டாக்டர் அம்பேத்கர் உலகறிந்த பேரறிஞர் ஆவார்
அம்பேத்கர் பெருமையைப் பற்றிப் பேச வேண்டியது தேவை இல்லை. அவர் உலகமறிந்த பேரறிஞர். நாம் அம்பேத்கர் அவர்களை அம்பேத்கர் என்று அழைப்பதற்குப் பதில் பெரியார் அம்பேத்கர் என்று அழைக்க வேண்டும். என்னை பெரியார் என்று அழைக்கின்றார்கள். ஆனதினால் எனக்கு அப்படிக் கூற சற்று வெட்கமாக இருக்கின்றது.
அம்பேத்கர் அவர்கள் மனிதத் தன்மையில் தீவிரமான கருத்தும் தைரியமான பண்பும் கொண்டவர் ஆவார். அவர் சமுதாயத் துறையில் தைரியமாக இறங்கிப் பாடுபட்டவர். மக்களால் பெருமையாகப் பாராட்டப்பட்ட காந்தியாரையே பிய்த்துத் தள்ளியவர்! எப்படி ஜின்னா அவர்கள் நடந்து கொண்டாரோ அது போல மதத்துறையினை சின்னாபின்னப்படுத்தியவர். காந்தியாரால் சமுதாயத் துறைக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை. கேடுகள் தான் வளர்ந்து இருக்கின்றது என்று புத்தகம் எழுதியவர்.
இவர் ராமாயணத்தையும் மனுதர்மத்தையும் கொளுத்தியவர்.
பார்ப்பனர்களால் பெருமையாகக் கொண்டாடப்படும் கீதையை பைத்தியக்காரன் உளறல் என்று துணிந்து கூறியவர்.
எப்படி காந்தி ஒரு பார்ப்பானால் கொல்லப்பட்டாரோ அது போலவே இவரும் கடைசியாக பார்ப்பன சூழ்ச்சியால் கொல்லப் பட்டார். அது அதிசயம் இல்லை. இது போன்றவர்கள் எல்லாம் பார்ப்பனர்களால் கொல்லப்பட்டுள்ளார்கள். சமண, பவுத்தர்கள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியாதது அல்ல.
அம்பேத்கர் அவர்கள் வட்ட மேஜை மாநாட்டில் காந்தியார் அரிஜனங்களின் தலைவர் என்று கூறியபோது, “நான் உங்களுக்கு பல தடவைகள் கூறி இருந்தும் நீங்கள் மனம் கூசாது அரிஜனங்களின் தலைவர் என்று கூறிக் கொள்கிறீர்களே” என்று கேட்டார். காந்தியால் எதிர்த்துப் பேசமுடியவில்லை. இங்குள்ளவர்கள் எல்லாம் அம்பேத்கர் அப்படிப் பேசியதற்காகக் கூப்பாடு போட்டார்கள். அம்பேத்கர் கூறினார், “தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீங்கள் உண்மைத் தலைவராக இருந்தால் என்னை ஏன் இங்கு அழைத்து இருக்கின்றார்கள்?’’ என்று காந்தியைக் கேட்டவர்.
சமுதாயக் கேடுகள் ஒழிய, ஜாதி ஒழிய, கடவுள், மதம் சாஸ்திரங்கள் ஆகியவைகள் ஒழிய வேண்டும் என்று துணிந்து கூறியவர் ஆவார். இந்தத் தென்னாட்டில் அல்ல; இதை விட மூடநம்பிக்கைகள் மலிந்த வடநாட்டில் துணிந்து எடுத்துக் கூறிப் பாடுபட்டவர். ♦