது மிக எளிது .ஆனால் இப்போது எல்லோருக்கும் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே இருக்கும் வினாத்தாள் கொடுக்கப்படுகிறது.இது எந்த வகையில் நியாயம்?
தமிழ்நாட்டில் தமிழ்மொழி ஆட்சி மொழியாக ஆன நாள் ஜனவரி 23. 1957-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக் காலத்தில் தமிழ் ஆட்சி மொழியாக மாறி இருக்கிறது. ‘மெட்ராஸ் மாகாணம்’ என்பதை மாற்றித் தமிழ்நாடு எனப்பெயர் வைக்கவேண்டும் என்பதற்காக முதன்முதலில் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்.”20.3.1927-ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில் வெளியான பெரியாரின் சொற்பொழிவிலும், 10.04.1927-ஆம் நாளிட்ட ‘குடிஅரசு’ இதழிலும் தமிழ்நாடு என்ற சொல்லாட்சியைத் தொடர்ந்து பெரியார் பயன்படுத்துகிறார்” என்று குறிப்பிடும் பேரா.ப.காளிமுத்து அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் எப்படி 40 ஆண்டுகளுக்கும் மேலாக எவரும் யோசித்துப் பார்க்காத காலத்திலேயே தமிழ்நாடு, தமிழ் ஆட்சிமொழி என்பதைப் பற்றி எண்ணியவர்_ பேசியவர் என்பதைத் தனது ‘தமிழ்நாடும் தந்தை பெரியாரும்’ என்னும் கட்டுரையில் (திராவிடப்பொழில்) குறிப்பிடுகின்றார். தந்தை பெரியாரின் தொலை நோக்காலும் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து விருதுநகரில் மறைந்த தியாகி ‘சங்கரலிங்கம்’ அவர்களின் ஈகத்தாலும் 1957-இல் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1971-இல் டாக்டர் கலைஞர் அவர்களால் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ் வளர்ச்சித்துறை என்னும் தனித்துறை ஏற்படுத்தப்பட்டுத் தொடர்ந்து தமிழ்மொழி ஆட்சிமொழியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என ஒவ்வொரு நிறுவனத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது..
1938இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா என அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டு நிகழ்த்திய உணர்வு மிக்க போராட்டம். ‘எப்பக்கம் வந்திடும் இந்தி?’ எனக் கேள்வியை அன்றே எழுப்பிய போராட்டம். 1965-இல் தமிழ் நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம்,அதன் விளைவாக ஒன்றிய அரசின் அமைச்சர்களால் தரப்பட்ட உறுதிமொழி,1967-இல் பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, தமிழும் ஆங்கிலமும் மட்டும் போதும் என்று சட்டமான இருமொழிச் சட்டம் எனத் தொடர்ச்சியான போராட்டமும் விழிப்புணர்வுமே தமிழ் நாட்டை இந்தி என்னும் இடரிலிருந்து நம்மைக் காப்பாற்றி இருக்கிறது.
1927-இல் இருந்து சென்னை மாகாணம் என்று அதிகாரப்பூர்வமாக இருந்தாலும், தந்தை பெரியார் தமிழ்நாடு எனப்பேசி வந்த நிலத்தை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றியவர் அறிஞர் அண்ணா அவர்கள். “1967இல் ஜூலை 18-ஆம் நாள் சட்டப்பேரவையில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை அறிஞர் அண்ணா கொண்டு வந்தார். மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றம் செய்யப்பட்ட தீர்மானம் எவர் எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டது.” தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் இருமொழிக்கொள்கையும், தமிழ்நாடு என்னும் பெயரும் நம் பரம்பரை எதிரிகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது. குழப்பிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலாவது இந்தியைத் திணிக்க முயற்சி செய்கின்றார்கள்.
தி.மு.க., அ.இ.அ.தி.மு.க, ம.தி.மு.க போன்ற திராவிட இயக்கங்களால் மொழிப்போர் தியாகிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-இல் கடைப்பிடிக்கப்படுகிறது.’ ‘மொழி என்பது ஒரு கருவி’ என்ற தந்தை பெரியார்,தமிழ் என்னும் கருவியை நவீனப்படுத்த, தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் போன்ற மாற்றங்களைக் கொண்டுவந்து தமிழ் கணினிமயமாக அடிப்படையைக் கொடுத்தார்.’ ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். தமிழ் ஆட்சிமொழி நாளான ஜனவரி 23, மொழிப்போர் நாளான ஜனவரி 25 போன்றவற்றின் வழியாகத் தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டாக நடைபெற்று வரும் மொழிப்போரையும் அதில் நாம் வெற்றி பெற்ற வரலாற்றையும் ,இன்றைக்கும் விழிப்பாக இருக்கவேண்டிய தேவையையும் இன்றைய
தலைமுறைக்குச் சொல்லிவைப்போம். ♦