… கோவி.லெனின் …
இது கலைஞர் நூற்றாண்டு. அவருடைய இளவலான தமிழர் தலைவர் – தகைசால் தமிழர் ஆசிரியர் அய்யாவுக்குத் தொண்ணூறு நிறைவடைகிறது. திராவிட இயக்கம் அடிப்படையில் சமூக நீதி இயக்கம். அது பயணிக்கும் வழி, பகுத்தறிவு. அதில், திராவிடர் கழகம் நாத்திகத்தைப் பரப்புகின்ற இயக்கம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய பேரறிஞர் அண்ணாவும், முன்னேற்றக் கழகத்தை அரை நூற்றாண்டு காலம் தலைமை தாங்கி நடத்திய முத்தமிழறிஞர் கலைஞரும், அவர்கள் இருவருக்கும் உற்ற துணையாக விளங்கிய இனமானப் பேராசிரியரும் திராவிடர் கழகத் தலைவரான தந்தை பெரியாரிடம் பயிற்சி
பெற்றவர்கள். அவரது குருகுல மாணவர்கள். கடைசி வரை பகுத்தறிவு பேசியவர்கள். இறை நம்பிக்கையில்லாதவர்கள்.
இவர்களில் பேரறிஞர் அண்ணாவைத் தவிர, பெரியார் தொடங்கி ஆசிரியர் வரையிலான எல்லாருமே 90 வயதைக் கடந்தவர்கள். இந்தத் தலைவர்கள் மட்டுமல்ல, இயக்கத்தின் இன்னும் பல நிருவாகிகளும் 90 வயதைக் கடந்து, 100 வயதைத் தொட்ட வரலாறு திராவிட இயக்கத்துக்கு உண்டு. கடவுள் நம்பிக்¬யில்லாத-வர்கள்- _ கடவுளை நிந்திப்பவர்கள் எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்-கிறார்கள் என்று இறை நம்பிக்கை உள்ளவர்கள் வியந்து போவதும், வியர்த்துப் போவதும் உண்டு. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
கடவுள் தொண்டைவிடவும், மனிதத் தொண்டு மாண்புமிக்கது. இறைவனிடம் வேண்டுகிற பலரும் தங்கள்
நலனுக்காகவும், தங்களைச் சார்ந்த-வர்களின் நலனுக்காகவும் வேண்டுகிறார்கள். பொதுத் தொண்டில் உண்மையாக ஈடுபடுபவர்-கள் தங்கள் இனத்தின் நலத்திற்காக, மொழியின் நலத்திற்காக, நாட்டின் நலத்திற்காக, உலக சமுதாயத்திற்காகப் பாடுபடுகிறார்கள்.
தன்னல மறுப்பு, சுயஜாதி அறுப்பு, மதவெறியற்ற வாழ்வு இவை அகத்திற்கும் புறத்திற்கும் ஆரோக்கியமானவை. வேண்டுதல் நிறைவேற-வில்லையே என்று இறை நம்பிக்கையாளர்கள் கவலைப்படக்கூடும். கோரிக்கை நிறைவேறும்வரை போராடித்தான் ஆக வேண்டும் என்பதைப் பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்கள் அறிவார்கள். அந்தக் கோரிக்கை நிறைவேற எவ்வளவு காலமானாலும், தங்கள் தொண்டினைத் தொடர்வார்கள். இலக்கை அடையும்வரை அவர்கள் ஓய்வோ சலிப்போ கொள்வதில்லை.
ஆயிரமாயிரம் ஆண்டுகால ஆரிய-_ திராவிடப் போராட்டத்தில், உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமை நிலைக்குத் தள்ளப்பட்ட திராவிட இனத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக மாற்றுவதற்குத் தந்தை பெரியார் வழியில் சளைக்காமல் போராடுபவர்கள் திராவிட இயக்கத்தினர். அண்ணா, கலைஞர், பேராசிரியர் அத்தகைய போராளிகள். அவர்களுக்குப் பின் இன்றும் அந்தப் போராட்டத்தைத் தொடரும் திராவிட இயக்கத்தின் மூத்த தளகர்த்தர் ஆசிரியர் அய்யா அவர்கள்.
திராவிட இயக்கம் எனும் ஆலமரம் இன்றைய காலத்திற்கேற்ப அரசியல்_-சமுதாயத் தளத்தில் பல்வேறு விழுதுகளுடன் படர்ந்திருக்கிறது. இடதுசாரிகள் _ -முற்போக்காளர்கள் வர்க்கப் போராட்டத்துடன் வர்ண பேதத்தை எதிர்ப்பதில் முன்னணியில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான், சனாதன ஒழிப்பு மாநாடு. திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன் எடுத்துரைத்த கொள்கை அது. அதனால்தான் அந்த மேடையில், தொண்ணூறு கடந்த ஆசிரியர் முதல் இன்னமும் அய்ம்பதைத் தொடாத தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளர் வரை திராவிடத்தின் குரல் ஓங்கி ஒலித்தது. சனாதன சாம்ராஜ்ஜியம் அலறியது. இந்தியாவெங்கும் எதிரொலித்தது. வடபுலத்திலும் சனாதன எதிர்ப்புக் குரல்கள் வெளிப்பட்டன.
ஒடுக்கப்பட்டோர் உரிமைக்காகப் போராடும் தன்னிகரில்லாப் போராளியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் முன்னெடுக்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் அங்கே ஆசிரியர் அய்யா கட்டாயம் இருப்பார். திருமாவுக்கு பெரியார் திடல் என்பது புலிக்குகை. தந்தை பெரியாரையும் அண்ணல் அம்பேத்கரையும் சமமான முறையில் மட்டுமல்ல, சரியான முறையிலும் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் ஆற்றல்மிக்க முனைவர். அவருக்கும் ஆசானாக இருந்து அன்புடன் வழிகாட்டுகிறார் ஆசிரியர் அய்யா.
தமிழ்நாட்டில் உள்ள ஆதீனகர்த்தர்களில் சனாதனத்திற்கு அடிபணியாமல் தமிழ் மெய்யியல் மரபினை நன்கறிந்த உண்மையான காவித்துறவி
கள் திராவிடர் கழக மேடைகளில் பங்கேற்பதற்குப் பெரியார் காலத்திலும் தயங்கியதில்லை, ஆசிரியர் அய்யா காலத்திலும் தயங்கியதில்லை. சமயத்தில் சீர்திருத்தம் செய்த வெள்ளை உடை வள்ளலார் போல, சமுதாயத்தில் சீர்திருத்தம் செய்தவர் கருப்பு உடை பெரியார் என்பதை தமிழ் மெய்யியல் வழி ஆதீனகர்த்தர்கள் அறிவார்கள்.
மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினராக இருப்பவர்கள், தமிழ்நாட்டில் மத மோதல்களுக்கு விதையிட்டுவிடக்கூடாது என்ற கவனம் கொண்டவர்கள், நல்லிணக்கத்தை விரும்புகிறவர்கள் என அத்தனை பேருக்கும் நன்னம்பிக்கை முனையாக இருப்பவரும் ஆசிரியர் அய்யா அவர்கள்தான். மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பது திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கை. அதன் இலக்கு, சமத்துவமான மானுட சமுதாயம். அதனால்தான், ‘மதம்’ பிடிக்காத மத அறிஞர்கள் பெரியார் திடலுக்குத் தயக்கமின்றி வருகிறார்கள்.
பெண்ணுரிமை அமைப்புகளுக்குப் பெரியார் திடல் போல சுதந்திரமான திறந்தவெளி வேறொன்று இருக்க முடியுமா? ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பெண்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து, அவர்களின் உரிமைக்கான தீர்மானங்களை நிறைவேற்றி, அவற்றை அரசாங்கத்தாரிடம் வலியுறுத்தி நிறைவேற்றி, பெண்களாலேயே ‘பெரியார்’ என்ற பட்டம் பெற்றவரின் பெயரிலான திடலில், அந்தப் பெரியார் இயக்கத்தை அவர் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் வலிவுடன் முன்னெடுத்துச் செல்கின்ற ஆசிரியர் அவர்களின் பெரும்பணி அத்தனைப் பெண்களுக்கும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது.
இளைஞர்கள், இன்றைய நவீனத் தொழில் நுட்பத்தை நன்கறிந்தவர்கள், சமுதாய அக்கறை மிக்க கலைஞர்கள், கொள்கை உணர்வு மிக்க படைப்பாளர்கள், சமூக வலைத்தளத்தில் திராவிடத்தை முழங்குபவர்கள் உள்ளிட்ட அனைவருடனும் அவர்களில் ஒருவராகக் கலந்துரையாடுவதில் ஆசிரியரைப் போல இன்னொருவரைக் காண்பது அரிது. தகுதியுள்ளவர்களை மேடையேற்றிப் பாராட்டி, விருது வழங்கி ஊக்கப்படுத்தத் தயங்காதவர் ஆசிரியர்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் திராவிடம் இன்று தேவைப்படுகின்ற காலமாக இருப்பதால், இந்தியா
கூட்டணியின் வலிமையையும் ஒருங்கிணைப்பையும் தொடர்ந்து வலியுறுத்தும் தலைவராக அவர் இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்பே திராவிட
மாடலை வடமாநிலங்களுக்குச் சென்று பரப்பியதுடன், அங்குள்ள ஒடுக்கப்பட்ட -பிற்படுத்தப்
பட்ட சமுதாயங்களுக்காக உருவான அரசியல் சக்திகளை ஒருங்கிணைத்துக் காட்டியவர் ஆசிரியர். அன்று வி.பி.சிங்கிடம் சமூக நீதி வகுப்பெடுத்தவர், இன்று ராகுல்காந்திக்குப் பெரியாரைப் பயிற்றுவித்திருக்கிறார்.
ஆசிரியரின் தொண்ணூறாம் பிறந்தநாள் 2022 டிசம்பர் 2ஆம் நாள் சென்னை கலைவாணர் அரங்கில் சமூக நீதியின் சரித்திர நாயகராம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடந்தது. அந்த மேடையில் அத்தனை பேரையும்விட அதிக சுறுசுறுப்பாக இருந்தவர் ஆசிரியர் அவர்கள்தான். “90 வயதில் இத்தனை வேகமா, இளமையா, விறுவிறுப்பா?” என்று விழாவில் பேசிய அனைவருமே வியந்து பாராட்டினர். ஏற்புரை ஆற்றிய ஆசிரியர் அய்யா அவர்கள், “என்ன எல்லாரும் 90, 90 என்கிறீர்கள்? 90 என்ன 800ஆ?’’ என்று கேட்டதும் அரங்கம் ஆச்சரியத்தில் அதிர்ந்து கைதட்டியது.
இன்றைய அறிவியல் வளர்ச்சி- _ மருத்துவ வளர்ச்சி இவற்றில் 90 வயது என்பது மிகச் சாதாரணமானதுதான் என்பதையும், இலட்சிய வாழ்வில் ஈடுபடுபவர்கள் எப்படி செயலாற்ற வேண்டும், தங்கள் உடல்நிலையை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆசிரியர் அய்யா பல மேடைகளில் எடுத்துரைத்
திருக்கிறார். இடையறாத பகுத்தறிவு_-சமூக நீதி பரப்புரைக்கிடையே அவர் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகள் தொடர்பான கட்டுரைகள் இன்றைய இளைஞர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இந்த ஆண்டு டிசம்பர் வரை ஆசிரியர் அய்யா மேற்கொண்டுள்ள பணிகளும் அதற்கான பயணங்களும் எண்ணற்றவை. நீட் எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவு, திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கான பரப்புரை என அவர் இரண்டு முறை தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். சுயமரியாதைத் திருமணங்களைத் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறார். படிப்பகங்கள் திறப்பு முதல் பல்கலைக்கழகக் கருத்தரங்குகள் வரை அறிவூட்டும் நிகழ்வுகள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறார். இந்திய அளவிலான சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் பணிகளை மேற்கொண்டிருக்கிறார். மலேசியாவில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கேற்று, ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாம் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல்’ என்கிற வள்ளுவரின் இலக்கணப்படி பகுத்தறிவு நெறியுடன் ‘சமயச்’ சொற்பொழிவாற்றினார். காணொளிகள் வாயிலாக அவர் பங்கேற்ற கூட்டங்கள் ஏராளம்.
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர்_-தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்பழைப்பினை ஏற்று, ‘திராவிட மாதம்’ கொண்டாட்டத்தில் தனது முதல் ட்விட்டர் ஸ்பேசஸ் உரையினை ஆற்றிய ஆசிரியர் அவர்கள், கலைஞரின் ஈரோட்டுப் பாதையை இன்றைய தலைமுறையினருக்கான நெடும்பாதையாக எடுத்துரைத்தார். மின்னணுத் தடத்தில் இதுபோல எண்ணற்ற நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார்.
பெரியாரைப் பற்றி முத்தமிழறிஞர் கலைஞர் பாடிய கவிதையில், “பம்பரமும் ஓய்வு பெறும் சுற்றியபின்.. இவரோ படுகிழமாய்ப் போன பின்பும் பம்பரமாய் சுற்றி வந்தார்” என வர்ணித்திருப்பார். இன்று, பாட்டுடைத் தலைவரான பெரியார் இல்லை. அவரைப் பாடிய கலைஞர் இல்லை. பெரியாரின் சிந்தனை- _ கலைஞரின் செயலாற்றல் இவற்றை இணைத்து எடுத்துரைக்கும் விதமாகத் திராவிட மாடல் அரசுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார் ஆசிரியர் அய்யா அவர்கள். பெரியாரைக்
கலைஞர் பாடியதுபோல, பம்பரமாய் சுற்றிச் சுழன்று வருகிறார் இந்த 91 வயது இளைஞர்!
அவரது பெரும்பணியை எப்படிப் போற்றுவது, அவரை எங்ஙனம் பாராட்டுவது எனச் சொற்களைத் தேடிய பொழுது, 2023 ஆகஸ்ட் 15 அன்று இந்திய விடுதலை நாளில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் தனது கரங்களால் ஆசிரியருக்கு அளித்த அரசு விருதுதான் நினைவுக்கு வருகிறது.
‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் அய்யா நூறாண்டு கடந்து வாழ்க..! அய்யாவின் பகுத்தறிவு- _ சுயமரியாதைப் பயணம் இன்னும் பல்லாண்டுகள் தொடர்க..!! ♦