தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழா !
… கி.வீரமணி …
தேனி மாவட்டம் திராவிடர் கழகத் தலைவர் டி.பி.எஸ்.ஆர். ஜெனார்த்தனன் _ ஜெ. பிரேமா ஆகியோரின் மகன் ஜெ. கார்த்திகேயனுக்கும், கோவை மேட்டுப்பாளையம் டாக்டர் எம். திப்பையா _ டி. மாலதி ஆகியோரின் மகள் தி. பிரீத்தாவுக்கும், மணமக்களுக்கு திருமண வரவேற்பு விழா மே 26ஆம் நாள் 6 மணியளவில் கம்பம் நகரில் நா. நடராசன் நினைவு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம். மாவட்ட தி.க. தலைவர் டி.பி.எஸ்.ஆர். ஜெனார்த்தனன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகத் தோழர்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டன
இரா. செழியன் அவர்களின் இளவல் ராமதாஸ் அவர்கள் 27.4.2004 அன்று மறைந்ததையொட்டி நானும் சமூகநீதிக் கட்சித் தலைவர் கா. ஜெகவீரபாண்டியனும் இரா. செழியன் அவர்களின் இல்லத்திற்கு 20.5.2004 அன்று சென்று செழியன் அவர்களுக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டோம்.
சென்னை பெரியார் திடலில் “தேர்தல் முடிவுகளும் மக்கள் அரசின் கடமைகளும்” என்ற தலைப்பில் 28.5.2004 அன்று இரவு உரையாற்றினோம். அப்போது,
“ஒரு பஞ்சாயத்து போர்டு பதவியைக்கூட சில நாட்கள்கூட மறுதலிக்க மனம் வருவதில்லை. ஆனால், மிகப் பெரிய ஒரு பிரதமர் பதவி சோனியா காந்தி அவர்களைத் தேடிச் சென்ற பொழுது, அந்த பதவியை அவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய பிள்ளைகளாக இருக்கக்கூடிய இளம் சிங்கங்களும் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லும்பொழுது அவர்களேகூட இதுதான் நல்ல வாய்ப்பு என்று அவர்கள் கருதவில்லை.
அப்படிப்பட்ட ஒரு நல்ல சிறப்பான சூழ்நிலை மதச்சார்பில்லாத ஒரு அரசாங்கம் என்ற பெயராலே அமைந்திருக்கின்றது. உள்ளபடியே இந்திய அரசியல் சட்டத்தின் அடித்தளம் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. அடிக்கட்டுமானத்தை உடைப்பதற்கு இனிமேல் யாரும் முயற்சி செய்துவிட முடியாது. அதை நாங்கள் கண்டறிந்து கொண்டோம். காப்பாற்றுவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகத் தெளிவான ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இது வெறும் தேர்தல் அல்ல; திருவிழா அல்ல. விளையாட்டல்ல. வருங்கால தலைமுறையினரின் வாழ்வை நிர்ணயிப்பது என்பதை தேர்தலுக்கு முன்னாலே வாக்காளர்களுடைய கடமையை நினைவூட்டிய பொழுது இதே அரங்கத்திலே எடுத்துச் சொன்னோம். நமது எண்ணம் இப்போது நிறைவேறியிருக்கிறது.
சோதிடமும் வீழ்ந்தது ‘சோ’திடமும் வீழ்ந்தது!
‘தேர்தல் முடிவுகளும் மக்கள் அரசின் கடமைகளும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற
சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் உரையாற்றுகிறார்
இன்றைக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கின்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நிலைக்குமா? என்று யாரும் ஜோதிடம் கூற வேண்டிய அவசியமில்லை. இந்தத் தேர்தலிலே ‘சோ’திடம் வீழ்ந்தது. என்பது தெளிவாக உங்களுக்குத் தெரியும். சோதிடமும் வீழ்ந்தது ‘சோ’திடமும் வீழ்ந்தது என்று அப்போது குறிப்பிட்டோம்.
டெல்லி_ இந்திய தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராம் சுரத்சிங் அவர்கள் 31.5.2004 சரியாக காலை 9 மணிக்கு சென்னை பெரியார் திடலுக்கு வந்தார்.நம் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், நேராகச் சென்று தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவிடத்திலே மாலை வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் பயிற்சி மய்யம், மகளிர் மேம்பாடு மறுமலர்ச்சிக்கான பெரியார் மய்யம், பெரியார் ஆராய்ச்சி நூலகம், ‘விடுதலை’ அச்சக அலுவலகம், பெரியார், மணியம்மை, மருத்துவமனை மற்றும் பெரியார் திடலில் இயங்கி வரும் நிறுவனங்களைப் பற்றியும் தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் தேர்தலிலே நிற்காத சமுதாயப் புரட்சி இயக்கம் என்பதையும் நாம் விளக்கினோம்.
பெரியார் அருங்காட்சியகத்திற்கு வந்த அவருக்குப் பொன்னாடை அணிவித்து தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் கொண்ட ஆங்கில நூல்களை வழங்கினோம்.
தந்தை பெரியார் அவர்களுக்கு ஒன்றிய அரசு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டதையும் விளக்கி அவற்றை வழங்கினோம்,.
அடுத்து திராவிடர் கழகத்தின் சார்பில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி விளக்கினோம்.
மண்டல் கமிஷன் அறிக்கையை வெளியிடவே திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்தினோம்,. சந்திரஜித்யாதவ், பிரம்பிரகாஷ், கர்ப்பூரிதாகூர், பஸ்வான், டி.பி. யாதவ் போன்ற தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து பிற்படுத்தப்பட்டோருக்காக மாநாடுகளை நடத்திப் பேசவைத்தோம். பி.பி. மண்டல் அவர்களே சொன்னார்கள். நீங்கள் (திராவிடர் கழகம்) மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பிற்படுத்தப்பட்டோருக்காக நியமித்த காகா கலேல்கர் கமிசன் எப்படி குப்பைத் தொட்டிக்குப் போனதோ அதே போன்ற நிலைதான் இந்த மண்டல் கமிசன் அறிக்கைக்கும் ஏற்படும் என்று பி.பி. மண்டலே கூறிய செய்தியை இந்திய பிற்படுத்தப்பட்டோர் தேசிய கமிசன் தலைவர் ராம்சுரத்சிங் அவர்களிடம் கூறினோம். இதை அவர் வியந்து கேட்டார்.
தந்தை பெரியார் நினைவிடத்தில் நீதிபதி ராம்சுரத்சிங் மரியாதை செலுத்துகிறார்.
இனி பிற்படுத்தப்பட்டோருக்காக தேசிய அளவில் நீங்கள் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பை_ ஒரு காரியத்தை உங்களிடம் ஒப்படைக்கின்றேன். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களின் எம்.பி.க்கள் அமைச்சர்கள் எப்படி அவர்களுடைய உரிமைகளுக்காக ஒன்றிணைந்து கோரிக்கைகளை வைத்து மிகச் சரியாகப் போராடுகின்றார்களோ அதே போல பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் எம்.பிக்களும் அமைச்சர்களும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இடஒதுக்கீடு, கிரிமிலேயர் ஒழிப்பு, வேலை வாய்ப்பில் பதவி உயர்வு போன்றவற்றைச் செய்திட நீங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று ஆணையத்தின் தலைவர் நீதிபதி ராம்சுரத்சிங் எம்மிடம் எடுத்துரைத்தார்.
அந்தப் பணி நிறைவேற திராவிடர் கழகமும் தயார்; மக்களும் இதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்று கூறினோம்.
பின்னர் நீதிபதி ராம் சுரத்சிங் விடை பெற்றுச் சென்றார்.
பெரியார் பேருரையாளர் அ. இறையன் அவர்கள் 75ஆம் ஆண்டகவை காணுவதை 4.6.2004 காலை 10.00 மணிக்கு தன் குடும்ப உறுப்பினர்களுடன் பெரியார் திடலில் நம்மைச் சந்தித்தார்.
அவர்களையும் அவரது இணையர் திருமகள் அவர்களையும் சேர்த்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தோம்.
எம்மிடம் ‘திருமகள் இறையன், ஜாதி ஒழிப்பு அறக்கட்டளை’ அவர்களின் மக்களால் நிறுவப்பெற்றதற்குரிய தொகை ரூ.50,000 (அய்ம்பதினாயிரம் ரூபாயை ‘குடும்ப விளக்கு’ நலநிதியில் நிலை வைப்புத் தொகையாக வைப்பதற்கு நம்மிடம் அளித்தார்கள்.
திருமகள் _ இறையனின் பெயரன்கள் _ பெயர்த்திகள் சார்பில் திருச்சி நாகம்மையார் இல்ல வளர்ச்சி நிதிக்கு ரூ.750/_ அளிக்கப்பட்டது.
75ஆம் ஆண்டகவை காணும் அ.இறையன் தன் இணையர் திருமகளுடன் ஆசிரியரிடம் வாழ்த்துப் பெற்றார்.
மகளிரணியைச் சேர்ந்த க.பார்வதி, கு. தங்கமணி, கழகத் துணைப் பொதுச்செயலாளர், கவிஞர் கலி. பூங்குன்றன், கு.வெ.கி. ஆசான்,
அ.குணசீலன் ஆகிய கழகப் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
சிங்கப்பூரில் “தமிழ் முரசு” இதழை நிறுவி, சுயமரியாதை இயக்கத்திற்குக் கால்கோள் செய்து, தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ இதழின் முகவராக விளங்கி, 1929இல் தந்தை பெரியாரையும் அழைத்து, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் தமிழர்கள் குடியுரிமை பெறுவதற்கு மூலவராகத் திகழ்ந்த, சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக மலர்வதற்கு ஊக்கச் சக்தியாகத் விளங்கிய தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் (12.6.2004) மாலை வெகு சிறப்புடனும் பெருமிதத்துடனும் நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு ‘கவிஞர்கள் பார்வையில் தமிழவேள்’ என்ற தலைப்பின்கீழ் கவிக் கொண்டல் மா. செங்குட்டுவன் அவர்கள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பாவலர் மறைமலையான், மலர் மாமணி புலவர் இளஞ்செழியன், இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணி ஆகியோர் சொற்சுவை பொருட்சுவையுடன் கவிமாரி பொழிந்தனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. சிவக்குமாரன் கருத்தரங்கிற்குத் தலைமை வகித்தார்.டாக்டர் மா.வீ. தியாகராசன் அவர்கள், சிங்கப்பூர் மலேசிய மக்களுக்குத் தமிழவேள் ஆற்றிய சமுதாயப் பணி ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழவேள் நூற்றாண்டு விழாவில் டாக்டர் கலைஞர் உரையாற்றுகிறார்
டாக்டர் இரா. வேல்முருகன் அவர்கள், ‘தமிழவேளும் தமிழர் திருநாளும்’ என்ற பொருளில் கருத்துரையாற்றினார்.
‘சன்’ தொலைக்காட்சியில் பணியாற்றும் அரசியல் விமர்சகரும், சிங்கப்பூர் வானொலியில் புகழோடு பணியாற்றியவருமான திரு. வீரபாண்டியன் ‘சிங்கப்பூரில் தமிழவேள் ஆற்றிய தமிழர் பணிகள்” என்ற தலைப்பின்கீழ் இன்றைய கால கட்டத்தில் நிலவும் நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பேசினார்.
அப்போது விழாவிற்கு வருகை தந்த கலைஞர் அவர்களை அன்புடன் வரவேற்றோம்.
சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம். இலியாஸ் வரவேற்புரையாற்றினார்.
தொடர்ந்து தமிழவேள் சாரங்கபாணி அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்-களும், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்ப-வர்களுமான பெருமக்களுக்குச் சால்வை அணிவித்தும் அவர்களுக்கு விடுதலை மலர்களை அளித்தும் சிறப்பு செய்தோம்.
சிங்கப்பூர் பேராசிரியர் சுப. திண்ணப்பன், உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் அய்யூப் (தாய்லாந்து), ஆக்ஸ்ஃபோர்டு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் சீலாதாஸ், பேராசிரியர் டாக்டர் சிவகுமாரன், பேராசிரியர் டாக்டர் மா.வீ. தியாகராசன், இரா. வேல்முருகன், சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம்.இலியாஸ் ஆகியோருக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.
டாக்டர் கலைஞர் அவர்களின் இலக்கியப் பணிக்கான விருதை ஆக்ஸ்போர்டு தமிழ்ச்சங்கத்தின் சார்பில் அதன் துணைத் தலைவர் கலைஞரிடம் வழங்கினார்.
தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை’யின் சார்பில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது மலரினை தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் வெளியிட்டார்.
“அடுத்து எமது உரையில், அவரோடு பழகியவன் அவரால் அன்பு பாராட்டப்பெற்ற பெரியார் தொண்டர்களிலே ஒருவன் என்ற வாய்ப்பை பெற்றவன் என்ற முறையிலும் இந்த இயக்கம் அவரால் வளர்ச்சி பெற்றது என்ற வகையிலும் நன்றி உணர்ச்சியை இந்த நிகழ்ச்சியின் மூலம்காட்டுகிறோம்.
தமிழ் கூறும் நல்லுலகத்தில் உலகத்தில் எந்த மூலையில் ஒரு தமிழன் ஒரு சிறு பணியைச் செய்தால்கூட அந்தத் தமிழனைத் தோளிலே தூக்கி நிறுத்திப் பாராட்டுவது என்பது ஈரோட்டு வழக்கம்.
தமிழவேள் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் ஆசிரியர்
சிங்கப்பூரிலே இன்றைக்கு ஒரு தமிழ் நாளோடு (தமிழ் முரசு) இருக்கிறதென்றால் அதற்கு சாரங்கபாணி அவர்கள் காரணம். ஒரு நாளேட்டை நடத்துவது எவ்வளவோ தொல்லை என்பதை கலைஞர் அவர்களும் அறிவார்கள் எங்களைப் போன்றவர்களும் அறிவோம்.
உங்களுடைய தாயகம் தமிழ்நாடாக இருக்கலாம்; உங்களுடைய பண்பாடு தமிழ்நாடாக இருக்கலாம்; ஆனால், இந்த மண் உங்களை வாழ வைக்கிறபொழுது அந்த நாட்டினுடைய உரிமை பெற்ற குடிமகனாக ஆகுங்கள் என்று பெரியார் அவர்கள் மலேசிய, சிங்கப்பூர் தமிழர்களைப் பார்த்துச் சொன்னார்கள்.
அந்த அறிவுரையைச் செயல்படுத்தியவர் தமிழவேள் சாரங்கபாணி அவர்கள்.
தமிழுக்கு உயர் இடம் கிடைத்தால் மட்டும் போதாது, புலம் பெயர்ந்த தமிழர்கள் உரிமையான
வாழ்வைப் பெறவேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுவதிலே நாங்கள் உறுதியாக இருப்போம் என்று தெளிவாக,ச் சொல்லுவதுதான் இந்த விழாவின் மாட்சி|.
“விடுதலை” வெளியிட்டிருக்கின்ற இந்த மலரிலே தமிழவேள் கோ. சாரங்கபாணி அவர்களின் எழுத்து நடை எவ்வளவு சிறப்பானது பொருள்மிகுந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஒரு கட்டுரை இந்த மலரிலே வந்திருக்கின்றது. “தந்தை பெரியாரும், தமிழவேளும்!” என்ற கட்டுரையை இங்கே நாங்கள் வெளியிட்டிருக்கின்றோம். அதிலே கடைசியாக ஓர் அற்புதமான அறிவுரையை இன்றைய தலைமுறையும், இனி வரக்கூடிய தலைமுறையும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் எழுதிய (30.9.1940) ‘தமிழ்முரசு’ இதழில் ‘பெரியார் வாரம்’ என்ற தலைப்பில் எழுதியதைப் படிக்கின்றேன்.
“தன்மதிப்பியக்கத் தந்தை இன்று தமிழியக்கத் தனிபதியாய் நிற்பதைக் கண்டு இந்நாட்டின் தமிழகத் தோன்றல்கள் பெருமை பூண்டு உளம் பூரிக்கின்றார்கள்.
தீர்க்க தரிசிகள் பலர் தோன்றியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மறைந்தார்கள். அவர்கள் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அவர்களது கொள்கைகள் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டன. ஆனால் தமிழர் தலைவர் பெரியாரை ஏற்ற நாம் அத்தகைய பிழைகுழியில் விழக்கூடாது. அவரது கொள்கையில் வழுவாது
நிற்போம்; காப்போம் என்று சபதம் மேற்கொள்ள வேண்டும். அவரது கொள்கைகளில் இரும்பனைய உறுதியுடன் நின்று அவர் இயக்கம் வெல்லும்படியான துணிவை ஒவ்வொரு தமிழனும் பெற வேண்டும் என்று எழுதியுள்ளார்” என்று எமது உரையில் குறிப்பிட்டேன்.
கலைஞர் அவர்கள் தமது உரையில், “தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் மாபெரும் செயல்கள் பலவற்றை ஆற்றி அந்தச் செயல்கள் அனைத்தும் தமிழின் ஏற்றத்திற்காக தமிழர்களின் ஏற்றத்திற்காக என்று நிலையிலே உருவாகி, அதன் காரணமாக இன்னும் புகழப்படுகிறார்; போற்றப்படுகிறார்.
இங்கே எனக்கு முன்னால் பேசிய நண்பர்களெல்லாம் எடுத்துக்காட்டியதைப் போல ஓர் அய்ம்பது ஆண்டு காலம் அவர் சிங்கப்பூரிலே வாழ்ந்திருக்கிறார். 1903ஆம் ஆண்டு திருவாரூரிலே பிறந்து 1924ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்றவர், அவர் மறைந்த 1974ஆம் ஆண்டு வரையில் தமிழுக்காகவே தன்னுடைய நினைவு, உயிர், மூச்சு அனைத்தையும் தந்து உழைத்திருக்கிறார் / அதனால் தான் அய்ம்பதாண்டு காலம் சிங்கப்பூரில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உழைத்த ”பெருமகன்” என்று குறிப்பிட்டேன்.
1924ஆம் ஆண்டு நான் பிறந்த ஆண்டு; அந்த ஆண்டில்தான் அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். இனி நம் வேலையை இவன் பார்த்துக்கொள்வான். நாம் சிங்கப்பூர் செல்வோம் என்று எண்ணியிருக்கக்கூடும். நான் தனி ஒருவனாக இல்லாமல் இளவல் வீரமணி போன்றவர்களோடு இணைந்து அவர் விட்டுச் சென்ற பணியை ஆற்றிவருகிறோம்.
சாரங்கபாணி அவர்களுடைய நூற்றாண்டு விழாவை சாரங்கபாணியே கொண்டாடிக் கொண்டிருக்கிற ஆச்சரியத்தை நீங்கள் காண்பீர்கள். இளவல் வீரமணி அவர்களுடைய இயற்பெயர் சாரங்கபாணிதான் என்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்ற காரணத்தால் இதைச் சொல்லுகிறேன்.
பெயர்ப் பொருத்தம் மட்டிலும் அல்ல, இனப் பொருத்தம், மொழிப் பொருத்தம். வீரமணி அவர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப் போல உலகத்திலேயே எங்கே ஒரு தமிழன் ஒருவனுக்கு உயர்வு ஏற்பட்டாலும் அந்த உயர்வை இன்னும் உயரமாகக் காட்ட தோள் கொடுக்கக்கூடிய அந்த எண்ணம் படைத்த திராவிடர் கழகத்தினுடைய தலைவர் இளவல் வீரமணி என்பது ஏதோ இந்த விழாவுக்காக நான் சொல்வதல்ல. உண்மையிலேயே உணர்ந்து சொல்லுகின்ற உணர்ச்சிகரமான ஒரு வார்த்தை.
தமிழ் வளர்க்கின்ற ஒரு குடும்பம் மறைந்த நம் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்த சாரங்கபாணி அவர்களுடைய குடும்பம் ஆகும்.
அவர் இந்த இயக்கங்கள் எல்லாம் ஒன்றுபடாதா? இந்த இயக்கங்கள் ஒன்றுபட்டுத் தொண்டாற்றாதா? என்று கவலைப்பட்டவர். இயக்கங்கள் பிரிந்து கிடப்பதைக்கண்டு வருத்தத்தோடு சிந்தித்தவர்.
அடிப்படையில் ஜாதி, மதம் இவற்றை யெல்லாம் கடந்து நாடு கடந்து ஏற்றுக்கொண்ட
இன்வாழ்வாக அவருக்கு அமைந்த அந்த நிலையிலும்கூட, தமிழுக்காக, தமிழர்களுக்காக உழைக்க வேண்டும். என்கின்ற தளராத உறுதியோடு அவர் பாடுபட்டு சிங்கப்பூரிலே அரசின் ஆட்சி மொழியாக தமிழ்மொழி ஆனதென்றால், அதற்கு காரணகர்த்தா சாரங்கபாணி அவர்கள்தான் என்று நாமெல்லாம் போற்றிப் பாராட்டுகின்ற அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். அந்த உணர்வுதான் நம்மையெல்லாம் இன்றைக்கு ஊக்குவிக்கின்றது.
அடுத்த தலைமுறை இந்தக் காரியங்-களுக்காக உயிர் தரவும் தயார் என்ற நிலையிலே இருக்கிறது என்ற உறுதி நமக்கு இருந்தாலும்கூட அந்த உறுதியையும் நம்பிக்கையையும் உழைக்கின்ற பாங்கினையும் நமக்குத் தர வேண்டிய அந்த உணர்வுகள் மறைந்த சாரங்கபாணி போன்றவர்களால்தான். நமக்குக் கிடைக்கின்றன. பாரதிதாசன் உண்டாக்கிய உணர்வு பேரறிஞர் அண்ணா உண்டாக்கிய உணர்வு அவர்கள் இருவரையும் நமக்குத் தந்த தந்தை பெரியார் அவர்கள் உண்டாக்கிய உணர்வு இந்த உணர்வுகள் தான் இன்று நாம் மனிதனாக வாழ, சுயமரியாதையோடு வாழ, மானமுள்ளவர்களாக வாழப் பயன்படுகின்றன.
திராவிடர் கழகம் என்ற தாயை திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மகன் மறுக்க மாட்டான்
என்ற உறுதியை இளவல் வீரமணி அவர்களுக்கு நான்தந்து இணைந்து பணியாற்றுவோம்.
முத்தமிழ் அறிஞர் அவர்களின் கலைஞர் பெயர்த்தியும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் மகளுமான செந்தாமரைக்கும் நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் ஆர். சோமசுந்தரம் அமைந்தகரை சண்முகம் பேரனும், வேதமூர்த்தி மகனுமான சபரீசனுக்கும் திருமணம் 6.6.2004 அன்று காலை 9.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. பொதுச்செயலாளர்
க. அன்பழகன் அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மற்றும் ஏராளமான பெருமக்கள் சான்றோர் பெருமக்கள் மணமக்களை வாழ்த்தினர்.
வெளியூர் சுற்றுப் பயணம் இருந்ததால், 5.6.2004 அன்று இரவு 8.30 மணிக்கு செந்தாமரை _ சபரீசன் திருமண விழா வரவேற்பில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினோம்.திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
மத்திய அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் வரலட்சுமி ஆகியோரின் மகன் திருமகன் ஈ.வெ.ரா._ பூர்ணிமா மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம்.
தமிழக ஆளுநர் மேதகு பி.எஸ். இராமமோகன்ராவ், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்பமை ஏ.ஆர். லட்சுமணன், மாண்பமை இரவி ராஜபாண்டியன், ஆந்திர முதல்வர் மாண்புமிகு ஒய்.எஸ்.. இராஜசேகரரெட்டி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ரங்கசாமி, திரைத்துறையினர், தொழிலதிபர்கள் அனைத்துக் கட்சியினர் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திருமணத்தில் கலைஞர் உரையாற்றுகையில்,
செந்தாமரை – சபரீசன் திருமண வரவேற்பில் மணமக்களை வாழ்த்தும் ஆசிரியர் (5.6.2004)
“நாம் இன்றைக்கு இந்தத் திருமண முறையை ஏற்றுக்கொண்டிருக்கிறோமென்றால், இது பகுத்தறிவு முறையில் பன்னெடுங்காலத்திற்கு முன் பழந்தமிழர் காலத்தில் வாழ்ந்தானே தமிழன் அந்தத் தமிழனுடைய கலாச்சாரத்தைத்தான் முன்மாதிரியாகக் கொண்டு இன்றைக்கு இந்தத் திருமண விழாவை அதே முறையில் நாம் நடத்தியிருக்கிறோம். அதிலும் இங்கே பேசிய நண்பர்கள் குறிப்பிட்டதைப்போல, இந்தத் திருமணம் கூட காதல் திருமணம். காதல் திருமணம் என்றாலே அது கலப்புத் திருமணமாக ஆகிவிடுவது வாடிக்கை. என்னுடைய இல்லத்தில் நடைபெற்ற திருமணங்களில் ஒன்றிரண்டைத் தவிர, மற்ற எல்லா திருமணங்களும் காதல் திருமணங்கள் அல்லது கலப்புத் திருமணங்கள்தான்.
என்னுடைய இல்லத்தில் எடுத்துக் கொண்டால் அங்கே தலித் மருமகளையும் பார்க்கலாம். தலித் மருமகனையும் பார்க்கலாம். செட்டியாரையும் பார்க்கலாம். முதலியாரையும் பார்க்கலாம். இதுவரை முதலியார் இல்லாத குறை இருந்தது. இன்று அந்தக் குறையும் நீங்கியது. அய்யரையும் பார்க்கலாம். அய்யங்காரையும் பார்க்கலாம். இப்படிப் பெரியாரின் சமதர்மக் கொள்கையை நடுநாயகமாகக் கொண்ட சமத்துவபுரக் குடும்பமாக என்னுடைய குடும்பம் இன்றைக்குத் திகழ்கிறதென்றால், பெரியாருடைய பள்ளியிலே அந்தக் காலத்திலே மாணவனாகச் சேர்ந்து அறிஞர் அண்ணா வழி நடந்து இன்றைக்கு நம்முடைய பேராசிரியர் போன்றவர்களையெல்லாம் துணையாகக் கொண்டு இந்த மாபெரும் இயக்கத்தைக் சுட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்ற நான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்ற வகையிலேதான் இந்த நிலை என்பதை எடுத்துச் சொல்லி, என்னை மேலும் ஊக்கப்படுத்துகின்ற வகையிலே இந்த விழாவிற்கு வந்து விழாவைச் சிறப்பித்து மணமக்களை வாழ்த்திய அமைச்சர் பெருமக்கள், ஆன்றோர், சான்றோர் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் இந்தக் குடும்பத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.”
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.
(நினைவுகள் நீளும்…)