பிரெஞ்சுப் புரட்சி 1789இல் நிகழ்ந்தது. பிரான்சின் பழைய ஆட்சியையும் சர்வாதிகாரத்தையும் முடிவுக்குக் கொண்டு வந்ததன் அடையாளமாக அந்த ஆண்டு ஜூலை 15ஆம் நாள் பாரிஸ் மக்கள் பாஸ்டைல் கோட்டை என்ற அரசாங்கச் சிறைச்சாலையை உடைத்து நொறுக்கிய நிகழ்ச்சி அமைந்தது. ஜூன் மாதம் கூடத் துவங்கிய பிரெஞ்சு தேசிய சபை ஆகஸ்ட் 26 ஆம் நாள் மனித உரிமைகள், குடிமக்கள் உரிமைகள் பற்றிய பிரகடனத்தை நிறைவேற்றியது. தங்கள் நாட்டுக்காக அமைக்கத் துவங்கியிருந்த புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக இப்பிரகடனத்தை வெளியிட்டார்கள்.
இப்பிரகடனத்தின் உள்ளடக்கம் வெளிப்படையாகவே சர்வதேசப் பண்புடன் விளங்கியது. அய்ரோப்பா, மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு நாட்டிலும் _ சில காலம் பிறகு ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும்- புரட்சி இயக்கங்களுக்கும், மக்களாட்சி இயக்கங்களுக்கும் உந்து சக்தியாய் அமைந்தது. இந்தப் பிரகடனத்தின் தமிழாக்கம் இதோ-
பிரெஞ்சுப் பொதுமக்கள் தேசிய சபையாக அமர்ந்து மனித உரிமை பற்றிய அறியாமை, வெறுப்பு, உரிமை அவமதிப்பு ஆகியவையே பொதுமக்களின் அனைத்துத் தொல்லைகட்கும் அரசியல் ஊழலுக்கும் காரணம் என்பதைக் கருதிப் பார்த்து மானிடனுடைய இயற்கையானதும் மாற்ற முடியாததும் புனிதமானதுமான உரிமைகளை ஒரு கம்பீரமான பிரகடனமாக முன்வைப்பதென்று தீர்மானித்திருக்கிறோம். சமூகத்தின் உறுப்பினர் அனைவருக்கும் எக்காலமும் நிரந்தரமாக அவற்றைக் கூறிக் கொண்டிருக்கவும். அவர்கள் தத்தம் உரிமைகளையும் கடமைகளையும் எப்போதும் தெரிந்திருக்கவும் சட்டமியற்றும் அமைப்புகளும் நிருவாக அமைப்புகளும் தம் செயல்களை எப்போதும் எல்லா அரசியல் அமைப்புகளுக்குமான நோக்கங்களுடன் ஒப்புமை செய்துகொள்ளவும், அந்த நடவடிக்கைகள் மேலும் மரியாதைக்குரியனவாக அமைய வகை செய்யவும், இனிமேற் கொண்டு எளிய எதிர்க்கப்பட முடியாத தத்துவங்களின் அடிப்படையில் எழும் குடிமக்களின் தேவைகள் என்றென்றும் அரசியல் அமைப்பினை நிலைநிறுத்துவதிலும் பொதுத் தன்மையிலும் நன்முறையில் பங்களிப்புச் செய்யவும் இத்தகைய பிரகடன வெளியீடு தேவையாக இருக்கிறது.
எனவே, இந்தச் சபை தனிமனிதனுடையவும் குடிமகனுடையவுமான பின்வரும் உரிமைகளை, எல்லாம் வல்ல இறைவன் அருளாலும் அவன் முன்னிலையிலும் ஒப்புக்கொண்டு பிரகடனப்படுத்துகிறது.
1. மனிதர்கள் சுதந்திரமாகவும் தம்முள் சமஉரிமை உடையோராயும் பிறக்கிறார்கள்.
அப்படியே இருக்கிறார்கள். சமூக வேறுபாடுகள் பொதுநன்மை அடிப்படையில் மட்டுமே அமையலாம்.
2. சுதந்திரம், சொத்துரிமை, பாதுகாப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய மனித உரிமைகள் இயற்கையானவை. சட்டங்களாலோ வழக்கங்களாலோ மறுக்கவியலாதவை. அத்தகைய இவ்வுரிமைகளைப் பாதுகாப்பதுதான் எல்லா அரசியல் நிறுவனங்களுக்குமான குறிக்கோள்
3. எல்லா இறையாண்மைத் தத்துவங்களும் அடிப்படையில் தேசம் சார்ந்தே எழுகின்றன. நாட்டிடமிருந்து வெளிப்
படையாக எழாத எந்த அதிகாரத்தையும் எந்தத் தனிமனிதனும், எந்த அமைப்பும் கொண்டு செலுத்த முடியாது.
4. அடுத்தவரைத் துன்புறுத்தாத எதையும் செய்வதற்கான சக்தியே சுதந்திரம். எனவே ஒவ்வொரு மனிதனும் தன் உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு, அவை அதேபோன்று சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் தத்தம் உரிமைகளையும் ஆண்டனுபவிப்பதை உறுதி செய்யவேண்டும் என்பதைத் தவிர வரையறை ஏதுமில்லை. இந்த எல்லைகளை சட்டம் ஒன்றே தீர்மானிக்க வேண்டும்.
5. சமூகத்துக்கு ‘ஊறு செய்யக்கூடிய செயல்களை மட்டுமே சட்டம் உரிய முறையில் தடை செய்ய முடியும். சட்ட விரோதமில்லாத எதைச் செய்வதற்கும் தடை இருக்கக் கூடாது. சட்டம் கட்டாயப்படுத்தாத எதைச் செய்யுமாறும் கட்டாயம் இருக்கக் கூடாது.
6. பொது விருப்பத்தின் வெளிப்பாடே சட்டம். ஒவ்வொரு குடிமகனுக்கும் அதை உருவாக்குவதில் நேரடியாகவோ, பிரதிநிதி மூலமோ பங்கு பெற உரிமை இருக்கிறது. அது அளிக்கும் பாதுகாப்பும் சரி, தரும் தண்டனையும் சரி எல்லாருக்கும் ஒன்றுபோல்தான். சட்டத்தின் கண்முன் அனைவரும் சமம் என்பதால் எல்லா பொது மரியாதைகளும் எல்லாருக்கும் உரிமை உள்ளவையே. தகுதியும் திறமையும் தவிர வேறெந்த விதத்திலும் அவர்கள் வித்தியாசப்படுத்தப்படமாட்டார்கள்.
7. சட்டப்படி தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தவிர எவரும் கைது செய்யப்படுவதோ, சிறைவைக்கப்படுவதோ, குற்றம் சாட்டப்படுவதோ முடியாது. அவர்களும் சட்டம் விதிக்கும் முறைப்படியே இருக்க இயலும். தன்னிச்சையாக ஆணைகளைத் தூண்டுவோர், விரைவுபடுத்துவோர், நிறைவேற்றுவோர், நிறைவேற்றக் காரணமாய் இருப்போர் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் சட்டப்படி அழைக்கப்பட்டவரோ, பிடிபட்டவரோ உடனே பணிந்து நடக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டுவோர் தம்மையே குற்றவாளியாக்கிக் கொள்வர்.
8. கட்டாயமாகத் தேவைப்படும் தண்டனைகளை மட்டுமே சட்டம் அனுமதிக்க வேண்டும். குற்றநிகழ்வுக்கு முன்பே இயற்றப்பட்டு வெளியிடப்பட்டு நடைமுறைக்கும் வந்து விட்ட சட்டத்தின்கீழ் மட்டுமே யாரும் தண்டிக்கப்படலாம்.
9. ஒவ்வொரு மனிதனும் குற்றவாளி என்று தீர்வு செய்யப்படாதவரை நிரபராதியே என்பதால், ஒருவரைக் கைது செய்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அப்போது கூட தேவையற்ற கெடுபிடி கடுமைகள் அனைத்தையும் சட்டம் கடுமையாகத் தடை செய்ய வேண்டும்.
9. சட்டம் நிறுவிய பொது அமைதிக்கு ஊறு விளையாத வரையில் யாரும் அவருடைய கருத்துகளுக்காக மத சார்பான கருத்துக்
காகக்கூட தொல்லைப்படுத்தப்படக் கூடாது.
10. சட்டம் நிறுவிய பொது அமைதிக்கு ஊறு விளையாத வரையில் யாரும் அவருடைய கருத்துகளுக்காக மத
சார்பான கருத்துக்காகக்கூட தொல்லைப்படுத்தப்படக்கூடாது.
11. மனிதனின் உரிமைகளில் மிகமிக அருமையானவைகளில் ஒன்று எண்ணத்தையும், கருத்தையும் தடையின்றி வெளியிடும் உரிமை. எனவே ஒவ்வொரு மனிதனும் தவறாகப் பயன்படுத்தியதாக சட்டப்படி நிறுவப்பட்டால், ஏற்க நேரிடக்கூடிய நிலைமைகளுக்கான தன் பொறுப்பில் எதையும் பேசலாம். எழுதலாம். அச்சிடலாம்.
12. மனிதனுடைய, குடிமகனுடைய உரிமைகளைப் பேணிக் காக்க பொதுசக்தி இருக்க வேண்டியது தேவையாகிறது. இதற்கு சக்திகள் யாரிடம் தரப்பட்டுள்ளனவோ, அவர்களின் சொந்த நலங்களுக்கல்லாமல், பொதுமக்கள் அனைவர் நலத்துக்காகவும் செயல்படும்.
13. அத்தகு பொது சக்திகளை நிர்வகிக்கவும், பிற நிருவாகச் செலவுகட்காகவும் பொது வரி விதிப்பு தேவைப்படுகிறது. அவரவர் சக்திக்கேற்ப அனைவருக்கும் அது சமமாகப் பிரித்து விதிக்கப்பட வேண்டும்.
14. ஒவ்வொரு குடிமகனுக்கும், நேரடியாகவோ – பிரதிநிதி மூலமோ வரிக்கான தேவை பற்றி விளக்கம் பெறவும், சுதந்திரமாக அதுபற்றிய தன் வாக்கினை அளிக்கவும், வசூல் எப்படி செலவாகிறது என்றறியவும், அது செலவிடப்படுவதற்கான விகிதங்களை நிர்ணயிக்கவும், வரி அளவு நிர்ணயிப்பு முறைகள், வசூல், காலவரை ஆகியவற்றையும் நிர்ணயிக்கவும் உரிமை உண்டு.
15. பொது நிருவாகப் பிரதிநிதி ஒவ்வொருவரும் சமூகத்துக்குப் பொறுப்பானவர்கள்.
16. உரிமைகளுக்கான உத்திரவாதம் உறுதி செய்யப்படாத அதிகாரப் பங்கீடுகள் நிர்ணயிக்கப்படாத சமுதாயம் ஓர் அமைப்பற்ற சமூகமாகக் கருதப்படும்.
17. சொத்துரிமையும் பறிக்க முடியாததும் புனிதமானதுமான ஒன்றே, ஆகவே, பொதுத் தேவைக்கான வெளிப்படைக் காரணமில்லாமல் ஒருவரது சொத்துரிமை பறிக்கப்படக் கூடாது. அத்தேவைக்கும் சட்ட ஒப்புதல் வேண்டும்.
அப்போதும் ஈட்டுத்தொகை முன்னதாகவே வழங்கப்படவேண்டும். ♦