நான் விஞ்ஞானியானதற்குப் பின்புலம் தந்தை பெரியாரின் சிந்தனைகளே!

2023 கட்டுரைகள் டிசம்பர் 16-31, 2023 மற்றவர்கள்

– விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை 

ஞாயிறு மாலைப் பொழுதில் பெரியார் விழாவில், பெரியாரை நினைந்து போற்றும் வரலாற்று நிகழ்வைப் பார்த்தோம். பூபாலன் அவர்கள் பேசினார்கள். ஆங்கிலத்திலும், தமிழிலும் மிகச் சிறப்பாக உரையாற்றினார்கள். ‘பெரியார் விருது’ வாங்கிய திரு. பொன் சுந்தரராசு அவர்களுக்கும், மழலை மொழியில் பேசிய சிறு குழந்தைகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு இது என்னுடைய இரண்டாவது உரை சிங்கப்பூரில். இதற்குமுன் எழுத்தாளனாகப் பேசினேன். இப்பொழுது இங்கே பறந்து பறந்து வந்து, ஒரு கன்னி முயற்சி போன்று, ‘‘பெரியாரையும் அறிவியலையும்’’ இணைத்துப் பேசவிருக்கிறேன்.

தந்தை பெரியாரைப்பற்றி நீங்கள் தெரிந்திருக்கலாம். அறிவியலை சில அங்கங்களைப் படித்திருக்கலாம். அறிவியலாளர்களாக இருந்திருக்கலாம்; அறிவியலாளர்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம். இருந்தாலும், அடுத்த ஒரு மணிநேரம், நீங்கள் பெரியாரைப்பற்றி என்னென்ன தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அதையெல்லாம் கொஞ்சம் நேரம் மறந்துவிடுகிறீர்கள். அதேபோன்று அறிவியலையும் கொஞ்சம்
மறந்துவிடுங்கள். என்னைப்பற்றி ஏதாவது தெரிந்திருந்தாலும் அதையும் மறந்துவிடுங்கள்.

5.11.2023 அன்று சிங்கப்பூரில் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் ‘‘பெரியார் விழா 2023’’ நடைபெற்றது.
‘‘பெரியாரும் – அறிவியலும்!’’ எனும் தலைப்பில் விண்வெளி விஞ்ஞானி முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் ஆற்றிய சிறப்புரை.

ஏனென்றால், அடுத்த ஒரு மணிநேரம் நாம் புதிது புதிதாகப் பார்க்க முடியுமா? என்ற ஒரு முயற்சியைச் செய்யவிருக்கின்றோம்.
பெரியாரை – ஒரு சமூக விஞ்ஞானி என்று சொல்கிறோம். அறிவியல் என்ற ஒன்றை வைத்து, எப்படி கொண்டு போனார்கள்; பெரியார் என்ன சொன்னார் என்பதை வைத்து – நடைமுறையில் நாம் என்ன பார்த்திருக்கிறோம் என்பதை வைத்து ஒரு தனி முயற்சியாக இங்கு பார்க்க முயற்சி செய்கின்றோம்.
அப்படி பார்க்கும்பொழுது, பெரியார் திரும்பத் திரும்பச் சொன்னது என்னவென்றால், பழைமை என்பதைத் தாண்டி, புதுமையை நோக்கிப் போகவேண்டும். அதுதான் மனிதனுக்கான ஒன்று என்று சொல்வார்.

அந்த வகையில், இன்றைக்கு நான் பேசக்கூடிய இந்த உரையே ஒரு புது முயற்சிதான்!

ஏனென்றால், இவ்வளவு பெரிய மேடை கொடுத்திருக்கிறார்கள். மனிதன் வாழ்க்கையே ஒரு பெரிய சந்தர்ப்பம். அந்த வாழ்க்கை பரந்துபட்ட வாழ்க்கையாக இருக்கவேண்டும்; ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கக்கூடாது என்பார்.

அந்த வகையில், ஒரு பேச்சாளனாக ஒரே இடத்தில் பேசுவதைவிட, இந்த மேடையை முழுவதையும் பயன்படுத்தலாமா? பரத நாட்டியம் ஆடுகிறவர்கள் மேடையை முழுதாகப் பயன்படுத்தினார்கள். அதேபோன்று, நாம் ஆடாவிட்டாலும், முழுமையாக மேடையை எப்படி பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.
அதேபோன்று பின்புலத்தில் திரை வைத்திருக்கிறார்கள்; அதையும் பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்ற வகையில், உங்களுடைய கண்கள் வழியாகவும், காதுகள் வழியாகவும் மெதுவாக மெதுவாக பெரியார் இன்றைய நிலையில், அறிவியலுக்கும், இன்றைய நிலையில் மட்டுமல்ல, நாளை வரப் போகின்ற நிகழ்விற்கும் என்ன சொல்லியிருக்கிறார்? அது எப்படி ஒத்துப் போகிறது என்பதைப்பற்றியும் சொல்கிறேன்.

இங்கே சொன்னார்கள் அல்லவா – ‘‘பெரியார் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டு இருக்கிறார்’’ என்று !
அது தொடர்பாகப் பார்த்தீர்களேயானால், ‘‘விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவதில்லை’’ என்பதாகும்.

அதுபோன்று பெரியாருடைய விதைப்புகள், எப்படி ஒரு விருட்சமாக வளர்ந்திருக்கிறது; அந்த விருட்சம் வருங்காலத்தில் இன்னும் இன்னும் எப்படி படர்ந்து போகும் என்கிற நிலைப்பாட்டில் நான் இன்றைக்குச் சொல்ல முயற்சி செய்கிறேன்.
அந்த வகையில், ‘‘பெரியாரும் அறிவியலும்’’ என்ற தலைப்பில், ‘‘பழைமையில் என்ன இருக்கிறது; எதிலும் புதிது என்பதுதானே சிறப்பு!’’ என்பதுதான் பெரியாருடைய கொள்கை.

அப்படி பார்க்கும்பொழுது பெரியார் சொல்கிறார், ‘‘தமிழ்நாட்டு மாணவர்கள் ‘‘செக்குமாடுகளாக’’ இருக்கக்கூடாது; ‘‘பந்தயக் குதிரைகளாக’’ இருக்கவேண்டும்‘’ என்று !

அதிலும்கூட, பெரியார் சொன்னதிலும்கூட ஒரு சிறிய மாற்றத்தைச் செய்ய நான் முயற்சி செய்கிறேன்.
பெரியார் அவர்கள், தமிழ்நாடு என்று சொல்லியிருக்க வேண்டாமோ? ஏனென்றால், எல்லா மாணவர்களுக்கும் அது பொதுவானது என்றுதான் நான் பார்க்கிறேன்.
ஆக, தமிழ்நாட்டில் இருந்தாலும் சரி, தமிழ்நாட்டிற்கு வெளியே இருந்தாலும் சரி, இது நிச்சயமாக தேவையான ஒன்றுதான் என்று நான் பார்க்கிறேன்.
தமிழ்நாடு என்ற நிலையைத் தாண்டி எல்லா மாணவர்களுக்கும் பொது என்று எடுத்துக் கொள்கிறோம்.
இருந்தாலும், அந்த வார்த்தையை பெரியார் அவர்கள் ஏன் சொன்னார்?

ஏனென்றால், ஏன்? எதற்கு? எப்படி? என்கிற வினாக்களைத் தேடிப் போகும்பொழுது, அந்த வினாக்களுக்கு விடையாக வருவதுதான் விஞ்ஞானம்.
அதேபோன்று, இதுபோன்ற கூற்றுகளில்கூட அதுபோன்று பார்க்க முடியும்.

அப்படி பார்க்கும்பொழுது, பந்தயக் குதிரையாக இருக்கட்டும் – செக்குமாடாக இருக்கட்டும் – இரண்டும் சுற்றுகின்றன. ஆனால், சுற்றுகின்ற வட்டங்கள்தான் வித்தியாசமாக இருக்கின்றன.

அப்படியென்றால், ஏன் பெரியார் அவர்கள் அப்படிச் சொல்லியிருக்கவேண்டும் என்கிற கேள்வி ஏற்படுகிறது.
செக்குமாட்டைப் பார்த்தீர்களேயானால், ‘தேமேன்’ என்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு எந்த ஒரு முடிவும் இல்லை; எந்த ஒரு ஆரம்பமும் இல்லை. அது சுற்றிக்கொண்டே இருப்பதுபோல் இருக்கிறது.

ஆனால், பந்தயக்குதிரை அப்படியில்லை. பந்தயக் குதிரை ஓடுவதற்காகப் பயிற்சி எடுக்கிறது. பந்தயத்தில் ஓடும்பொழுது முன்னோக்கி ஓடுகிறது. அப்படி ஓடுகிறபொழுது, அந்த வேகத்தினுடைய முடிவில் பார்த்தீர்களேயானால், மூக்கை நீட்டக் கூடிய குதிரை வெற்றி பெறுகிறது.
ஆக, அந்த இடத்தில் என்ன இருக்கிறது?

பயிற்சி இருக்கிறது!
முயற்சி இருக்கிறது!
வேகம் இருக்கிறது!இதையெல்லாம் தாண்டி, விவேகம் இருக்கிறது!
இவை எல்லா இடங்களிலும் தேவை!
பெரியார் அவர்கள் இதை வெறும் படிப்புக்காகத்தான் சொன்னாரா?
பந்தயக் குதிரைகளாக நம்முடைய குழந்தைகளை வளர்க்கின்றோமா? வகுப்பில் முதலாவதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அப்படிச் சொன்னாரா, பெரியார்! இல்லை!
அதையும் தாண்டித்தான் இருக்கும் என்றுதான் நான் பார்க்கிறேன்.

(தொடரும்)