கோவி.லெனின்
நமஸ்காரம் என்பது வணக்கம் என மாறியதிலும், ஸ்ரீமான் – ஸ்ரீமதி போன்றவை திரு – திருமதி என்ற வழக்கத்திற்கு வந்ததிலும், விவாக சுபமுகூர்த்தப் பத்திரிகை என்பது திருமண விழா அழைப்பிதழ் என அச்சிடப்பட்டதிலும் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு எந்தளவு சிறப்பானதாக உள்ளதோ அதுபோலத்தான் சங்கராந்தி எனப் பஞ்சாங்கம் பார்த்துச் சொல்லப்பட்டு வந்த நம் பொங்கல் நன்னாளை, பண்பாட்டுப் பெருமை மிக்க தமிழர் திருநாள் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடி வருவதிலும் திராவிட இயக்கத்தின் மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது.
ஆரியத்திடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ்ப் பண்பாட்டை மீட்டெடுப்பதிலும், தமிழ் இலக்கியத்தைப் புத்துயிர்க்கச் செய்வதிலும், கலை வடிவங்களை மக்களின் உரிமைக்கான ஆயுதங்களாகக் கூர் தீட்டுவதிலும் திராவிட இயக்கம் தொடர்ந்து தனது பணியினை மேற்கொண்டு வருகிறது. அவற்-றில், பொங்கல் என்பது முதன்மையான களமாகும்.
புராணங்களின் அடிப்படையிலான தீபாவளி, சரஸ்வதி பூசை, பிள்ளையார் சதுர்த்தி, சித்திரை தமிழ் வருஷப் பிறப்பு உள்ளிட்ட பண்டிகைகளைப் புறக்கணிப்பீர் என்பதை தந்தை பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், அதற்கான காரணங்களையும் முன்வைத்து விளக்கங்கள் கொடுத்தார். கொண்டாட்டங்கள் நிறைந்த பண்டிகைகளைப் புறக்கணிக்கும்போது, வழமையான அல்லது வெறுமையான வாழ்க்கைதான் ஒவ்வொரு நாளும் தொடரும். அதனால், புராணக் கதை அடிப்படையிலான ஆரியப் பண்டிகைகளுக்கு மாற்றாக, தமிழர்களின் மரபார்ந்த பண்டிகையும், உழைப்பைப் போற்றும் பெருவிழாவுமான பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாக- -_ திராவிடர் திருநாளாக தந்தை பெரியார் முன்னெடுத்தார்.
தான் கண்ட -கொண்ட ஒரே தலைவர் பெரியார் மட்டுமே என்று அறிவித்த பேரறிஞர் அண்ணாவும், ‘மானமுள்ள சுயமரியாதைக்காரன்’ எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஈரோடு குருகுலத்து மாணவர் முத்தமிழறிஞர் கலைஞரும் பொங்கல் விழாவினைத் தமிழர் தம் இல்லங்கள்தோறும் பண்பாட்டு அடையாளங்களுடன் கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன், இயக்கத்தின் சார்பில் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றனர். மூன்று நாட்கள் நடைபெறும் பொங்கல் விழாவைக் கலை-இலக்கியக் கொண்டாட்டமாக மாற்றியது திராவிட இயக்கம். கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம், இசையரங்கு, நடனம் என மக்களின் திருவிழாவாக மாற்றிக் காட்டியது.
இது நம்ம திருநாள் என்ற எண்ணம் தமிழர்கள் இதயத்தில் பொங்கியது. அதன் விளைவாக,
தமிழ் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்து அட்டைகளை அனுப்பி மகிழ்ந்தனர். பலவித வண்ணங்களில், அழகழகான படங்கள் _ -ஓவியங்களுடன், சிந்தனையைத் தூண்டும் வரிகளுடன் அமைந்த வாழ்த்து அட்டைகள் பழந்தமிழர் பெருமையைப் புதிய பண்பாட்டுத் தளத்தில் வெளிப்படுத்தின. பொங்கல் திருநாளைத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவாக முழுமையாக மாற்றி அமைத்ததில் திராவிட இயக்கம் சார்பில் வெளிவந்த ஏடுகளின் பொங்கல் மலர்களுக்குச் சிறப்பான இடம் உண்டு. பொங்கல் விழா கொண்டாடப்படுவதற்கு முன் அதன் பெருமைகளையும், பொங்கல் விழா நிறைவடைந்தபிறகு அது மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் மகிழ்ச்சியையும் திராவிட இயக்க இதழ்கள் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.
1969ஆம் ஆண்டு பொங்கல் விழா நிறைவடைந்தபிறகு ‘விடுதலை’ நாளேட்டில் அதைப் பற்றி எழுதும் தந்தை பெரியார் அவர்கள், “இந்த ஆண்டில் எனக்கு வந்த பொங்கல் வாழ்த்துக் கடிதங்கள், என் கைக்குக் கிடைத்தது மாத்திரம் 450க்கும் மேற்பட்டவைகளாகும். இவைகளுக்கு நன்றி செலுத்தி, பதில் எழுத எனக்கு கார்டு, கவர் உட்பட 20 ரூபாய்க்கு மேல் செலவு ஏற்பட்டு இருக்கிறது” என்று தன் பாணியில் குறிப்பிடுவதுடன், அதன் தொடர்ச்சியாக, ‘இவைகளை அனுப்பியவர்கள் திராவிடர் கழகத்தையும் சுயமரியாதை இயக்கத்தையும் சேர்ந்தவர்கள் மாத்திரமல்லாமல் பார்ப்பனர் தவிர்த்த மற்ற எல்லா வகுப்பு மக்கள்களைச் சேர்ந்தவர்களாகும்” என்று குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
‘விடுதலை’ நாளேட்டின் பொங்கல் சிறப்புப் பக்கங்கள் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் மக்களை விழிப்புணர்வு அடையச் செய்யக்கூடியனவாக அமைந்திருப்பது வழக்கம். அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழின் முகப்புப் படத்தில் தொடங்கி, உள்ளே இடம்பெறும் படைப்புகள், அதற்கான ஓவியங்கள் அனைத்துமே தமிழர் பண்பாட்டின் வெளிப்பாடாக இருப்பது இயல்பு. கலைஞரின் ‘முரசொலி’ பொங்கல் மலர் சமுதாய _ -பண்பாட்டுத் தளத்தில் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும். நாவலரின் ‘மன்றம்’, பேராசிரியரின் ‘புதுவாழ்வு’, ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் ‘தனியரசு’ உள்ளிட்ட திராவிட இயக்க இதழ்களின் பொங்கல் மலர்களும் சிறப்பிதழ்களும் தனித்துவமானவை.
அந்தக் காலகட்டத்தில், பார்ப்பனர்கள் நடத்தும் நிறுவனங்களிலிருந்து வெளியாகும் இதழ்களே கருத்துருவாக்கத்தில் முதன்மையாக இருந்தன. அவற்றின் பார்வையில், தீபாவளிதான் முதன்மையான பண்டிகை. கங்கா ஸ்நானம் ஆச்சா.. என்று தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தொடங்கி, பலகார– _ பட்சண வகைகள் வரை விளக்கமாகப் பந்தி வைப்பதுதான் அந்த ஏடுகளின் தீபாவளி மலர்களின் சிறப்பு. அவர்கள் வட்டத்திற்குட்பட்ட எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள் அந்த மலர்களில் இடம்பெறும். தந்தை பெரியார் அவர்கள் இத்தகைய ஏடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவை வெளியிடும் தீபாவளி மலர்களில் பெருமையாகச் சொல்லப்படுவதை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் அணுகி, அது பற்றி விளக்கிவிட்டு, அந்த ஏடுகளை வாங்குவதைத் தவிர்ப்பீர் என வேண்டுகோள் விடுத்து, திராவிட இயக்க இதழ்களையும் அவற்றின் பொங்கல் சிறப்பிதழ்களையும் ஆதரிக்கச் சொல்வார்.
‘அவாள் ஏடுகளுக்குச் சவால்’ என விளம்பரப்படுத்தி, திராவிட இயக்கப் பொங்கல் மலர்கள் வெளியாகி வந்தன. ‘திராவிட நாடு’, ‘முரசொலி’ ஆகியவற்றின் பொங்கல் மலர்களில் ஓவியர்கள் மாதவன், நடராஜன் ஆகியோரின் அட்டைப்பட வண்ண ஓவியங்களும், பக்கத்துக்குப் பக்கம் இடம்பெற்றிருக்கும் படங்களும் ‘மலர்’ என்ற சொல்லுக்கேற்ப அழகு சேர்ப்பவை. அந்த மலர்களின் நறுமணமாக அமைபவை திராவிட இயக்கக் கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகள்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தை முதல் நாளே தமிழருக்குப் புத்தாண்டு என முரசறைந்தார். அது, தந்தை பெரியாரும் தமிழறிஞர்களும் திராவிட இயக்கத்தாரும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து தமிழரையும் தமிழ்நாட்டையும் மீட்பதற்கு ஆய்வுப்பூர்வமாக எடுத்த முடிவின் வெளிப்பாடே. தை முதல் நாளான பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாள், திராவிடர் திருநாள் என்று கொண்டாடுவதுடன், அதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்றும் நிறுவும்போது ஆரியமும் அதன் அடிவருடிக் கூட்டமும் அலறுவது இயல்புதான். இன்றுவரை, அந்த அலறலை நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
திராவிடம் என்பதும், தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதும் அந்தளவுக்கு அவர்களுக்குக் கசப்பாக இருக்கிறது. எனினும், நம் பண்பாட்டு விழுமியங்களையும், அறிவியல் உலகில் நாம் மேற்கொள்ள வேண்டிய புத்தாக்கச் செயல்பாடுகளையும் எடுத்துரைக்கும் வகையில் திராவிட இயக்க இதழ்கள் தொடர்ந்து பொங்கல் சிறப்பிதழ்கள்- _ பொங்கல் மலர்களை வெளியிட்டு வருகின்றன. திராவிட இயக்கத்தினரால் பொங்கலுக்கு ‘மவுசு’ கூடிய பிறகு, ஆரிய பண்பாட்டு வழி ஏடுகளும் லாப நோக்கத்துடன் பொங்கல் மலரை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாகியுள்ளன.
திராவிட இயக்க ஏடுகள் மட்டுமின்றி, திராவிட இயக்கத்தவரின் பதிப்பகங்களும் பொங்கல்-_தமிழர் திருநாள்-_திராவிடர் திருநாள் எனத் தொகுப்புகளை வெளியிட்டு வந்துள்ளன. சென்னையைச் சேர்ந்த கலைமன்றம் என்ற பதிப்பகம் 1953ஆம் ஆண்டில் ‘திராவிடர் திருநாள்’ என்ற தலைப்பில் ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளது. அதில் நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய ‘புது நாள்’ என்ற தலைப்பிலான பொங்கல் சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது.
குதிரைமலை என்ற பகுதியில் வாழ்ந்த வள்ளல் பிட்டங்கொற்றன் என்பவரைப் பற்றி கருவூர் கந்தப்பிளை சாத்தனார் என்ற புலவர் புறநானூற்றில் பாடியிருப்பதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் நாவலர். குறிஞ்சி நிலத்தின் சிறப்பையும், காட்டு உழவன் எனப் போற்றப்படும் பன்றி, கிழங்குக்காக அகழ்ந்த நிலம் உழுது போட்டது போல இருந்ததால், அதிலே தினையை விதைத்து வளர்த்து, அதனை அறுவடை செய்யும் குறிஞ்சி நில மக்களின் வாழ்வையும் புலவர் விளக்குகிறார். குறிஞ்சி நிலத்தவர் வீடுகளில் வழக்கமாக மான்கறி சமைக்கும் பெரிய பானையை அடுப்பில் ஏற்றி, சந்தன விறகால் அடுப்பெரித்து, பானையில் பசுவின் பாலை உலை நீராக ஊற்றி, தினை அரிசியைப் போட்டு பாற்பொங்கல் சமைக்கும் நாள்தான் அவர்களின் புதுநாள் என்று புறநானூற்றுப் பாடல் வழியே புதுநாளாம் பொங்கல் நாளினை எடுத்துக்காட்டுகிறார் நாவலர்.
பேராசிரியர் க.அன்பழகன் ‘பொங்குக புதுமை’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், “பொங்கல் முதல் நாளோடு பழைய ஆண்டு கழிந்து பொங்கலன்றே நமக்குப் புத்தாண்டு பிறக்கிறது. பொங்கலின் போதுதான் _விளைந்து, முற்றிச் சாய்ந்திருக்கும் பயிரை அறுவடை செய்கிறோம். அதுவரையில் உழைத்து கண்காணித்து வளர்த்த பயிரைத்தான் அன்று அறுத்துக் கொண்டு வருகிறோம். ஏற்கனவே வளர்ந்ததை, நம்மாலேயே வளர்க்கப்பட்டதை, அவசியமாதலின் நாமே அழித்துதான் ஆக்கம் பெறுகிறோம்.
புதுப்பொங்கல், பழம் பொங்கலை விலக்குகின்றது. அறுவடை அதுவரை வளர்த்த பயிரை அழிப்பதாகின்றது. ஆனாலும் இவற்றால்தான் சமுதாயம் வாழ்கிறது. பொங்கலுக்கு முன் இருந்த
வாழ்வு ஒரு முடிவுக்கு வந்து, பொங்கலுடன் புதுவாழ்வும் மலர்கிறது. அந்தப் புதுவாழ்வும்கூட, அழிக்க வேண்டியதை அழித்து, ஆக்க வேண்டியவற்றை ஆக்கியதன் விளைவேயாகும்” என்கிறார்.
நாவலரின் கட்டுரை பண்பாட்டு விழுமியத்திற்கான சான்றையும், பேராசிரியரின் கட்டுரை புத்தாக்கத்தின் விளைவையும் காட்டுகிறது. அந்தத் தொகுப்பில் திரு.வி.க. கட்டுரை ஒன்றும் பதிவாகியுள்ளது. தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் திராவிட இயக்கத்துக்காரர் அல்லர். அவர் காங்கிரஸ்காரர் _ -தொழிற்சங்கவாதி. அவர் எழுதியதிலிருந்து ‘திராவிடர் திருநாள்’ தொகுப்பு எடுத்தாண்டுள்ள பகுதி இதுதான்.,
“உழவுத் தொழிலாளர் வாழும் வீடுகள், அவர்
உண்ணும் உணவு, அவர் உடுக்கும் உடை முதலியவற்றை நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் கண்ணீர் பெருகுகிறது. விவசாயத் தொழிலாளர் நிலையை வளம்படுத்த ஏதேனும் சட்டம் உண்டா? விவசாய வளம் சுருங்கினதால் அத்தொழிலாளர்களுக்குத் துன்பம் பெருகலாயிற்று. இந்த நிலையில் ஏழைகள் நிலையைச் செழுமைப்படுத்த ஜனப் பொறுப்பாட்சி வேண்டுமா, வேண்டாமா? ஆதிதிராவிடரே! திராவிடரே! ஏனையோரே! ஓர்மின்!! ஓர்மின்!!” என்று எழுதியிருக்கிறார் திரு.வி.க.விவசாயத்தைப் போற்றும் விழாதான் பொங்கல். அந்த விவசாயத்தை மேற்கொள்ப-வர்களும், அதற்காக உழைப்பவர்களும், பலனின்றித் தவிப்பவர்களும் ஆதிதிராவிடர்கள்- திராவிடர்கள் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுவிட்டு, ஏனையோரையும் ஒருங்கிணைய அறைகூவல் விடுக்கிறார் தமிழ்த் தென்றல்.
பொங்கல் மலர் என்பது தீபாவளி மலர் போல ‘கங்கா ஸ்நானம் ஆச்சா” என சம்பிரதாயத்திற்கானதல்ல. அது உழைப்பைப் போற்றுவது, உரிமையைக் கோருவது. அதிகாரம் கையில் கிடைக்கும் வாய்ப்புகளில் உழைப்பின் உரிமைக்கான சட்டங்களை உருவாக்கும் சிந்தனையை விதைப்பது.
பகுத்தறிவு- _ சுயமரியாதை- சமூகநீதி இவற்றை முன்னிறுத்தும் கொண்டாட்டமாக பொங்கல் திருநாளை வெற்றிகரமாக வடிவமைத்தன திராவிட இயக்க இதழ்களின் பொங்கல் மலர்கள். அந்த மலர்களின் மணம் இன்று ஒவ்வொரு பொங்கல் நாளிலும் கமழ்கிறது, தமிழர் திருநாளாக. ♦