உடைந்த ஆசை

2024 Uncategorized ஜனவரி 1-15, 2024

— இராம. அரங்கண்ணல் —

‘‘ஓவியம் என்றால் எனக்கு உயிர். வா, நண்பா வா!” என்று வருந்தியழைத்தான் நண்பன் நாகன்.
நெடுநாளைக்குப் பின் எங்கள் சந்திப்பு மலர்ந்திருந்தது. பள்ளிப் பருவத்து நண்பர்கள் நாங்கள்! அன்பின் அழைப்பை மறுக்க முடியுமா? ஒரு கோயில் விடவில்லை. ஊர்க்கோடி வரை சென்றோம். அங்கே, பாழடைந்த மண்டபம் ஒன்று விதவைபோலக் காட்சி தந்தது. அதனுள் சென்று பார்த்தோம். உடைந்து கிடந்தது ஒரு சிலை! உற்று நோக்கினோம் _ மிகமிகப் புராதன காலத்தது போலத் தோன்றிற்று.

“பார்த்தாயா நாகா” என்றேன். நான்.

“பரவசமுண்டாகிறதப்பா, எனக்கு ஆகா, அருமையான ஓவியம்! எவ்வளவு அழகாகச் செதுக்கியிருக்கிறான் சிற்பி” என்று பதிலளித்தான், அவன்.

“செதுக்கியிருக்கிறான் அல்ல; செதுக்கியிருக்கிறாள்” என்று சொல்லுங்கள், என்று கூறிக்கொண்டே வந்தார், எங்கள் ஊர் தமிழ்ப் பண்டிதர்.
தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், உடைந்து போன சிலையைக் காண்பதில் அவருக்கோர் உற்சாகமாம்!

“இந்தச் சிலையின் கதை தெரியுமோ?” என்றார்.
எனக்குக் கதைகள் என்றாலே பிடிப்பதில்லை. எனவே, பேசாமலிருந்தேன். ஆனால், நாகன் விடவில்லை. ஆகவே, அவர் ஆரம்பித்தார், அவருடைய சொந்த நடையில்.

“தமிழருவி… சிற்பி சித்தானந்தரின் காரிருளில் வந்த தங்கத் தட்டு; அந்திவான் அள்ளி வழங்கும் அழகுச் சோலை; நீலவானத்தின் ஏடு; நெஞ்சைச் சுற்றிப் பிணைக்கும் கலைச்சுரங்கம்.

இளமை கொழிக்கும் அவள் இதய ஏடு மணிமுடியின் சந்திப்பிலிருந்து புதுவர்ணம் பெற்றுக் கிடந்தது. மணிமுடி _ சிங்கத் தமிழன்; செங்கரும்புத் தோளான்; தமிழின் அலை. தன் எண்ணங்கள் வடித்துத் தந்த காவியத்தை உலகுக்குப் படைக்க பேரரசன் காரியிடம் வந்திருந்தான்.
பேரரசன் காரியின் நாடு, கலை _ கவிதைகளை உறை போட்டுக்கொள்ள முந்திக் கொண்டிருந்த காலம்.

அவன் பேரவையில் இரண்டு விடிவெள்ளிகள். ஒன்று சிற்பி சித்தானந்தர்; இன்னொன்று கவிஞன் மணிமுடி
விடிவெள்ளிகளின் காவிய உள்ளம் ஒன்றாகிவிட்டது. இரண்டு இதயங்களும் நட்புப் பிணைப்பால் ஒன்றிவிட்டன. தங்கள் ஆர்வத்தின் அளவைப் பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் அமைத்துக்கொண்டன.

கலைஞனின் படைப்புகளைக் காண வழிபெற்ற கவிஞனின் ரசனை உள்ளம் வானப் புறாவாயிற்று.
தனிமை நேரங்கள் சித்தானந்தரின் சிந்தனை வடித்துத் தந்த உருவங்களைச் சுவைக்க மணிமுடிக்கு உதவின.
ஒருநாள்…

ஆர்வம் ததும்ப சிற்பியின் குடிசை நோக்கிச் சென்று கொண்டிருந்த மணிமுடிக்கு, குடிசையிலிருந்து எழும்பிக்கொண்டிருந்த உளி ஓசை அங்கு நிலவிய அமைதியை அலைக்கழித்ததோடு, “சித்தானந்தர் இருக்கிறார்” என்ற செய்தியையும் சொல்வதுபோல இருந்தது!
ஆவல் கொந்தளிக்கக் கதவைத் தள்ளிய மணிமுடி திகைத்தான். அவன் கண்களில் தேங்கிய வியப்பு அவனைச் சிந்தனைக் குகையில் தள்ளிற்று. வாயிற்படியைப் பிடித்துக் கொண்டு சிலையாகிக் கொண்டிருந்த அவன் கலை உள்ளம், எதிரே உருப்பெற்றுக் கொண்டிருந்த சிலையின் மீதும், அதை உருவாக்கும் பெண் உருவத்தின்மீதும் மாறி மாறி ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

“மணிமுடி! எப்பொழுது வந்தீர்கள்?”
தோட்டத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சித்தானந்தரின் குரல் சிலையாகியிருந்த மணிமுடிக்கு உலகை உணர்த்தியது.

“அது தமிழருவி; என் ஏக மகள். ஒரே மாணவி… வாருங்கள். அடுத்த அறை முழுவதும் அவள் படைத்த சிருஷ்டிகள்தான்.”
வியப்பு, மணிமுடியின் கண்களிலிருந்து வழிய ஆரம்பித்தது. உயிரோவியங்களைக் கண்ட அவன் உள்ளம் பெருமிதத்தால் விம்மியது. உணர்ச்சி அலைகளை முறித்துக் கொண்டு வாழ்த்துகள் குவிந்தன.

“கலைஞரே! இவை இந்நாட்டின் புகழ்க் களஞ்சியம். வருங்கால உலகத்திற்கு நம் வாழ்வைச் சொல்லும் உயிர்கள். இந்த அற்புதச் சிருஷ்டிகளைக் காணச் செய்த தமிழுக்கு என் நன்றி. இதைச் சமைக்கும் தமிழருவி வாழ்க! அவர் கலை ஓடை உள்ளத்தின் நற்கவிதையாகட்டும்.-.”
மகிழ்ச்சிப் பெருக்கின் கொந்தளிப்பு அடங்கி இதய ஒலிக்குப் புள்ளியிட்டது. சுவை ததும்பிக் கிடந்த அவன் ஆர்வக் கண்கள் தமிழருவியிடம் சாய்ந்தன. நிலத்தை அளவிட்டுக் கொண்டிருந்த அவள் கண்கள் திடீரென உயர்ந்தன. அந்தச் சாளரங்களில் நன்றியும் நாணமும் தேம்பிக் கிடந்தன.
நாட்கள் மரச் சருகுகளாயின.

விதவிதமான சிலைகள்…
ஆடும் நிலையில்
யாழை மீட்டும் பாணியில்…
வேய்ங்குழலை யசைக்கும் விதத்தில்…
அவள் கற்பனை எண்ணற்ற உருவங்களைச் சமைத்துக் கொண்டேயிருந்தது.

தமிழருவி கலையுலகுக்கு அழகை எழுப்பிக் கொண்டிருந்தாள். கலைத்தேனில் சொக்கிய வண்டான மணிமுடியின் ஓய்வு வழங்கிய உல்லாச நேரம், தமிழருவியின் சிருஷ்டிகளைச் சுவைக்கப் பாதை அமைத்தது.

முல்லைக் காட்டில் மாலை நேரங்கள் தமிழருவியின் இன்ப ஏரியாகக் கிடந்தன. அவள் மீனக் கண்கள் எதிரே நின்ற பாறைகளிலெல்லாம் தன் ‘கெண்டை’ ஆட்டத்தை ஆடத் தயங்குவதில்லை! அவள் இதய ஆசைகள் ஒவ்வொரு பாறையிலும் சித்திர விசித்திரங்களை ஜோடித்துக் கொண்டேயிருக்கும்!
அதே வேளையில், மணிமுடி தன் எண்ணங்களை அருவியிடமும் ஆகாயத்திடமும் பறக்க விடுவான். சிந்தனை கொப்பளிக்கும் இதயம் அசைத்ததுபோல அவன் உதடுகளில் ஒலிகள் எழும்ப ஆரம்பிக்கும்.

தமிழருவி _ மணிமுடி சந்திப்பு வளர்பிறையாக ஆக ஆக தமிழருவியின் உள்ளக் கதவு அசைய ஆரம்பித்தது. தன் எண்ணங்களை அவனுக்கு வடிக்க ஆரம்பித்தாள். அவள் இதயமூலையில் ஒரு குறுகுறுப்பு குருத்துவிட ஆரம்பித்தது!

‘‘தமிழருவி! நீ கலையுலகை எழுப்ப வந்த ஒரே உருவம். உனது கற்பனைகள் உலகம் வியக்கும் அற்புதச் சிருஷ்டிகள். நீ படைக்கும் விருந்துகள் உடல் சோரும் ஆவிகளின் உவகைக் கூத்துக்கு இடும் வித்து. நேற்று நீ அமைத்தாயே அந்தச் சிலையில்தான், அடடா! என்ன இயற்கை நிலை! வேய்ங்குழலைத் தழுவும் அவன் உதடுகள்_ அந்தப் புன்னை மரம்…’’

அவன் பாராட்டுதல்கள் திராட்சைக் கொத்துதான். ஒவ்வொரு சந்திப்பிலும் தமிழருவியின் சிறப்பை, செயலை வாழ்த்த அவன் கலையுள்ளம் தயங்காது!
அன்று, தமிழருவி புது உருவத்தைச் சமைத்திருந்தாள்.. அவள் கற்பனை எழுப்பிய விநோத எண்ணம் அந்த உருவத்துக்கு நான்கு கைகளைச் சிருஷ்டித்திருந்தது. சிலையின் அழகிலே சொக்கிக் கிடந்த மணிமுடி, வெற்றிகண்ட வீரனைப் போல் தன்னை நோக்கிய தமிழருவியின் மின்னல் வெட்டைக் கவனிக்கவில்லை. நான்கு கைகளுடன் நடனமாடும் பாணியில் உருவாகியிருந்த சிலையைக் கண்ட மணிமுடியின் முகம் பயம், பாசம், வியப்பு கலந்த அந்திநேரமாக இருந்தது…. அவன் உள்ளத்தின் சலன ரேகைகள் முகத்தில் கொப்புளித்துக் கொண்டிருந்தன! அவன் குரல் கணீரென ஒலிக்கத் துவங்கிற்று.
‘‘அருவி! உலகம் பெற்றெடுக்காத ஒன்றை நீ ஆக்கிவிட்டாய். உனது சமைப்பு நடன அரசாக மட்டுமல்ல சிற்பக் கலையின் அரசாகவும் அமைந்துவிட்டது. நீ இந்நாடு பெற முடியாத பொக்கிஷம், உன் கலைத்திறன்…”

மணிமுடியின் இதயம் வழக்கமான புகழ் மழையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தது. ஆனால் அவள்…?

தனது ஆசைப் பறவைகளைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்த தமிழருவி அவன்மீது வைத்த கண்களை வாங்கவில்லை! அவனோ சிலையைப் பார்த்தவாறே பைத்திய நிலையை எட்டிக் கொண்டிருந்தான்! அவள் அவனிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்க்கிறாள் என்பதை, சிலைக்கு காவியம் அமைத்துக் கொண்டிருந்த அவன் நிலையைக் காணக் காண வெடிப்பது போன்று துடித்த அவள் உதடுகள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன. திடீரென்று நிமிர்ந்தாள்.

“கவிஞரே! உங்களை ஒன்று நான் கேட்கப் போகிறேன்.”

“ஒன்று என்ன, ஓராயிரம் வேண்டுமானாலும் கேளேன், அருவி!”

“உலகில் உங்கள் இதயத் திசையில் நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பது?”

“என் இன்பத்தின் இருவிழிகள் கலை, கவிதை இரண்டும் தான்!”
மணிமுடியின் பதிலைக் கேட்ட தமிழருவியின் தழதழத்த குரல் மெதுவாக முணுமுணுத்தது “கலை… கலை” என்று.

“அருவி! ஏன் முணுமுணுக்கிறாய்? ரசனையுள்ளத்தின் ராஜமாளிகை கலைதானே? நீ இன்று அமைத்த இந்த உருவம் நடனராச உருவம் _ கட்ட முடியாத ககன மண்டபமாகக் காட்சியளிக்கிறது!… இந்தச் சிலை என் சிந்தனையின் அணுக்கள் ஒவ்வொன்றிலும் நர்த்தனமாடத் துவங்கிவிட்டதே!”

“எது? இந்தச் சிலையா?”

“வியப்பென்ன அருவி… பாவம் ததும்பும் இந்தச் சிலை”
மணிமுடியின் கண்கள் மீண்டும் நடராசக் கலையைத் தழுவ ஆரம்பித்தன. தமிழருவி தனது இதயக் குமுறலை பெருமூச்சாக உதறிக் கொண்டிருந்தாள். அமைதி சிறிது நேரம் தன் ஆட்சியை நடத்திப் பார்த்தது.

“மணிமுடி! உண்மையாகக் கூறுங்கள். தங்கள் வாலிப உள்ளத்தில் சிலைகளைத் தவிர வேறு ஏதாவது…”

“கதலியிடம் காஞ்சிரங்காயா? இல்லை அருவி, எதுவும் இருக்க முடியாது!”
மாலைநேர மலராக ஆகிக்கொண்டிருந்த தமிழருவியின் முகம் சிந்தனைக் குழியில் விழுந்தது. ஆவல் ததும்ப அவன் வாயிலிருந்து எதையோ அவள் எதிர்பார்த்தாள். அவனோ பேசிக்கொண்டேயிருந்தான்.

“சிற்பமும் கவிதையும் உன் இதய யாழில் இன்பத்தை மீட்டும் இரு தந்திகள். என் வாழ்வின் உதய நேரத்தில், என் தலை பம்பரமாக_பசி, இல்லாமை, ஏழ்மை கொண்டு பின்னப்பட்ட கவலைகளே அதைச் சுற்றிவிடும் கயிறுகளாக இருந்தன. வாழ்வின் நாட்களை விரலில் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தேன். ஆனால், காலம் ஒரு கட்டியக்காரனல்ல; இன்ப எண்ணங்களைப் பதித்து, அறுவடை காண்பதில் கவலையுள்ள ஒரு கள்வன் என்பதை என் சிந்தனை குவித்த கவிதைகளிலும் அதன் வழியாக உன் கலைக்கோயில்களைக் காணப்பெற்ற சந்தர்ப்பமும் நிரூபித்துவிட்டன! என் ஆசைக் கனவுகள் அந்தரத்தியானமாகி விடவில்லை; தினம் பகலவனாகவே ஆகிக் கொண்டுள்ளன.”
அழைப்பின்றியே தன் வாழ்க்கை அனுபவங்
களின் துன்ப மூச்சுகளைத் தெளிக்க ஆரம்பித்
தான் மணிமுடி. சரிந்த குன்றில் உருண்டு ஓடும்
கற்பாறையாக இருந்த அவளது ஆசைக் கனவுகள்
அந்தகாரத்துக்குள் மெள்ள மெள்ள நுழைவது
போலிருந்தது அவளுக்கு! சஞ்சலம் அலைமோதிய
அவள் உள்ளம் உறைந்து போய்க் கொண்டிருந்தது. அவள் ஆசைகள் காற்றுக் கோட்டைகளாகிவிட்டன. எதிரேயிருந்த குன்றுகளின்மீது பதிந்து கிடந்த அவள் கண்கள் அருவியாகிவிட்டன. சலனமும் வருத்தமும் பீறிட்ட தன் துயர முகத்தைத் திருப்பி மணிமுடியைப் பார்த்தாள். லாகிரிவெறி கொண்டவனாயிருந்த மணிமுடியின் வார்த்தைகள் இன்னும் அடைபட்ட பாடில்லை. ஏதோ நினைவு பெற்றவள் போல் ‘விர்’ரென எழுந்தாள். உள்ளத் துயரம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் நர்த்தனமாடுவது போன்று இருந்தது. அவள் தள்ளாடித் தள்ளாடிச் சென்ற தன்மை… எங்கேயோ அவள் கால்கள் அவளை அழைத்துப் போய்க் கொண்டிருந்தன.

தன் காவிய எண்ணங்களைப் பறக்க விட்டுக் கொண்டிருந்த மணிமுடி திரும்பிப் பார்த்தான். மறைந்து கொண்டிருந்த அந்திநேரம் போல தமிழருவியின் தோற்றம் அவன் கண்களில் பட்டது.

“அருவி! அருவி!!” என்ற அவன் அழைப்பு அமைதி நிலவிக் கொண்டிருந்த அந்தக் கானகத்தில் எதிரொலிக்கத் துவங்கியது.
அவள் போய்க் கொண்டேயிருந்தாள்.
வானவிளிம்பின் அடித்திசையிலிருந்து முகிழ்த்து எழும்பிய பூரண சந்திரிகையைப் பார்த்தவண்ணம் தனது தேம்பிய கனவுகளைத் தமிழருவி அசைக்க ஆரம்பித்தாள். கண்களில் துளிர்த்த நீர்த்துளிகள் அவள் பெருமூச்சுகளால் அசைந்து, அசைந்து அவளைத் தாங்கிக் கொண்டிருந்த பாறைகளில் தெறித்துக் கொண்டிருந்தன.

“தமிழருவி!”
பின்புறமாக வந்து நின்ற மணிமுடியின் கலக்கக்குரல் அவள் ஏகாந்தத்தைக் கலைத்தது. ஒரு ஏக்கப் பார்வையை அவனை நோக்கி மின்னலாக்கி விட்டு தன் உடைந்த சிந்தனை அணுக்களின் உயிரைக் கண்களால் பிழிய ஆரம்பித்தாள்.

“அருவி! என் இதய ஒலிகளைக் கூட சட்டை செய்யாது அப்பொழுதே வந்த நீ ஏகாந்தமாக இங்கேயேயிருக்கும் வகை?”

“உடைந்த வீணைக்கும் உதிர்ந்த நட்சத்திரத்

துக்கும் உலகத்துப் புழுதி மேட்டில்தானே சிம்மாசனம் காத்திருக்கும்.”

“அப்படியென்றால்?”

“இதயப் பாஷையைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு மனிதரின் நட்பைவிட, மனித வாடையே நுழையாத தீவாந்திரம் ஆயிரம் தடவை அமைதி அமிர்தத்தை அள்ளிக் கொடுக்கும்.”

“அருவி…! உன் வாயிலிருந்தா அனல் சொற்கள்? அணைந்து போன கோபத்தின் சாம்பற் குப்பையில் உனது எண்ணங்களின் ஒவ்வொரு ரேகையையும் துடைத்துக்கொண்டேன்.”

“எண்ணங்கள்?”
வெடித்துக் கிளம்பிய குமுறல்களைப் பீறிக் கொண்டு வந்த சொற்களுடன் தமிழருவி எழுந்தாள்.
அவள் கால்கள் குடிசையை நோக்கி விரைந்தன.

இருட்டுக்குள் நுழையும் அந்தி அழகியைப்
போலப் பறந்து கொண்டிருந்த தமிழருவியின் புள்ளி மறையும் வரை மணிமுடி பார்த்துக் கொண்டேயிருந்தான். அவன் உள்ளம் அந்தகாரக் குகையாகியிருந்தது. “ஏன் தமிழருவிக்கு இத்துணை கோபம்?” என்ற கேள்விக்குறிகள் அவன் சாந்த இதயத்தில் சஞ்சல மேகங்களைக் குவித்தன. நினைத்து நினைத்துப் பார்த்தான்.
மேகமண்டபத்தினூடே ஒய்யாரமாக மறைந்து மறைந்து வரும் சந்திரனின் அழகில் நடராச உருவத்தின் முகம் பிரதிபலிப்பதாக அவன் காவிய உள்ளம் ஒப்படைக்கப் பாய்ந்து கொண்டிருந்ததே தவிர, ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடை கண்டதாகத் தெரியவில்லை.

மறுநாள் ‘அருவி!’ ‘அருவி!’ என்று அழைத்துக்கொண்டே நுழைந்த மணிமுடி, குடிசையில் நிலவிய அமைதியைக் கண்டு திடுக்கிட்டான். வழக்கமான உளிச் சத்தமோ, அன்பழைப்போ எதுவுமின்றிக் கிடந்தது அந்தக் குடிசை.

வாயிற்படியிலிருந்து “அருவி” “அருவி” என்று எழுப்பிய அழைப்பொலி எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

காலத்திற்கு இரையான சிற்பியின் கீற்றுக் குடிசையின் ஒரு பகுதியைத் தன் பாதையாக அமைத்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்த காலை நேரத்தின் தனி ரேகைகள் நடராசச் சிலையின்மீது விழுந்து கொண்டிருந்தன; ஏக்க முகத்துடன் சிலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் அருவி. நேற்றுவரை தான் அமைத்த சிலையை அழகுபடுத்துவதில், தூர நின்று பார்ப்பதில் துள்ளி மகிழ்ந்த அவள் உள்ளம் இன்று அதை வெறிக்க வெறிக்கப் பார்த்தது!
அவளது சிந்தனைச் சோலையில் அருவி என்ற மணி முடியின் குரல் ரீங்காரமிட்டதுதான் தாமதம், அவள் மானாகி விட்டாள். சரேலென எதிரே கிடந்த முல்லைப் புதர் நோக்கிப் பாய்ந்தாள்.

கலாமண்டபத்தில் அந்தக் கவிஞனின் கண்கள், அவளைத் தேடின. அவள் தென்படவில்லை; ஆனால் அவளது சிருஷ்டிகள் தென்பட்டன. அவற்றைக் கண்டதும் அவனது காவிய உள்ளம் மெழுகாயிற்று. வழக்கம்போல அவன் ஆனான்!

நடராசச் சிலைக்கருகில் சென்றான். அதன் அழகில் லயித்த அவனது இதயம் காவியச் சுமையால் குலுங்க ஆரம்பித்தது.
“ஆகா! அருவி, சாதாரணப் பெண்ணல்ல; அவளை இந்த உலகின் ஒரே ராணியாக்கிவிடலாம். அவளது கை வண்ணத்தின் சிருஷ்டி, வர்ணிக்கமுடியாத தமிழ்ப் புதையல்! இந்தச் சிலையா? அல்ல, அல்ல! என்னைக் கவர்ந்த கல்லுருவம்… என்னை அடிமை கொண்ட அழகுருவம்… கலைத் தெய்வம்…”
ஆவேசத்துடன் அவனிடமிருந்து எழும்பிய இந்தச் சொற்கள் கவலையையும் ஆவலையும் சேர்த்து அசை போட்டுக் கொண்டிருந்த அருவியின் காதுகளில் விழுந்தன. அவள் கலாமண்டபத்தைப் பார்த்தாள்.

கவிஞன் நடராசச் சிலையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தான். அவள் இதயப் பசியை அக்காட்சி கிளறிவிட்டது. வெறித்துப் பார்த்தான். தழுவிய அவன் தடாரெனச் சாய்ந்தான். சிலையின் காலடிகளிலே அவன் தலை கிடந்தது. அவன் வாய் என்னவோ முணுமுணுக்க ஆரம்பித்தது. தமிழ்ச் சொற்கள் ஓடி விளையாடத் துவங்கின. கற்பனைகளை ஓட்டிக் கொண்டிருந்தான். கவிதைப் புறா சிறகடித்துப் பறந்தது.

“உலகைப் படைக்கும் உன்னடியில்…”

“நீயல்லால் வேறுண்டோ?”

“அண்ட சராசரமும் அடிமையாகாதோ?”

“அய்யனே! அருட்ஜோதியே!”

“நீயே உலகம். உலகமே நீ”’
இதுபோன்ற வரிகள் மட்டும், அருவியின் காதுகளில், பாதிப்பாதி ஒலியுடன் விழுந்தன. அவன் கவிதைகள், கற்பனைச் சிறகுகளுடன் நடராசகாவியம் தயாரித்துக் கொண்டிருந்தன. ஆனந்தப் பரவசம் அவன் முகத்தில், கரங்களைத் தூக்கினான்; கும்பிட்டான். கண்களை மூடியபடி அமர்ந்தான்.
அருவியால் அந்தக் காட்சியைக் காண முடியவில்லை.

“தேன் தந்த நான் திகைத்துக் கிடக்கிறேன். கவிஞர் காவிய மாலை சூட்டுகிறார். நான் செதுக்கிய கல்லுக்கு!” என்று அவளது உள்ளம் விம்மியது.

“அவரை அணைக்கத் துடிக்கிறேன்’ அவரோ, நான் வடித்த சிலையைத் தழுவுகிறார்” என்று சீறிற்று அவள் சிந்தனை.

“நான் பாலைவனப் பறவையல்ல; பசுந்தளிர். இருந்தும் என்மீது, என் அழகுமீது, படராத அவர் உள்ளம், நான் உண்டாக்கிய சிலைக்குப் பாமாலை சூட்டுகிறது.”
அவள் அலையானாள்! ஆத்திர எரிமலை-யானாள்! ஓடினாள்.

“தடார்”
உளி சிலையின் தலையைக் கீழே உருட்டியது. கண்மூடிக் கிடந்த கவிஞன், சத்தம் கேட்டுத் திடுக்கிட்டான். பார்த்தான். சிலையின் தலை கீழே
கிடந்தது. நடராச உருவம் ‘முண்டம்’ ஆக நின்றது.
கோரச் சிரிப்புடன் எதிரே நின்று-கொண்டிருந்தாள் அருவி.
“கொடுமைக்காரியே! கும்மிருட்டின் பிம்பமே! கொலைக் கஞ்சா சின்னமே!” என்று கூறிக்கொண்டே பாய்ந்தான் அருவியை நோக்கி.
பிணம் ஒன்று வீழ்ந்தது. கலைச்செல்வியின் கடைசி மூச்சு காற்றோடு கலந்தது. சிற்பியின் சிந்தனைச் செல்வம் செத்தாள். காதல் விரும்பிய அந்த அழகு அரும்பு அழிந்தது.
கண்ணெதிரே கண்ட உயிரோவியத்துக்கு மதிப்புத் தராத, அந்தக் கவிஞனின் காவியமனம், சிலையின் மீது கொண்ட பக்தியால், ஒரு மலரைக் கசக்கிப் போட்டது.
கலைச்செல்வி செத்தாள்! கவிஞன் காதகனானான்!
“கவிஞன் காதகனானான்” என்ற வார்த்தையைச் சொல்லிய தமிழ் அய்யா, எங்கள் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.
“அது சரி, அருவியின் விசித்திர ஆசை நடராச
உருவத்தைச் செதுக்கியது என்கிறீர்களே; அவளுக்கு
முன் யாரும் அப்படிச் செதுக்கியதில்லையோ?” நாகன், கேட்டான்.
நான் இப்படிக் கேட்டேன்: “ஏன் அய்யா! இப்போது பல கோயில்களில் நடராசச் சிலைகள் இல்லையோ?”
தமிழ்ப் பண்டிதர் சிரித்தார். “தம்பி! இப்போது பல இடங்களில் இருக்கின்றன. படையலும், பாலாபிஷேகமும் பெற்ற வண்ணம்! ஆனால் அதைச் சிருஷ்டித்தது சிற்பியின் விசித்திர ஆசையாகத்தானே இருக்கும்; இல்லையா? அவன் இப்படிச் செய்வோமே என்று நான்கு கைகள், நடனமாடும் பாணி எல்லாம் வைத்து முதல் சிலையைச் செதுக்கியிருப்பான்” என்று பெரிய பிரசங்கம் செய்தார்.
அவர் வார்த்தைகளில் உண்மை ஒலித்தது.
எங்கள் இதயங்களில், ‘கலைச்செல்வி செத்தாள்!
கவிஞன் காதகனானான்’ என்ற வார்த்தைகள் எதிரொலித்தன. றீ