நாம் மிகப் பெரிய சமுதாயம், நாம் எவ்வளவு முன்னுக்கு வரவேண்டியவர்கள். நாதியற்றுப்போய் காட்டுமிராண்டியாக அல்லவா இருக்கிறோம்? சொல்லுங்கள், வெளிநாட்டுக்காரனைப் பார், வெள்ளைக்காரனைப் பாரய்யா! நீ வேட்டி கட்டிக்கிட்டு இருந்தபோது, அவர்கள் ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் அம்மணமாக இருந்தவர்கள். நீ உன் பெண்டாட்டி, மகள், அக்காள் தங்கச்சி என்று முறை வைத்திருந்தபோது, அவர்களுக்கு அக்காள் தங்கச்சி முறை கிடையாது. அவ்வளவு காட்டுமிராண்டியாய் இருந்தவர்கள். இன்றைய தினம் அவர்கள், ஆகாசத்துக்கு அல்லவா பறக்கிறார்கள் _ -ஆகாசத்துக்கு மேலேயல்லவா போய்விட்டு வருகிறார்கள். சந்திரன் இருக்கிற இடத்திற்கு அல்லவா போய் உட்கார்ந்து விட்டு வருகிறார்கள்.
2 லட்சத்து 30 ஆயிரம் மைல்_ – ஒரு மணிக்கு 5000 மைல் வீதம் அல்லவா பறக்கிறார்கள். இன்னும் அவர்கள் செய்கிற அதிசய அற்புதங்களைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குப் புரியாதே!
அமெரிக்காவிற்குப் போய் ஆண் பிள்ளையுடைய இந்திரியம் கொண்டுக்கிட்டு வருகிறான். இங்கு சீனாவிலே, ஜப்பானில் போய் பொம்பளையுடைய இந்திரியம் கொண்டு வருகிறான். இரண்டையும் இங்கே கலக்கி, பிள்ளை ஆக்குகிறானே. இப்போது நேற்று முந்தாநாள் வந்த விஷயத்திலே, அவசரப்பட வேண்டியதில்லை, இரண்டு பேருடைய இந்திரியத்தையும் டப்பியிலே வாங்கி வைத்துக்கொள்ளலாம். நமக்கு வேண்டியபோது பிள்ளை உண்டாக்கிக் கொள்ளலாம். 10 வருஷத்திற்கு அப்புறம்; இன்றைக்கே பண்ணிக்க வேண்டியதில்லை. இப்படியாக அவன் பண்ணுகிற அதிசயம். ஏராளம். அமெரிக்காவிலே இருக்கிறான், 10 ஆயிரம் மைல்; நாம் இங்கே இருக்கிறோம். போனை எடுத்து இப்படி காதிலே வைத்தான் என்றால், ஹலோ என்றால், அப்போதே நமக்கு இங்கே காதில் கேட்கிறதே _அந்த உதடு ஒட்டுறதற்குள்ளே காதில் கேட்குதய்யா, 10 ஆயிரம் மைலிலிருந்து! அவர்களிலே அரைவாசிப் பேருக்குத்தான் கடவுள்; அரைவாசிப் பேருக்கு ஒரு கடவுள்; அதுவும் சந்தேகம். ஆனால் நம்பணும். (இங்கு), இந்த முட்டாள் பசங்களுக்கு 1000, 2000, 5000 கடவுள்_ – ஒரு காரியமும் பண்ண முடியவில்லை இந்தக் கடவுள்களாலே. காரியம் பண்ண முடியவில்லை என்றால், சும்மாவா இருக்கிறோம். அவைகளுக்கு எவ்வளவு கோவில், எத்தனை பெண்டாட்டி, வைப்பாட்டி, கல்யாணம், கருமாதி, செலவு? எத்தனை பேருக்குச் சோறு? எவ்வளவு பேருக்கு உற்சவம்?
அரசாங்கம் வரி வாங்குகிறது என்று சொல்கிறானே தவிர, மடப்பயல், இது குட்டிச் சுவராகப் போகிறதே இந்தப் பணம் என்று ஒரு பயல்கூட நினைக்கிறதில்லையே! கோவிலுக்குப் போகாமல் எவன் இருக்கிறான்? கோவிலுக்குப் போகணும், என்கிறான், குளிக்கிறான், முழுகுகிறான், பட்டுக் கட்டிக்கிறான், எட்டிக் குதித்துக்கிட்டுப் போகிறான், ஏன்டா என்றால், தீட்டாகிறது என்கிறான்.
ஆனால், கோவில் கிட்டே போனதும், டக்கென்று வெளியே நின்றுகொள்கிறானே, வாசற்படிக்கிட்டே! ஏன்டா, அங்கே நிற்கிறாய் என்றால், நான் சூத்திரன்; உள்ளே போகலாமா? என்கிறான். எப்போது? 1973 லே! நம்ம நாடு, நம்ம சமுதாயம், நமக்கு மானம், அவமானம் என்கிறது ஒன்று இருக்கிறது என்று சொல்லமுடியுமா? அது பெரிதில்லையே! அதற்காக யார் பாடுபடுகிறார்கள்? நாங்கள்தானே மூணே முக்கால் பேரு; மற்றவன் எல்லாம் வேற வேற கட்சி. ஒரு கட்சிக்காரன்கூட கடவுளைப்பற்றி பேசவே மாட்டான். ரஷ்யாவிலே கம்யூனிஸ்ட் இருக்கிறான். அவனுக்கு முதல் வேலை கடவுளை ஒழித்தான், கோவிலை இடித்தான். பாதிரியை எல்லாம் வெட்டினான். இங்கே இருக்கிற கம்யூனிஸ்ட் என்ன பண்ணுகிறான்-? பொறுக்கித் தின்கிறான். மற்ற நாட்டுக்காரன் எல்லாம் என்ன பண்ணுகிறான்?
இங்கு மனுஷனைப்பற்றி எவனுமே பேசுறதில்லையே! சொன்னால் வரும்படியா? அதைத்தானே கேட்கிறான்; அதைத்தானே பண்ணுகிறான். நாங்கள் இவ்வளவு பண்ணினோம், இவ்வளவு பிரச்சாரம் பண்ணினோம்; இவ்வளவு மகாநாடு எல்லாம் நடத்தினோம். – எவன்யா எங்களை ஆதரித்தான்? பயப்படுகிறானே_ – ஆதரித்தால் ஓட்டுப் போய்விடுமே, ஆதரித்தால் அரசாங்கம் என்ன பண்ணுமோ என்று.
அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம். 500 வருஷம் இருக்கலாம்; இப்பொழுது இல்லையே, 52 வயசுதான் இருக்கிறோம். சராசரி எனக்கு இப்பொழுது எனக்கு 95; இன்னும் ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியவில்லையே! வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை _ 7 வயது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், அவன் ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம் இப்போது நாம் சராசரி 50 வருடம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 97 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்குப் போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒன்றும் கஷ்டமல்ல_சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக்கிறோம் இந்நாட்டிற்கு. அவ்வளவு அற்புத அதிசயங்களையெல்லாம் கண்டுபிடித்திருக்கிறோம். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.
நாங்கள் வராதிருந்தால் படிப்பு ஏது? சொல்லுங்கள். சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கிற போது, நாம் 100க்கு 10 பேருகூட படிக்கவில்லையே, 100-க்கு. அது வந்ததற்கு அப்புறம் ஆரம்பித்தோம், கடவுள் என்றால், அப்பா இல்லை,அம்மா இல்லை, உருவமில்லை. கண்ணுக்குத் தெரியாது; கைக்குச் சிக்காது அப்படியெல்லாம் சொல்லிவிட்டான். நிரந்தரமா அப்படியொரு உணர்வே எங்குமே இல்லையே. ஒன்றும் வேண்டாம் என்கிறான்; – ஆறு வேளை சோறு என்கிறான் கல்யாணம் என்கிறான்; வருஷா வருஷம் கல்யாணம்டா என்கிறான்¢; கல்யாணமிருந்தும் ஒரு வைப்பாட்டிடா என்கிறான். நம்மை ஏதாவது மனுஷன் என்று நினைத்து அவன் சொன்னானோ? சொன்னதைக் கேட்டுக்கோடா மடபயலே என்றான். சும்மா ஊட்டிவிட்டான். கடவுள் ரொம்ப அன்பானவர்; கருணையே வடிவானவர் அப்படி என்கிறான். கடவுளைப் போய்ப் பார்த்தால், அந்தக் கடவுள் கையில் அரிவாள், கொடுவாள், வேலாயுதம், சூலாயுதம், ஈட்டி_கொலைகாரப் பயல்களுக்கு என்ன வேணுமோ அதுவெல்லாம் கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் கருணையே உடையவர்டா என்கிறான். எந்தக் கடவுள் மனுஷனைக் கொல்லாதவர். (கடவுள்) அசுரனைக் கொன்றார், ராட்சசனைக் கொன்றார், மனிதனைக் கொன்றார், மூன்று கோடி பேரைக் கொன்றார், 5 கோடி பேரைக் கொன்றார் என்று கசாப்புக் கடைக்காரன் மாதிரிப் பண்ணிப் போட்டு, அவரைக் கருணை உள்ளவர் என்றால் எப்படி? இப்படி எல்லாம் சொல்லி, நம்மைக் கழுதையாக்கிப் போட்டான். ஓர் உணர்ச்சியும் இல்லாதவனாக்கிப் போட்டான். கடவுள் என்றால் கல்லைக் கும்பிடவேண்டியது, பார்ப்பான் காலிலே விழ வேண்டியது. அவனுக்குக் காசு கொடுக்கவேண்டியது.
நாங்க வந்து, இந்தப் பிரச்சினையிலே, கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை. நன்றாக நினைச்சுக்குங்கோ, இந்தப் பிரச்சினையிலே, நாங்கள் கடவுளைக் கும்பிடாதீர்கள் என்று சொல்லவில்லை. கடவுளை இருக்கிறது என்று நினைக்காதீர்கள் என்று சொல்லவில்லை. கடவுள் என்றால் என்ன என்று சொல்லுங்கள் – _அவ்வளவுதான் நாங்கள் சொல்லுகிறோம். ஒன்றுமே இல்லாமல், எந்த முட்டாளாவது சொன்னான் என்றால், நினைத்ததெல்லாம்… அரச மரம் கடவுள், வேப்ப மரம் கடவுள், பல்லி கடவுள், முடக்கான் கடவுள், பாம்பு கடவுள், அப்புறம் நினைத்ததெல்லாம் கடவுள். அது கடவுள் சங்கதியா? அது முட்டாள்தனம், பைத்தியக்காரச் சங்கதியா? இந்தப் பைத்தியக்காரத்தனத்துக்கு நம் நேரம், நம் பணம், நம் அறிவு எவ்வளவு நாசமாகிறது. இவ்வளவும் பண்ணியும் தேவடியாள் மகன் என்கிற பட்டமல்லவா நம் தலைமேலே இருக்கிறது?
ஆகவேதான், எந்தச் சங்கதி எப்படி ஆனாலும், நாம் ஆரம்பித்துள்ள இழிவு ஒழிப்பு கிளர்ச்சி காரியம் மிகவும் நியாயமானது என்பதற்கு என்ன ஓர் உதாரணம் உங்களுக்கு வேண்டுமானால், இன்றைக்கு எத்தனை நாளாகிறது? எட்டாம் தேதி மாநாடு. இன்னைக்கு 10 நாளாகிறது. என்ன கவனிக்கணும். இரகசியமா இல்லை. பத்தாயிரம் பேருக்கு மேலே வந்தார்கள். 30 பத்திரிகைக்காரர்கள் வந்தார்கள். எல்லாத் தீர்மானத்தையும் அவரவர் பத்திரிகையில் போட்டார்கள். இந்தியா பூராவும் பரவிவிட்டது. அடுத்த நாளே பரவிவிட்டது. நான் சொல்கிறேன், கவனியுங்கள், இந்தப் பத்து நாளாவது ஒருவனாவது இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசினானா? எந்தப் பத்திரிகையிலேயாவது செய்தி வந்ததா? ஏன் சொல்லுகிறேன்_ – நாம் பண்ணினது அவ்வளவு நேர்மையான காரியம். எவனாலேயும் ஆட்சேபிக்க முடியவில்லை. எவன் தைரியமா சொல்லுவான், நீ தேவடியாள் மகனாகத்தான் இருக்கணும் என்று. அவ்வளவு நேர்மையான காரியத்தை நாம் செய்திருக்கிறோம், பண்ணிப் போட்டோம். இதிலேயே நாம் வீரனாக மாட்டோம். நாளைக்கு இதற்குப் பரிகாரம் பண்றதுக்கு கிளர்ச்சி பண்ணுகிறோமே, அதிலேதான் நாம் யார் என்று காட்டிக்கொள்ளவேணும். பண்ணனும். நாளைக்கு கிளர்ச்சி பண்ணினால் அவன் பிடிப்பான்; பிடிக்கவில்லையானால் பண்ணிக்கொண்டு இருப்போம். பிடிக்க ஆரம்பித்து விட்டான் என்றால், 5 ஆயிரம், 10 ஆயிரம் என்று ஜெயிலுக்குப் போவோம். நாம் தயாராய் இருக்கிறோம். காரியம் முடிகிறவரைக்கும் ஜெயிலிலே வேணுமானாலும் இருக்கத் தயாராய் இருக்கிறோம் என்று நாம் காட்டணும். அப்புறம் அவன் பரிகாரத்திற்கு வரணும்; வரவில்லை என்றால், இந்தச் சாக்கை வைத்து, நீ போப்பா வெளியே, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல், 1500 மைல் தூரத்திலே இருக்கிறே, உன் பேச்சு எனக்குப் புரியாது; என் பேச்சு உனக்குப் புரியாது. உன் பழக்கம் வேறே, உன் வழக்கம் வேறே, உடன் நடப்பு வேறே _ எனக்குப் புரியாது. மரியாதையாகப் போ, ரகளை வேணாம். என்னத்துக்காக இவ்வளவு தூரத்திலே இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகணும்? நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நட்டம்?
எங்களுக்கு என்ன உப்பு இல்லையா, தண்ணீர் இல்லையா, மலை இல்லையா, காடு இல்லையா, சமுத்திரம் இல்லையா? இல்லை நெல் விளைய
வில்லையா? கம்பு விளையவில்லையா? என்ன இல்லை எங்களுக்கு? உன்னாலே எனக்கு என்ன ஆகுது? தேவடியாள் மகன் என்னும் பட்டத்தைத் தவிர, நீ எங்களுக்குப் பண்ணின நன்மை என்ன? மரியாதையாகப் போ! அவ்வளவுதானய்யா நாம் கேட்கிறோம்! இது எப்படி அய்யா தப்பாகும்.
இதனாலே எப்படி நாம் கெட்டவனாவோம்; இதனாலே நாம் எப்படி அரசுக்கு விரோதமாவோம்? கவனியுங்கள், தாய்மார்களே! தோழர்களே! இந்த விஷயங்களையெல்லாம் முதலிலே சொன்னோம். இது நம்ம கடமை. 25ஆம் தேதி ஆரம்பிப்போம். மளமள மளவென்று வரணும்; என்ன சொல்கிறோமோ அதைச் செய்யணும். சட்டங்களை எரிக்கிறது முதற்கொண்டு, மறியல் பண்ணுறது முதற்கொண்டு இன்னமும் பல காரியங்கள் திட்டம் போட்டுச் செய்யணும்.
கலகத்துக்குப் போகமாட்டோம்; எவனையும் கையாலே தொடமாட்டோம். எவனாவது அடித்தாலும், பட்டுக் கொள்வோம், திருப்பி அடிக்க
மாட்டோம். ஞாபகத்திலே வைத்துக்கொள்ளுங்கள்! நான், நீ என்று மீசையை முறுக்கக்கூடாது. அடித்தால் பட்டுக்கணும். போலீஸ்காரன் இருப்பான், அதிகமாக அடிக்காமல் பார்த்துக் கொள்வான். அப்புறம் என்னத்துக்கு நாம் ஒருத்தனை அடிக்கப் போகணும்; நாம் யாரோடு சண்டை பிடிக்கிறோம்?
நான் தேவடியாள் மகனாக இருக்கக்கூடாது. உன் ஆட்சியிலே, உன் சட்டத்திலே இருக்கணும் என்றால், உன் ஆட்சி மாறும்; உன் சட்டத்தை நெருப்பு வைத்துக் கொளுத்துகிறேன். முன்னையே நான் கொளுத்தினவன்தான். ஆனதினாலே, தோழர்களே, பக்குவம் அடையணும் நாம். அதற்காக இங்கே நான் நாத்திகப் பிரச்சாரம் பண்ணவரவில்லை; கடவுள் இல்லை என்று உங்களுக்குச் சொல்வதற்காக வரவில்லை. அது வேறே, நாங்கள் பண்ணிக்கிறோம். அவனவன் நம்பட்டும், ஆராயட்டும், இருக்கட்டும். முட்டாள் தனமான காரியங்கள், பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்கள், மானத்துக்குக் கேடான காரியங்கள் செய்கிறதற்கு நாம் இடம் கொடுத்துக்கிட்டு, நாம் மனுஷனாக வாழணுமா?
(19.12.1973 அன்று சென்னை தியாகராயர் நகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை)